கம்ப்யூட்டர் பெண்கள் 11 - விண்கல மென்பொருள் பொறியியலை உருவாக்கிய ‘மார்கரெட் ஹாமில்டன்’
நிலவுக்கு மனிதர்களை அழைத்துச்சென்ற அப்பல்லோ விண்கல கம்ப்யூட்டரை இயக்கிய கம்ப்யூட்டரின் மென்பொருளை உருவாக்கி, மென்பொருள் பொறியியல் எனும் தனித்துறை உருவாக காரணமாக இருந்த முன்னோடி.
1969ல் நிலவுக்கு மனிதர்களைக் கொண்டு சென்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய அப்பல்லோ 11 விண்கலம், மனித குலத்திற்கு மகத்தான பாய்ச்சலாக அமைந்ததோடு, கம்ப்யூட்டர் வரலாற்றிலும் பெரும் பாய்ச்சலாக அமைந்தது.
ஏனெனில், அப்பல்லோ விண்கலம் சிக்கல் இல்லாமல் விண்ணுக்கு சென்று மீண்டும் பத்திரமாக பூமிக்கு திரும்ப வழிகாட்டியது அதிலிருந்த ‘அப்பல்லோ கெய்டன்ஸ் கம்ப்யூட்டர்’ (Apollo Guidance Computer) தான்.
அப்பல்லோ கம்ப்யூட்டர் ஒரு பொறியியல் சாதனை மட்டும் அல்ல அதன் மென்பொருளும் மாபெரும் சாதனையாகவே அமைந்திருந்தது. விண்வெளி பயணங்களைத் திட்டமிட்டு மேற்கொள்ள சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர்களே வழிகாட்டுகின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல் தான். இதில் ஆச்சர்யம் கொள்ள எதுவுமில்லை.
ஆனால், 1969ல் அப்பலோ விண்கலத்தை நிலவுக்குக் கொண்டு செல்ல திட்டமிடப்பட்ட போது, முதல் முறையாக விண்கலத்தில் கம்ப்யூட்டர் பொருத்தப்பட வேண்டியிருந்தது. இதற்கான முன்னுதாரணம் இல்லை என்பது மட்டும் அல்ல, அந்த காலகட்டம் வரை கம்ப்யூட்டர்கள் அளவில் பெரியதாகவே இருந்தன.
டிஜிட்டல் கம்ப்யூட்டர்கள் அப்போது தான் அளவில் சுருங்கத் துவங்கியிருந்தாலும், விண்கலத்தில் பொருந்தக்கூடிய அளவில் கம்ப்யூட்டரை உருவாக்குவது என்பது பொறியியல் நோக்கில் சவாலாகவே இருந்தது.
கம்ப்யூட்டர் வன்பொருள் சவால் ஒரு பக்கம் என்றால், கம்ப்யூட்டருக்கான மென்பொருள் விஷயத்திலும் அதுவரை தனியே கவனம் செலுத்தப்படவில்லை. மனிதர்களை நிலவுக்கு கொண்டு சென்று திரும்பிய விண்கலத்தை அதற்கேற்ப சரியாக இயக்க வேண்டும் எனில், மென்பொருள் துணை தேவை என்று முதல் முறையாக உணரப்பட்டது.
மென்பொருள் குழு
இந்த மென்பொருள் அமைப்பை உருவாக்கும் குழுவுக்கு தலைமையேற்றிருந்த சாதனை பெண்மணி மார்கரெட் ஹாமில்டன் (MARGARET HAMILTON) பற்றி தான் இப்போது பார்க்கப்போகிறோம். கம்ப்யூட்டர் செயல்பாட்டில் வன்பொருள் உருவாக்கத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை மென்பொருள் ஆக்கத்திற்கும் கொடுக்க வேண்டும் என்பதை முதலில் உணர்த்திய ஹாமில்டனே, மென்பொருள் பொறியியல் எனும் தனிப்பிரிவு உருவாவததற்கான முக்கியக் காரணமாக அமைகிறார்.
அப்போல்லோ விண்கல திட்டத்திற்கும் முன்னும் சரி, பின்னும் சரி ஹாமில்டனின் மென்பொருள் பங்களிப்பு முக்கியமாகவே அமைந்திருப்பது கம்ப்யூட்டர் வரலாற்றில் அவரது இடம் எத்தனை தனித்துவமானது என்பதை உணர்த்துகிறது.
மார்கரெட் ஹாமில்டன் அமெரிக்காவின் இந்தியானாவில் 1936ல் பிறந்து வளர்ந்தார். அதன் பிறகு அவரது குடும்பம் மிச்சிகன் நகரத்திற்கு குடிபெயர அங்கு பள்ளி கல்வியையும், உயர் கல்வி பயின்றார். பின்னர், பிறந்த ஊரான இந்தியானாவில் இருந்த எர்ல்காம் கல்லூரியில் கணித பாடத்தில் பட்டம் பெற்றவர், அரூப கணிதத்தில் ஆர்வமும், ஆற்றலும் கொண்டிருந்தார்.
கல்லூரி காலம்
கல்லூரி நாட்களில் அறிமுகம் ஆகியிருந்த ஜேம்ஸ் காக்ஸ் ஹாமில்டன் என்பவரை 1958ல் திருமணம் செய்து கொண்ட மார்கரெட் கணவருடன் பாஸ்டன் நகருக்கு குடி பெயர்ந்தார். ஓராண்டில் குழந்தை பிறந்த நிலையில் மார்கரெட் குடும்பத்தை கவனித்துக்கொள்ள பள்ளி ஆசிரியராக பணியாற்றினார். கணவர் ஹாவர்டு சட்டக்கல்லூரியில் படிக்க விரும்பினார்.
இந்த பின்னணியில் தான், மார்கரெட்டிற்கு எம்.ஐ.டி பல்கலைக்கழக்கத்தில் பேராசிரியர் எட்வர்ட் லாரன்ஸ் உதவியாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. மார்கரெட் வாழ்க்கையில் திரும்பு முனையாக இது அமைந்தது. பேராசிரியர் லாரன்ஸ் கியாஸ் கோட்பாட்டை உருவாக்கிய மேதை என்பது மட்டும் அல்ல, கம்ப்யூட்டர் ஆய்விலும் முன்னோடியாக இருந்தார். கம்ப்யூட்டர் கொண்டு வானிலை கணிப்பை மேற்கொள்ளும் ஆய்வை மேற்கொண்டிருந்தார்.
பேராசிரியர் வழிகாட்டி
பேராசிரியர் லாரன்ஸ் கீழ் பணியாற்றிய போது தான் மார்கரெட்டிற்கு கம்ப்யூட்டர்கள் அறிமுகம் ஆயின. கம்ப்யூட்டர் நுணுக்கங்கள், புரோகிராமிங் விஷயங்களை பயிற்றுவிக்க அப்போது தனித்துறைகள் உருவாக்கப்பட்டாத நிலையில், மார்கரெட் போன்றவர்கள் பணியின் போதே கம்ப்யூட்டர் நுணுக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அடுத்ததாக மார்கரெட் எம்.ஐ.டி லிங்கன் ஆய்வகத்தில் எதிரி விமானங்களை கண்டறிவதற்கான ஆய்வு திட்டத்தில் கம்ப்யூட்டர்களுடன் பணியாற்றினார்.
இதனிடையே, எம்.ஐ.டி இன்ஸ்ட்ருமண்டேஷன் ஆய்வகம் சார்பில் வெளியான விளம்பரம் ஒன்றை மார்கரெட்டிற்கு அவரது கணவர் சுட்டிக்காட்டினார். நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் பணியாற்ற பெண் கணித பட்டதாரிகள் தேவை என அந்த விளம்பரம் அழைப்பு விடுத்திருந்தது. அப்பல்லோ விண்கலத்தில் பொருத்தப்பட வேண்டிய கம்ப்யூட்டரை உருவாக்கித்தரும் ஒப்பந்தம் பெற்றிருந்த ஆய்வுகூடத்திடம் அதற்கான மென்பொருள் அமைப்பை உருவாக்கித்தரும் பணியும் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பை பார்த்ததும் ஈர்க்கப்பட்ட மார்கரெட் இந்த பணிக்காக விண்ணப்பித்தார். ஏற்கனவே அவர் பணியாற்றிய இடங்களில் எல்லாம், மற்றவர்களுக்கு குழப்பத்தை அளிக்கும் புரோகிராமிங் செயல்களுக்கு விடை காண்பதில் வல்லவராக அறியப்பட்ட மார்கரெட் இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டதில் வியப்பில்லை. அப்பல்லோ கம்ப்யூட்டர் திட்டத்தில் முதல் புரோகிராமராக இணைந்தார்.
அப்பல்லோ திட்டத்தில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான பொறியாளர்கள் இருந்தாலும், மென்பொருள் பக்கம் யாரும் வரவில்லை. அவர்களில் பெரும்பாலானோர் மென்பொருளை முக்கியமாகவும் நினைக்கவில்லை. ஆனால், அப்பல்லோ திட்டம் முன்னேறிய போது, விண்கலத்தை வெற்றிகரமாக இயக்குவதில் மென்பொருளே முக்கியமாக விளங்கும் என்பது எல்லோருக்கும் புரியத்துவங்கியது. இதை முதலில் புரிந்த கொண்டவர்களில் ஒருவராக மார்கரெட் இருந்தார்.
விண்கலத் திட்டம்
விண்கல திட்டத்தில் மொத்தம் இரண்டு கம்ப்யூட்டர்கள் இருந்தன. ஏவுவாகனமாக கொலம்பியாவில் ஒரு கம்ப்யூட்டரும் நிலவுக்கு சென்ற ஈகிள் விண்கலத்தில் இன்னொரு கம்ப்யூட்டரும் இருந்தது. நிலவு பயணத்தின் மையமாக இந்த கம்ப்யூட்டரே அமைந்தது.
நிலவுக்கான பயணம் மற்ற பயணங்கள் போல் அல்ல. விண்வெளியில் விண்கலத்தை இயக்குவதற்கு சிக்கலான கணக்குகளுக்கு தெளிவாக விடை காண வேண்டியிருந்தது. அதைவிட முக்கியமாக, நிலவு பயணம் என்பது நிலையான இலக்கை நோக்கிய பயணமாக அல்லாமல், சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு இலக்கை நோக்கிச் செல்ல வேண்டிய பயணமாக அமைந்தது.
எனவே, நியூட்டன் விதிகளை மனதில் கொண்டு நிலவுக்கு செல்லும் பாதையை அந்த பயணத்தின் போக்கிலேயே கணக்கிட்டு அதற்கேற்ப விண்கலத்தை செலுத்த வேண்டியது அவசியமானது.
பறந்து கொண்டே கணக்கு போடும் இந்த பணியை நிச்சயம் மனிதர்களிடம் ஒப்படக்க்க முடியாது என்றே கம்ப்யூட்டர் இதற்காக தயார் செய்யப்பட்டது. இதற்கேற்ற கம்ப்யூட்டரை உருவாக்கிக் கொண்டிருந்த போது தான் அந்த கம்ப்யூட்டரை இயக்குவதற்கான மென்பொருள் இன்னும் முக்கியம் என உணரப்பட்டது. இதற்கான பணிக்கு தான் மார்கரெட் தலைமையேற்று வழி நடத்தினார்.
அந்த குழுவில் நூறுக்கும் மேல் பொறியாளர்கள் பணியாற்றினர். அவர்கள் பணியை நம்பி தான் விண்வெளி வீரர்களின் உயிர் இருந்தது. எனவே, பயணத்திற்கான பாதை கணக்கிடுவதில் எள்ளலவும் பிழைக்கு இடமில்லாமல் இருந்தது. இந்த கணக்குகளை போடும் கம்ப்யூட்டர் துல்லியமாக இயங்க வேண்டும். விண்வெளியில் எதிர்பாரா பிரச்சனை உண்டானாலும் சமாளித்து செயல்படும் ஆற்றலை மென்பொருள் கொண்டிருக்க வேண்டும். இந்த சவாலுக்கு மார்கரெட் திறமை ஈடு கொடுத்தது.
நிரல் சாதனை
அந்த காலகட்டத்தில் கம்ப்யூட்டர்களுக்கான நிரலை கைகளால் தான் எழுத வேண்டியிருந்தது. பன்ச் கார்டு என சொல்லப்படும் துளை அட்டை முறையில் கை வலிக்க நிரல்களை பதிவு செய்ய வேண்டியிருந்தது. இப்போது உள்ளது போல கம்ப்யூட்டரில் மானிட்டர் போன்ற வசதி கிடையாது. மேலும், கம்ப்யூட்டருக்கான சேமிப்புத்திறனும் சொற்பமாகவே இருந்தது. இந்த திறனும் நவீன டிஸ்க் வடிவில் அல்லாமல், கயிறு வடிவில் இருந்தது என்பதை நம்புவதற்கு கடினமாக இருக்கலாம்.
ஆம், அப்பல்லோ கம்ப்யூட்டருக்கான நினைவுத்திறன் கம்பிகளைன் பின்னல்களாக கயிறு வடிவில் உருவாக்கப்பட்டது. இந்த கயிற்றில் சுற்றப்பட்ட கம்பிகள் ஒரு திசையில் டிஜிட்டல் இலக்கமான பூஜ்ஜியத்தையும், அதற்கு மறு திசையில் டிஜிட்டல் இலக்கமான ஒன்றையும் குறித்தது. துளை அட்டை நிரல்களின் படி, இந்த கம்பி கயிற்றை பிசிறில்லாமல் அமைக்கும் பணி பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதையும் மார்கரெட் தான் வழிநடத்தினார். இதற்காக அவர் கயிற்று அம்மா (Rope Mother) எனும் பட்டப்பெயரையும் பெற்றார்.
இந்த கயிறு வடிவிலான கம்பிகள் கொண்டு சென்ற பைனரி தகவல்களை துல்லியமாக பதிவு செய்வதும் அவசியமாக இருந்தது. அப்போது தான் நிரல்களின் பணி என்ன என்பதை அறிய முடியும். நிரல்களின் ஒவ்வொரு பகுதியில் கம்பிகளில் எதை குறிக்கிறது என்பதை காகிதங்களில் விரிவாக பதிவு செய்யும் பொறுப்பையும் மார்க்ரெட் ஏற்றிருந்தார். இப்படி உருவாக்கிய ஆளுயர நிரல் புத்தக அடுக்குகள் அருகே அவர் நிற்கும் புகைப்படம் அவரது சாதனைக்கு சாட்சியாக அமைகிறது.
ஒரு மென்பொருளாளருக்குத் தேவையான நுட்பமும் தொலைநோக்கும் மாரகெட்டிடம் இருந்தது. இதற்கு முன், ராணுவ ஆய்வு திட்டத்தில் பணியாற்றிய போது, கம்ப்யூட்டர் இயங்கும் ஒலியை கொண்டு மென்பொருளில் உள்ள பிழைகளை கண்டறியலாம் என அவர் கண்டறிந்திருந்தார். இது போலவே, அப்பல்லோ விண்கல திட்டத்திலும் பிழை கண்டறிதலை தற்செயலாகக் கண்டறிந்தார்.
பிழை அறிதல்
இந்தத் திட்டத்தில் பணியாற்றிய போது இளம் தாயாக இருந்த மார்கரெட் வார இறுதி நாட்களில் தனது மகளை வேலை செய்யும் இடத்திற்கு அழைத்து வரும் வழக்கம் கொண்டிருந்தார். ஒரு முறை அவரது மகள் கம்ப்யூட்டரில் விளையாடிக்கொண்டிருந்த போது, அதன் நினைவுத்திறன் பாதிக்கப்பட்டு சேமிக்கப்பட்டிருந்த தரவுகள் அழிக்கப்பட்டன. இதே போன்ற பிழை விண்கல பயணத்தின் போது ஏற்பட்டால் என்னாவது என மார்கரெட்டை இந்த சம்பவம் யோசிக்க வைத்தது.
இதே போன்ற பிழை விண்வெளிப் பயணத்தில் ஏற்பட்டால் அதை மென்பொருள் சமாளிக்கும் வகையில் இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தவர், இத்தகைய எதிர்பாரா சிக்கல்களை எதிர்கொள்ளும் ஆற்றலுடன் மென்பொருள் இருக்க வேண்டும் என்றும் தீர்மானித்தார். அதற்கேற்ப மென்பொருளில் கூடுதலாக பிழை சமாளிப்பு நிரலை சேர்த்தார்.
திட்டமிட்டபடி 1969 ஆகஸ்டு மாதம் விண்வெளிக்கு சென்ற அப்பல்லோ விண்கலம், நிலவில் தரையிறங்குவதற்கு முன், எதிர்பாராதவிதமாக பிழை செய்தியை எதிர்கொண்டது.
அப்பல்லோ கம்ப்யூட்டரில் பிழை செய்தி தோன்றவே விண்வெளி வீரர்களுக்கும் பூமியில் இருந்த கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை.
சரித்திர பயணத்தை துணிந்து மேற்கொள்வதா அல்லது விண்வெளி வீரர்கள் உயிரை காக்க திரும்பி அழைப்பதா என குழம்பித்தவித்தனர். முடிவெடுக்க அதிக நேரமும் இல்லை. ஆனால், இது போன்ற நேரங்களில் செயல்படக்கூடிய வகையில் தான் மென்பொருளை மார்கரெட் உருவாக்கியிருந்தார்.
பச்சைக்கொடி
வன்பொருளில் ஏற்பட்ட கோளாறை எதிர்கொண்டு முக்கியப் பணியை மேற்கொள்ள தயார் படுத்திக்கொள்ளும் வகையிலேயே மென்பொருள் அந்த பிழை செய்தியை வெளிப்படுத்தியது. இதைப் புரிந்து கொண்ட மார்கரெட் பயணத்திற்கு பச்சைக்கொடி காட்டி தலையசைக்க நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் மனித காலை பதித்து சாதனை படைத்தார். இதை சாதிக்க காரணமான மென்பொருள் அமைப்பை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்த சாதனை பெண்மணியாக மார்கரெட் திகழ்கிறார்.
அப்பல்லோ விண்கலத் திட்டத்தில் பணியாற்றிய போது, பொறியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மென்பொருளாளருக்கு அளிக்கப்படதாதல் அதிருப்தி அடைந்த மார்கரெட், இதுவும் பொறியியல் தான் என்பதை உரத்த குரலில் வலியுறுத்திக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் தலைமை பொறியாளரும் இதை உண்மை தான் என ஏற்றுக்கொண்டார். இதனையடுத்தே மென்பொருள் பொறியாளர் என மென்பொருளாளர்களை குறிப்பிடும் வழக்கம் உண்டானது.
மார்கரெட்டின் சாதனைக்குப் பிறகே கம்ப்யூட்டர் துறையில் மென்பொருளுக்கான இடத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டது. அந்த வகையில் மென்பொருள் பொறியியல் எனும் தனித்துறை உருவாக காரணமானவராகவும் மார்கரெட்டை கருதலாம். அப்பல்லோ விண்கல சாதனைக்குப்பிறகு, 1972 வரை ஆறு விண்வெளி பயணத் திட்டங்களில் முக்கியப் பங்காற்றிய மார்கரெட் பின்னர் தானே சொந்தமாக மென்பொருள் நிறுவனத்தையும் உருவாக்கினார்.
நிலவு திட்டத்திற்கான பங்களிப்பிற்காக அதிபர் பதக்கம் பெற்ற மார்கரெட் மென்பொருள் துறையில் சாதிக்க விரும்பும் பெண்களுக்கான முன்னுதாரணமாக திகழ்கிறார்.