உங்களுக்குப் பிடித்த வீடியோவை ரிங்டோனாக செட் செய்ய உதவும் ஆப்!
நீங்கள் உள்ளடக்கத்தை உருவாக்கி பகிர்ந்துகொள்ளவும் இந்த செயலி உதவுகிறது.
மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்புகொள்ள லேண்ட்லைன் பயன்படுத்திய காலம் மாறி ஸ்மார்ட்போன் வந்துவிட்டது. குரல்வழி அழைப்புகள் வீடியோ அழைப்புகளாக மாறியுள்ளது. எஸ்.எம்.எஸ் அனுப்பிய காலம் மாறி வாட்ஸ் ஆப், இன்ஸ்டா மெசேஜ் அனுப்பிக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு தகவல் தொடர்பு துறை பல்வேறு மாற்றங்களைக் கடந்து வந்துள்ளது. அப்படியானால் உங்கள் போன் ரிங்டோனும் மாறவேண்டும் அல்லவா?
ரிங்டோனில் புதுமையைப் புகுத்த பால் கேட்ஸ், ஜெஃப்ரி செர்னிக், சோரப் பிரயேஷ், ஆர்ட் ஹெடிக் ஆகிய நான்கு நண்பர்களும் ஒன்றிணைந்து விங் (Vyng) என்கிற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர். கலிஃபோர்னியாவைச் சேர்ந்த இந்த செயலி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ’வீடியோ’, ’ரிங்’ என்கிற இரண்டு வார்த்தைகளையும் ஒன்றிணைத்து ’விங்’ (Vyng) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியா, அமெரிக்கா, வங்கதேசம், நேபால், நைஜீரியா, கானா, இந்தோனேசியா உள்ளிட்ட 174 நாடுகளில் 6,000-க்கும் அதிகமான ஆண்ட்ராய்ட் வகை சாதனங்களில் விங் செயலி பயன்படுத்தப்படுகிறது. அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் உலகளவில் 2 பில்லியனுக்கும் அதிகமான விங் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் தனியுரிம தொழில்நுட்பத்திற்கு மூன்று காப்புரிமைகள் பெறப்பட்டுள்ளது.
மார்ச் கேப்பிடல் பார்ட்னர்ஸ், ஒமிட்யார் நெட்வொர்க் இந்திய நிறுவனம், ஆல்பா எடிசன், Entrepreneur Fund ஆகிய நிறுவனங்களிடம் இருந்து 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த ஸ்டார்ட் அப் சீரிஸ் ஏ நிதி உயர்த்தியது. இந்த நிதி உயர்த்தப்பட்ட பிறகு Vyng இந்தியாவில் அறிமுகமானது. பயனர்கள் தங்களுக்குப் பிடித்தமான பாலிவுட் வீடியோக்களை ரிங்டோனாக செட் செய்துகொள்ளும் வசதியை இந்த செயலி வழங்குகிறது.
இந்தியாவில் ஆண்ட்ராய்ட் பயனர்கள் அதிகம் என்பதால் இந்திய சந்தையில் மிகப்பெரிய அளவில் செயல்படுவதாக செயலி அறிமுகத்தின்போது சிஇஓ மற்றும் இணை நிறுவனர் பால் காட்ஸ் தெரிவித்தார். இந்திய பயனர்கள் தனிப்பட்ட ரிங்டோன்களையும் காலர் ட்யூன்களையும் விரும்புபவர்கள் என்பதால் விங் செயலி இந்தியாவில் சிறப்பான வரவேற்பைப் பெற வாய்ப்புள்ளது.
யுவர்ஸ்டோரி இந்த செயலியை சோதனை செய்துபார்த்தது. இந்த செயலி ஆடியோ மட்டுமே இடம்பெற்றிருக்கும் காலர் ஐடி-க்கு பதிலாக வீடியோ அனுபவத்தை வழங்குகிறது. அனைத்து அழைப்புகளுக்கும் ஒரே வீடியோ ரிங்டோன் வைத்துக்கொள்ளலாம். அல்லது வெவ்வேறு தொடர்பு எண்களுக்கோ குழுக்களுக்கோ வெவ்வேறு வீடியோ ரிங்டோன் செட் செய்துகொள்ளலாம்.
முதலில் ’டிஃபால்ட் போன் செயலி’யாக இந்தச் செயலியை செட் செய்துகொண்டு வழக்கமாக அளிக்கும் அனுமதியை அளிக்கவேண்டும். சைன்-அப் செய்வதற்கு இந்த செயல்முறை அவசியம். உங்கள் போன் எண்ணை இணைத்தபிறகு ஒரு கோட் அனுப்பப்பட்டோ அல்லது ட்ரூகாலர் மூலமாகவோ உங்கள் போன் எண் சரிபார்க்கப்படும்.
இந்த செயலியில் ’டிஸ்கவர்’ என்கிற பகுதியில் இருந்து விருப்பமான வீடியோக்களைத் தேர்வு செய்துகொள்ளலாம். உங்களது மொபைல் கேலரியில் இருக்கும் தனிப்பட்ட வீடியோ, செல்லப்பிராணிகளின் வீடியோக்கள் அல்லது உங்களது குழந்தைகளின் வீடியோக்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
நீங்கள் சைலண்ட் வீடியோக்களை விரும்பினால் செட்டிங்ஸ் பகுதியில் உள்ள ’ஓவர்ரைட் கஸ்டம் ஆடியோ’ தேர்வு செய்துகொண்டு ஒரிஜினல் ஆடியோ ரிங்டோனையே வைத்துக்கொள்ளலாம்.
வேடிக்கையான வீடியோக்கள், இசை வீடியோக்கள், டிரெண்டிங்கான வீடியோக்கள் என லைப்ரரியில் இருந்து உங்களுக்கு விருப்பமானவற்றைத் தேர்வுசெய்துகொள்ளலாம். இந்திய பதிப்பில் பாலிவுட் பாடல்கள் மட்டுமின்றி தமிழ், பெங்காலி, பஞ்சாபி போன்ற வட்டார மொழி பாடல்களும் இடம்பெற்றுள்ளது.
நீங்கள் பார்க்கும் சுவாரஸ்யமான ஒரு வீடியோ விங் செயலியில் இடம்பெறலாம் என நீங்கள் நினைத்தால் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று வீடியோ யூஆர்எல்-ஐ வழங்கி நிறுவனத்திடம் பரிந்துரை செய்யலாம்.
அதுமட்டுமின்றி விங் செயலி மூலம் நீங்கள் உள்ளடக்கம் உருவாக்கி மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்ளலாம். வீகோ, லைக் அல்லது டிக்டாக் போன்றே நீங்கள் சொந்தமாக வீடியோக்களை பதிவு செய்ய இந்தச் செயலி உதவும்.
விங் செயலி மூலம் உங்களது சொந்த சானலை நீங்கள் உருவாக்கலாம். வீடியோக்களை பதிவுசெய்யலாம். அதை வீடியோ ரிங்டோனாக பயன்படுத்தலாம். சமூக வலைதளங்களிலும் வாட்ஸ் அப்பிலும் பகிர்ந்துகொள்ளலாம்.
வீடியோக்கள் உருவாக்கும் மற்றவர்களையும் நீங்கள் பின்தொடரலாம். அவர்களது வீடியோக்களுக்கு விருப்பம் தெரிவிக்கலாம். உங்கள் வீடியோக்களுக்கான விருப்பக் குறியீடுகளின் எண்ணிக்கை, உங்கள் வீடியோக்களை ரிங்டோனாக செட் செய்திருக்கும் நபர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட சானல் விவரங்களையும் நீங்கள் முகப்புப் பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்.
செயலியின் வீடியோக்களை வாட்ஸ் அப் ஸ்டேடஸாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். அவற்றை பதிவிறக்கம் செய்து வாட்ஸ் அப் தொடர்புகளுடன் பகிர்ந்துகொள்ளலாம். இது ஃபேஸ்புக் வாயிலாகவும் சாத்தியம் என்று இந்தச் செயலியின் ப்ளேஸ்டோர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பயனர் இடைமுகம் டிக்டாக் போன்றது. பயனர்கள் ஸ்வைப் செய்து ஒரு பிரிவில் உள்ள வெவ்வேறு வீடியோக்களுக்கு மாறலாம். அதேபோல் உங்களது வீடியோவில் இசையையோ அல்லது ஆடியோவையே இணைத்துக்கொள்ளலாம்.
கூகுள் ப்ளேஸ்டோரில் இசை வீடியோக்கள், வேடிக்கையான வீடியோக்கள், வாட்ஸ் அப் ஸ்டேடஸ் வீடியோக்கள், பாடல் வீடியோக்கள், பதிவிறக்கம் செய்து பகிர்துகொள்ளும் வகையிலான ட்ரெண்டிங் வீடியோக்கள் உள்ளிட்ட 6 மில்லியனுக்கும் அதிகமான வீடியோக்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக விங் தெரிவிக்கிறது.
இந்த செயலிக்கு பயனர்களால் 4.5 நட்சத்திர மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் 50 லட்சத்திற்கும் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் டிக்டாக் செயலி 50 கோடிக்கும் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
கருத்து
இந்தச் செயலி பல்வேறு வகையான வீடியோக்களை கொண்டுள்ளது. நீங்கள் சொந்தமாக உள்ளடக்கம் உருவாக்கும் வாய்ப்பு இருப்பதால் அனைத்து வகையான பயனர்களுக்கும் பொருத்தமாக இருக்கும். உங்களது விருப்பத்திற்கேற்ப பாலிவுட் வீடியோக்களையோ பக்தி வீடியோக்களையோ உங்களது நண்பர்களின் வீடியோக்களையோ தேர்வு செய்துகொள்ளலாம்.
ஒன் ப்ளஸ் 3 போனில் இந்த செயலியை ஒரு வாரம் பயன்படுத்தியபோது போனின் செயல்திறனில் எந்தவித பாதிப்பும் இருக்கவில்லை. உதாரணத்திற்கு சைலண்ட் மோட் தேர்வு செய்தபோது செயலி இசை ஏதும் இன்றி வீடியோவை ப்ளே செய்தது. ஆடியோ ரிங்டோன் போன்றே ஆடியோ ஒலியைக் கட்டுப்படுத்த முடியும்.
இணைய இணைப்பு இல்லாதபோதும் இந்தச் செயலி செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சிக்னல் அடிக்கடி தடைபடும் இந்தியா போன்ற நாட்டில் இத்தகைய அம்சம் மேலும் பயனுள்ளதாக அமைகிறது.
நாங்கள் இந்தச் செயலியைப் பயன்படுத்தத் தொடங்கியபோது வீடியோ ரிங்டோன் காரணமாக போன் பேட்டரி அதிகம் செலவாகும் என்று நினைத்தோம். பல முறை வீடியோ ரிங்டோன் ஒலித்தபோதும் பேட்டரி குறையாமல் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
விங் செயலியை அன்இன்ஸ்டால் செய்யாமலேயே செயலிழக்கச் செய்துவிட்டு, வழக்கமான ஆடியோ ரிங்டோனுக்கு மாறுவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய முடியவில்லை.
இந்த ஆப் டவுன்லோட் செய்ய: Vyng
ஆங்கில கட்டுரையாளர்: ராஷி வர்ஷினி | தமிழில்: ஸ்ரீவித்யா