கொரோனா அச்சமா? வீட்டிலிருந்தே ஆன்லைனில் மருத்துவ ஆலோசனை பெற உதவும் தளங்கள்!
வீட்டுக்குள் இருக்கும் உங்களுக்கு உடல் உபாதை மற்றும் மருத்துவ உதவி தேவைப்பட்டால் இந்த 7 ஆன்லைன் மருத்துவ தளம் மற்றும் ஆப் மூலம் டாக்டர்களிடம் ஆலோசனைப் பெறலாம்.
கோவிட்– 19 வைரஸ் பரவல் இந்தியாவில் 3வது கட்டத்தில் இருக்கிறது. இந்த காலக் கட்டத்திலேயே உலக நாடுகளில் மிக வேகமாக கொரோனா நோய் பரவி இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த சரியான மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் சுய தனிமைப்படுத்தலும், சுய சுகாதாரமும் மட்டுமே நோய் பரவலைத் தடுக்கும் என்று மருத்துவத் துறை தொடர்ந்து அறிவுறுத்துகிறது.
பொதுஇடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் விதமாக நாடு முழுவதும் ‘மக்கள் ஊரடங்கை’ பிரதமர் அறிவித்திருக்கிறார். எப்போதும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருப்பவர்கள் குடும்பத்துடனும் நேரம் செலவிட வேண்டும் என்பதற்காக இயற்கையே இந்த வாய்ப்பை தந்திருக்கிறது.
வைரஸை தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள வீட்டிலேயே இருந்தாலும் அவசர மருத்துவ உதவிக்கு என்ன செய்வது என்ற ஐயம் இருக்கும். கவலையே வேண்டாம் வளர்ந்து விட்ட டெலிமெடிசின் துறை அதற்கு கை கொடுக்கிறது. ஸ்மார்ட் ஃபோன் மூலம் வீட்டில் இருந்தபடியே மருத்துவ ஆலோசனை பெற உதவும் செயலிகள் எவை என பார்க்கலாம்.
1. லிபரேட் (Lybrate)
டெல்லியை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் டெல்லிவாசிகளுக்கு தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் இருக்கும் மருத்துவகர்களை அடையாளப்படுத்துகிறது. 2013ம் ஆண்டில் ராகுல் நரங்கால் தொடங்கப்பட்ட லிபரேட் மருத்துவர்களையும் நோயாளிகளையும் இணைக்கும் பாலமாக செயல்படுகிறது. பல்வேறு துறைகளில் பிரதிநிதித்துவம் பெற்ற 1,00,000 மருத்துவர்களின் சேவையை தொலைபேசி மூலமோ அல்லது ஆலோசனை நேரமோ வாங்கிக் கொண்டு மருத்துவ ஆலோசனையை பெறலாம் வலைதளம்: Lybrate
2. பிராக்டோ (Practo)
10 ஆண்டுகளாக ஆன்லைன் மருத்துவச் சேவையை வழங்கி வருகிறது பிராக்டோ. பெங்களூரை அடிப்படையாகக் கொண்ட டெக் மருத்துவ நிறுவனமான பிராக்டோ இந்தியாவின் முக்கிய நகரங்கள் மட்டுமின்றி சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் மற்றும் பிரேசிலிலும் செயல்படுகிறது. கொரோனா வைரஸ் அப்டேட்கள் மற்றும் பாதுகாப்பிற்காக செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை அனைத்தையும் பிராக்டோ செயலியை பதிவிறக்கம் செய்தோ அல்லது www.practo.com என்ற இணையதள பக்கத்திலோ அறிந்து கொள்ளலாம். கொரோனா அறிகுறிகள் இருப்பதாக சந்தேகித்தால் பதற்றமடையாமல் வீட்டில் இருந்தபடியே 1 மணி நேரத்தில் மருத்துவரின் ஆலோசனையை வீடியோ கால் மூலம் பெறலாம்.
3. டாக்ஸ்ஆப் (DocsApp)
பொது மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம் உள்பட பல்வேறு மருத்துவச் சிகிச்சைகளுக்காக நாட்டின் முன்னணி மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் ஆலோசனையை ஆன்லைனில் பெற வழி வகுக்கிறது டாக்ஸ்ஆப். நோயாளியின் விவரங்களை இணையதள பக்கத்திலோ https://www.docsapp.in/ அல்லது ஸ்மார்ட் போன்களில் செயலியை பதிவிறக்கம் செய்தோ ஆலோசனைக்கான நேரம் பதிவு செய்து வீட்டிலிருந்தபடியே மருத்துவச் சேவையைப் பெறலாம். கட்டணங்களையும் ஆன்லைனிலேயே எளிய முறையில் செலுத்த முடியும்.
4. கன்சல்ட் செயலி (Konsult)
டெல்லியை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த செயலி போன் மூலம் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற உதவுகிறது. நேரில் சென்று மருத்துவ ஆலோசனை பெற முடியாதவர்கள் குறிப்பாக முதியவர்களுக்கான சிகிச்சைகளில் உடனுக்குடன் ஆலோசனைகளை பெற மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்க உதவுகிறது இந்த செயலி.
செயலி டவுன்லோட் செய்ய: konsult app
5. டாக்டர்இன்ஸ்டா.காம் (Doctor Insta)
குர்கானில் இருந்து செயல்படும் ‘வீடியோ மெடிசின்’ தளமான Doctor Insta-வில் அழைப்பு, வீடியோ மற்றும் சாட்டிங்க மூலம் டாக்டர்களின் மருத்துவ ஆலோசனையைப் பெறலாம். டாக்டர்இன்ஸ்டா செயலியை பதிவிறக்கம் செய்தும், https://www.doctorinsta.com/ இணையதள பக்கத்திலும் மருத்துவ ஆலோசனைக்கான உதவிகளைப் பெறலாம்.
6. ஐகிளினிக் (icliniq)
தமிழகத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இணைய வழி மருத்துவச் சேவை நிறுவனம் ஐகிளினிக். மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு 3 விதங்களில் ஆலோசனைகளை வழங்குகிறது. உடல் நலத்தில் இருக்கும் பிரச்சனையை கேள்வியாக அனுப்பி மருத்துவரின் பதிலைப் பெறுவது, மருத்துவருடன் தொலைப்பேசியில் ஆலோசனைக் கேட்பது, 3வது வீடியோ கால் மூலம் மருத்துவரை நேரடியாக பார்த்து பேசும் வாய்ப்பைத் தருவது என பல சேவைகளை வழங்குகிறது இந்த கோவையைச் சேர்ந்த நிறுவனம். கோவிட் 19 பற்றி சந்தேகங்களுக்கு மருத்துவர்களின் ஆலோசனையைப்பெற 24*7 மருத்துவர்களை ஆன்லைனில் தொடர்பு கொண்டு ஐயங்களைப் போக்கிக் கொள்ளவும் இந்தத் தளம் ஏற்பாடு செய்துள்ளது.
வலைதளம்: icliniq
7. டாக்ஸ்ட்ரோ செயலி (Doxtro)
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டாக்ஸ்ட்ரோ டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் (www.doxtro.com) நிறுவனத்தின் அறிமுகம் இந்த டாக்ஸ்ட்ரோ செயலி. 24*7 ஆன்லைனில் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற இவர்களின் செயலி உதவுகிறது. ஆன்ட்ராய்டு, ஆப்பிள், ஐ-போன் பயன்படுத்துபவர்களா நீங்கள் அப்படின்னா தாராளமா doxtro செயலியை பயன்படுத்த முடியும்.
கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டாக்ஸ்ட்ரோ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொது மருத்துவர், சைக்காலஜி மருத்துவர், இதய நோய் சிகிச்சை மருத்துவர், மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறியல் மருத்துவர் என அத்தியாவசியமான 11 வகை சிறப்பு மருத்துவ நிபுணர்களிடம் ஆன்லைனில் ஆலோசனை கேட்டுப் பெறலாம்.