மதுரை இளைஞரின் க்ளூவால் ‘விக்ரம் லேண்டரை’ கண்டுபிடித்த நாசா!
நாசாவாலேயே கண்டுபிடிக்க முடியாத விக்ரம் லேண்டர் இருப்பிடம் குறித்து க்ளூ கொடுத்த மதுரை இளைஞர் சண்முக சுப்ரமணியன். யாருப்பா இவரு உடனே அவர பத்தி தெரிஞ்சிக்கனும் போல இருக்கா? இதைப் படிங்க.
சந்திராயன்-2ல் அனுப்பிய விக்ரம் லேண்டர் என்ன ஆனது? என்று உலகம் முழுவதும் இருக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையங்களும், விண்வெளி ஆராய்ச்சியாளர்களும் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி தேடிக் கொண்டிருந்தனர். இஸ்ரோ தொடங்கி நாசா வரை நிலவின் தென்துருவப் பகுதியில் கடந்த 3 மாதங்களில் ஆர்பிட்டர் உதவியுடன் புகைப்படங்களை எடுத்து விக்ரம் லேண்டரின் பாகங்களை எங்கேனும் கண்டுபிடிக்க முடிகிறதா என்று தரவுகளை வைத்து ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தான் சென்னையைச் சேர்ந்த பொறியாளர் சண்முக சுப்ரமணியன் நாசாவின் புகைப்படங்களை வைத்து தென்துருவத்தின் இந்தப் பகுதியில் விக்ரம் லேண்டரின் உதிரிபாகங்கள் இருப்பதாக நாசாவிற்கு க்ளூ அனுப்பினார்.
மதுரையைச் சேர்ந்த 33 வயது இளைஞர் சண்முக சுப்ரமணியன் மெக்கானிக்கல் என்ஜியிரிங் முடித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த பொறியியல் கட்டுமான நிறுவனம் ஒன்றில் கம்ப்யூட்டர் புரோகிராமராக பணியாற்றி வருகிறார். இவரின் ஞானக்கண்ணில் தான் விக்ரம் லேண்டரின் பாகங்கள் பட்டுள்ளது. விக்ரம் லேண்டரின் உதிரிப் பாகங்களை இவர் எப்படிக் கண்டுபிடித்தார்?
விக்ரம் லேண்டர் பற்றி யாராலயும் எந்தத் தகவலையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. நாசாவே எங்களால் விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறியதே சண்முகத்தின் ஆர்வத்தைத் தூண்டி இருக்கிறது. இதன் விளைவாக கடின முயற்சிகளைச் செய்து விக்ரம் லேண்டர் பற்றி இன்ச் இன்ச்சாக ஆய்வு செய்திருக்கிறார்.
நாசாவின் எல்ஆர் ஆர்பிட்டர் செப்டம்பர் 17, அக்டோபர் 14, 15 மற்றும் நவம்பர் 11 ஆகிய தினங்களில் நிலவின் தென்துருவப் பகுதியில் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டது. இந்தப் புகைப்படங்களை வைத்து தனது ஆய்வைத் தொடங்கி இருக்கிறார் சண்முக சுப்ரமணியன்.
இரண்டு லேப்டாப்களை வைத்து ஒரு பக்கம் பழைய புகைப்படத்தையும், மற்றொரு லேப்டாப்பில் புதிய புகைப்படத்தையும் வைத்து பிக்சல் பிக்சலாக ஆராய்ச்சி செய்திருக்கிறார். தன்னுடைய தொடர் முயற்சியால் கண்டுபிடித்தவற்றை அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் அக்டோபர் 3ம் தேதி நாசா மற்றும் இஸ்ரோவை டேக் செய்து வெளியிட்டார் சண்முக சுப்ரமணியன்.
இவரின் க்ளூவை வைத்து அந்தப் பகுதியில் ஆய்வு செய்த நாசா அங்கு விக்ரம் லேண்டர் இருப்பதை உறுதி செய்து அறிவித்துள்ளது. செப்டம்பர் 17ம் தேதி எல்ஆர் ஆர்பிட்டர் எடுத்த புகைப்படங்களையும் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் முன் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வைத்து ஏதேனும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடிந்தால் அவற்றை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டிருந்தோம். பலரும் பல விதமான கருத்துகளை தெரிவித்தனர்.
சண்முக சுப்ரமணியன் மட்டுமே விக்ரம் தரையிறங்கிய பகுதியில் இருந்து 750 மீட்டர் தொலைவில் வடமேற்குப் பகுதியில் ஒரு புதிய பிரகாசமான பிக்சல் தெரிவதை குறிப்பிட்டு சாதகமான பதிலைப் பதிவிட்டதாக நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நாசாவின் துணை திட்ட விஞ்ஞானி ஜான் கெல்லர் சண்முக சுப்ரமணியனின் கடின முயற்சியை பாராட்டிக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில்
“விக்ரம் லேண்டரின் உதிரி பாகங்கள் இருக்கும் பகுதியை குறிப்பிட்டு தாங்கள் அனுப்பிய தரவுகளுக்கு நன்றி. உங்களது தகவலை அடிப்படையாக வைத்து எல்ஆர்ஆர்பிட்டர் உதவியுடன் அந்தப் பகுதியில் நடத்திய கூடுதல் ஆய்வில் விக்ரம் தரையிறங்குவதற்கு முன்னும் பின்னும் அங்கு சில மாற்றங்கள் இருப்பதை கண்டுபிடித்தோம். நீங்கள் சொன்னது போல அந்தப் பகுதியில் விக்ரம் லேண்டரின் இதர பாகங்களும் கிடைத்துள்ளது உண்மை தான். விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை நாசா குழு கண்டுபிடித்து அந்தப் புகைப்படங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.”
உங்களது கண்டுபிடிப்பை தாமதமாக அங்கீகரிப்பதற்கு மன்னிக்கவும். உங்களது விடாமுயற்சிக்கும், கடின உழைப்பிற்கும் என்னுடைய பாராட்டுக்கள். விக்ரம் லேண்டர் இருப்பிடம் குறித்து எல்லோருக்குமே ஒவ்வொரு கருத்துகள் இருந்தது. நீங்கள் அனுப்பிய தரவுகளை ஆய்வு செய்து அதனை உறுதிப்படுத்த எங்களுக்கு காலம் தேவைப்பட்டது. ஆய்வின் முடிவுகள் கிடைத்த பிறகு உங்களுக்கு தெரியப்படுத்தலாம் என்பதாலேயே இந்த தாமதம் என்று கெல்லர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
விக்ரம் லேண்டர் பற்றி நாசா வெளியிட்டுள்ள ட்வீட்டில்,
“சந்திராயன் 2ன் விக்ரம் லேண்டர் இருப்பிடத்தை நாசாவின் மூன் மிஷன் மற்றும் எல்ஆர் ஆர்பிட்டர் குழு கண்டுபிடித்துள்ளது. நிலவின் புகைப்படத்தில் நீல மற்றும் பச்சை நிறத்தில் இருக்கும் புள்ளிகள் விக்ரம் லேண்டரின் உதிரி பாகங்கள். பச்சை நிறப்புள்ளிகள் லேண்டரின் பாகங்கள், நீல நிறப்புள்ளிகள் நிலவின் தரைப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் சலசலப்பை குறிக்கிறது. படத்தில் S எனக் குறிப்பிட்டிருக்கும் பகுதியைத் தான் சண்முக சுப்ரமணியன் கண்டுபிடித்திருந்தார். இது விக்ரம் லேண்டர் விழுந்த பகுதிக்கு சரியாக 750 மீட்டர் தொலைவில் கிடந்த உதிரி பாகம்.”
எனக்கு எப்போதுமே விண்வெளி அறிவியலில் ஆர்வம் உண்டு. விக்ரம் லேண்டரின் பாதையை கண்டுபிடிக்க மிகவும் கஷ்டப்பட்டேன். என்னுடைய கடின உழைப்பிற்கு பலன் கிடைத்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. எந்த ஒரு ராக்கெட் ஏவுதலையும் பார்க்க நான் தவறவிட்டதில்லை என்று உற்சாகமாகக் கூறுகிறார் சண்முக சுப்ரமணியன்.
சந்திராயன் 2 குழுவிலோ, எல்ஆர் ஆர்பிட்டர் குழுவிலோ இல்லாத போதும் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக நாசா வெளியிட்ட தரவுகளை வைத்து விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டறிந்து உலகத்தின் பார்வையை தனது பக்கம் திருப்பி இருக்கும் சண்முகத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ரூ. 1000 கோடியில் இஸ்ரோ அனுப்பிய சந்திராயன்-2 95 சதவிவிதம் வெற்றி அடைந்தது, செப்டம்பர் 7ம் தேதி நிலவில் தரையிறங்கும் போது விக்ரம் லேண்டர் என்ன ஆனது என்று தெரியாமல் இருந்தது. கடைசியாக தமிழர் ஒருவரே விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டுபிடித்து தமிழன் உறுதியோடு முயன்றால் எதுவுமே முடியாதது இல்லை என்பதை உலகிற்கு மீண்டும் நிரூபித்துள்ளார்.
வாழ்த்துக்கள் சண்முக சுப்ரமணியன்!
தகவல் உதவி : என்டிடிவி