கேன்சலாகும் உணவுகளை ஏழைக் குழந்தைகளுக்கு வழங்கி பசி போக்கும் ஜொமேட்டோ ஊழியர்!

ஜொமேட்டோ அல்லது ஸ்விக்கியில் நீங்கள் கேன்சல் செய்யும் ஆர்டர்கள் என்னவாகும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? உணவகங்கள் டெலிவரி பாய்களுக்கே உணவைக் கொடுக்கின்றன. பலர் இதை சாப்பிட விரும்பினால், பதிக்ரித் சஹா போன்றவர்கள் அதை பயன்படுத்தி எளியவர்களின் பசியை போக்கி வருகின்றனர்.

11th Jul 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

ஒரு வேளை உணவுக்காக ஒரு பெரும் கூட்டமே ஒட்டியவயிறுடன் வாடிக்கொண்டிருக்கும் இவ்வுலகில் தான், பாதி உணவினை மிச்சமாகக் கொண்ட பல லட்ச உணவுத்தட்டுகளும் குப்பைத்தொட்டிகளை அடைகின்றன. இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 14 பில்லியன் டாலர் மதிப்பிலான உணவுகள் வீணடிக்கப்படுகின்றது என்கிறது ஐ.நா சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் ஆய்வு. அதே ஆய்வில், 194மில்லியன் இந்தியர்கள் ஆண்டுத்தோறும் வீணடிக்கப்படுகின்றன என்கிறது.


ஒவ்வொரு முறையும் நல்ல உணவினை இல்லாதோருக்கு வழங்குவதற்கு மாறாக தூக்கி வீசும் பாவச்செயலை செய்கிறோம் என்பதை மனிதன் உணர சிறிது காலம் பிடிக்கலாம். ஆனால், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் டம்டம் பகுதியை சேர்ந்த பதிக்ரித் சஹா, அவருடைய பங்கினை ஆற்றத் தொடங்கிவிட்டார்.


தெரு குழந்தைகளால் ‘ரோல் காகு’ (மாமா) என்று அழைக்கப்படும் பதிக்ரித் சஹா, ஒரு நல்ல செயல் எவ்வாறு சமூகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை கொண்டுவரும் என்பதை நிரூபித்துள்ளார். ஆம், ஜொமேட்டோ ஊழியரான அவர், கஸ்டமர்கள் கேன்சல் செய்யும் உணவுகளை, உணவின்றி பசியின் கொடுமையால் வாழும் குழந்தைகளுக்கு வழங்கி வருகிறார்.

zomato kolkata
ஜொமேட்டோவின் கொள்கையின்படி, வாடிக்கையாளருக்கு உணவினைக் கொண்டு செல்லும் வழியில் அதை அவர் ரத்து செய்தால், உணவை டெலிவரி எக்ஸிகியூட்டிவ் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம் அல்லது ஏழைகளுக்கு வழங்கலாம். ஃபாக்ரித் இதில் இரண்டாவது ரகத்தை தேர்வு செய்தவர்.

“ஒரு நாளைக்கு ஒருவேளை உணவு கூட கிடைக்காத நிலையில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டோடு இருக்கிறார்கள் அல்லது அவர்களின் பசியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக போதைப்பொருள்களை நாடுகிறார்கள். இவ்விரண்டு விஷயமும் நடக்காமல் பார்த்துக் கொள்வது நமது தார்மீக பொறுப்பு. எனது தொழில் மூலம் அவர்களுக்கு உணவளிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது எனது அதிர்ஷ்டம்,” என்று பெட்டர் இந்தியாவிடம் கூறியுள்ளார் ஃபாக்ரித்.

ஃபாக்ரித் எப்போதும் வறியவர்களிடம் இரக்கமுள்ள குணமுடையவராக இருந்த போதிலும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு சம்பவமே அவரை அவருடைய கண்ணோட்டத்தையும் அணுகுமுறையையும் மாற்றச் செய்துள்ளது. அது குறித்து அவர் effortsforgood.org தெரிவிக்கையில்,

“நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நான் கொல்கத்தாவில் உள்ள டம்டம் கன்டோன்மென்ட் அருகே உள்ள ஒரு தெருவினை கடக்கும்போது, பதற்றமடைந்த ஒரு டீனேஜ் சிறுவன் ஓடி வந்து என் காலடியில் விழுந்தான். அவர் பணத்திற்காக பிச்சை எடுக்கத் தொடங்கினான். அவன் போதைக்கு அடிமையாகி, தீங்கு விளைவிக்கும் போதைப்பொருட்களை வாங்க பணம் கேட்கிறான் என்று நினைத்தேன். அவனை என்னால் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவனை அறைந்துவிட்டேன். பிறகு தான் அவன் போதைக்கு அடிமையாவனில்லை என்பது தெரிந்தது. ‘காசில்லாமல் வீட்டுக்கு சென்றால் அம்மா என்னை கொன்னுடுவாங்க’னு சொன்னான்.”
zomato kolkata 1

இந்த பையன் மட்டும் இது போன்ற வாழ்க்கைக் கதையைக் கொண்டிருக்கவில்லை. அதே ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள பல வீடற்ற குழந்தைகளுக்கு இருண்ட கடந்த காலமும் அவர்களுக்கு முன்னால் இன்னும் இருண்ட எதிர்காலமும் இருப்பதை நான் கண்டேன். அவர்கள் யாரும் இதுவரை ஒரு பள்ளிக்குள்ளும் நுழைந்ததில்லை.

”வயதானவர்கள் போதைப்பொருள்களுக்கு அடிமையாகி, பிச்சை எடுப்பது மற்றும் சிறிய குற்றச் செயல்களில் கூட ஈடுப்பட்டு நாள் பொழுதை கழித்தனர். அதே சமயம் இளையவர்கள் நாள் முழுவதும் விளையாடி திரிந்து சோம்பேறித்தனமாக இருப்பார்கள். விரைவில் அவர்களும் வளர்ந்து அவர்களது முன்னோடிகளான அண்ணன் போன்ற ஆகலாம் என்ற பயம் எனக்குள் தொற்றியது,” என்றுள்ளார்.

அச்சம்பவத்தின் பாதிப்பால், அக்குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளார். ரயில் பிளாட் பார்மில்ன் 17 குழந்தைகளுடன் ஒரு மாலை பள்ளியைத் தொடங்கி உள்ளார். ஒவ்வொரு மாலையும், பிளாட்பார்மில் ஒரு பாயில் அமர்ந்த இந்த குழந்தைகளுக்கு அடிப்படை கல்வியினை கற்று கொடுத்துள்ளார். இன்று, அவரது வகுப்பில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 27-ஐ எட்டியுள்ளது. அவர்களில் பலர் அரசுப் பள்ளிகளிலும் சேர்ந்துள்ளனர்.

“அவர்களில் பெரும்பாலோர் குடியிருக்க வீடற்றவர்கள். ஒரு குடும்பத்தின் அன்பையும் பராமரிப்பையும் ஒருபோதும் அறிந்திருந்தாவர்கள். சிலர் அனாதைகள், மற்றும் சிலர் தாய், தந்தை பிரிந்ததில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள். அவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை அறிய வைத்திட கடுமையாக முயற்சி செய்தேன். ஆனால், உண்மை என்னவென்றால், அவர்களது குடும்பங்களை நடத்துவதற்கு அவர்களுக்கு பணம் தேவை. எனவே,

“இந்தக் குழந்தைகளில் சிலருக்கு சிறிய ஸ்டால்களை ஏற்பாடு செய்தேன். பள்ளி நேரத்திற்குப் பிறகு ஜூஸ், தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை விற்பனை செய்வதன் மூலம் அவர்கள் ஓரளவு சம்பாதிக்கிறார்கள். இதில் அவர்களுக்கு மிகவும் கடினமான உடல் உழைப்பு அல்ல, அவர்கள் அதை அனுபவித்து செய்கிறார்கள்.” என்றார்.

இக்குழந்தைகளுக்கு உதவ அவருடைய நண்பர்களுடன் இணைந்து என்ஜிஓ ஒன்றையும் பதிவு செய்து துவங்கியுள்ளார்.

“நான்கு ஆண்டுகளில், அதிக வறுமை விகிதங்களைக் கொண்ட வங்காள கிராமங்கள் என்று தலைப்புச் செய்திகளாகிய பெல்பஹாரி அல்லது டோட்டோபாரா போன்ற பழங்குடி கிராமங்களில் எங்களது முயற்சிகளை செய்யத் துவங்கினோம். எல்லா இடங்களிலும், எனது முக்கியத்துவம் எப்போதும் கல்விக்கு தான். இந்த இடங்களுக்கு ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை சென்று நூற்றுக்கணக்கான உதவியற்ற குழந்தைகள் பள்ளிகளில் சேர உதவுகிறோம். நாங்கள் அவர்களுக்கு எழுதுபொருள், சீருடை மற்றும் மருந்து கருவிகளையும் வழங்குகிறோம்,” என்று கூறினார்.

zomato kolkata 2

இருப்பினும், அவருடைய கதை இத்துடன் முடிந்துவிடவில்லை. முன்னதாக, கொல்கத்தா மாநகராட்சியில் பணிபுரிந்தவர், முழு நேரத்தையும் குழந்தைகளுக்காக ஒதுக்குவதற்காக வேலையை துறந்தார்.

ஆனால், அவருடைய குடும்பத்தையும் நடத்த வேண்டுமே. அதனால், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், ஜொமேட்டோவில் டெலிவரி எக்ஸிகியூட்டிவாக பணிக்கு சேர்ந்துள்ளார். அன்றிலிருந்து ஜொமேட்டோவிலிருந்து ரத்து செய்யப்படும் சில ஆர்டர்கள் மற்றும் ரெஸ்டாரென்ட்களில் மிஞ்சி போகும் உணவுகளை பெற்று இல்லாதோருக்கு வழங்கி வருகிறார்.

பொதுவாக, ஒரு வாடிக்கையாளர் ஆர்டர் செய்த உணவினை அவர்களது இருப்பிடத்திற்கு டெலிவரிபாய் சென்று கொண்டிருக்கும் வேளையில் வாடிக்கையாளர் கேன்சல் செய்துவிட்டால், அதை வீட்டிற்கு எடுத்துச் செல்லவோ அல்லது ஏழைகளுக்கு கொடுக்குமாறு ஜொமேட்டோ அதன் டெலிவரி பாய்களிடம் அறிவுறுத்துகிறது.
zomato kolkata 3

ஜொமேட்டோ சமீபத்தில் ‘ஃபீடிங் இந்தியா’ எனும் என்ஜிஓ- உடன் இணைந்து கேன்சலாகும் ஆர்டர்களை அப்பகுதியில் உள்ள அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் போன்றவற்றுக்கு வழங்கி உதவும் முயற்சியை ஈடுப்பட்டுள்ளது. உதாரணமாக, எனது பகுதியில், செயின்ட் மேரி அனாதை இல்லத்திற்கு கேன்சலாகும் உணவுகளை வழங்குமாறு எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் உணவகங்களிலிருந்து கிலோக்கணக்கான உணவு வீணடிக்கப்படுகிறது, அதில் 1% கூட பசியால் வாடும் குழந்தைகளைச் சென்று அடைவதில்லை. அனைத்து உணவக உரிமையாளர்கள், உணவு விநியோக தோழர்கள், உணவு விநியோக நிறுவனங்களும் தங்கள் சுற்றுப்புறத்தில் உள்ள பசியால் வாடுவோர்களது பசியினை போக்கும் முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக் கொள்கிறேன்,” என்றார்.

தகவல் உதவி: effortsforgood.org & thebetterindia | பட உதவி: thebetterindia

கட்டுரையாளர் : ஜெயஸ்ரீ


  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close
Report an issue
Authors

Related Tags

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக

Our Partner Events

Hustle across India