கம்ப்யூட்டர் பெண்கள் 18 - கம்ப்யூட்டர் டேட்டிங்கை அறிமுகம் செய்த ஜோன் பால்!
ஜோன் பால் மென்பொருள் உருவாக்கத்தில் சாதனை படைக்கவில்லை, புரோகிராமிங் மொழி எதையும் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், கம்ப்யூட்டரின் பொது பயன்பாட்டிற்கான முக்கிய அம்சத்தை உணர்த்திய முன்னோடிகளில் ஒருவராக திகழ்கிறார்.
இணைய டேட்டிங்கை பெண்களுக்கு பாதுகாப்பானதாக மாற்றும் வகையில் பெண்களே முதல் நகர்வை மேற்கொள்ள வழி செய்யும் 'பம்பிள்' (Bumble) டேட்டிங் செயலியை உருவாக்கியது விட்னி வோல்பே (Whitney Wolfe Herd) எனும் பெண் தான் என்பது தற்செயலானது இல்லை.
பெண்களுக்கு ஏற்படும் இடர்களை ஒரு பெண்ணால் நன்றாக புரிந்து கொண்டு செயல்பட முடியும் என்பது இயல்பானது என்பதோடு, வரலாற்று நோக்கில் பார்த்தாலும், டேட்டிங் செயலியின் பரிணாம வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாக அமையும் பம்பிள் செயலியை ஒரு பெண் உருவாக்க நேர்ந்ததன் சிறப்பை புரிந்து கொள்ளலாம். ஏனெனில், கம்ப்யூட்டர் டேட்டிங்கை அறிமுகம் செய்தவரும் ஒரு பெண் தான்.
ஆம் கம்ப்யூட்டர் டேட்டிங் சேவை மூலம் கம்ப்யூட்டரின் பொது பயன்பாட்டிற்கான அம்சத்தை முதன் முதலில் உணர்த்திய முன்னோடிகளில் ஒருவராக திகழும் 'ஜோன் பால்' (Joan Ball) பற்றி தான் இந்த வாரம் பார்க்க இருக்கிறோம்.
ஜோன் பால் மென்பொருள் சாதனையாளரோ அல்லது, புரோகிராமிங் மொழி உருவாக்கத்தில் சாதனை படைத்தவரோ அல்ல என்றாலும், நடைமுறை வாழ்க்கையில் கம்ப்யூட்டரின் பயன்பாட்டை உணர்த்தும் வகையில் செயல்பட்டதில் முன்னோடியாக விளங்குகிறார்.
டேட்டிங் சேவைக்கு கம்ப்யூட்டரை பயன்படுத்தலாம் எனும் அவரது சிந்தனையோ இன்றைய பல நூறு கோடி இணைய டேட்டிங் சந்தைக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தது.
கம்ப்யூட்டர் டேட்டிங் முன்னோடி என்பது மட்டும் அல்ல, ஜோன் பால் பற்றி கவனிக்க வேண்டிய விஷயம். கம்ப்யூட்டர் வரலாற்றில் பெண்களின் பங்களிப்பு மறக்கப்பட்டது அல்லது மறைக்கப்பட்டது பல முறை நிகழ்ந்திருப்பது போல, கம்ப்யூட்டர் டேட்டிங் வரலாற்றிலும், ஜோனின் பெயர் பெரும்பாலும் விடுபட்டதாகவே இருப்பதாலும் அவரது கதை முக்கியத்துவம் பெறுகிறது.
வரலாற்றுப் பிழை
இணைய டேட்டிங்கிற்கு முன்னோட்டமாக அமைந்த கம்ப்யூட்டர் டேட்டிங்கின் வரலாறு பற்றி பேசும் போது, ஹார்வர்டு மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஆப்பரேஷன் மேட்ச் (Operation Match) எனும் சேவையே முதல் கம்ப்யூட்டர் டேட்டிங் சேவையாக பெரும்பாலும் குறிப்பிடப்படுகிறது.
ஆனால், 1965ம் ஆண்டு இந்த சேவை அறிமுகம் ஆவதற்கு ஒராண்டுக்கு முன்னதாகவே பிரிட்டனைச் சேர்ந்த ஜோன் பால் டேட்டிங் சேவையில் கம்ப்யூட்டரை பயன்படுத்த துவங்கியிருந்தார். டேட்டிங் சேவையின் எதிர்காலம் கம்ப்யூட்டர் சார்ந்தே அமைய போகிறது எனும் அவரது புரிதலை அந்த காலகட்டத்தில் தொலைநோக்கு மிக்கது என்றே கருத வேண்டும்.
கம்ப்யூட்டர் சார்ந்த டேட்டிங் சேவையை அறிமுகம் செய்தவர் என்ற போதிலும், ஜோன் பால் தனி வாழ்க்கையில் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது வாழ்க்கை முரண்களில் ஒன்றாக அமைகிறது. ஒருவிதத்தில் அவரது தனி வாழ்க்கை சோகமானது என்றாலும், கம்ப்யூட்டர் துறையில் அவரது பங்களிப்பு என்பது சிறப்பானதாகவே அமைகிறது.
ஜோன், 1934ல் பெரிய குடும்பத்தில் ஆறாவது குழந்தையாக பிறந்தவர். ஜோனின் குடும்பம் ஏழைத் தொழிலாளர் குடும்பம் என்பதால், அவர் வேண்டாத பிள்ளையாகவே இருந்தார். சிறு வயதில் அம்மாவால் கைவிடப்படும் சோதனைக்கும் அவர் உள்ளானார். மேலும், இரண்டாம் உலகப்போரின் போது தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக வெளியேற்றப்பட்டவர் தனக்கு அடைக்கலம் கொடுத்த குடும்பம் ஒன்றால் பாலியல் நோக்கிலும் மோசமாக நடத்தப்பட்டார்.
கற்றல் குறைபாடு
அவரது கதையை மேலும் சோகமாக்கும் வகையில், கற்றல் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், இதை 39 வயதிலேயே அறிந்து கொள்ள நேர்ந்தது அவரது இளமை பருவத்தை மேலும் சோதனையாக்கியது. இடைப்பட்ட காலத்தில் மற்றவர்களின் கேலிக்கு உள்ளாகும் கோமாளியாக தன்னை மாற்றிக்கொள்வதை அவர் தனக்கான மன அழுத்த விடுபடல் வழியாக கடைப்பிடித்திருக்கிறார். கற்றல் குறைபாடு காரணமாக, அவரது பள்ளி இறுதி ஆண்டுகள் மேலும் சோதனையாக அமைந்தன.
வாழ்க்கையின் தொடர் சோதனைகளால் தற்கொலை முயற்சிக்கு தள்ளப்பட்ட ஜோன், 1953ல் மருத்துவமனை சிகிச்சைக்குப்பிறகு தனது அத்தை மற்றும் மாமாவுடன் வசிக்கத்துவங்கினார். அப்போது அவருக்கு 19 வயது. இந்த காலத்தில் தான் அவருக்கு நிறுவனம் ஒன்றில் முதல் வேலை கிடைத்தது.
பின்னர், ஜவுளிக் கடை ஒன்றில் வேலை செய்தார். பேஷன் உலகில் அவருக்கு ஆர்வம் இருந்தாலும், ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய துறையில் வடிவமைப்பு போன்ற விரும்பிய வேலை தனக்குக் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெர்கெர்டெக்ஸ் எனும் லண்டனின் முன்னணி பேஷன் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர் 1961ல் அந்த வேலையை விட்டுவிட்டு, தானே சொந்தமாக துணிக்கடை ஒன்றை துவக்க தீர்மானித்தார். இந்த பணி தாமதமாகவே இடைப்பட்ட காலத்தில் திருமண தகவல் சேவை நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார்.
இந்த பணியின் போது தான், மனிதர்களை இணைத்து வைக்கும் கலை தனக்கு இயல்பாக வந்திருப்பதை உணர்ந்தார். திருமணத்திற்கான பொருத்தம் பார்க்கும் போது, ஒருவர் மற்றவரிடம் இருந்து எதிர்பார்க்கும் அம்சங்களைவிட, மற்றவர்களிடம் இருக்கக் கூடாது என ஒருவர் கருதும் அம்சங்களே முக்கியம் என அவர் நினைத்தார்.
இதன் அடிப்படையில் திருமண பொருத்த சேவையை வழங்குவதற்காக திருமண தகவல் நிறுவனத்தை சொந்தமாக துவக்கவும் தீர்மானித்தார். 1962ல் ’ஈராஸ் பிரெண்ட்ஷிப் பிரோ’ (Eros Friendship Bureau) எனும் பெயரில் திருமண தகவல் மையத்தை துவக்கினார்.
திருமண சேவை
ஜோனின் திருமண சேவை வர்த்தகம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த காலத்தில் திருமண தகவல் சேவை தொடர்பாக நிலவிய எதிர்மறையான கருத்தை மீறி, ஜோன் நிறுவனம் மெல்ல வளர்ந்தது. குறிப்பாக விவகாரத்து பெற்றவர்கள் மற்றும் தனிமையில் இருந்தவர்கள் அவரது சேவையை அதிகம் நாடினர்.
1960-கள், டிஜிட்டல் கம்ப்யூட்டர்கள் ஆய்வுக்கூடங்களில் இருந்து பொது பயன்பாட்டிற்கு வரத்துவங்கிய காலகட்டம். எனினும் கம்ப்யூட்டர்கள் கல்வி நிறுவன ஆய்வகங்களிலும், அரசு அலுவலகங்கள் மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்களில் மட்டுமே கம்ப்யூட்டர் பயன்படுத்தப்படும் நிலை இருந்தது.
கம்ப்யூட்டரின் விலை அதிகம் என்பது இதற்கு ஒரு காரணம் என்றாலும், கம்ப்யூட்டர் எனும் அதி வேக கணக்கு இயந்திரத்தின் பயன்பாடு குறித்த பரவலான விழிப்புணர்வும் ஏற்படாமல் இருந்ததும் மற்றொரு முக்கியக் காரணம்.
பெரும்பாலானோருக்கு கம்ப்யூட்டர் எனும் இயந்திரம் புரியாத புதிராக இருந்த நிலையில், ஒரு சிலர் தான் காலத்தை மீறிய சிந்தனையோடு கம்ப்யூட்டரின் நடைமுறை பயன்பாடு குறித்து யோசித்துக்கொண்டிருந்தனர். ஜோன் பாலும் இவர்களில் ஒருவராக இருந்தார்.
திருமணப் பொருத்தம் பார்க்கும் சேவையை கம்ப்யூட்டர் உதவியுடன் மேற்கொள்ள முடியும் என அவர் கருதினர். இதை செயல்படுத்தியும் காட்டினார். (இந்த காலகட்டத்தில், ஸ்வீடன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில், விருந்து நிகழ்ச்சிகளில் கம்ப்யூட்டர் மூலம் பெயர் பட்டியல் பெற்று நடனமாடுவதற்கான சகாக்கள் தேர்வு செய்யப்படும் வழக்கம் இருந்தது. இந்த சேவை தொடர்பான செய்திகள் ஜோனுக்கு ஊக்கமாக அமைந்ததாக கருதலாம்).
கம்ப்யூட்டர் பொருத்தம்
திருமணம் நாடுபவர்களின் தகவல்கள் கம்ப்யூட்டரில் உள்ளீடு செய்யப்பட்ட நிலையில், பொருத்தம் நாடி வருபவர்களிடம் குறிப்பிட்ட கேள்விகளைக் கேட்டு அவற்றுக்கான பதில்கள் அடிப்படையில், கம்ப்யூட்டர் தனது பட்டியலில் இருந்து பொருத்தமான பரிந்துரையை செய்யும் வகையில் அவர் ஏற்பாடு செய்திருந்தார்.
நேரப் பகிர்வு அடிப்படையில் செயல்பட்ட பெரிய கம்ப்யூட்டரில் பஞ்ச் கார்டு முறையில் தேவையாக தகவல்களை உள்ளீடு செய்து, அவற்றின் அடிப்படையில் பொருத்தமான தேர்வை கம்ப்யூட்டர் வழங்கியது. பின்னர், இதற்கான மேம்பட்ட் அல்கோரிதமையும் உருவாக்கினார்.
கம்ப்யூட்டர் சார்ந்த இந்த பொருத்தம் பார்க்கும் சேவை நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து நிறுவனத்தின் பெயரை செயிண்ட் ஜேம்ஸ் கம்ப்யூட்டர் டேட்டிங் சர்வீஸ் என்றும் பின்னர் கம்- பேட் என்று சுருக்கமாகவும் மாற்றினார். இந்நிறுவனமே கம்ப்யூட்டர் டேட்டிங் சேவைக்கான முன்னோடியாக அமைந்தது. 1970ல் நிறுவன சேவையின் இரண்டாம் மேம்பட்ட வடிவத்தையும் அறிமுகம் செய்தார்.
வர்த்தக வளர்ச்சி
திருமண தகவல் சேவைக்கு கம்ப்யூட்டரை பயன்படுத்துவது புதுமையாக அமைந்தாலும், பொதுவாகவே டேட்டிங் சேவை மீது அவநம்பிக்கையும், சந்தேகமும் இருந்தன. டேட்டிங் சேவை தொடர்பாக தவறான புரிதலும் இருந்தது. இந்த தடைகளை வெல்ல விளம்பரத்தின் உதவி தேவை என்பதை ஜோன் உணர்ந்திருந்தார்.
ஆனால், அந்த காலத்தில் டேட்டிங் விளம்பரங்களை வெளியிடவும் ஊடகங்கள் தயக்கம் காட்டின. இந்த காலகட்டத்தில் தான், பிரிட்டனில் துவங்கப்பட்ட போட்டி ஊடகமான பைரட் பாப் வானொலியில் ஜோன் தனது நிறுவனத்தை விளம்பரம் செய்தார்.
தொடர்ந்து விளம்பரங்கள் மூலம் நிறுவனம் வளர்ந்த நிலையில், எதிர்பாராத சோதனைகளால் ஜோனின் நிறுவனம் பாதிப்புக்குள்ளானது, இதனிடையே, டேட்லைன் எனும் போட்டி நிறுவனமும் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது. ஒரு கட்டத்தில் ஜோன் போட்டி நிறுவனத்திடமே தனது நிறுவனத்தை விற்று வெளியேறினார்.
அவரது தனி வாழ்க்கை சோகமாகவே தொடர்ந்தது. 1960-களில் அறிமுகமான ஆண் நண்பரோடு அவர் வாழ்ந்து வந்தாலும், (இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை), பிற்காலத்தில் மனக்கசப்பு ஏற்பட்டு அவரிடமும் இருந்தும் பிரிந்து விட்டார்.
ஜோனின் தனி வாழ்க்கை சவால்களை மீறி, கம்ப்யூட்டரை டேட்டிங் சேவைக்கு பயன்படுத்தலாம் எனும் அவரது எண்ணமே இணைய டேட்டிங் எனும் வருவாய் கொழிக்கும் துறைக்கு வித்திட்டது.
தொடரும்...