பள்ளிகளை பெற்றோர்களுடன் இணைக்கும் சென்னை நிறுவனம் - ரூ.5 கோடி வர்த்தகத்தை நோக்கிப் பயணம்!
‘பேரன்டஸ் அலாரம்’ நிறுவனம் 2010 ல் கன்னையா குமாரால் துவக்கப்பட்டது. ஒரு முழுமையான சேவையாளராக, வருகை பதிவேடு நிர்வாகம், ஜிபிஎஸ் பஸ் கண்காணிப்பு, கட்டண நினைவூட்டல், தேர்வு தகவல்கள் ஆகியவற்றை வழங்குகிறது.
இந்திய கல்விச் சூழல், கடந்த சில ஆண்டுகளில் குறிப்பாக எல்லோரும் ஆன்லைன் கல்விக்கு மாறிய சுழலில் மிகப்பெரிய மாறுதலை எதிர்கொண்டு வருகிறது.
இந்தப் பிரிவு மாறி வரும் விதத்தின் அடையாளங்களில் ஒன்றாக ‘பேரன்ட்ஸ் அலாரம்’ (Parentsalarm) நிறுவனம் அமைகிறது. 2010ல் கன்னையா குமாரால் துவக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த நிறுவனம், கிளவுட் சார்ந்த இ.ஆர்.பி சேவையை பள்ளிகளுக்கு வழங்குகிறது.
வீட்டுப்பாடம் தொடர்பான சேவயுடன் துவங்கினாலும் இன்று ஒரு முழுமையான சேவையாளராக, வருகை பதிவேடு நிர்வாகம், ஜிபிஎஸ் பஸ் கண்காணிப்பு, கட்டண நினைவூட்டல், தேர்வு தகவல்கள் ஆகியவற்றை வழங்குகிறது.
இந்நிறுவனம் இந்தியா முழுவதும் 520 வாடிக்கையாளர்களைக் கொண்டு, 5.20 லட்சம் மாணவர்களுக்கு சேவை வழங்குவதாகத் தெரிவிக்கிறது. நிறுவனத்தை துவக்கிய போது இந்த அளவு வளர்ச்சியை எதிர்பார்க்கவில்லை என்று எஸ்.எம்.பி ஸ்டோரியிடம் கன்னையா குமார் கூறினார்.
இன்று நிறுவனம் இ.ஆர்.பி சேவையில் தனக்கென தனியிடம் பிடித்திருப்பதோடு, மைகிளாஸ்போர்டு, ஐவெப் டெக்னாலஜீஸ், மைகிளாஸ் கேம்பஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் போட்டியிடுகிறது.
சந்தை இடைவெளி
விஐடி-ல் படித்துக்கொண்டிருந்த போது கன்னையா குமார், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தொழில்நுட்ப வளர்ச்சி மீது இன்னமும் காகிதம் சார்ந்த சேவைகளைப் பயன்படுத்துவதை பார்த்தார்.
கல்லூரியின் கடைசி வருடத்தில் அவர் இதற்கான ஸ்டார்ட் அப் ஐடியாவை உருவாக்கினார்.
“எண்ணற்றவர்களுடன் உரையாடி, ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட பிறகு, பள்ளிகளுடன் பெற்றோர்கள் மேலும் சிறந்த முறையில் தொடர்பு கொள்வதற்கான சேவையை உருவாக்குவது எனத் தீர்மானித்தேன்,” என்கிறார்.
இதன் பயனாக, ’பேரன்ட்ஸ் அலார்ம்’ நிறுவனத்தை துவக்கினார். தனது சொந்த வளங்களைக் கொண்டு கல்லூரி கடைசி வருடத்தில் நிறுவனத்தைத் துவக்கியதாகவும், வருவாயை மீண்டும் முதலீடு செய்து வருவதாகவும் கூறுகிறார்.
கன்னாயவுக்கு தனது சேவையில் நம்பிக்கை இருந்தாலும், இது குறித்து விளக்கி பள்ளிகள், வாடிக்கையாளர்களை ஏற்கச்செய்வது சவாலாக இருந்தது. பிரத்யேகமயமாக்கம் இன்னொரு சவாலாக இருந்தது.
“ஒவ்வொரு பள்ளிக்கும் வேறுபட்ட தேவைகள் உள்ளன. எனவே பிரத்யேகமயமாக்கல் பெரும் சவாலாகும்,” என்கிறார்.
ஆரம்ப சவாலான காலத்தில் வாய்மொழி மூலமான பரிந்துரைகள் உதவியது என்கிறார் கன்னையா. முதல் இரண்டு ஆண்டுகளில் 10 வாடிக்கையாளர்கள் கிடைத்த நிலையில், 2014ல் 40 பள்ளிகள் இந்த மேடையில் இணைந்தன.
இதன் பிறகே உண்மையான திருப்பு முனை உண்டானது என்கிறார்.
“2015 வரை வீட்டுப்பாடம் தொடர்பான சேவைகளை அளித்து வந்தோம். எனினும் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்த நிலையில், அவர்கள் தெரிவித்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண புதிய அம்சங்கள் தேவைப்பட்டன. கருத்துகள் அடிப்படையில் செயலி வடிவம், ஜிபிஎஸ் கண்காணிப்பு, மனிதவள மேம்பாடு உள்ளிட்ட அம்சங்களை சேர்த்தோம்,” என்கிறார்.
இந்த அம்சங்கள் சேவை மேம்பட உதவி நிறுவனத்திற்கு பல்வேறு தேவைகளுக்கு ஏற்ற ஒட்டுமொத்த மேடையை அளித்தன என்கிறார். இதன் பயனாக நிறுவன வாடிக்கையாளர் பரப்பு 2019ல் 350 பள்ளிகளாக உயர்ந்தன.
காஜியாபாத்தின் ஹோலி சைல்டு பள்ளி, தில்லியின் ரோஸரி பள்ளி, பாட்னாவின் கியான் அகாடமி மற்றும் சென்னையின் சான் அகாடமி உள்ளிட்ட பள்ளிகள் இணைந்தன.
வர்த்தக மாதிரி
நிறுவனத்தின் சேவை மாதிரி, பள்ளிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் ஏற்ற அம்சங்களைக் கொண்டிருந்தது.
முதல் மாதிரி, கட்டண அறிவிப்பு, வீட்டுப்பாட அறிவிப்புகளைக் கொண்டிருந்த நிலையில், இரண்டாவது மாதிரி, கணக்குகள் டிஜிட்டல்மயம், கட்டணம் செலுத்துதல் மற்றும் இதர நிர்வாக செயல்முறை அம்சங்களைக் கொண்டிருந்தது.
மூன்றாவது மாதிரி, மாணவர்களின் செயல்பாட்டை தரவுகளுக்கு ஏற்ப அலசும் வசதி கொண்டிருந்தது.
“முன்னதாக ஆசிரியர்கள் மணிக்கணக்கில் பெற்றோர்களுடன் அல்லது தனியாக மாணவர்கள் செயல்பாட்டை அலசுவார்கள், இப்போது எல்லாம் டிஜிட்டலாகி விட்டது,” என்கிறார் கன்னையா.
பஸ்களின் இயக்கம் தொடர்பாக தகவல் பெற முடிந்ததால் ஜிபிஎஸ் வசதி, பெற்றோர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. பாதுகாப்பு தொடர்பான கவலையை நீக்குகிறது என்கிறார்.
’பேரன்ட்ஸ் அலார்ம்’, மாணவர் சேர்க்கையை தானியங்கிமயமாக்கும் மென்பொருளை அறிமுகம் செய்துள்ளது. மாணவர்களுக்கு பாடங்கள் உள்ளிட்டவற்றை வழங்கும் உள்ளடக்க நிர்வாக வசதியும் கொண்டுள்ளது.
எதிர்கால திட்டம்
வேல்யூ ரிப்போர்ட்ஸ் அறிக்கைபடி, 2020ல் சர்வதேச கல்வி சந்தை 8.4 பில்லியன் டாலராக இருந்தது. 2027ல் இது 15.4 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டிமிக்க சந்தையில் இரண்டு அம்சங்கள் தங்கள் நிறுவனத்திற்கு சாதகமாக இருப்பதாக கன்னையா சொல்கிறார். முதல் விஷயம் இந்த மேடை மாணவருக்கு ரூ.249 எனும் கட்டணத்தில் கிடைக்கிறது. கட்டணம் மற்றும் இஆர்பி சார்ந்த சேவை சிறப்பானது என்கிறார். சந்தையில் உள்ள மற்ற நிறுவனங்கள் போல் அல்லாமல் இஆர்பியில் கவனம் செலுத்துவதாகவும் கூறுகிறார்.
பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட சோதனை காரணமாக பல பள்ளிகள் விலகியதாகவும் கூறுகிறார். எனினும், நிறுவனம் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பள்ளிகளை இணைத்துக்கொள்ள முடிந்தது.
இந்த ஆண்டு ஜனவரி வரை ரூ.3.75 கோடி வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இந்த நிதியாண்டு ரூ.5 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதுள்ள 550 வாடிக்கையாளர்களில் இருந்து மேலும் விரிவாக்கம் செய்ய இருப்பதாக கன்னையா கூறுகிறார். இந்திய சந்தையில் விரிவாக்கம் செய்வதோடு, மத்திய கிழக்கும் பரிசீலனையில் உள்ளது. நிறுவன இணையதளம் மற்றும் பிராண்டிங்கை மாற்றி அமைக்க இருப்பதாகக் கூறுகிறார்.
“நாங்கள் அளிக்கும் சேவைக்கு ஏற்ப ’ஸ்கூல் கேன்வாஸ்’ என பெயர் மாற்ற உள்ளோம்,” என்கிறார்.
ஆங்கிலத்தில்: பவ்யா கவுசல் | தமிழில்: சைபர் சிம்மன்