வீட்டிலே கல்யாணமா? டெக்கரேஷன்+ மேக்அப் + போட்டோ: புதிய ஐடியா வகுத்த தொழில் முனைவர்!
கொரோனா ஊரடங்கால், திருமண ஆர்டர்கள் கேன்சல் ஆக, சென்னை போட்டோகிராபர் சரவணவேல் யோசித்த புது ஐடியா ஹிட் ஆகத் தொடங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் வந்தது முதல் எல்லாமே மாறி போச்சு. லாக்டவுன் என்ற ஒரு புது சொல் பிரபலமானது. ஒரு ஊரையே வீட்டுக்குள் அடைத்துவிடமுடியும் என்று நாம் கனவிலும் நினைத்திருக்க மாட்டோம். ஆனால் உலகையே ஒரு கைப்பார்க்கும் இந்த கொரோனா மக்களின் வாழ்வியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
அப்படித்தான் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒரு துறையாக திருமணம் மற்றும் அதைச் சார்ந்துள்ள துறைகளும் இன்று உள்ளது. இந்தியாவில் கல்யாணம் என்றாலே அது பிரம்மாண்டத்தின் அர்த்தம். ஏழை, பணக்காரர் என எவராக இருந்தாலும், தங்கள் வீட்டுத் திருமணத்தை மட்டும் தங்களின் பொருளாதார நிலைக்கு ஒரு படி மேலே போய் ஆடம்பரமாக செய்வதை கடமையாகவே எண்ணுவர். இதுவே இந்தியர்களின் பழக்கமாகவும் ஆகிப்போனது.
மார்ச் மாதம் தொடங்கிய லாக்டவுனால், நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் பல நின்று போனது. மண்டபத்தில் இல்லாமல் கல்யாணத்தை எப்படி, எங்கே செய்வது என்று ஒன்றும் புரியாமல் திணறிப்போனர் பெற்றோர்கள். ஒரு சிலர் மட்டும், குறிக்கப்பட்ட தேதியில் திருமணத்தை முடிக்க அரசு கூறிய விதிமுறைகளுக்கு உட்பட்டு வீட்டிலேயே சிறியதாக சடங்கினை முடித்தனர். வேறு என்ன வழி இருந்தது?
இப்படியே ஏப்ரல், மே, ஜூன் என மாதங்கள் செல்ல திருமணங்கள் வெறும் 50 பேருடன் மட்டுமே நடத்த அரசு அனுமதித்தது. அது தற்போதும் தொடர்கிறது. இந்த நிலையில் மண்டபத்தில் வைத்து திருமணங்களை நடத்த பலர் இன்னும் தயக்கம் காட்டி வீட்டிலேயே, உறவினர் சூழ குறைந்த நபர்களோடு திருமணத்தை நடத்தத் தொடங்கி விட்டனர்.
ஆனால் வாழ்நாளில் ஒரே ஒரு நாள் நடைப்பெறும் இந்த நிகழ்வு, வீட்டில் சாதாரணமாக நடந்தால் அதன் நினைவுகளை திரும்பிப் பார்க்கையில் சுவாரசியமாக இருக்காதே, அதனால் திருமண வீட்டை கோலாகலமாகக் காட்சி அளிக்கவைத்து, அதை நன்கு அலங்கரித்து, சடங்குகளை போட்டோ எடுத்தால் அது மணமக்கள் வீட்டாருக்கு சற்று ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தருமே என்று எண்ணிய புகைப்படக்கலைஞர் மற்றும் தொழில் முனைவர் சரவணவேல், ஒரு புதிய ஐடியாவை ரெடி செய்தார்.
அது என்ன ஐடியா?
சரவணவேல், துபாயில் ஒரு பிரிண்டிங் கம்பெனியில் மேனேஜராக இருந்து, அப்படியே ஆர்வத்தில் போட்டோகிராபியை கற்றுக் கொண்டு தேர்ந்த போட்டோகிராபர் ஆனார். வேலையை விடாமல் அப்படியே 10 ஆண்டுகள் பார்ட் டைம் ஆக புகைப்படக் கலைஞராக பணியும் ஆற்றியுள்ளார்.
அதன்பிறகு ஒருநாள் வேலையை விட்டுவிட்டு தாயகம் திரும்பிய சரவணவேல், சென்னையில் 2018ல் ஸ்டுடியோ ஒன்றை தொடங்கி தொழில்முனைவில் இறங்கினார். இது பற்றி அவர் நம்மிடம் விவரிக்கையில்,
“ஆரம்பிக்கும் பொழுதே வழக்கமான ஒரு ஸ்டுடியோ போல் இருக்கக் கூடாது என்று infinity wall செட்டப் எல்லாம் செய்து, 2 ஆயிரம் சதுர அடியில் பெரிய அளவில் thei2studio.com ஸ்டுடியோவை ஆரம்பித்தேன். எதிர்ப்பார்த்ததைவிட நன்றாக போனது,” என்றார்.
இப்படி 2 ஆண்டுகள் ஓட, திடீரென வந்தது கொரோனா, அதைத்தொடர்ந்து லாக்டவுன். முஹூர்த்த தினங்கள் தவிர போட்டோகிராபர்கள் மற்ற நாட்களில், பர்த்டே பார்டி, வளைகாப்பு, நிச்சயதார்த்தம் என சிறு நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பணியாற்றி வருடம் முழுவதும் பிசியாக இருப்பர். ஆனால் லாக்டவுன் அறிவித்த ஏப்ரல், மே மாதம் ஒன்றுமே செய்யமுடியாமால் போகும் நிலைக்கு சென்றது.
“லாக்டவுன் ஆரம்பித்த முதல் நாள் முதல் கடைசி நாள் வரை 4 பர்த்டே ஆர்டர், 3 நிச்சயதார்த்தம், 6 கல்யாண ஆர்டர்கள் கேன்சல் ஆனது. அட்வான்ஸ் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டனர், ஸ்டுடியோ வாடகை கொடுக்கவேண்டும், இப்படி பல சிக்கல்களை சந்தித்தேன். ஒரு கட்டத்தில் மாதம் 2 லட்சம் சம்பளத்தைவிட்டு வந்து தொழில் தொடங்கியது தவறோ என்றுகூட சிந்தித்தேன். நண்பர்களின் உதவியால் ஒரு வழியாக எப்படியோ சமாளித்தேன்,” என்றார் சரவணவேல்.
சரி, இப்படியே இருந்தால் ஒன்றும் செய்யமுடியாது என்று தீவிரமாக யோசித்த அவர், ஜூன் மாதம் வீட்டிலேயே எளிமையாக நடைப்பெற்ற ஒரு கல்யாணத்துக்கு போட்டோ எடுக்கச் சென்றபோது அவருக்குக் காத்திருந்தது அதிர்ச்சி.
பொதுவாக திருமணம் போன்ற நிகழ்ச்சியை போட்டோ எடுக்கும்போது, அந்த இடத்தில் உள்ள அலங்காரம், மற்றும் இதர விஷயங்கள் போட்டோவுக்கு கூடுதல் அழகையும், பிரம்மாண்டத்தையும் கொடுக்கும். ஆனால், அவர் சென்ற திருமண வீட்டில் குறைந்த அளவு மாலை மற்றும் பூ அலங்காரம் மட்டுமே இருந்துள்ளது.
“எந்த அலங்காரமும் இல்லை, எங்க போய் டெக்கரேஷனுக்கு ஆள் பிடிப்பதுனு தெரில, வாங்கிட்டு வந்து அலங்காரம் செய்யவும் எங்களால முடியலனு பெண்ணின் அப்பா கூறினார். அப்போதான் எனக்கு அந்த ஐடியா தோணிச்சு. எங்கேயும் அலையாமல் இதை நாமளே செய்தால் என்ன? இதில் சுயநலம் இல்லாமல் இல்லை, அலங்காரம் நல்லா இருந்தா போட்டோவும் நல்லா வரும். நாமளே இதை இனி செய்துவிடுவோம், என முடிவெடுத்தார்.”
வீட்டிலேயே நிச்சயதார்தம் & கல்யாணமா? டெக்கரேசன் + போட்டோகிராப்பி & வீடியோகிராப்பி நாங்களே பாத்துக்கறோம்...
காலத்துக்கு ஏற்றார் போல, பிசினசில் சில மாற்றங்கள், கூடுதல் சேவைகளை தருவதால் வேலையும் கிடைக்கும், ஓரளவு வருவாயும் நிலைத்திருக்கும் என்பார்கள். அதைத்தான் சரவணவேல் செய்தார். போட்டோகிராபராக மட்டும் இருந்தால் இன்னும் சில மாதங்களுக்கு கஷ்டமாகத் தான் இருக்கப்போகிறது என்று உணர்ந்த அவர், இந்த புதிய சேவைகளை தரத் தொடங்கினார்.
“அலங்காரம், மற்றும் பொருட்களுக்கு ஈவெண்ட் கம்பெனியுடன் சேர்ந்து செய்தால், அவர்கள் அதில் அதிக மார்ஜின் வைத்தால் பட்ஜெட் கூடிவிடும். அதில் எனக்கும் பயனில்லை, திருமண வீட்டாருக்கும் செலவு அதிகம். அதனால், நானே அத்துறையில் உள்ள சிலரை என்னுடன் இணைத்துக் கொண்டு டெக்கரேஷன் செய்ய ஆரம்பித்தேன்.”
இவருடைய நண்பர்கள் பலரும், திருமண கேட்டரிங்கு செய்துவிடு என ஆலோசனை கூரியுள்ளனர். ஆனால் அதில் அதிக வேலை, அதோடு தரமான உணவு தர அனுபவமும் தேவை என்பதால் இது மட்டும் போதும் என முடிவெடுத்துள்ளார்.
டெக்கரேஷன் வேலை திருமண நிகழ்வுக்கு முன்பே முடிந்துவிடும். டென்ஷன் ஏதும் இல்லாமல் போட்டோ, வீடியோ வேலைகளை பார்க்கமுடிகிறது என்கிறார் சரவணவேல்.
“என்னோட மெயின் வேலை ஃபோட்டோகிராஃப்பி, அதுக்கு சிக்கல் வராம, டெக்கரேஷன், மேக்கப் மற்றும் போட்டோ, வீடியோ எல்லாம் இப்போ நாங்களே பாத்துக்கறோம்.”
சரி ஐடியாவ எப்படி விளம்பரப்படுத்தலாம்னு யோசிச்சு, அதை ட்விட்டர், ஃபேஸ்புக்கில் போட்டேன், நல்ல ரெஸ்பான்ஸ், நிறைய என்கொயரி வந்தது என்றார் மகிழ்ச்சியுடன்.
திருமணம் என்றாலே பிரம்மாண்டம், அது சிம்பிளாக நடுத்துவதை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள்?
திருமணம் என்றால் பிரம்மாண்டம் என்பது சமீபகாலமாகதான் ஆனது. ஆனால் கல்யாணம் என்பது சொந்தபந்தங்கள் அனைவரும் ஒன்று சேரும், வீட்டுக்குள் நடக்குமொரு திருவிழா.
“இப்போ இருவீட்டார் மொத்தமா சேர்த்தே 50 பேர் தான் கலந்துக்க முடியும். முகத்தில் மாஸ்க், கையில் சானிட்டைசர் என மாறிவிட்டது. வீட்டு பெரியவர்களால் இதை ஏற்றுக் கொள்ளமுடிவதில்லை. பல சொந்தங்களால் வரமுடியவில்லையே என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது. இதுதான் கொரோனாவுடன் வாழும் முறை.”
அவரைப் பொறுத்தவரை போட்டோ, வீடியோ பணியில் இடர்பாடில்லை என்கிறார்.
கூட்டத்தை லைவில் படம் பிடித்த நாங்கள், இப்போது எடுக்கும் வீடியோவை லைவில் ஸ்ட்ரீம் செய்து தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம். அது தான் சேஞ்ச்...” என்றார்.
அலங்காரம், மேக் அப், போட்டோ
ஃபோட்டோகிராஃப்பி, டெக்கரேஷன், மேக்கப் மூன்றுக்கும் சேர்த்து 70 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை சார்ஜ் செய்கிறார்கள்.
திருமணம் வீட்டில் எளிமையாக நடந்தாலும், சில வருடங்களுக்குப் பிறகு போட்டோ ஆல்பத்தை பார்க்கும் போது, ஒரு குறையும் தெரியக் கூடாது என்று நினைக்கிறோம். மண்டப அளவு இல்லை என்றாலும், ஓரளவு டெக்கரேஷன் செய்து அதை அழகாக படம் பிடித்து மனநிறைவாக பணி செய்கிறோம்,” என்கிறார் சரவணவேல்.
திருமணம் மட்டும் தான் எளிமை மற்றப்படி, பொருட்கள், போட்டோக்கு தேவையான ப்ர்ண்டிங், ஆல்பம் விலை எல்லாம் அதே போல் தான் உள்ளதால், எப்பொழுதும் வாங்கும் அதே கட்டணம் தான் விதிக்கமுடியும். சிலர் விலையை குறைக்கக் கேட்டாலும், ஒரு தரமான ஆல்பம் போடவே 8-10 ஆயிரம் ஆகிவிடும் என்பதை சொல்லி புரிய வைப்பது சவாலாக இருப்பதாக பகிர்கிறார்.
இப்போ 6 திருமணங்களுக்கு புக் ஆகி இவர் பிசியாக வேலையில் இறங்கியுள்ளார். அப்படியே அவர் சொல்வது,
“பிசினஸ் என்றாலே சவால் தானே. இதுபோல் பல புதிய பிரச்சனைகள் வரும், காலத்துக்கு ஏற்றார் போல் மாறிக்கவேண்டியதுதான். அப்படி மாறினால் தான் தாக்குப்பிடிக்க முடியும்.”
வலைதளம்: http://thei2studio.com