5 லட்சத்திற்கும் மேற்பட்ட விலங்குகளை மீட்டுள்ள சமூக ஆர்வலர்!
குஜராத்தின் ராஜ்கோட் பகுதியில் என்ஜிஓ தொடங்கி கடந்த 17 ஆண்டுகளாக விலங்குகளை மீட்டு வருகிறார் மிட்டல் கெதானி.
கொரோனா பெருந்தொற்று சமயத்தில் ஒட்டுமொத்த மனிதகுலம் மட்டுமல்லாது விலங்குகளும் பறவைகளும் எத்தனையோ வகையில் பாதிக்கப்பட்டுள்ள.
சுகாதாரப் பிரச்சனை, உணவுப் பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு பல நல்லுள்ளங்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.
மனிதர்கள் ஒருவகையில் பாதிக்கப்பட்ட சூழலில் மனிதர்களை சார்ந்தே வாழ்ந்து வந்த உயிரினங்கள் சொல்லொனாத் துயரை அனுபவித்தன. மனிதர்கள் நடமாட்டம் இருந்தால்தான் இவற்றால் உண்ண முடியும். ஆனால் ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கியதால் விலங்குகள் பசியால் வாடின.
எத்தனையோ தனிநபர்களும் நிறுவனங்களும் உயிரினங்கள் பராமரிப்பில் பங்களித்த நிலையில் குஜராத் ராஜ்கோட் பகுதியை சேர்ந்த ‘ஸ்ரீ கருணா ஃபவுண்டேஷன்' என்கிற என்ஜிஓ விலங்குகளுக்கு உதவ 1.5 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்துள்ளது.
இந்த என்ஜிஓ கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கும் மேலாகவே செயல்பட்டு வருகிறது. இதைத் தொடங்கி நடத்தி வருபவர் மிட்டல் கெதானி. மற்றவர்களுக்கு உதவுவதே இவருக்கு ஆத்மதிருப்தியும் மகிழ்ச்சியும் கொடுக்கிறது. இவர் இந்த அறக்கட்டளை மூலம் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான விலங்குகளை மீட்டுள்ளார். இந்த சுவாரஸ்யமான பயணம் குறித்து இவர் சோஷியல்ஸ்டோரி-யிடம் பகிர்ந்துகொண்டார்.
சேவையில் மகிழ்ச்சி
சிறு வயது முதலே இவருக்கு சேவை மனப்பான்மை உண்டு. பலமுறை ரத்த தானம் செய்துள்ளார். இவரது குடும்பத்தினர் தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு உணவு அளிக்கிறார்கள். சுமார் 300 பேரை பராமரிக்கும் முதியோர் இல்லம் ஒன்றில் தீவிரமாக பங்களித்து வருகிறார். பல என்ஜிஓ செயல்பாடுகளில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.
மிட்டல் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிந்தார். நல்ல சம்பளம். வெளிநாட்டு பயணம். சராசரி மக்களை மகிழ்விக்கும் இதுபோன்ற அம்சங்கள் அவருக்கு திருப்தியளிக்கவில்லை. மக்கள் முகத்தில் புன்னகை வரவழைக்கும் செயலே அவருக்கு ஆத்மதிருப்தி அளித்துள்ளது.
“இன்று பலர் தொண்டு பணிகளில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இளமைக் காலம் என்பது பணம் ஈட்டுவதற்கான நேரம் என்று கருதுகிறார்கள். இவர்களது வாழ்க்கைமுறையைப் பார்க்கும்போது இளமைக் காலம் கடந்த பின்னர் இவர்களால் சுறுசுறுப்பாக இருக்கமுடியாது என்றே தோன்றுகிறது,” என்கிறார் மிட்டல்.
என்னைப் பொருத்தவரை இந்த இரண்டுமே முக்கியம். அனைவரும் இரண்டிலுமே கவனம் செலுத்தவேண்டும். காலம் செல்லச்செல்ல வாயில்லா ஜீவன்களுக்கு உதவவேண்டும் என்பதை உணர்ந்தேன், என்று குறிப்பிட்டார்.
மனிதர்கள் மற்றும் விலங்குகள் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இரண்டு உயிரினங்களும் உயிர்பிழைக்க சுற்றித் திரிகின்றன, குடும்பம் உள்ளது, முக்கியமாக உயிர் வாழ சம உரிமை உள்ளது.
மனிதர்கள் வேலை செய்து உயிர்வாழ முடியும். ஆனால் விலங்குகளுக்கு உணவு கிடைக்க வழி ஏதும் இல்லை. மனிதர்கள் விலங்குகளின் இருப்படத்தை ஆக்கிரமித்துள்ளனர். மிட்டல் விலங்குகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு 2005ம் ஆண்டு ஸ்ரீ கருணா ஃபவுண்டேஷன் ட்ரஸ்ட் நிறுவினார்.
வாயில்லா ஜீவன்களுக்கு உதவி
மிட்டல் நண்பர்கள் உதவியுடன் ராஜ்கோட் பகுதியில் ஸ்ரீ கருணா ஃபவுண்டேஷன் திறந்தார். தற்போது இந்தக் குழுவில் நிறுவனத்தின் தலைவர் மிட்டல் கெடானி, செயலாளர் பிரதிக் சங்கனி, ட்ரஸ்டீ தீரேந்திர கனாபர், ஆலோசகர் ரமேஷ் தக்கர், சிஓஓ அமர் குமார் ஆகியோர் இணைந்து செயல்படுகிறார்கள்.
இந்த ஃபவுண்டேஷன் விலங்குகளுக்கான இலவச ஆம்புலன்ஸ், மருத்துவமனை, கால்நடை சேவைகள் போன்றவற்றை ராஜ்கோட் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழங்கி வருகிறது.
1,400 விலங்குகள் என்கிற எண்ணிக்கையில் உதவி செய்யத் தொடங்கிய இந்நிறுவனம் ஐந்து லட்சம் விலங்குகள் மற்றும் பறவைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.
இந்தியாவில் கடந்த 17 ஆண்டுகளாக விலங்குகளுக்கு இலவச சேவையளிக்கும் மிகப்பெரிய என்ஜிஓ-வாக உருவெடுத்துள்ளது. குஜராத் அரசாங்கமும் இலவச கால்நடை ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்தி ‘கருணா ஆம்புலன்ஸ்’ என பெயரிட்டுள்ளது. இந்த என்ஜிஓ அதன் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
மகரசங்கராந்தி பண்டிகையின்போது பட்டம் விடப்படுவது வழக்கம். இதனால் எத்தனையோ பறவைகள் உயிரிழக்க நேர்கிறது. இதற்குத் தீர்வுகாணும் வகையில் இந்த என்ஜிஓ நாட்டின் மிகப்பெரிய கட்டுப்பாட்டு அறையை உருவாக்கி காயம்பட்ட பறவைகளுக்கு அதே நாளில் சிகிச்சையளிக்கிறது. இந்த பிரச்சாரத்தைக் கண்டு உந்துதலடைந்த குஜராத் அரசாங்கம் ’கருணா அபியான்’ என்கிற இதே மாதிரியான பிரச்சாரத்தை மாநிலம் முழுவதும் அறிமுகப்படுத்தியது.
இதுதவிர இந்த ட்ரஸ்ட் விலங்குங்கள் மற்றும் பறவைகளுக்காக ‘மொபைல் ஃபுட் ஜோன்’ நடத்துகிறது. இது இந்தியாவில் முதல் முறையாக அறிமுகப்பட்டத்தப்பட்ட முயற்சியாகும்.
”நகரின் வெவ்வேறு பகுதிகளில் 150 லிட்டர் பால், நூற்றுக்கணக்கான சப்பாத்தி போன்றவற்றை 600 நாய்களுக்கு வழங்குகிறோம். தினமும் 250 கிலோ தானியங்களை பறவைகளுக்கு வழங்குகிறோம்,” என்றார் மிட்டல்.
தங்கள் பகுதியில் உள்ள பறவைகளுக்கு உணவளிக்க விரும்புவோருக்கு விதைகளையும் இவர்கள் இலவசமாகக் கொடுக்கிறார்கள்.
விலங்குகள் ஆரோக்கியம், நல்வாழ்வு இரண்டிலும் இவர்களது சேவை கவனம் செலுத்துகிறது. எனவே கால்நடை திறன் மேம்பாட்டு மையம் ஒன்றை இலவசமாக நடத்துகின்றனர். இங்கு கால்நடை மருத்துவர்கள், மாணவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் போன்றோருக்கு இலவசமாக பயிற்சியளிக்கப்படுகிறது.
சமீபத்தில் AWO பிரிவின்கீழ் இந்திய விலங்குகள் நல வாரியம் இந்த என்ஜிஓ-விற்கு பிரணி மித்ரா விருது வழங்கி கௌரவித்துள்ளது.
சவால்கள்
மனிதர்கள் விலங்குகளைக் கொடுமைப்படுத்துவதை மிட்டல் கவனித்துள்ளார்.
”விலங்குகளை எளிதாகத் தாக்கிவிடலாம் என்பதற்காக மனிதர்கள் தங்களது கோபத்தை விலங்குகள் மீது காட்டுகிறார்கள். பதிலுக்கு விலங்குகளும் மனிதர்களைப் பகையாளியாகப் பார்க்கின்றன. இதனால் விலங்குகளை மீட்பவர்கள் சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது,” என்கிறார்.
மாறாக மனிதர்கள் விலங்குகளிடம் பரிவுடன் நடந்துகொண்டால் அவை வாழ்நாள் முழுவதும் விசுவாசமாக இருக்கும். இதை மக்கள் புரிந்துகொள்வதில்லை என்கிறார்.
“ஸ்ரீ கருணா ஃபவுண்டேஷன் விலங்குகளின் நல்வாழ்வில் கவனம் செலுத்துகிறது. இறைச்சிக்காக விலங்குகள் கொல்லப்படுவதையும் தடுக்கிறது,” என்றார்.
லட்சக்கணக்கான விலங்குகளைக் காப்பாற்ற முடிந்தாலும் கோடிக்கணக்கான விலங்குகள் இறந்துபோவதை தடுக்க முடியாமல் போவதாக அவர் வருத்தம் தெரிவிக்கிறார்.
வருங்காலத் திட்டம்
“நாம் விலங்குகளுக்கு உதவுவதில்லை. இன்று அவைகளே நமக்கு ஏராளமான ஆடம்பரங்களை வழங்கியுள்ளன. இதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்,” என்கிறார் மிட்டல்.
இந்த ட்ரஸ்டின் சேவைகள் அனைத்தும் ராஜ்கோட் பகுதியில் கவனம் செலுத்தி வரும் நிலையில் மேலும் பல இடங்களில் சேவையளிக்கவும் விலங்குகளின் நலனில் மேலும் பலர் ஈடுபட உத்வேகம் அளிக்கவும் விரும்புகிறது.
“சராசரி மனிதரால் இது சாத்தியமெனில் ஆயிரக்கணக்கானோரும் லட்சக்கணக்கானோரும் இந்த முன்னெடுப்பில் ஒரு அடி எடுத்து வைத்தால் எத்தகைய தாக்கம் ஏற்படும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்,” என்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: அஞ்சு அன் மேத்யூ | தமிழில்: ஸ்ரீவித்யா