‘CHATGPT - 300 மில்லியன் நபர்களின் வேலைக்கு ஆபத்து’ - பிரபல முதலீட்டு நிறுவனம் பகீர் தகவல்!
உலகின் முன்னணி நிதியியல் மற்றும் முதலீட்டு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் AI தொழில்நுட்பம் காரணமாக வர உள்ள மில்லியன் கணக்கான வேலையில்லா திண்டாட்டம் குறித்து பகீர் கிளப்பியுள்ளது.
உலகின் முன்னணி நிதியியல் மற்றும் முதலீட்டு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் AI தொழில்நுட்பம் காரணமாக வர உள்ள மில்லியன் கணக்கான வேலையில்லா திண்டாட்டம் குறித்து பகீர் கிளப்பியுள்ளது.
AI தொழில்நுட்பம்:
கூகிள் மற்றும் மைக்ரோசாஃப்ட் இடையே உருவாகியுள்ள Ai யுத்தம் தகவல் தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. உலகின் முன்னணி சர்ச் இன்ஜின் நிறுவனமான கூகுளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சாட்ஜிபிடி (ChatGPT) நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
குறிப்பாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ள சாட்ஜிபிடி-யின் கோடிங் எழுதும் திறன் ஐ.டி. நிறுவன ஊழியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு போட்டியாக செயற்கை நுண்ணறிவு (AI) சேவையில் அடுத்தக்கட்டத்தை எட்டும் நோக்கத்துடனும், புதிய மற்றும் உயர்தர பதில்களை வழங்குவதற்காக, இணையத்தில் உள்ள தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவும் பார்ட் (Bard) என்ற தேடல் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இரண்டு நிறுவனங்களும் போட்டி உருவாக்கி வரும் செயற்கை நுண்ணறிவு சேவை பிற்காலத்தில் பல்லாயிரக்கணக்கானோரின் வேலைக்கு ஆபத்தாக அமையக்கூடும் என பிரபல நிறுவனம் எச்சரித்துள்ளது.
300 மில்லியன் பேருக்கு ஆபத்து:
கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பொருளாதார வல்லுனர்களின் கூற்றுப்படி,
“ChatGPT போன்ற தளங்களை உருவாக்கியுள்ள செயற்கை நுண்ணறிவு மூலமாக உலகளவில் 18 சதவீத வேலைகள் கணினிமயமாக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் ஏதாவது ஒருவகையில் உலகம் முழுவதும் உள்ள 300 மில்லியன் நபர்கள் வேலை இழக்கலாம்,” எனத் தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஒயிட் காலர் ஜாப் எனக்கூறப்படும் கம்ப்யூட்டர் டிசைனர்கள், புரோகிராமர் உள்ளிட்டோர் வேலை இழக்க வாய்ப்புள்ளதாகவும், ஹெச்.ஆர்., அட்மின் போன்ற நிர்வாக ஊழியர்களும், வழக்கறிஞர்களுக்கும் கூட வேலையில்லாமல் போகலாம எனத் தெரிவித்துள்ளது.
இதேபோல், கட்டுமானம், பழுது நீக்கம் போன்ற உடல் சார்ந்த வேலைகளிலும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் தானியங்கி கருவிகள் அதிகரிக்கும் பட்சத்தில் அவற்றிலும் எதிர்வினைகள் உண்டாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாதகம் vs பாதகம்:
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில், ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு தற்போதைய வேலைகள் ஓரளவு AI ஆட்டோமேஷனுக்கு மாறி வருகின்றன. மேலும், அனைத்து வேலைகளிலும் கால் பகுதி வரை AI ஆல் முழுமையாக செய்ய முடியும் என்பதை கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் கணித்துள்ளது.
குறிப்பாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள சாட்ஜிபிடி 4 இயங்குதளமானது, கோடிங் செய்வதை எளிமையாக்கும் வகையிலும், வெப்சைட் டிசைனிங்கை விரைவாக உருவாக்கும் வகையிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது ஏராளமான பயனர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோன்ற AI-ஐ மேலும் பயன்படுத்தினால் வேலை இழப்பு ஏற்படும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், தொடக்கத்தில் தொழிலாளர்களை இடமாற்றம் செய்யும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் வரலாற்று ரீதியாகவும் நீண்ட காலத்திற்கு வேலைவாய்ப்பு வளர்ச்சியை உருவாக்குவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பணியாளர்களை வழக்கமான வேலையில் இருந்து AI உற்பத்திக்கான தொழிலாளர்களாக மாற்றலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு சேவையின் வளர்ச்சி, உலகின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறனை ஆண்டுதோறும் 7 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
“தொழிலாளர் சந்தையில் AI இன் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும், பெரும்பாலான வேலைகள் மற்றும் தொழில்கள் ஆட்டோமேஷனுக்கு ஓரளவு மட்டுமே மாறக்கூடும். இதனால் AI தொழில்நுட்பம் மூலமாக மாற்றங்கள் நிகழ்வதற்கு பதிலாக புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவும் வாய்ப்புள்ளது,” என்கிறது.
அதாவது, ஒரு குறிப்பிட்ட துறை AI ஆட்டோமேஷனுக்கு மாறும் போது, அதில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணிச்சுமை 25 முதல் 50 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கம்ப்யூட்டர், தானியங்கி வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது எப்படி மனிதர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்ற அச்சம் நிலவியதோ, அதேபோல் தான் இப்போதும் AI தொழில்நுட்ப வளர்ச்சியைக் கண்டு மக்கள் அச்சப்படுகின்றனர்.
ஆனால், உண்மையில் AI தொழில்நுட்ப புரட்சி, புதிய வேலைகளை உருவாக்கவும், இடம்பெயர் தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், தொழிலாளர்களால் ஏற்படும் செலவை குறைக்கவும் உதவக்கூடும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவல் உதவி: சிஎன்என்