மூளையை மூலதனம் ஆக்கி லட்சங்களில் சம்பாதிக்கும் சிவில் என்ஜினியர்ஸ்!
தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப அப்டேட் ஆகும் உலகில், நம் வீட்டை கிராபிக்ஸ்கள் கொண்டு சுவரொட்டி மற்றும் 3டி டிசைன் தரைத்தளங்களை பொறுத்தி அழகானதாக்கித் தருகின்றனர் இந்த நண்பர்கள்.
நாம் இருக்கும் வீடோ, பணியாற்றும் இடமோ நமக்கும் பிடித்தது போல இருந்தால் ஒவ்வொரு நாளுமே ஸ்பெஷலாக இருக்கும். போர் அடிக்கும் சுவர்களைக் கண்டு சளிப்பு ஏற்படுவது சகஜம் தான், ஆனால் அவற்றை அப்கிரேட் செய்து தருகின்றனர் 'Shadoz walls and interiors'
ஆன்லைனிலேயே விதவிதமான சுவரொட்டிகள் கிடைக்கும் போது ஷேடோஸை ஏன் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கேள்வியோடு தொடங்கியது ஷேடோஸ் நிறுவனர் வக்காஸ் உடனான யுவர் ஸ்டோரி தமிழின் நேர்காணல்.
“நீங்கள் சொல்வது சரி தான் விதவிதமான வால் பேப்பர்கள் தற்போது ஆன்லைனிலும் ஸ்டோரிகளிலும் கிடைக்கிறது, ஆனால் அவையெல்லாமே ஏற்கனவே செய்யப்பட்ட டிசைன்களிலும், வண்ணங்களிலும், அளவுகளிலும் மட்டுமே கிடைக்கும். ஷேடோஸ் இங்கு தான் வித்தியாசப்படுகிறது, தனித்துவமே எங்களது அடையாளம் எங்களிடம் கேட்லாக் என்ற ஒன்றே கிடையாது.
வாடிக்கையாளரின் விருப்பத்தை கேட்டு அதற்கேற்ப கிராபிக் டிசைன்கள், நிறங்கள், விருப்பமானவர்களின் உருவங்கள் என எதை வேண்டுமானாலும் அதில் இணைத்து வடிவத்தை கொடுப்போம்.
எங்களது டிசைன்களுக்கு எல்லையே கிடையாது வாடிக்கையாளரின் விருப்பத்தை அப்படியே வரைகலை செய்து அதனை அச்சில் ஏற்றி சுவரொட்டிகளாக அவர்கள் கேட்கும் இடத்தில் அழகூட்டிக் கொடுப்போம்,” என்கிறார் வக்காஸ்.
பேச்சிலேயே வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுத்துவிடும் திறமையோடும், துள்ளலோடும் பேசும் வக்காஸ், சிவில் என்ஜினியரிங் படித்தவர், கிராபிக்ஸ் டிசைனிங் மீது இவருக்கு தீராத காதல். படித்து முடித்த பின்னர் கட்டுமானக் கலையில் தொழில்நுட்ப உதவியுடன் புதுமைகளைச் செய்யலாம் என்று நினைத்தவர் தரைத்தளங்களில் முப்பரிமாண முறையில் டிசைன் செய்து தரும் தொழிலில் களமிறங்கியுள்ளார்.
2015ம் ஆண்டு நானும் எனது நண்பர் அப்துல் காதர் ஜெய்லானியும் இணைந்து ஷேடோஸ் வால்ஸ் அண்ட் இன்டீரியர்ஸை தொடங்கினோம். தரைத்தளங்களில் டால்பின், கடல் அலைகள், பூந்தோட்டம், கார்டன் என முப்பரிமாண டிசைன்களை டைல்ஸ், மொசைக் என எந்த விதமான தரையாக இருந்தாலும் அதில் பதித்து அந்த இடத்தை ரம்மியமானதாக்கித் தருவோம். 1 சதுரஅடிக்கு 450 ரூபாய் விலையில் இதை செய்து கொடுத்து வந்தோம், வாடிக்கையாளர்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது.
எனினும் முப்பரிமாண தரைத்தளங்கள் அமைப்பது என்பது வசதிபடைத்தவர்கள் மட்டுமே செய்து வந்ததால் எல்லா தரப்பு மக்களையும் சென்றடையும் ஒரு யுக்தியை கையில் எடுக்க நினைத்தோம், அது தான் வால்பேப்பர் டிசைன்கள்.
வீடுகளுக்கு மட்டுமின்றி ஒரு கருத்தாக்கத்தை வைத்து அலுவலகங்களை அழகாக்க நினைப்பவர்கள் வாடிக்கையாளர்களாகக் கிடைத்தனர்.
பிரபல பிராண்டுகளாக கேக் பாயின்ட், தி பர்கர் பே, அட்டிகா, கேக் வேவ்ஸ், தோசா 360 என பலவற்றிக்கும் இவர்களின் இன்டீரியர் புத்துயிர் தந்திருக்கிறது. கிட்ஸ் ரூம்களை அவர்களுக்கு பிடித்தது போல வடிவமைத்து சிறுசுகளின் மனசையும் அள்ளி இருக்கிறது இவர்களின் வேலைப்பாடுகள்.
வாடிக்கையாளர்களின் திருப்தியே எங்களின் விளம்பரம் இது தவிர வேறு எந்த விளம்பர யுக்தியும் எங்களுக்கு இல்லை, கேக் பாயின்ட்டின் ஒரு கிளையில் நாங்கள் வால்பேப்பர் டிசைன் செய்து கொடுத்திருந்தோம், அந்த வடிவமைப்பு அந்த கடைக்கு புத்துயிர் தர அதன் உரிமையாளர் கேக் பாயின்ட்டின் இதர கிளைகளையும் அப்டேட் செய்து தரக் கேட்டதாகக் கூறுகிறார் வக்காஸ்.
"எங்களை அணுகும் வாடிக்கையாளருக்கு எந்த இடத்தை மாற்றம் செய்ய வேண்டும் என்பதை கேட்டு முதலில் அங்கு களஆய்வு செய்து, பின்னர் எந்த மாதிரியான வடிவமைப்பு தேவை என்பதை கலந்தாலோசித்து டிசைன் உருவாக்குகிறோம். அது வாடிக்கையாளருக்கு திருப்தி தரும் பட்சத்தில் பிரிண்ட் செய்யப்பட்ட பின்னர் நாங்களே ஆட்களைக் கொண்டு அவற்றை சுவற்றில் செட் செய்து தருகிறோம்.
இந்த மாதிரியான வால் பேப்பர்களுக்கு வாழ்நாள் கேரண்டி உண்டு என்கிறார் வக்காஸ். கூர்மையான ஆயுதங்கள் கொண்டு வால் பேப்பரில் சேதம் ஏற்படுத்தாத வரை வால்பேப்பர் சேதமடையாது, தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தாலும் வினைல் பேப்பர்கள் என்பதால் பாதிப்புக்கு ஆளாகாது என்கிறார் இவர்.
சதுர அடி ரூ.90 என்ற விலையில் வால்பேப்பர் டிசைனிங் செய்து தரப்படுகிறது. அதிகபட்சம் 4 நாட்களில் எந்தச் சுவராக இருந்தாலும் அழகாக்கிவிடலாம் என்கிறார் வக்காஸ்.
வீடுகளில் சுவர்களை அழுகுப்படுத்துவதோடு இன்டீரியர் டிசைனிங்கும் செய்து தரக் கோரும் வாடிக்கையாளர்களும் தங்களுக்கு இருப்பதாகக் கூறும் வக்காஸ், எங்களுக்கு முதலீடு என்று எதுவுமே தேவைப்படவில்லை, மூளை மட்டுமே மூலதனம் என்கிறார்.
எங்களுக்கான ஆர்டர்கள் ஆன்லைனிலேயே வந்தாலும் பல வாடிக்கையாளர்கள் அலுவலகம் எங்கே இருக்கிறது என்றே கேட்கின்றனர், இதனால் 40 ஆயிரம் ரூபாய் வாடகையில் 100 சதுரஅடி அறையிலேயே ஷேடோஸ் இயங்கி வருகிறது என்கிறார்.
தொடக்கத்தில் கணினி, அலுவலகத்திற்குத் தேவையான பொருட்கள் என ரூ.1 லட்சம் தேவைப்பட்டது அவ்வளவு தான், தொடங்கிய 4 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைப் பெற்று விட்டோம் என்கிறார். சென்னை மட்டுமின்றி, பெங்களூரு, மும்பையில் இருந்தும் கூட ஆர்டர்கள் கிடைக்கின்றன.
4 ஆண்டுகளில் விறுவிறுவென வளர்ச்சி பெற்ற ஷேடோஸ் தற்பாது ஆண்டிற்கு ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்டுவதாகக் கூறுகிறார்.
வக்காஸ் டிசைனிங் வேலைகளைப் பார்த்துகக் கொள்ள அவரது நண்பரும் தொழில் பங்குதாரருமான ஜெய்லானி சைட் விசிட், வேலையாட்களை பணியமர்த்தி எந்த குளறுபடியும் இல்லாமல் வால்பேப்பர்களை கச்சிதமாக சுவற்றில் பொருத்தித் தருவதையும் கவனித்துக் கொள்கிறார். வால்பேப்பர்கள் பொருத்தப்பட்ட பின்னர் பராமரிப்பில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதென்று வாடிக்கையாளர்கள் புகார் அளித்தால், உடனடியாக அவற்றை நேரில் சென்று ஆய்வு செய்து சரிசெய்து தருவதாகக் கூறகிறார்.
தனிநபர்களுக்கே செய்து வரும் வால்பேப்பர் டிசைன்களை அடுத்தகட்டமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ள இவர்கள் இதனை இலக்காக வைத்தே தங்களது தொழிலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்கின்றனர்.
Shadoz முகநூல் பக்கம் : https://www.facebook.com/shadozhere/