'ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம் எட்டுவதில் ஸ்டார்ட்-அப்'களின் பங்கு முக்கியமானது' - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் ஒருங்கிணைத்த ‘ஸ்டார்ட்அப் சென்னை-செய்க புதுமை’ திட்டத்தை துவக்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
ஐ.ஐ.டி. மெட்ராஸ் ரிசெர்ச் பார்க் வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் ஒருங்கிணைத்த ‘ஸ்டார்ட்அப் சென்னை-செய்க புதுமை’ நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வை தொடங்கிவைத்து கலந்து கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ‘ஸ்டார்ட்அப் சென்னை-செய்க புதுமை’ திட்டத்தை துவக்கி வைத்ததோடு, சமூக வளர்ச்சி சார்ந்து இயங்கும் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் பட்டியலின/பழங்குடியின தொழில் முனைவோர்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக “பெரியார் சமூக நீதி தொழில் வளர் மையத்தினையும்” (Periyar Social Justice Venture Lab) தொடங்கி வைத்தார்.
மேலும், இந்த நிகழ்வில், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (StartupTN), தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII), அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாணவர்களுக்கான “Startify – தொழில் முனைவு” போட்டியையும் தொடங்கி வைத்தார்.
புத்தொழில் நிறுவனங்களின் தயாரிப்பு பொருட்களை அறிமுகப்படுத்தி, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமும், நான் முதல்வன் திட்டமும் இணைந்து ஒருங்கிணைத்த நிரல் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ARAI-AMTIF, Daimler India Commercial Vehicles ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கும் விதமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. மேலும், ஐ.ஐ.எம் -பெங்களூர் மற்றும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் இணைந்து பெண்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு, தொழில் வளர் பயிற்சிகளை நடத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
பின்னர், இந்த விழாவில் உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் மற்றும் தமிழ்நாடு அரசின் குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் துறை இணைந்து நடத்தும் ‘StartUp சென்னை – செய்க புதுமை!’ என்கிற இந்த சிறப்புக்குரிய விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.
"பெரியார் சமூக நீதி தொழில் வளர் மையம் மற்றும் ‘தொழில் நயம்’ என்ற பிரத்யேக உதவி மையத்தைத் தொடங்குவதில் பெருமை அடைகிறேன், இது ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு தங்கள் தயாரிப்புகளை முறையான வடிவமைப்பு மற்றும் திறம்பட சந்தைப்படுத்த வழிகாட்டுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் வணிகத் திறன்களை வெளிப்படுத்தவும் மேம்படுத்தவும் உதவும் நோக்கத்தில் ‘ஸ்டார்டிஃபை’ என்ற போட்டியையும் நாங்கள் தொடங்குகிறோம்," என்றார்.
ப்ரீ-இன்குபேஷன் சென்டர்கள்
தமிழகம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் அமைக்கப்படும் ப்ரீ-இன்குபேஷன் சென்டர்கள் என்ற சிறப்பு முயற்சியை அறிமுகப்படுத்த உள்ளோம். கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து புத்தொழில் (StartUp)களை ஊக்கப்படுத்தும் விதமாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் – MoUs இங்கே கையெழுத்திடப்படுகின்றன.
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமும், ‘நான் முதல்வன்’ திட்டமும் இணைந்து நடத்திய நிரல் திருவிழாவில் (Hackathon திருவிழாவில்) வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்குவதிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இங்கே தந்தை பெரியார் பெயரில், பட்டியல் – பழங்குடியின தொழில் முனைவோருக்கு ஒரு திட்டம், பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க ஒரு திட்டம், மாணவர்களுக்கென தனி திட்டம் என புத்தொழில் இயக்கத்திற்குள் சமூக நீதி mission-ஐ வைத்த தமிழ்நாடு புத்ததொழில் (Start Up Tamil Nadu) இயக்கத்தினை பாராட்டியே ஆக வேண்டும், என்றார்.
பொருத்தமான பெயர்
1970-ஆம் ஆண்டிலேயே, TANSIDCO (சிட்கோ) என்று சொல்லப்படுகிற, தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தை நமது முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கினார்கள். அதே வழியில், தொழில்துறையில் பல புதுமையான, முற்போக்கான முயற்சிகளை இந்த அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. அதில் ஒன்று தான் 'StartUp சென்னை – செய்க புதுமை' எனும் பெயரே சிறப்பாக புதுமையாக இருக்கிறது.
சென்னை எப்போதுமே புதுமையை செய்யும். அல்லது, புதுமையை தயக்கமின்றி வரவேற்கும். எனவே, StartUp-களை பொறுத்தவரை, புதுமையான முயற்சிகள், புதிய ஐடியாக்கள் நிறைய வர வேண்டும். தமிழ்நாடு முழுவதும் பரவலான தொழில் வளர்ச்சி இருக்க வேண்டும் என்பது தான், நம் அரசின் லட்சியம், என்றார் உதயநிதி ஸ்டாலின்.
தமிழ்நாடு புத்தொழில் மண்டல மையங்கள்
தொழில் வளம் பெருகினால் தான், வேலைவாய்ப்புகள் பெருகும். சிறிய நகரங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் தான், தமிழ்நாடு புத்தொழில் மண்டல மையங்கள் (Startup Tamil Nadu Regional Hubs-ஐ) மதுரை, ஈரோடு, திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில் சென்றாண்டில் தமிழ்நாடு அரசு தொடங்கியது.
தமிழ்நாட்டில் தொழில் முனைவோர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. எங்கள் அரசு பதவியேற்பதற்கு முன், மாநிலத்தில் 2,300 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன. தற்போது இந்த எண்ணிக்கை 2,300 இல் இருந்து 9,600 ஆக அதிகரித்துள்ளது, என்றார்.
"இந்த ஸ்டார்ட்அப்களில் 50% பெண்களால் வழிநடத்தப்படுகின்றன, இது பெண் தொழில்முனைவோருக்கு நாங்கள் உருவாக்கிய அதிகாரமளிக்கும் சூழலை எடுத்துக்காட்டுகிறது. மேலும் ஆறு இடங்களில் – ஓசூர், சேலம், தஞ்சாவூர், கடலூர், கோவை, திருச்சியிலும் கூடுதலாக தமிழ்நாடு புத்தொழில் மண்டல மையங்கள் (Start-Up Tamil Nadu regional hubs) உருவாக்கப்பட்டன."
நமது மாநிலத்தில் செயல்படும் புத்தொழில் (ஸ்டார்ட் அப்) நிறுவனங்களுக்கு உலகளாவிய வாய்ப்புகள் மற்றும் இணைப்புகளை வழங்கும் நோக்கத்துடன், தமிழ்நாடு அரசு துபாயில் உலகளாவிய தொடக்க ஒருங்கிணைப்பு மையத்தை நிறுவியுள்ளது. விரைவில், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவிலும் இதுபோன்ற மையங்கள் நிறுவப்படும். வணிகம் தொடர்பான கண்காட்சிகளில் பங்கேற்க, சர்வதேச வணிகச் சந்தைகளை அணுக, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு உதவுகிறது.
நிதியுதவி
சமீபத்தில், துபாயில் நடைபெற்ற புகழ்பெற்ற GITEX நிகழ்வில் பங்கேற்க, தமிழகத்தைச் சேர்ந்த 19 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு நிதியுதவி அளித்துள்ளது. அதேபோல், பின்லாந்தில் நடைபெறவுள்ள பிரமாண்ட ஸ்டார்ட்-அப் நிகழ்ச்சியில் 18 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பங்கேற்கும். நம்முடைய முதலமைச்சர் 2030-ல், தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உருவாக வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளார்கள்.
ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என்றால், பெரிய தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் StartUp நிறுவனங்களின் பங்களிப்பும் மிக, மிக அவசியமாகும். ஆகவே, இத்தகைய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உருவாக வேண்டும். அனைத்து தரப்பினராலும் உருவாக்கப்பட வேண்டும்.
எல்லோருக்கும் எல்லாம்
இதனை சாத்தியப்படுத்துவதற்கான பாதை (Road Map) என்று சொல்கிற வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, முதலமைச்சர் , ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்து தொழில் முனைவோர் உருவாக வேண்டும் என்று 30 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் புத்தொழில் நிதி (Tamil Nadu SC/ST Startup Fund) என்கின்ற திட்டத்தை 2023 ஆம் ஆண்டு துவக்கி வைத்தார்கள்.
இந்த திட்டத்துக்கு கிடைத்த வரவேற்பு மற்றும் வெற்றியை அடுத்து, இதற்கான நிதியை, 50 கோடி ரூபாயாக நம்முடைய முதலமைச்சர் உயர்த்தியுள்ளார்கள். ‘எல்லோருக்கும் எல்லாம்’ எனும் நமது திராவிட மாடல் கொள்கையின் அடிப்படையில், இந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கும், திருநங்கையர் – திருநம்பிகளுக்கும், Startup நிறுவனங்களை தொடங்க நம் முதலமைச்சர் நிதி உதவி அளிக்க உள்ளார்கள். எனவே, இளைஞர்கள், பெண்கள் புதுப்புது வணிக முயற்சிகள் (business ideas) குறித்து சிந்திக்க வேண்டும், என்றார்.
நாங்கள் தயார்
நீங்கள் ஐடியாக்களை உருவாக்கினால், அவற்றை நடைமுறைப்படுத்த அனைத்துவித உதவிகளையும் நம் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் செய்யும். அதுமட்டுமில்ல, நீங்கள் என்ன தொழில் தொடங்க விரும்புறீங்களோ, அதற்கான பயிற்சியையும் அரசே அளிக்கின்றது.
"மானியம், வங்கிக்கடன் என உங்களுக்கு பொருளாதார ரீதியா உதவிடவும், நம்முடைய அரசு தயாராக உள்ளது. தமிழகத்தில் புத்தொழில்களை (ஸ்டார்ட் அப்) உருவாக்கி ஆதரிக்கும் வகையில் நமது திராவிட மாடல் அரசு எண்ணற்ற முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. இந்த சிறப்புக்குரிய விழா வெற்றி பெற என் அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்து விடைபெறுகிறேன்,” என இவ்வாறு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அந்நிகழ்வில் தெரிவித்தார்.