சிறு விவசாயிகள் கால்நடைகள், மீன் வளர்ப்பில் லாபம் ஈட்ட மைக்ரோ பண்ணை முறையில் உதவும் சென்னை நிறுவனம்!
பிரசன்னா மற்றும் பரணி நிறுவியுள்ள Aqgromalin விவசாய தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் சிறு விவசாயிகள் கால்நடை வளர்ப்பு, நீர்வாழ் உயிரின வளர்ப்பு போன்ற கூடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவாயை அதிகரிக்க உதவுகிறது.
விவசாயம் இன்றியமையாதது. நம் நாட்டின் முதுகெலும்பு. ஆனால் பல காரணங்களால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கிறார்கள். மழை வந்தால் மட்டுமே விவசாயம் செய்யமுடியும். எனவே வானம் பார்த்த பூமியாக விவசாயிகள் காலத்தை ஓட்டவேண்டியுள்ளது.
பல விவசாயிகள் சுழற்சி முறையில் பயிரிடாமல் ஒவ்வொரு ஆண்டும் ஒரே வகையான பயிரை நிலத்தில் வளர்க்கிறார்கள். இதனால் வருவாய் அதிகரிப்பதில்லை. கால்நடை வளர்ப்பு, நீர்வாழ் உயிரின வளர்ப்பு போன்ற நடவடிக்கைகள் மூலம் விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்டலாம்.
ஆனால், பலருக்கு இதுகுறித்த முழுமையான தகவல்களும் வழிகாட்டலும் கிடைப்பதில்லை.
எனவே தொழில்நுட்பப் பட்டதாரிகளான பிரசன்னா, பரணி இருவரும் இந்தப் பகுதியில் விவசாயிகளுக்கு உதவ விரும்பினார்.
சென்னையைச் சேர்ந்த இவர்களது நட்பு கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாகத் தொடர்கிறது. 2007-ம் ஆண்டு இவர்கள் பொறியியல் படிப்பை முடித்தனர். பரணி டிவிஎஸ் மோட்டர், ரெனால்ட் நிசான் போன்ற நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். பிரசன்னா 2008-ம் ஆண்டு Axiom என்கிற கல்வி தொழில்நுட்ப நிறுவனத்தைத் தொடங்கினார். மற்றொரு நிறுவனம் Axiom நிறுவனத்தை வாங்கிக்கொண்டது.
2019-ம் ஆண்டு இவர்கள் இருவரும் சேர்ந்து Aqgromalin என்கிற விவசாய தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் தொடங்கினார்கள்.
சிறு விவசாயிகள் கால்நடை வளர்ப்பு, நீர்வாழ் உயிரின வளர்ப்பு போன்றவற்றில் ஈடுபடுவதற்கு இடுபொருட்கள், தொழில்நுட்ப உபகரணங்கள், பயிற்சி போன்றவை கிடைப்பதில்லை. இந்த வசதிகளை ஏற்படுத்தி சிறு விவசாயிகளுக்கு ஆதரவளிக்க விரும்பினார்கள் இந்த நிறுவனர்கள்.
“விவசாயிகளை நுகர்வோருடனும், வணிகங்களுடனும் இணைப்பதே எங்கள் ஆரம்பகால திட்டமாக இருந்தது. விவசாயிகளுடன் பணியாற்றத் தொடங்கிய பின்னர் பல விஷயங்களை ஆழமாகப் புரிந்துகொள்ள முடிந்தது. அவர்களது வருவாய் அதிகரிப்பதில் பங்களிக்க முடியும் என்பதை உணர்ந்தோம்,” என்கிறார் பிரசன்னா.
லாபகரமாக செயல்பட்ட விவசாயிகளைப் பற்றி நிறுவனர்கள் ஆய்வு செய்தார்கள். இதிலிருந்து வேளாண் நடவடிக்கைகள் மட்டுமின்றி கால்நடை வளர்ப்பு, நீர்வாழ் உயிரின வளர்ப்பு போன்ற கூடுதல் முயற்சிகளில் ஈடுபட்டதால் இந்த விவசாயிகளில் பெரும்பாலானோர் லாபம் ஈட்டுவது தெரிய வந்தது.
மைக்ரோ பண்ணை மாதிரி
Aqgromalin உடனடியாக நடைமுறைப்படுத்தக்கூடிய மைக்ரோ பண்ணை(micro farm) மாதிரியை உருவாக்கியுள்ளது. இதற்கு குறைவான இடவசதி போதுமானதாக இருக்கும். முதலீடும் குறைவு. அத்துடன் அதிக தொழிலாளர்கள் தேவைப்படமாட்டார்கள் என்று நிறுவனர்கள் விவரிக்கிறார்கள். இதைப் பின்பற்றி விவசாயிகள் கால்நடை வளர்ப்பு, நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆகியவற்றை எளிதாக மேற்கொள்ளலாம்.
அரசாங்கம், வர்த்தகர்கள், நிறுவனங்கள், ஸ்டார்ட் அப்கள் என இந்தத் துறையில் பங்கு வகிக்கும் பலர் இதை விவசாயிகளுக்கு பரிந்துரைக்கிறார்கள். ஆனால் விவசாயிகளிடையே தயக்கம் இருப்பதை பார்க்கமுடிகிறது. இதுபோன்ற புதிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன்பு இந்த மாதிரியை பரிசோதனை செய்து பார்க்கவே விவசாயிகள் விரும்புகிறார்கள்.
எனவே, 2019ம் ஆண்டு பிரசன்னாவும் பரணியும் ஒரு மாதிரியை உருவாக்கினார்கள். விவசாயிகள் இந்த மாதிரி மூலம் கிடைக்கக்கூடிய பலன்களைத் தெரிந்துகொள்ள அழைக்கப்பட்டார்கள். விவசாயிகள் திருப்தியடைந்ததும் பலர் முன்வந்தார்கள்.
"உதாரணத்துக்கு ஒரு விவசாயி 1 லட்ச ரூபாய் முதலீடு செய்து மீன், வாத்து, பன்னி, ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு அதை லாபத்துடன் விற்பனை செய்ய முன்வரும்போது, அதை நாங்கள் வாங்கிக் கொண்டு விநியோகச் சங்கிலி முழுவதும் கொண்டு சென்று விற்று தருவோம். ஒருவேளை சந்தையில் அதிக விலை கிடைக்கும் பட்சத்தில் விவசாயிகள் நேரடியாகவும் சந்தையிலும் விற்பனை செய்யலாம்.”
விளை பொருட்களை கண்காணிக்கவும் பண்ணை பராமரிப்பை கண்காணிக்கவும் இந்த ஸ்டார்ட் அப் செயலி வழியாக தகவல்களை வழங்குகிறது.
”ஒவ்வொரு பயிர் சுழற்சியின்போதும் சந்தா அடிப்படையில் இடுபொருட்களை விநியோகிக்கிறோம். இதன் மூலம் வருவாய் ஈட்டுகிறோம். விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை எங்கள் தளம் மூலம் விற்பனை செய்யவும் உதவுகிறோம்,” என்கிறார் பரணி.
“முதலீடும் தேவையான இடமும் குறைவு என்பதால் விவசாயிகள் தாங்கள் ஏற்கெனவே ஈடுபட்டுள்ள நடவடிக்கைகளுடன் சேர்த்து இந்த மாதிரியையும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்,” என்கிறார் பிரசன்னா.
தற்சமயம் இந்த ஸ்டார்ட் அப் தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுடன் பணியாற்றி வருகிறது.
வாய்ப்பு இருப்பதை உணர்ந்தார்கள்
விவசாய ஸ்டார்ட் அப்களில் 85 சதவீதம் தோட்டக்கலை தொடர்பாகவே செயல்படுகின்றன. பிரபல நிறுவனங்கள் கோழி வளர்ப்புப் பிரிவில் செயல்படுகின்றன. நண்பர்கள் இருவரும் இவற்றை கவனித்தார்கள்.
விவசாய நடவடிக்கைகளில் துணைப் பிரிவான கால்நடை வளர்ப்பு, நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தினால் மிகப்பெரிய வாய்ப்பு இருக்கும் என்பதை உணர்ந்தார்கள்.
மைக்ரோ பண்ணை மாதிரியின் வளர்ச்சி
Aqgromalin தொடங்கப்பட்ட முதல் எட்டு மாதங்கள் சுயநிதியில் இயங்கியது. அதன் பிறகு ஏஞ்சல் முதலீட்டாளர்களை அணுகியுள்ளது. இதுவரை இந்த ஸ்டார்ட் அப் 2 கோடி ரூபாய் வரை நிதி திரட்டியுள்ளது.
“உங்கள் நோக்கத்தின் மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி பயணத்தில் இணைத்துக்கொள்வது ஒரு தொழில்முனைவருக்கு உற்சாகமளிப்பதாகவே இருக்கும். வாடிக்கையாளர்கள் உங்கள் மாதிரியை நம்பிக்கைக் கொண்டால், முதலீட்டாளர்கள் உங்கள் நோக்கத்தை உறுதிசெய்வார்கள். இவற்றைப் பெறுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது,” என்கிறார் பிரசன்னா.
உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய 500 மைக்ரோ பண்ணைகளை அமைக்க இந்த ஸ்டார்ட் அப் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்துடன் பார்ட்னர்களாக இணைந்துள்ள 600 விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகவேண்டும் என்று நிறுவனர்கள் விரும்புகிறார்கள்.
”இந்தத் துறையில் பல ஸ்டார்ட் அப்கள் செயல்படத் தொடங்கியதால் விவசாயிகளால் கடன் வசதியையும் தொழில்நுட்ப வசதியையும் எளிதாக அணுகமுடிகிறது. விவசாயிகளும் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதைப் பார்க்க முடிகிறது. இதுபோன்ற வசதிகளை மேலும் பல விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அதேபோல் ஸ்டார்ட் அப்களும் இந்தத் துறையில் புதுமை படைக்க ஏராளமான வாய்ப்பு கொட்டிக்கிடக்கின்றன,” என்கிறார் பிரசன்னா.
ஆங்கில கட்டுரையாளர்: விஷால் கிருஷ்ணா | தமிழில்: ஸ்ரீவித்யா