‘கடந்த 6 மாதங்களாக பைஜூ சரிவர தூங்கவில்லை’ - மனைவி திவ்யா உருக்கமான பதிவு!
பைஜூ ரவீந்திரன் தனிப்பட்ட வாழ்க்கையில் கடந்த ஆறு மாதங்கள் கடினமான காலகட்டத்தை எதிர்கொண்டிருப்பதாக அவரது மனைவி திவ்யா கோகுல்நாத் லிங்க்ட்இன் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
சமீபத்தில் பாலிவுட்டின் பிரம்மாஸ்திரா பிளாக்பஸ்டருக்கு அடுத்தபடியாக இரண்டாவது பிளாக்பஸ்டர் என
நிறுவனத்தின் நிதி அறிக்கையை ஒப்பிட்டிருந்தார் Byju’s இணை நிறுவனரும் பைஜூவின் மனைவியுமான திவ்யா கோகுல்நாத்.அதைத் தொடர்ந்து, தனது கணவர் கடந்த ஆறு மாதங்களாக கடினமான காலகட்டத்தை எதிர்கொள்வதாக தற்போது லிங்க்ட்இன் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
“பைஜூவைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும், அவர் எந்த ஒரு சவாலையும் 'கடினம்’ என்று சொல்லி பழக்கப்படாதவர். அவரே கடினம் என்று சொன்னால் அது உண்மையிலேயே மிகவும் கடினமான விஷயம் என்றே அர்த்தம்,” என்று சொல்லியிருக்கிறார்.
திவ்யா கோகுல்நாத்தின் இந்தப் பதிவு பைஜூ ரவீந்திரனின் அப்பாவின் உடல்நலக்குறைவு பற்றியது. வணிகம் தொடர்பான போராட்டங்களைப் பற்றியது அல்ல.
பைஜூ ரவீந்திரனின் அப்பா இறுதி நிலை புற்றுநோயை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார். கடந்த வாரம் மிகவும் ஆபத்தான ஒரு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்கிறார். இந்த அறுவை சிகிச்சை நல்லவிதமாக நடந்து முடிந்திருக்கிறது. ஆனால், பைஜூ கடந்த ஆறு மாதங்களாக சரிவர தூங்கவே இல்லை என்று திவ்யா கோகுல்நாத் குறிப்பிட்டிருக்கிறார்.
“கடினமாக இல்லாத சூழலில் பைஜூ அதிகம் தூங்குவார் என்பது இதற்கு அர்த்தம் அல்ல,” என்று தெரிவித்த அவர் இந்த கல்வி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்பை கட்டமைப்பதற்காக கடந்த பத்தாண்டுகளாக ஒரே மாதிரியான நடைமுறையை அவர் தொடர்ந்து பின்பற்றி வருவதாகவும் நினைவுகூர்ந்தார்.
பைஜூ ரவீந்திரனின் பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். இதனால் ஆசிரியர் பணியில் ஆர்வம் ஏற்பட்டு நல்ல சம்பளத்துடன்கூடிய வேலையிலிருந்து பைஜூ ரவீந்திரன் விலகியிருக்கிறார். Byju’s நிறுவனம் இன்று எட்டியுள்ள நிலையை அடைய பைஜூ கடினமாக உழைத்திருக்கிறார் என்றும் திவ்யா கோகுல்நாத் சுட்டிக்காட்டினார்.
2021 நிதியாண்டில் Byju’s நிறுவனத்தின் நஷ்டம் 19.8 மடங்கு அதிகரித்து 4,588 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை சந்தித்திருப்பதாக அந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது.
”இந்தியா முழுவதும் உள்ள ஆறு நகரங்களுக்கு ஒவ்வொரு வாரமும் பயணித்து, அடுத்தடுத்து வகுப்பெடுத்த நாட்கள் இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது. பெங்களூருவின் கோரமங்கலாவில் இருக்கும் எங்கள் முதல் அலுவலகத்திற்கு இன்றும் நாங்கள் வாடகை செலுத்தி வருகிறோம்,” என்கிறார்.
ஆறு பேர் கொண்ட நிறுவனர் குழு, ஃபோர்ப்ஸ் பணக்காரர் பட்டியலில் இடம்பெறுவது பற்றியோ இந்த யூனிகார்ன் நிறுவனம் பில்லியனர் பட்டியலில் இடம்பெறுவதற்கு தகுதியானதா என்பது பற்றியோ கவலைகொள்வதில்லை.
2020-21 ஆண்டுகளில் இந்தக் கல்வித் தொழில்நுட்ப நிறுவனம் மார்க்கெட்டிங் நடவடிக்கை மூலம் அப்பாவி பெற்றோரை ஏமாற்றி கோர்ஸ்களை விற்பனை செய்வதாக கண்டனம் தெரிவித்து செய்திகள் ஊடகங்களில் வலம் வந்தன.
மூன்று வெவ்வேறு வழக்குகளில் BYJU’s நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க இந்திய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த சம்பவத்தைப் பற்றி பிபிசி ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நீதிமன்ற வழக்குகளுக்கு தீர்வு எட்டப்பட்டுவிட்டதாக BYJU’s நிறுவனம் பிபிசி-யிடம் தெரிவித்திருந்தது.
”மக்களின் அன்றாட வாழ்க்கையில் மதிப்பை சேர்க்கவேண்டும் என்பதில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்துகிறோம். மதிப்பீடுகள் மாறலாம், ஆனால் மதிப்பு நிரந்தரமானவை,” என்று லிங்க்ட்இன் பதிவில் திவ்யா கோகுல்நாத் குறிப்பிட்டிருக்கிறார்.
“எல்லோரிடமும் எல்லாவற்றிலும் நல்ல விஷயங்களைப் பார்க்கும் பைஜூவின் குணம், என்னை எப்போதும் ஈர்க்கத் தவறுவதில்லை,” என்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: அபராஜிதா சக்சேனா | தமிழில்: ஸ்ரீவித்யா
ஐபிஓ-வை தள்ளி வைத்தது பைஜூஸ் - 2022ல் நஷ்டம் ரூ.300 கோடியில் இருந்து ரூ.4,500 கோடியாக அதிகரிப்பு!