விபத்தில் பாதிக்கப் பட்டவருக்கு உதவ இலவச 'முதல் உதவி' பயிற்சி அமைப்பு தொடங்கிய கலா பாலசுந்தரம்!

By Mahmoodha Nowshin
July 30, 2019, Updated on : Thu Sep 05 2019 07:33:06 GMT+0000
விபத்தில் பாதிக்கப் பட்டவருக்கு உதவ இலவச 'முதல் உதவி' பயிற்சி அமைப்பு தொடங்கிய கலா பாலசுந்தரம்!
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

சராசரியாக நாள் ஒன்றுக்கு 1317 சாலை விபத்துகள் நடக்கிறது, இதில் 413 உயிர் இழப்புகள் சம்பவ இடத்திலே ஏற்படுகிறது. சாலை விபத்து அறிக்கை தமிழ்நாடு 2019ன் படி சென்னை தான் விபத்துகள் நடக்கு நகரத்தில் முதல் இடத்தில் உள்ளது. 2018 லும் சென்னை தான் முதலிடத்தில் இருந்தது. நாளுக்குநாள் விபத்துகள் அதிகரிப்பதோடு உயிரிழப்புகளும் அதிகரிக்கிறது.


இதற்கு முக்கியக் காரணம் விரைவான நடவடிக்கை – முதல் உதவி கிடைக்காததே. விபத்திற்குப் பின் தேவைப்படுகின்ற முதல் உதவியை ஆம்புலன்ஸ் வந்த பிறகு தான் தரவேண்டும் என்று அவசியம் இல்லை சுற்றி வேடிக்கை பார்க்கும் நம்மில் ஒருவர் கூட செய்யலாம்; அதற்காக உழைக்கிறது ’அலெர்ட்’ என்னும் தன்னார்வ தொண்டு அமைப்பு.

அலெர்ட்

நிறுவனர் கலா பாலசுந்தரம்

அது எப்படி மருத்துவப் பிண்ணனி இல்லாமல் சாமானியர் ஒருவரால் முதல் உதவி செய்ய முடியும்?

முடியும் என விளக்குகிறார் Alert அமைப்பின் நிறுவனர் கலா பாலசுந்தரம்.

“முதல் உதவி பயிற்சி பெற எந்த வித பின்னணி இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு நாளில் அல்லது அரை நாளில் கூட மிக எளிமையான முதல் உதவி பயிற்சியை ஒருவர் பெறமுடியும். இந்த பயிற்சியை அலெர்ட் இலவசமாக அளிக்கிறது,” என்கிறார்.
alert

அலெர்ட் - முதல் உதவி பயிற்சி

அலெர்ட் உருவானது எப்படி?

ஒரு விபத்து நடக்கும்பொழுது நம்மில் ஒருவராக வேடிக்கை பார்த்தவர் தான் கலா. ஆனால் தினம் தினம் இப்படி ஒரு காட்சியை பார்த்த அவருக்கு மனதில் நெருடல் ஏற்பட்டது. விபத்தால் பாதிக்கப்பட்டு ஒருவர் தவிக்கும் நிலையில் அவருக்கு உதவ யாரும் முன்வராதது ஏன் என்பது தான். மற்றவர்களை பார்த்து கேட்பதை விட தனக்குத் தானே இந்த கேள்வியை கேட்டு ’முதல் உதவி’ எப்படி செய்ய வேண்டும் என்பதை வகுப்பிற்கு சென்று கற்றுக்கொண்டார்.

“2005ல் OMR வழியாக நான் பணிபுரிந்த ஐடி நிறுவனத்துக்கு செல்லும் போது இது போன்ற நெடுஞ்சாலை இல்லை இதனால் அங்கு தினமும் ஒரு விபத்து ஏற்படும். நான் நிறுவன பேருந்தில் இருந்து எட்டிப் பார்த்தால் விபத்தாக இருக்கும். நான் பார்த்த போதெல்லாம் காயமடைந்தவருக்கு உதவி செய்யாமல் பலரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.”

ஒரு நாள் என் கேள்விக்கு பதில் பெற முதலில் நான் முதல் உதவி செய்ய கற்றுக் கொண்டேன் என தெரிவிக்கிறார் கலா. இவரைப் பார்த்து கலாவின் சக ஊழியர்களும் முதல் உதவி பயிற்சியை எடுத்துக்கொண்டனர். இதை வரவேற்று மக்கள் கற்றுக் கொள்ள முன்வருவதை கண்ட கலா இதற்கான ஒரு அமைப்பை அமைக்க முடிவு செய்தார்.

“பெரும்பாலும் முதல் உதவி பயிற்சி எடுத்துக்கொள்ளாததற்கு முக்கியக் காரணம் கட்டணம் தான். அதனால் முதல் உதவி பயிற்சி இலவசமாக அளிக்கும் அமைப்பை ஆரம்பிக்க முடிவு செய்தேன். எனது மன நிம்மதிக்காக துவங்கிய ஒன்று, 2006ல் அமைப்பாக மாறியது,” என்றார்.
அலெர்ட்

இப்பொழுது இவ்வமைப்பின் முக்கியக் குறிக்கோள் குடும்பத்தில் ஒருவராவது முதல் உதவி பயிற்சி எடுத்து இருக்க வேண்டும் என்பது தான். பள்ளி, கல்லூரி, ஐடி நிறுவனங்களுக்குச் சென்று நேரம் அடிப்படையில் பட்டறைகள் நடத்தி முதல் உதவி பயிற்சி நடத்துகின்றனர். அது மட்டுமின்றி இரண்டு நாள் தீவிர வகுப்பும் நடத்தி அப்போலோ போன்ற மருத்துவமனைக்கு அனுப்பி தேர்வு ஒன்றை நடத்துகின்றனர்.


அதன்பின் அதற்கு பட்டமளிப்பு விழாவும் நடத்துகின்றனர். பட்டம் பெற்றவர்களின் தகவல்களை ’voice’ என்னும் செயிலியில் இணைத்து இடத்தின் அடிப்படையில் செயல்படும் உபர் ஓலா போல் முதல் உதவி வாலண்டியர்களாக செயல்படுகின்றனர்.

விபத்து ஏற்பட்டு முதல் உதவு தேவைப்பாட்டால் இந்த செயிலி மூலம் அருகிலுள்ள தன்னார்வலர்களை அழைக்கலாம். அதுமட்டுமன்றி வாராவாரம் முதல் உதவி பட்டறைகளை இலவசமாக நடத்தி வருகின்றனர்.
அலெர்ட்

இதோடு இந்தியாவில் முதல் முதலாக ஸ்டிமுலேசன் லேப் ஒன்றையும் சென்னையில் நிறுவி உள்ளது அலெர்ட். அதாவது விபத்து நடப்பதுபோன்ற காட்சிகளை ஏற்படுத்தி பயிற்சியாளர்கள் அந்த சூழ்நிலையை பதட்டமில்லாமல் எப்படி கையாள வேண்டும் என்பதை நேரடியாக செய்துக் காட்டுவதே ஸ்டிமுலேசன் லேப்.

“2015 இந்த லேபை நாங்கள் நிறுவியபோது ஆசியாவில் 18 லேப்கள் தான் இருந்தது. அதிலும் அனைத்து லேப்களும் மருத்துவத் துறையுடன் சார்ந்தே உள்ளது. எங்கள் லேப் மட்டுமே பாமர மக்களுக்கு பயிற்சியளிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது,” என்கிறார்.

கூடிய விரைவில் மஹாராஷ்டரா மற்றும் கர்நாடகாவில் இதுபோன்ற லேப் கொண்டு வர முயற்சிகள் செய்துவருகிறது இவ்வமைப்பு. தமிழ்நாடு மட்டுமின்றி பயிற்சிகளை இந்தியா முழுவதும் சென்று செய்கின்றனர் இந்த தன்னார்வலர்கள். அரசுடனும் இணைந்து பாதுகாப்பிற்காக பணிபுரிகிறது அலெர்ட்.

“அலெர்ட் அமைப்பின் ஒரு வேண்டுகோள், மக்கள் முன் வந்து ’முதல் உதவி’ பயிற்சியை எடுக்க வேண்டும் என்பது தான்.

வேடிக்கை பார்க்காமல் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டுமா? கீழே உள்ள கணக்கில் தொடர்புக் கொண்டு உடனடியாக பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள்: அலைபேசி: 99440 66002/4, சமூக வலைத்தளம்: Facebook / Twitter