சிறப்புக் குழந்தைகளுக்கு மிகப்பெரிய விழா: சுதந்திர தினத்தில் 'ஊருணி அறக்கட்டளை' முன்னெடுக்கும் நிகழ்வு!
ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியா முழுவதும் 74-ம் வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்குத் தயாராகி வரும் நிலையில் ‘ஊருணி அறக்கட்டளை’ அதன் மூன்றாம் ஆண்டு சுதந்திரத் திருவிழா (Freedom Carnival) கொண்டாட்டத்திற்காக ஒன்றிணைந்து வருகிறது.
சிறப்புத் தேவையுள்ள குழந்தைகள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கான சுதந்திரத்தை வழங்கவும் சிறப்புக் குழந்தைகள் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப் படவேண்டும் என்பதற்காகவும் இந்த அறக்கட்டளை அனைவரையும் ஒன்றிணைக்கிறது.

ஊருணி அறக்கட்டளை Give Their World Project-ன் கீழ் இந்த விழாவை ஏற்பாடு செய்கிறது. இது ஆட்டிசம், டவுன் சிண்ட்ரோம், ஆஸ்பெர்ஜர் சிண்ட்ரோம், பெருமூளை வாதம் உள்ளிட்ட வளர்ச்சிக் குறைபாடுகள் மற்றும் கற்றல் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்காக ஏற்பாடு செய்யப்படும் வருடாந்திர நிகழ்வாகும்.
சிறப்புக் குழந்தைகள் வேடிக்கை நிறைந்த சூழலில் தங்களுக்கான வாய்ப்புகளை ஆராய உதவுவதே இந்த நிகழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்தக் குழந்தைகள் விளையாட்டுகள் வடிவில் சுதந்திரமாகவும் சிறப்பாகவும் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள ஏதுவாக கட்டமைப்புகள் உருவாக்கப்படுகிறது. இவர்களது குறைபாடுகள் குறித்த புரிதலை ஏற்படுத்தி இவர்களுக்கு உரிய மரியாதையும் உரிமையும் கிடைப்பதற்கு ஆதரவளித்து இவர்கள் நலமுடன் வாழ உதவவேண்டியது அவசியம்.

கடந்த ஆண்டு நிகழ்வின் புகைப்படங்கள்
சிறப்புத் திறன் கொண்டவர்கள் மற்றும் சிறப்பு கவனம் தேவைப்படுபவர்களை ஒருங்கிணைப்பதால் சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார ரீதியாக ஒவ்வொரு அம்சத்திலும் கிடைக்கும் நன்மைகளைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்வதும் இந்நிகழ்வின் நோக்கமாகும்.
விழா தேதி: ஆகஸ்ட் 15, 2019
நேரம்: காலை 9.30 முதல் மாலை 4 வரை
இடம்: எம்என்எம் ஜெயின் பொறியியல் கல்லூரி, குரு மருதூர் கேசரி பில்டிங், சுப்ரமண்ய நகர் சாலை, ஜோதி நகர், துரைப்பாக்கம், சென்னை – 600 097
பரிசுகள்
ஒவ்வொரு விளையாட்டிலும் பங்கேற்ற அல்லது வெற்றிபெற்ற சிறப்புக் குழந்தைகளுக்கு ஆயிரக்கணக்கான பரிசுகள் வழங்கப்படும். இந்தப் பரிசுகள் விலையுயர்ந்தவை அல்ல. ஆனால் அவை அன்புடன் வழங்கப்படுவதால் அதன் மதிப்பு கூட்டப்படுகிறது. மக்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப இந்த சிறப்புக் குழந்தைகளுக்கு ஏதேனும் பரிசுப்பொருட்களை வழங்கலாம். ரொக்கமாக பெறப்படுவதில்லை.
போக்குவரத்து
இந்த நிகழ்வில் சுமார் 1,500 சிறப்புக் குழந்தைகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்வது அவர்களுக்கு உகந்ததாக இருக்காது என்பதால் வாகன ஏற்பாட்டில் மக்கள் உதவலாம். இத்தகைய உதவிகள் மூலம் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதில் நீங்களும் பங்களிக்கலாம்.
தன்னார்வலர்கள்
தன்னார்வலப்பணிகள் மகிழ்ச்சியளிப்பவை. அதில் ஈடுபடுவதன் மூலமே அதை உணரமுடியும். இந்நிகழ்விற்கு நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் தேவைப் படுகின்றனர். இயன்றவர்கள் இதில் இணைந்துகொண்டு மற்றவர்களையும் இணைத்துக்கொண்டு உதவலாம்.
தொடர்பு கொள்ள: ஜென்சி செல்வம் - 9551648732