சிறு கடைகள் டிஜிட்டல் மயமாக உதவும் 4 நிறுவனங்கள்!

வணிக ரீதியாக வளர்ச்சியடைய டிஜிட்டல் கட்டண முறையை சிறு கடைகள் செயல்படுத்துவது தற்போது அவசியமாகிறது. இதற்கு உதவும் 4 நிறுவனங்கள் இதோ:

9th Oct 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

இந்தியாவில் எப்போதும் உணவு தானியங்கள், பால் பொருட்கள், குளியலறை பொருட்கள் போன்ற அத்தியாவசிய தேவைக்கான பொருட்கள் அருகில் இருக்கும் சிறு கடைகளிலேயே வாங்கப்படுகிறது. இன்றளவும் சூப்பர் மார்கெட்கள், சில்லறை வர்த்தக சங்கிலித் தொடர்கள், மின் வணிகம் போன்ற தேர்வுகள் இருப்பினும் சிறு வணிகங்கள் நாட்டின் அனைத்து இடங்களிலும் காணப்படுகிறது.

எனினும் டிஜிட்டல் ரீதியான செயல்பாடுகள் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் இத்தகைய சிறு கடைகள் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. பண பரிவர்த்தனைகள் குறைந்து டிஜிட்டல் கட்டண முறை பயன்பாட்டில் இருக்கும் நிலையில் சிறு கடைகள் தொடர்ந்து செயல்படுவதுடன் வணிக ரீதியாக வளர்ச்சியடைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள்வது அவசியமாகிறது.   

சிறு கடைகள் டிஜிட்டல் முறையில் செயல்பட உதவும் நான்கு நிறுவனங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இந்நிறுவனங்கள் வாடிக்கையாளர் திருப்தியடையும் நிலையை மேம்படுத்தி சிறு கடைகள் தொடர்ந்து வளர்ச்சியடைவதை உறுதிசெய்கிறது.

1

PayNearby

PayNearby இந்தியாவின் முன்னணி ஹைப்பர்லோக்கல் நிதி தொழில்நுட்ப நெட்வொர்க் Nearby Technologies நிறுவனத்தின் ஒரு பிரிவாகும். இந்நிறுவனம் வங்கிச் சேவைகள் பெறாத பிரிவினருக்கு நிதி மற்றும் நிதி சாராத சேவைகளை வழங்குகிறது.


PayNearby சில்லறை வர்த்தகர்கள் மூலம் ஆதார் சார்ந்த வங்கிச் சேவைகள், வங்கி சேமிப்பு, பில் கட்டணங்கள், கார்டு கட்டணங்கள், காப்பீட்டு சேவைகள் போன்ற டிஜிட்டல் சேவைகளை உள்ளூர் சமூகங்களுக்கு வழங்கி உதவுகிறது. இந்நிறுவனம் செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், மேம்பட்ட அனாலிடிக்ஸ் ஆகியவற்றைக் கொண்டு விரைவான, எளிமையான, தடையற்ற மைக்ரோ அனுபவங்களை உருவாக்கி ’டிஜிட்டல் பிரதான்ஸ்’ என்றழைக்கப்படும் உள்ளூர் சில்லறை வர்த்தகர்கள் மூலம் இத்தகைய சேவையளிக்கிறது.


PayNearby ஒவ்வொரு மாதமும் இந்தியாவின் 115 ஆஸ்பிரேஷனல் மாவட்டங்களில் சராசரியாக 3.5 மில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெற உதவுகிறது. இந்நிறுவனம் சிறு கடைகளுக்கும் உள்ளூர் சமூகத்திற்கும் டிஜிட்டல் ரீதியாக சக்தியளிப்பதுடன் நிதி சார்ந்த உள்ளடக்கிய நிலையை ஏற்படுத்தவும் இந்தியாவின் சமூக பொருளாதார சூழல் மாறுவதற்கும் உந்துதலளிக்கிறது.

ரிலையன்ஸ் ரீடெயில்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் ரிலையன்ஸ் ரீடெயில் பிரிவு அதன் புதிய வணிக நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அமைப்புசாரா சில்லறை வர்த்தக சந்தையை மாற்றும் நோக்கத்துடன் சிறு கடைகளை டிஜிட்டல்மயமாக்கும் திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது.


ரிலையன்ஸ் ரீடெயில் செயற்கை நுண்ணறிவு, இயந்திரக்கற்றல், ஐஓடி, க்ளௌட் கம்ப்யூடிங் ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த உள்ளூர் சில்லறை வர்த்தகர்களுக்கு முழுமையான டிஜிட்டல் மற்றும் நேரடி விநியோக சேவையை வழங்குகிறது. இதனால் பெரு நிறுவனங்கள் மற்றும் மின்வணிக நிறுவனங்கள் போன்றே இந்த சிறு கடைகளும் சிறப்பிக்க உதவுகிறது. வர்த்தகர்கள், நுகர்வோர், உற்பத்தியாளர்கள் ஆகியோரை இந்த டிஜிட்டல் தளத்தில் ஒருங்கிணைக்கிறது.


அத்துடன் டிஜிட்டல் முறையையும் உள்ளடக்கிய வளர்ச்சியையும் ஊக்குவித்து இந்தியாவில் சில்லறை வர்த்தக பிரிவில் மிகச்சிறிய அளவில் செயல்படும் வணிகங்களும் பயனடையவேண்டும் என்பதே ரிலையன்ஸ் ரீடெயில் நோக்கமாகும்.

METRO Cash and Carry India

METRO Cash and Carry மெட்ரோ நிறுவனத்தின் மொத்த விற்பனைப் பிரிவாகும். ஜெர்மனியைச் சேர்ந்த மெட்ரோ நிறுவனம், மொத்தவிற்பனை மற்றும் உணவு சில்லறை வர்த்தகத்தில் சர்வதேச அளவில் முன்னணி வகிக்கிறது. இதன் இந்திய நிறுவனம், நிதிதொழில்நுட்ப ஸ்டார்ட் அப் ePayLater உடன் இணைந்து செயலி ஒன்றை சமீபத்தில் உருவாக்கியுள்ளது.


’டிஜிட்டல் ஷாப்’ என்றழைக்கப்படும் இந்தச் செயலியை சாதனத்தில் இணைத்துக்கொள்ள கூடுதல் முதலீடு ஏதும் தேவையில்லை. சிறு கடைகளின் உரிமையாளர்கள் வணிக நடவடிக்கைள் அனைத்தையும் உடனடியாக டிஜிட்டல்மயமாக்க இந்தச் செயலி உதவுகிறது. மெட்ரோவில் இருந்து வழக்கமாக பொருட்களை வாங்கும் சில்லறை வர்த்தகர்கள் சரக்குகளை ஆர்டர் செய்யவும், டிஜிட்டல் கட்டண சேவையை பெற்றுக்கொள்ளவும், சரக்கிருப்பை நிர்வகிக்கவும், விற்பனையை கண்காணிக்கவும் உதவுகிறது.


ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களின் தனித்தேவைக்கேற்ப பொருட்களை செயலியில் ஆர்டர் செய்யவும் கடன் வசதியில் உடனடியாக பொருட்களை வாங்கிக்கொள்ளவும் அந்தப் பகுதியின் சில்லறை வர்த்தகர்களுக்கு மெட்ரோ கேஷ் அண்ட் கேரி உதவுகிறது. சில்லறை வர்த்தகர்கள் எளிதாக க்ளிக் செய்து வட்டியில்லா வணிக கடன் வசதி பெறவும் உதவுகிறது. டிஜிட்டல் ஷாப் நாடு முழுவதும் உள்ள சிறு கடைகளின் வணிக வளர்ச்சிக்கும் லாபத்திற்கும் தேவையான டிஜிட்டல் தீர்வுகளை குறைந்த விலையில் வழங்கி உதவுகிறது.

Shopmatic

சிங்கப்பூரைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான Shopmatic சிறு வணிகங்களுக்கும் தொழில்முனைவோருக்கும் மின்வணிக தீர்வுகளை வழங்குகிறது. இந்நிறுவனம் தொழில்முனைவில் ஈடுபட விரும்பும் மில்லியன் கணக்கானோர் டிஜிட்டலில் செயல்பட உதவவேண்டும் என்கிற நோக்கத்துடன் 2014-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.


சில்லறை வர்த்தக மேலாண்மை தீர்வுகளை வழங்கும் சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனமான Octapus உடன் இந்நிறுவனம் சமீபத்தில் இணைந்துள்ளது. ஆஃப்லைனில் செயல்படும் வணிகங்கள் ஆன்லைனிற்கு மாறுவதில் காணப்படும் இடைவெளியை நிரப்பும் வகையில் பல்வேறு சேவைகளை வழங்கி ஆசிய பசிபிக் சில்லறை வர்த்தக சந்தையில் புதுமை படைக்கவேண்டும் என்பதே Octapus உடன் இணைந்ததன் நோக்கம். இந்த இணைப்பு உள்ளூர் சில்லறை வர்த்தகர்கள் தங்களது வணிகத்தை ஆன்லைனில் நிறுவிய பிறகு பல்வேறு வகைகளில் சிறப்பிக்க உதவுகிறது.


இந்த உள்ளூர் சில்லறை வர்த்தகக் கடைகள் முழுமையான ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சுற்றுச்சூழலுடன் இயங்குவதால் தற்போது வாடிக்கையாளர்களை சிறப்பாக நிர்வகித்தல், செயல்பாட்டு செலவுகளைக் குறைத்தல், புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக்கொள்ளுதல், லாயல்டி புள்ளிகளை வழங்குதல் உள்ளிட்டவை சாத்தியமாகியுள்ளது. இத்தகைய வசதிகளுடன் நிகழ்நேரத்தில் விற்பனை குறித்தும் ஊழியர்கள் செயல்திறன் குறித்தும் பார்வையிடும் வசதியும் இணைந்திருப்பதால் சில்லறை வர்த்தகர்கள் தங்களது வணிகத்தில் திறம்பட வளர்ச்சியடையமுடியும்.


ஆங்கில கட்டுரையாளர்: பலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா


  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India