கல்வி நிறுவன ஆய்வுக் கூடங்களை ஸ்மார்ட்டாக்கி வரும் நிறுவனம்!
தொழிற்சாலைகளுக்கான ஆய்வுக்கூட கருவிகளை விற்கத் துவங்கிய லேப்கேப் நிறுவனம், பின்னர் கல்வி நிறுவனங்களுக்கான பிரிவில் கவனம் செலுத்தி லாபம் ஈட்ட துவங்கியுள்ளனர்.
இந்திய வகுப்பறைகளில் ஸ்மார்ட் சாதனங்கள் ஊடுருவி வரும் நிலையில், பாடப்புத்தகங்கள் மற்றும் பாரம்பரிய கற்பித்தல் முறை பழமையாகி வருகின்றன. டிஜிட்டல் கற்றலுடன், விர்ச்சுவல் ரியாலிட்டி, ஐ.ஓ.டி திறன் கொண்ட சாதனங்கள், தொடர்பு கொள்ளக்கூடிய புரஜெக்டர் ஆகிய சாதனங்களும் பிரபலமாகி வருகின்றன.
இந்திய வகுப்பறைகள் ஸ்மார்ட்டாகி, மேலும் திறன் பெற்று வரும் நிலையில், இதே மேம்பாடு கல்வி நிறுவனங்களின் ஆய்வு கூடங்கள் மற்றும் ஆய்வு மையங்களுக்கும் பொருந்தும் அல்லவா? போதுமான நவீன வசதிகள் இல்லாத நிலையில், பாடங்கள் தொடர்பான சோதனைகளை ஆய்வுக்கூடங்களில் மேற்கொள்வதால் என்ன பயன்?
துர்காபூர், ரூர்கலா மற்றும் ஜாம்ஷெட்பூர் ஆகிய நகரங்களைச்சேர்ந்த நான்கு என்.ஐ.டி பொறியாளர்கள் இந்த இடைவெளியை போக்கும் வகையில் செயல்பட்டு, ஆய்வுக் கூடங்களில் போதிய நவீன வசதி இல்லாத குறையை தீர்ப்பதை வர்த்தக மாதிரியாக கொண்டுள்ள நிறுவனத்தை துவக்கியுள்ளனர்.
அனிகேத் தாகூர் இந்த குறையை தனது முதல் பணியில் நேரடியாக உணர்ந்திருக்கிறார். இன்று அவரது ஸ்டார்ட் அப் நிறுவனமான, லேப்கேப் (Labkafe) இந்தியாவில் உள்ள கல்வி மற்றும் ஆய்வு கழகங்களின் தேவையை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டு வருகிறது.
“பள்ளி, கல்லூரிகள், சுகாதார மற்றும் ஆய்வுக் கழகங்களில், ஆய்வுக்கூட சாதனங்களை கொள்முதல் செய்வதில் உள்ள சிக்கலை எங்கள் மேடை மூலம் தீர்க்க விரும்புகிறோம். ஆய்வுக் கூடங்களுக்கு தேவையான சாதனங்கள் அனைத்தையும் வழங்குகிறோம்,” என்கிறார் லேப்கேப் நிறுவனர், சி.இ.ஓ அனிகேத் தாகூர்.
பணியில் இருந்து…
ஒடிஷாவில், ஜிண்டால் ஸ்டைன்லஸ் ஸ்டீல் நிறுவனத்தில் தரக்கட்டுப்பாடு பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்த போது தான், அன்கித்திற்கு, லேப்கேப் நிறுவனத்திற்கான எண்ணம் பிறந்தது. அவரது பணியின் ஒரு பகுதியாக, புவனேஸ்வரில் இருந்து அகமதாபாத்திற்கு, பொருட்களின் மாதிரியை எடுத்துக்கொண்டு, அடிக்கடி சென்று வர வேண்டியிருந்தது. இந்த அனுபவத்தின் போது நாட்டில் ஆய்வுக்கூடங்களின் பரிதாப நிலை அவருக்கு தெரிய வந்தது.
“தரக்கட்டுப்பாடு ஆய்வுகூடத்தில் பணியாற்றிய போது, சோதனைக்காக, பொருத்தமான சாதனங்களை வாங்குவதிலும் சிக்கலை எதிர்கொண்டோம். இதுவே, ஆய்வுகூட சாதனங்களை வாங்குவதற்கான போர்டலை உருவாக்கலாம் என எண்ண வைத்தது,” என்கிறார் அனிகேத்.
2015ல் பணியை விட்டு விலகியவர், தனது என்.ஐ.டி சகா ஹிதேஷ் குமாருடன் சேர்ந்து அதே ஆண்டு மே மாதம் லேப்கேப் நிறுவனத்தை துவக்கினார். இதன் நிறுவனர் குழுவில், என்.ஐ.டி ரூர்கலாவில் பயின்ற சுனில் பாண்டே மற்றும் ஜாம்ஷெட்பூர் என்.ஐ.டியில் பயின்ற அம்ரீத் ராஜும் இருந்தனர். கொல்கத்தாவை மையமாக கொண்ட இந்த ஸ்டார்ட் அப், அம்பாலா மற்றும் ராஞ்சியில் கிளைகளை கொண்டுள்ளது.
“ஒடிஷாவில் ஸ்டீல் ஆலையில் பணியாற்றிக் கொண்டிருந்ததால், அருகே உள்ள மெட்ரோ நகரம் கொல்கத்தா என்பதால் அதை தேர்வு செய்தோம். இரண்டாவதாக, சொந்த நிதியில் துவங்கப்பட்ட ஸ்டார்ட் அப் என்ற முறையில், ஒவ்வொரு ரூபாயும் முக்கியம் எனும் நிலையில், கொல்கத்தா குறைவான வாடகை, குறைவான செலவு ஆகிய அம்சங்களை கொண்டிருந்தன,” என்கிறார் அனிகேத்.
லாபத்தை நோக்கி
ஒரு லட்சம் சொந்த நிதியில் துவக்கப்பட்ட லேப்கேப் நிறுவனம், 12,000க்கும் மேற்பட்ட ஆய்வுகூட கருவிகள், 200க்கும் மேற்பட்ட ஆய்வுக்கூட பர்னிச்சர்களுடன் இன்று லாபகரமாக விளங்குகிறது.
“வடிவமைப்பு லேஅவுட் மற்றும் உரிய தேவைக்கேற்ப பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன என்று கூறும் அனிகேத், பெரும்பாலான பொருட்கள் லேப்கேப் எனும் பெயரில் தயாரிக்கப்படுவதாக கூறுகிறார்.
தொழிற்சாலைகளுக்கு பொருட்கள் வழங்கும் பிரிவில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட, லேப்கேப் சில ஆரம்பத் தடுமாற்றங்கள் மற்றும் பாதை மாற்றத்திற்கு பிறகு வெற்றியை சுவைத்தது.
“தொழிற்சாலைகளுக்கு ஆய்வுகூட கருவிகளை விற்பனை செய்யத்துவங்கிய போது தான், இதில் உள்ள அதிக போட்டி, குறைந்த லாப விகிதம், சிக்கலான கொள்முதல் முறை ஆகியவற்றை உணர நேர்ந்தது,” என்கிறார் அனிகேத்.
ஆனால் அனிகேத் மற்றும் குழுவினர் ஏற்கனவே சந்தையை தட்டியிருந்ததால், இணையதளம் மற்றும் இதர வர்த்தக வழிகளில் இருந்து ஆர்டர்கள் வரத்துவங்கின. இது பொறியாளர் நிறுவனர்களுக்கு, கல்வி நிறுவனங்களுக்கான ஆய்வுகூட கருவிகள் வழங்குதல் சந்தை தொடர்பான புரிதலை அளித்தது.
நிறுவனம் துவங்கிய 8 மாதங்களில், இந்த குழு, ரூ. 10 லட்சம் மதிப்பிலான, தொழிற்சாலை கருவிகள் மற்றும் பாதுகாப்பு கருவிகளுக்கான ஆர்டர் பெற்றது. இந்த கருவிகளுக்கான லாபவிகிதம் மிகவும் குறைவாக இருந்ததால், சந்தையில் நிலைப்பது கடினமாக இருந்தது.
இந்த கட்டத்தில் தான், கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களுக்கான கொள்முதல் முறை, முடிவெடுப்பது மற்றும் லாபவிகிதம் மேம்பட்டதாக இருப்பதை உணர்ந்தனர். இந்த புரிதல் மற்றும் சொற்ப வளங்களை கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனமாக இருக்கும் தன்மை ஆகியவை சேர்ந்து, பள்ளி, கல்லூரிகள், ஆய்வு கழகங்கள் பக்கம் திரும்ப வைத்தது. கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களை பொறுத்தவரை சராசரி ஆர்டர் ரூ.1 முதல் ரூ.1.5 லட்சமாக இருந்தது.
இப்போது லாபமீட்டுவதாக கூறும் ஸ்டார்ட் அப், 2019ம் ஆண்டில் ரூ.8 கோடியை நெருங்கி கொண்டிருப்பதாக அதன் நிறுவனர்கள் கூறுகின்றனர். இப்போது மேலும் பெரிய இலக்குகளை கொண்டுள்ளனர். விரிவாக்கத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனம், அடுத்த நிதியாண்டில் ரூ.20 கோடி ஈட்ட திட்டமிட்டுள்ளது.
பாதையில் தடைகள்
“சொந்த நிதியில் செயல்படும் எந்த ஒரு ஸ்டார்ட் அப்பும், ரொக்க புழக்கத்தை நிர்வகிக்க சவாலாக உணரும். வாடிக்கையாளர்களுடன் பேமெண்ட் முறையை தீர்மானித்து, வாடிக்கையாளர் பிராண்ட் பெயர், இருப்பிடம், தேவையான சேவைகள் போன்ற அம்சங்களை சிறப்பாக அளிக்கிறோம்,” என்கிறார் அவர்.
நிறுவனம் கல்வி நிறுவனங்களுக்கு கருவிகளை விற்று வந்தாலும், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுககன சிறப்பு பேக்கேஜை உருவாக்கி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் தங்களை தேவையை இறுதி செய்வதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் நிறுவனம் வழங்குகிறது. இது போட்டியை குறைத்து, லாபவிகிதத்தை அதிகமாக்க உதவுவதாக அனிகேத் கூறுகிறார்.
லேப்கேப், டி.ஆர்.டி.ஓ, ஏர்போர்ஸ் குவாலியர், இந்திய ராணுவம், மாநில விஞ்ஞான ஆய்வுக்கூடங்கள், என்.ஐ.டி, டெக்னோ இந்தியா உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், அமைப்புகளுக்கு சேவை அளித்துள்ளது.
“மாணவர்கள், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நடைமுறை பரிசோதனை மற்றும் செயல்முறை கல்விக்கான மேடையாக விளங்க கூடிய லேப்கேப் இன்னேவேஷன் செண்டர்களை அமைக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: சுத்ரிஷ்னா கோஷ் | தமிழில்: சைபர்சிம்மன்