ஃபேஸ்புக் நண்பர்கள் தொடங்கிய ‘வாட் எ கருவாடு’ - மாதம் 500 ஆர்டர்; ஆண்டுக்கு ரூ.50லட்சம் வருவாய்!
மண்சட்டியில் மாங்காய் போட்ட மீன் குழம்பு, பச்சப்புளி ரசம், கருவாட்டுத் தொக்கு, பொறித்த மீன், சாதம் என நால்வர் உண்டு மகிழும் வகையிலான வாட் எ கருவாடின் காம்போ பேக்கேஜ் பார்க்கவே செம அட்ராக்டிவ்வாக உள்ளது. கிளவுட் கிச்சனில் இயங்கி வாட் எ கருவாடு சக்ஸஸ்புல்லான பிராண்ட் ஆக மாறியது எப்படி?
நண்பர்கள் ஒன்று கூடினாலோ, வீட்டிற்கு விருந்தினர்கள் திடீர் விசிட் அடித்தாலோ, ஆபிஸ் கெட் டு கெதரின் போதும் உணவு விருந்தாக பக்கெட் பிரியாணியோ, பீட்சா, பர்கரோ இடம்பிடித்து விடுகின்றன. கொண்டாட்டங்களின் போது பெருவாரியான மக்களின் தேர்வு பிரியாணி. இந்த டிரெண்ட்டை உடைத்து மக்களிடம் பொதிந்து கிடந்த மீன் சாப்பாட்டு மீதான ஆசையை துாண்டிவிட்டுள்ளது சென்னையில் இயங்கும் 'வாட் எ கருவாடு' 'What A Karwad'.
மண்சட்டியில் மாங்காய் போட்ட மீன் குழம்பு, பச்சப்புளி ரசம், கருவாட்டுத் தொக்கு, பொறித்த மீன், சாதம் என நால்வர் உண்டு மகிழும் வகையிலான 'வாட் எ கருவாட்’-ன் காம்போ பேக்கேஜ் பார்க்கவே செம அட்ராக்டிவ்வாக உள்ளது. கிளவுட் கிச்சனில் இயங்கினாலும் வாட் எ கருவாடை சக்ஸஸ்புல்லான பிராண்ட் ஆக மாற்றியுள்ளனர் அதன் நிறுவனர்கள் மனோஜ் சூர்யா மற்றும் ஸ்டாலின்.
திகைபூட்டும் அனுபவங்களை அளிக்கும் பயணங்களுக்கு மக்களை அழைத்து செல்லும் 'டென்ட் அண்ட் ட்ரெக்' எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்தி வருகிறார் மனோஜ் சூர்யா. ஸ்டாலின் ஐடி ஊழியராக பணியாற்றி வருகிறார். இருவேறு பாதையில் பயணிக்கும் இருவரையும் அறிமுகப்படுத்தியது முகநுால்.
ஃபேஸ்புக்கில் நண்பர்களாகிய இருவரும் இணைந்து தொழில் தொடங்கிய கதையே சுவராஸ்மானது.
நண்பர்கள் அரட்டையில் தொடங்கிய தொழில் யோசனை
நண்பர்களிடையே ஏற்பட்ட இந்த யோசனை எப்படி செயல்வடிவம் பெற்றது? ’வாட் எ கர்வாட்’ வெற்றிகரமாகியது எப்படி? -சுவாரசியக் கதையை பகிர்ந்த மனோஜ்...
"நானும், ஸ்டாலினும் ஃபேஸ்புக் நண்பர்கள். 2018ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஸ்டாலின் ப்ளம் கேக்குகளை விற்பதாக ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்தார். போஸ்ட் பாத்திட்டு அவரிடம் கேக் ஆர்டர் செய்தேன். கேக்கை அவரே டெலிவரி செய்தார். அது தான் எங்களது முதல் சந்திப்பு.
அதன் பிறகு, ஃபேஸ்புக்கில் அவ்வப்போது மெசேஜ்ஜில் பேசியிருக்கிறோம். ஒரு முறை வீட்டில் மீன் சமைத்து சாப்பிட்டதை ஸ்டாலின் போஸ்ட் போட்டிருந்தார்.
'அடுத்தமுறை சமைக்கும் போது என்னையும் கூப்பிடுங்க'னு அந்த போஸ்டுக்கு கமெண்ட் பண்ணியிருந்தேன். அவரும் அதே மாதிரி கூப்பிட்டார். அப்போ, ருசியான மீனைச் சாப்பிட்டு கொண்டே நாம ஏன் இதை பிசினஸா பண்ணக் கூடாதுனு கேட்டேன். அப்படி ஆரம்பித்த உரையாடல் தான் இன்றைய ’வாட் எ கருவாட்’. உடனே, லாக்டவுண் வந்துவிட்டதால் பெரிசா இத பத்தி பேசிக்கல நாங்க. கடந்த ஆண்டு தான் ஐடியாவினை செயல்படுத்தத் தொடங்கினோம்.
முழுமையான மீன் சாப்பாட்டை தாராளமாக 4 பேர் சாப்பிடும் வகையில் காம்போ பேக்-ஆ கொடுக்கலாம்னு முடிவு செய்தோம். மீன் குழம்பிற்கு மாங்காய் எக்ஸ்ட்ரா ருசி கொடுக்கும் என்பதால், மாங்காய் போட்ட மீன் குழம்பு, என் மனைவி பரிந்துரைத்த பச்சப்புளி ரசம், கருவாட்டுத் தொக்கு, சாதம் என மெனுவை செட் செய்தோம். மெனு முடிவு செய்த பின், பெர்பெக்ட்டான மீன் குழம்பு ரெசிபியை கொண்டுவர 4 மாதங்களாகியது.
தினமும் காலையில் எழுந்தவுடன் மீன் வாங்கிட்டுவந்து, சமைத்து சாப்பிட்டு, ப்ரெண்ட்ஸ், பேமிலி, அக்கம் பக்கத்தினருக்கு கொடுத்து கருத்து கேட்போம். 4 மாதங்களின் முடிவில் பெர்பெக்ட் மீன் குழம்பு ரெசிபியை கொண்டு வந்தோம். ஐடியா இருந்தாலும் அதற்கெற்ற முதலீடு வேண்டும். ஓட்டல் தொடங்குவது சாத்தியமில்லாதது என்பதால் கிளவுட் கிச்சனை தேர்ந்தெடுத்தொம்.
லாக்டவுனுக்கு பிறகு உணவுத்துறை மிகப்பெரிய மாறுதலை அடைந்திருக்கிறது. லாக்டவுன் காலத்தில் கிளவுட் கிச்சன் கான்செப்ட் வெற்றிகரமானதாக அமைந்தது. லாக்டவுனிலும், அதற்கு பிறகும் பெண்கள் பலரும், அவர்களது கைமணத்தில் ஸ்பெஷலாகும் ரெசிப்பிகளை மட்டும் மெனுவாக்கி கிளவுட் கிச்சன் முறையில் தொழிலைத் தொடங்கினர்.
வீட்டு மொட்டைமாடி, வீட்டுச் சமையலறை, அல்லது வீட்டுக்குள்ளே ஒரு சிறிய பகுதியில் கிச்சனை அமைத்து ஹோட்டல் கிச்சனை வீட்டுக்குள் கொண்டுவந்து டேக் அவே முறையில் உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வதே கிளவுட் கிச்சன். குறைந்த முதலீடு, சிறிய இடம், வீட்டிலே சமையல் என எளிய முறையில் இதை தொடங்கிவிடலாம் என்பதால், உணவுச் சார்ந்த தொழில் தொடங்க எண்ணுவோரின் விருப்பத் தேர்வு கிளவுட் கிச்சன்," என்று பகிர்ந்தார் மனோஜ்.
'வாட் எ கருவாடு' தொடங்கியது எப்படி?
மனோஜ் ரூ.2,00,000 பணத்தை நண்பர்களிடமிருந்து கடனாகப் பெற, ஸ்டாலின் 2,50,000 ரூபாயை பெர்சனல் லோன் எடுத்து ரூ.4,50,000 முதலீட்டில் கடந்தாண்டு 'வாட் எ கருவாடு' கிளவுட் கிச்சனை தொடங்கியுள்ளனர் இருவரும்.
ப்ரீ ஆர்டர் முறையில் வீக்கென்டில் மட்டும் முதலில் வாட் எ கருவாடின் மீன் குழம்பு சாப்பாட்டை ஹோம் டெலிவரி செய்யத் தொடங்கியுள்ளனர். மீன் வாங்கி வருவது தொடங்கி பார்சலை வாடிக்கையாளர்களிடம் சென்றடைய வைப்பது வரை சகல வேலைகளையும் இருவரும் பகிர்ந்து செய்துள்ளனர்.
தொடங்கிய முதல் மாதத்திலே 150 பாக்ஸ் விற்பனையாகியுள்ளது. தொழில் தொடங்கிய 6 மாதத்திலே முதலீடாக பெற்றக் கடனை அடைத்து, மாதம் 500 பாக்ஸ்களை விற்பனை செய்து, மாதத்திற்கு ரூ.5,00,000 வருவாயும் ஈட்டுகின்றனர். ஓராண்டிலே மக்களின் வரவேற்பை பெற்று 'வாட் எ கருவாடு' நிலையான ப்ரான்ட்டாக உருவெடுக்கத் தொடங்கி உள்ளது.
முதல் தலைமுறை தொழில்முனைவோர் சந்திக்கும் பெரிய சவால் முதலீடு. ஓட்டல் தொடங்க வேண்டும் என்றால் இடத்திற்கு அட்வான்ஸ் கொடுக்கவேண்டும், இன்டீரியர் வொர்க் என பல விஷயங்களில் முதலீடு செய்யவேண்டி வரும். ஓட்டல் தொழில் புரிய நினைப்பவர்களுக்கே இருக்கும் சவால் இது. அந்த வகையில் கிளவுட் கிச்சன் உணவுத்துறையை வேறொரு பரிணாமத்தில் பயணிக்க வைத்திருக்கிறது.
நாங்கள் அதிலும் செலவினங்களை குறைப்பதற்கான வழிகளைத் தேடினோம். மொட்டைமாடியை வாடகைக்கு எடுத்து அதில் ஷேட் போட்டு எங்களுடைய கிச்சனை அமைத்தோம். கசிவு அற்ற பிளாஸ்டிக் கண்டெய்னர்களை தேர்ந்தெடுத்து செலவை குறைத்தோம். ஓட்டலில் உணவு வீணாகுவது தடுக்கமுடியாததாகி விட்டது. அதில் நாங்கள் அதிக கவனம் செலுத்தி முதல் நாளிலிருந்தே ஜீரோ வேஸ்டேஜ் கடைப்பிடித்து வருகிறோம்.
ப்ரீ ஆர்டர் முறையில் புக்கிங் செய்வதால், உணவு வீணாகுவதை தடுத்துவிடுகிறோம். ஓட்டல் துறையில் புரட்டாசி மாதம் சறுக்கலை சந்திக்கும். அந்த சமயத்தில் நாங்கள் டிஸ்கவுண்ட், ஆஃபர்களை வழங்கி பிசினசை நிலையாகக் கொண்டு சென்றோம்.
அதே போல், கடல் உணவு சார்ந்த தொழில் என்பதால் மீன்பிடிக்க தடை காலத்தின் போது, மங்களூரிலிருந்து மீன்களை கொள்முதல் செய்து கொள்வோம். தொடக்கத்தில் அய்லா, வஞ்சரம், ஷீலா மீன்கள் மட்டுமே விற்பனை செய்தோம். இப்போது, மீன்களிலே பல வெரைட்டிகளும், இறால், கனவாயும் மெனுவில் இணைத்துள்ளோம். தொழில் தொடங்கி ஓராண்டு முழுவதும் நிறைய சவால்களும், அதை எதிர்கொண்டும் கடந்தோடியது.
சென்னை மக்களிடம் உள்ள பிரியாணி பிரியம் அளவற்றது. அவர்களை மீன் சாப்பாடு வாங்கி ருசிக்க வைப்பதே சவாலான விஷயம் தான். அந்த டிரெண்டை கொஞ்சம் மாற்றி விட்டோம் என்று தான் நினைக்கிறோம். ஏனெனில், வீட்டிற்கு விருந்தாளிகள் திடீரென்று வந்துவிட்டால், பக்கெட் பிரியாணிக்கு மாற்றாக எங்களை அணுகுகின்றனர்.
வெளிநாட்டில் இருப்பவர்கள், சென்னையில் வசிக்கும் அவர்களது பெற்றோர்களுக்கு சர்ப்ரைஸாக எங்களது மீன் சாப்பாட்டு பாக்சை ஆர்டர் செய்கின்றனர். ஏன், எங்க பாக்ஸ் 4 முறை ப்ளைட்டிலும், அடிக்கடி ட்ரெயினிலும் பயணித்து இருக்கிறது. இது போன்ற சின்ன சின்ன சந்தோஷங்களே, சின்ன பிசினசிற்கு கிடைக்கும் பெரிய உந்துதல். ஓராண்டு நிறைவில் வீக்கெண்டில், தொடர்ச்சியாக ஆர்டர் செய்யும் நிலையான வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர்.
கிளவுட் கிச்சனுக்கு பலம் சேர்ப்பதே டிஜிட்டல் மார்க்கெட்டிங். தொடக்கத்திலிருந்தே தரவுகளின் அடிப்படையிலே பிசினஸை நகர்த்தி வருகிறோம்.
எங்களுடைய கஸ்டமர்கள் யார்? எந்தப் பகுதியை சேர்ந்தவர்கள்? எங்களை அவர்கள் அணுக காரணம் என்ன? என அனைத்தையும் ஆராய்ந்து தரவுகளை சேகரித்து தொழிலை மேம்படுத்தி வருகிறோம். பால்ய நண்பர்கள் கூட்டாகத் தொழில் தொடங்கினாலே, வலுவான நட்பும் சோதனைக்குள்ளாகும். இதில் ஃபேஸ்புக்கில் நட்பாகிய இருவரும் சரியான புரிதலுடன் எவ்வாறு செயல்படுகின்றனர்?
"உணவை தேடித் தேடிச் சென்று ருசிக்க ஸ்டாலினுக்கு பிடிக்கும். அவருக்கு மீன் எப்படி பார்த்து வாங்கணும், ப்ரெஷ் மீன் என்ன போன்ற நுணுக்கங்கள் தெரியும். அவருடைய கைப்பக்குவதில் வந்தது தான் மீன்குழம்பு ரெசிபி. தொழிலில் அவரது பங்கென்ன? என்னுடையது என்ன? என்பதை ஒருவருக்கொருவர் நன்கு அறிவோம். இருவரும் அவரவர் தீர்மானங்களுக்கு மதிப்பு அளிக்கிறோம். ஒருவரையொருவர் முழுமையாக நம்புகிறோம். எங்களுக்குள் இருக்கும் புரிதலும், நம்பகத்தன்மையும் தொழிலை எவ்விதத்தில் பாதிக்காமல் செல்கிறது," என்றுக் கூறி நிறைவு செய்தார் மனோஜ்.
வாட் எ கருவாட்-இன் வெற்றியானது தொழில் யோசனைகளை வைத்துக் கொண்டு, தொழில் தொடங்குவதற்கு திக்குமுக்காடும் வருங்கால இளம் தொழில் முனைவோருக்கான உத்வேகம்!
வாட் எ கருவாடின் இன்ஸ்டாகிராம் பக்கம் :
வீட்டுச் சுவையில் மீன் குழம்பு சாப்பாடு: சென்னை நண்பர்களின் ‘மீன் சட்டி’ தொழில் முயற்சி!