பழங்கால தினை வகைகளின் நன்மையை தட்டில் கொண்டு சேர்க்கும் சென்னை தொழில்முனைவர்!
சஞ்சீதா சென்னையில் தொடங்கியிருக்கும் OGMO Foods பாரம்பரிய சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஆரோக்கியமான தயாரிப்புகளை வழங்கி வருகிறது.
சஞ்சீதா கேகே, கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். திடீரென்று அவருக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டது. முழுநேரமாக செய்து கொண்டிருந்த வேலையை விடவேண்டிய சூழ்நிலை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் இப்படியே கடந்தன.
இவருக்கும் உணவுக்கும் எப்போதும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கும். அதைக் கொண்டே ஏதாவது செய்யலாம் என முடிவு செய்தார். உணவு சம்பந்தப்பட்ட பிளாக் எழுதினார். ஃபுட் ஸ்டைலிங் கன்சல்டண்ட் ஆக சிறிது காலம் இருந்தார். இப்படி உணவுடன் இணைப்பிலேயே இருந்து வந்தார்.
2018-ம் ஆண்டு OGMO Foods என்கிற ஆரோக்கியமான உணவு பிராண்டை சென்னையில் தொடங்கினார். OGMO என்பதன் அர்த்தம் Organic Movement.
ஆரோக்கியத்தை நோக்கி…
சஞ்சீதா தொடங்கிய OGMO Foods நிறுவனம் சிறுதானியங்கள் கொண்டு பல்வேறு தயாரிப்புகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஓவர்நைட் ஓட்ஸ், ஹெல்த் மிக்ஸ், குழந்தைகளுக்கான தயாரிப்புகள், கிரானோலா, எனர்ஜி பைட்ஸ், ஸ்நாக்ஸ், ரெடி-டு-குக் ப்ரீமிக்ஸ், ஊறவைத்த சிறுதானியங்கள், முழு தானியங்கள், மாவு போன்றவை இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் அடங்கும்.
இவற்றைல் ஹெல்த் மிக்ஸ், எனர்ஜி பைட்ஸ், ப்ரீமிக்ஸ் போன்றவை அதிகம் விற்பனை செய்யப்படுவதாக சஞ்சீதா குறிப்பிடுகிறார்.
“உற்பத்தி தொடங்கிய முதல் நாளில் மூலப்பொருட்களை கவனமாக வகைப்படுத்தி வைத்தேன். செயல்முறையை எளிதாக்க லேபிள் செய்தேன். ’குதிரைவாலி 20 கிலோ, உலர் திராட்சை 5 கிலோ, பிங்க் சால்ட் 1 கிராம் அளந்து கொள்ளவும்’ என எழுதி வைத்திருந்தேன். என்னிடம் வேலை செய்தவர்கள் குழப்பத்துடன் என்னைப் பார்த்தார்கள். அப்போதுதான் ஒரு விஷயம் எனக்குப் புரிந்தது. கிராமப்புறத்தைச் சேர்ந்த அவர்கள் யாருக்குமே எழுதப் படிக்க தெரியவில்லை,” என்று நினைவுகூர்ந்தார் OGMO Foods நிறுவனர் சஞ்சீதா.
ஆர்கானிக் காய்கறிகள் மற்றும் பழங்கள் சாகுபடி செய்து வந்த சஞ்சீதா ஒருமுறை தமிழ்நாட்டில் செய்யூர் அருகே இருந்த அவரது நிலத்திற்கு சென்று பார்வையிட்டார். உள்ளூர் விவசாயிகளிடம் பேசினார்.
”முன்பெல்லாம் சிறுதானியங்களையும் பழங்காலத்து தானிய வகைகளையும் பயிரிட்டு வந்ததாக அவர்கள் என்னிடம் சொன்னார்கள். தமிழக மக்கள் ஒருகாலத்தில் இதைத்தான் சாப்பிட்டு வந்திருக்கிறார்கள். ஆனால், மக்கள் அவற்றை சாப்பிடுவது குறைந்துவிட்டது. தேவை குறைந்துபோனதால் விவசாயிகளும் அவற்றைப் பயிரிடுவதில்லை. அப்போதுதான் விவசாயிகளுக்கு உதவும் அதேநேரம் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க, சிறுதானியங்களை பயிரிட முடிவு செய்தோம். அரிசி, கோதுமை போன்றவற்றுடன் ஒப்பிடுகையில் சிறுதானியங்களுக்கு குறைந்த தண்ணீர்தான் செல்வாகும்,” என்கிறார்.
அளவில் சற்று பெரிதாக இருக்கக்கூடிய சோளம், கம்பு போன்றவையும் சிறிதாக இருக்கும் சாமை, வரகு, கேழ்வரகு, தினை, குதிரைவாலி போன்றவையும் நம் முன்னோர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டவை. ஆரோக்கியம் நிறைந்தவை.
1960-ம் ஆண்டு நடந்த பசுமை புரட்சிக்கு முன்பு வரை மொத்த தானியங்களில் 40 சதவீதம் வரை சிறுதானியங்கள் பயிரிடப்பட்டதாகவும் பசுமை புரட்சிக்குப் பிறகு அரிசி உற்பத்தி இருமடங்காகவும் கோதுமை உற்பத்தி மும்மடங்காகவும் அதிகரித்ததாக விவசாயம் சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளும் ICRISAT நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
”இதுவரை எங்கள் தயாரிப்புகளுக்கு நாங்கள் மார்க்கெட்டிங் அல்லது விளம்பரம் எதுவும் செய்யவில்லை. வாடிக்கையாளர்களின் பரிந்துரை மூலமாகவே எங்கள் தயாரிப்புகள் பலரைச் சென்றடைகின்றன. 30-40 சில்லறை வர்த்தக ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன,” என்கிறார்.
ஓவர்நைட் மில்லட் என்பது இதுவரை எந்த ஒரு பிராண்டும் வழங்காத புதுமையான தயாரிப்பு என்கிறார் சஞ்சீதா.
OGMO தயாரிப்புகள் சென்னை, புனே மற்றும் வடகிழக்கு பகுதிகளில் இருக்கும் ப்ரீமியம் ஸ்டோர்களில் கிடைக்கின்றன. இதுதவிர அமேசான், பிக்பாஸ்கெட் போன்ற தளங்களிலும் கிடைக்கின்றன.
சமூக தொழில்முனைவு
சமூக நிறுவனமான OGMO Foods சுயநிதியில் இயங்கி வருகிறது. தற்சமயம் 12 பேர் இங்கு வேலை செய்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். நிலத்திலும் தொழிற்சாலையிலும் இவர்கள் வேலை செய்கிறார்கள்.
சஞ்சீதாவின் கணவர் கிருஷ்ணகுமார் முன்னாள் ஐடி ஊழியர். இவரும் OGMO Foods அன்றாட செயல்பாடுகளில் உதவி வருகிறார்.
“நாங்கள் பணத்திற்காக இந்த தொழிலை செய்யவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. எங்கள் குழந்தைகள் நல்ல நிலையில் இருக்கிறார்கள். எனவே, பணத்தேவை எங்களுக்கு இல்லை. மற்றவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோள். பெண்கள் மேம்பாடு, ஆரோக்கியமான உணவு, விவசாயிகளுக்கு ஆதரவு இந்த மூன்றிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்,” என்கிறார் சஞ்சீதா.
அவர் மேலும் கூறும்போது,
“இயற்கை விவசாயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி மேலும் பல தயாரிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். மறந்துபோன நம் பாரமரியத்தை மீட்டெடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் மிகச்சிறிய அளவில் பங்களிப்பதே எங்களுக்கு மனநிறைவைத் தருகிறது,” என்கிறார்.
கிட்டத்தட்ட நான்காண்டுகளாக சமூக தொழில்முனைவராக இருந்து வரும் சஞ்சீதா தொழிமுனைவில் ஆர்வமுள்ள பெண்களுக்கு ஆலோசனை கூறும்போது,
“பல்வேறு வேலைகளை செய்து முடிப்பது, வீட்டையும் தொழில் வாழ்க்கையையும் சமன்படுத்துவது இந்த இரண்டும்தான் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இருக்கும் பொதுவான சவால். சரியான ஆதரவு கிடைத்து மன உறுதியுடன் செயல்பட்டால் எளிதாக இதுபோன்ற சவால்களைக் கடந்துவிடலாம். உங்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதில் கவனம் செலுத்துங்கள். சிறியளவில் தொடங்குங்கள். உங்களை முழுமையாக ஆயத்தப்படுத்திக்கொண்டு அதன் பிறகு அடுத்தகட்ட வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துங்கள்,” என்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: அஞ்சு நாராயணன் | தமிழில்: ஸ்ரீவித்யா