’இட்லி’ தோன்றியது இந்தியாவில் இல்லை; விரைவில் விண்வெளி செல்லும் இட்லி வரலாற்றை தெரிஞ்சுக்கோங்க!
தென்னிந்திய காலை உணவான இட்லி இந்தியாவைச் சேர்ந்தது கிடையாது என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். விரைவில் இந்த உணவு விண்வெளி வீரர்களுடன் விண்வெளிக்கு பயணிக்கப்போவது தெரியுமா? இதுபோன்ற சுவாரஸ்யமான தகவல்கள் உங்களுக்காக...
தென்னிந்திய காலை உணவான இட்லி இந்தியாவைச் சேர்ந்தது கிடையாது என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? விரைவில் இந்த உணவு விண்வெளி வீரர்களுடன் விண்வெளிக்கு பயணிக்கப்போவது தெரியுமா? இதுபோன்ற சுவாரஸ்யமான தகவல்கள் உங்களுக்காக...
தட்டில் இருக்கும் குட்டி நிலா போன்ற இட்லி, தென்னிந்தியர்களின் விரும்ப உணவாக உள்ளது. பிஞ்சு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் எளிதில் ஜீரணமாகக்கூடிய, ஆரோக்கியமான உணவு. இதெல்லாம் விட தனக்கென தனியாக ஒரு தினம் கொண்டாடும் அளவிற்கு இட்லி வேல்டு பேமஸ் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
அப்படி இட்லி தினம் கொண்டாடும் அளவுக்கு அது படைத்த வரலாறு என்னவென தெரிந்து கொள்ள வேண்டாமா?
இட்லியின் முழு வரலாறு என்ன தெரியுமா?
- அரிசியை மாவாக்கி ஆவியில் வேகவைத்து, பல வகை சட்னி, சம்பாருடன் பரிமாறப்படும் இட்லி, இந்தியாவில் 700 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டது.
- நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருப்பது போல் இட்லி இந்திய உணவு கிடையாது என்ற தகவலும் உண்டு. இது அதிர்ச்சியானதாக இருந்தாலும், சில வரலாற்று ஆசிரியர்கள் இட்லி முதலில் இந்தோனேசியாவில் தோன்றியதாகக் கருதுகின்றனர். இந்தோனேசிய உணவான 'கெட்லி'தான் பரிணாம வளர்ச்சிபெற்று இந்திய உணவு 'இட்லி'யாக உருவெடுத்துள்ளது.
- இட்லியை ஆவியில் வேகவைக்கும் முறையை கி.பி. 800-1200 இடைப்பட்ட காலக்கட்டத்தில் இந்தியாவில் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.
- இட்லியின் பண்டை கால பெயர் ‘இட்டரிக’ என்பதாகும். கன்னட மொழியில், சிவகோட்டி ஆச்சாரியர் 'வடராதனே' என்னும் காவியத்தில் ’இட்டலீஜ்' எனக் குறிப்பிட்டுள்ளார். கி.பி. 920க்கு முந்தைய காலக்கட்டத்தில் உளுத்தம் பருப்பு மாவுடன் சேர்த்து இதனை தயாரித்துள்ளனர்.
- கி.பி 1130 ஆம் ஆண்டு சமஸ்கிருத இலக்கிய நூலான மனசொல்லாசாவில் ‘இத்தாரிகா’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உளுத்தம் பருப்பு மாவைக் கொண்டு செய்யப்பட்ட உணவு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- தமிழ் மக்கள் முதன்முதலில் 17 ஆம் நூற்றாண்டில் ‘இட்லி’ என்று அழைக்க ஆரம்பித்துள்ளனர். இட்லி ஆரம்பத்திலிருந்தே அரிசி உளுத்தம் பருப்பு கொண்டு அரைக்கப்பட்டு, நீண்ட நொதித்தல் செயல்முறை மற்றும் வேகவைத்தல் ஆகியவற்றைப் பின்பற்றி வருவது தெரியவந்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
விண்வெளி வீரர்களின் உணவுப் பட்டியலில் இட்லி:
ககன்யான் - இந்தியாவின் முதல் மனித விண்வெளித் திட்டம். ’ககன்யான்’ மூலம் 4 இந்தியர்களை 7 நாள்களுக்கு விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டிருக்கிறது. இந்தத் திட்டத்துக்கான செலவு ரூ.10,000 கோடி என மதிப்பிடப் பட்டுள்ளது.
இதில், விண்வெளி வீரர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை தயாரித்து வரும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் மைசூருவில் இயங்கும் உணவுப் பாதுகாப்பு ஆராய்ச்சி மையம், விண்வெளிக்குச் செல்ல உள்ள உணவு பட்டியலில் இட்லியை சேர்த்துள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் ஆய்வின்(DFRL) படி, இரண்டு ரூபாய் அளவிலான சிறிய இட்லிகள் - சாம்பார் பவுடர் மற்றும் தேங்காய் சட்னி அடங்கிய தொகுப்பு விண்வெளி வீரர்களுடன் விண்வெளிக்கு பயணம் செய்ய உள்ளது.
700º C வெப்பநிலையில் அகச்சிவப்பு கதிர்வீச்சைப் பயன்படுத்தி இட்லி உலர்த்தப்படும், மேலும் மைக்ரோவேவ் மூலம் ஈரப்பதம் நீக்கப்பட்டு, பாக்டிரியா போன்ற நுண்ணுயிரிகள் அண்டாத வகையில் பேக் செய்து அனுப்பப்பட உள்ளது.
இட்லி தினம் கொண்டாட யார் காரணம் தெரியுமா?
சென்னையைச் சேர்ந்த ‘இட்லி இனியவன்’என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. முதன் முதலில், 30 வகை இட்லிகளை வைத்து, ஒரு கண்காட்சி நடத்தினார். அதற்கே, மக்கள் பெருத்த ஆதரவு தந்தனர். அதன்பின், 200 வகை இட்லி கண்காட்சி, அப்புறம், 1,000 வகை இட்லி கண்காட்சி நடத்தி உலகப் புகழ் பெற்றார்.
அத்துடன் விட்டு விடாமல், 124.800 கிலோ கிராமில், இட்லி சுட்டு அசத்தி, உலக சாதனை படைத்தார். மார்ச் 30, 2015 அன்று 1,328 வகையான இட்லிகளை செய்து அசத்தினார். அப்படித்தான் மார்ச் 30 உலக இட்லி தினமாக மாறியது, அதைக் கொண்டாட அதிகாரப்பூர்வமாக ஒரு காரணமும் கிடைத்தது.