வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்கும் Education Apps!
கொரோனோ வைரஸின் தாக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுமே என கவலை வேண்டாம். இதோ வீட்டில் இருந்தே பாடங்கள் மற்றும் நுழைவுத்தேர்வுக்கு படிக்க உதவும் சில ஆப்ஸ்!
கொரோனோ வைரஸின் தாக்கத்தால் பல்வேறு நாடுகளில் வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பூங்காக்கள், மால்கள், திரையரங்குகள் மற்றும் மக்கள் கூடும் பகுதிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
குறிப்பாக பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுமே என்ற ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கவலையைப் போக்க Education ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தாமாக முன்வந்துள்ளன.
BYJU’S, Vedantu, Toppr, Lido போன்ற இந்த Education Apps மாணவர்கள் வீட்டில் இருந்தே தங்களது பாடங்களை படிக்கவும், தங்களது நுழைவுத் தேர்வுகளுக்குத் தயார் செய்யவும் உதவுகின்றன.
கொரோனோ வைரஸ் பரவலால் இந்தியா முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்றவை மூடப்பட்டு வருகின்றன. ஓர் கதவு மூடப்பட்டால் மற்றொரு கதவு திறக்கும் என்பதுபோல, இந்த மாணவர்களின் கல்விச் சிக்கலைத் தீர்க்க, மாணவர்களுக்கான கல்விச் சேவைகளை ஆன்லைனில் வழங்கிவரும் Education ஸ்டார்ட் அப்கள் களமிறங்கியுள்ளன.
பொதுவாக கொரானோ வைரஸ் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் விரைவாக பரவி விடும் என்பதாலும், பள்ளிகளும், கல்லூரிகளும் இந்த வைரஸ் பரவுவதற்கான அதிக வாய்ப்புள்ள இடங்கள் என்ற அச்சத்திலும் இந்தியாவில் பெங்களூரு, புது தில்லி, கேரளம், ஹைதராபாத், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் மறுஉத்தரவு வரும் வரை காலவரையின்றி மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி வளர்ச்சி பாதிக்கப்படுமே என பெற்றோர்களும், பள்ளிகளும் கவலையில் ஆழ்ந்த நேரத்தில், இவர்களின் மனத்துயரை போக்க இந்த கல்வி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
மாணவர்கள் தங்களின் கல்வி வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தடங்கலை சமரசம் செய்து கொள்ளாமல் வீட்டில் இருந்தபடியே தங்கள் பாடங்களைப் படிக்க இந்த இக்கட்டான காலகட்டத்தில் இவை உதவிக்கரம் நீட்டியுள்ளன.
BYJU’S, Vedantu, Toppr, Lido Learning போன்ற கல்விச் சேவை வழங்கும் நிறுவனங்கள் பல்வேறு ஆன்லைன் படிப்புகளை இலவசமாக வழங்குகின்றன.
கடந்த வாரம், யுனெஸ்கோ வெளியிட்ட அறிவிப்பின்படி 13 நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 290 மில்லியனுக்கும் அதிகமான பள்ளி செல்லும் குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.
"உடல்நலம் மற்றும் பிற நெருக்கடிகளின் விளைவாக தற்போது நிகழும் தற்காலிக பள்ளி மூடல்கள் புதியவை அல்ல என்றாலும், துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய கல்விச் சீர்குலைவின் உலகளாவிய அளவும், வேகமும் மிக அதிகமானது. இந்நிலை நீடித்தால் கல்வி உரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும்," என யுனெஸ்கோவின் இயக்குநர் ஜெனரல் ஆட்ரி கூறியுள்ளார்.
இந்தியாவில் 250 மில்லியன் பள்ளி செல்லும் மாணவர்களின் உடல்நலம் பாதுகாக்கப்படுவதுடன், அவர்களின் கல்வியும் தடைபடாமல் இருப்பதை உறுதி செய்வதும் மிகவும் அவசியமானது. இதுபோன்ற நேரங்களில் கற்றல் தளங்கள் மாணவர்களுக்குத் தரமான கல்வியை இணையம் மூலம் வழங்க உதவும் என யுனெஸ்கோ பரிந்துரைத்தது.
மார்ச், ஏப்ரல் மாதங்கள்தான் இந்தியா முழுவதும் ஆண்டுத் தேர்வுகள் நடைபெறும் காலக்கட்டம். இந்த நேரத்தில் பள்ளிகள் மூடப்படுவது மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மிகவும் பாதிக்கும். இதைக் கருத்தில் கொண்டு,
BYJU’S தனது கல்வித் தளத்தை 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள் ஏப்ரல் மாத இறுதி வரை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
தேர்வு நேரத்தின் கடுமையைக் கருத்தில் கொண்டு, கற்றல் திட்டத்துக்கான மாணவர்களின் தயாரிப்பை இதன் மூலம் தொடர முடியும் என உதவும் என BYJU’S நம்புகிறது. 1ஆம் வகுப்பு முதல் 3ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கணித மற்றும் ஆங்கில பாடங்களையும், 4ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் BYJU இன் மூலம் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களையும் கற்றுக்கொள்ளலாம்.
இதேபோல மும்பையைச் சேர்ந்த டாப்பர் (Toppr) கல்வித் தளம் 5ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தங்கள் நிறுவனத்தின் கல்விச் சேவைகளை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து டாப்பரின் தலைமை நிர்வாக அதிகாரியும், இணை நிறுவனருமான ஜிஷான் ஹயாத் கூறுகையில்,
“இது தவிர, எங்கள் வீடியோ வகுப்புகள் எப்போதும் இலவசமாக இணையத்தில் கிடைக்கும். கல்விச் சேவையில் ஏற்பட்டுள்ள இந்த எதிர்பாராத சூழ்நிலையை நாம் விரைவில் சமாளிப்போம் என்று நம்புகிறோம். இதற்கிடையே, மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே பாதுகாப்பாக தங்கள் கல்வியைத் தொடர எங்கள் வலைத்தளத்துக்குள் நுழையலாம்."
எங்கள் தளத்தில் மாணவர்களுக்கான கேள்விகள், பதில்கள், கருத்துகள், பயிற்சி சோதனைகள் மற்றும் வீடியோக்கள் உள்ளன. மேலும், ஐ.ஐ.டி., ஜே.இ.இ.,போன்ற போட்டி நுழைவுத் தேர்வுகளுக்கும் இது மாணவர்களைத் தயார்படுத்துகிறது.
Vedantu போன்ற தொடக்க நிலை கல்விச் சேவை வழங்கும் நிறுவனங்கள் பள்ளிகளையும், பெற்றோர்களையும் இப்பணியில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளன. நேரடி மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் தளமான வேதந்து பெங்களூரு, புது தில்லி, கேரளா, ஹைதராபாத் ஆகிய மாநிலங்களில் உள்ள பள்ளிகளோடு கைகோர்த்துக் கொண்டு மாணவர்களுக்கு தடையின்றி வகுப்புகளை வழங்குகிறது.
இதுகுறித்து வேதந்து நிறுவனத்தின் இணை நிறுவனர் வம்சி கிருஷ்ணா கூறும்போது,
“பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்படும் போது கல்வித் தேவைகள், தொடர்ச்சி மற்றும் கற்றல் நிறுத்தப்படாது என்பதை நாங்கள் உறுதி செய்வோம். நாங்கள் முழு கற்றலையும் நேரடி மற்றும் ஆன்லைனில் வழங்குகிறோம், இது வீட்டிலிருந்து எளிதாக செய்ய முடியும் மற்றும் தனிப்பட்ட தொடர்பை உள்ளடக்கியது. ஆசிரியர்கள் ஆன்லைன் தொழில்நுட்பத் தளத்துடன் பயிற்சியளிப்பதை நாங்கள் உறுதிபடுத்துகிறோம்,” என்கிறார்.
”பெங்களூரை தளமாகக் கொண்ட edtech ஸ்டார்ட் அப் கல்வித் தளமானது 6 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கான கல்விச் சேவைகளையும், JEE மற்றும் NEET போன்ற போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளையும் வழங்குகிறது என்பதே இதன் சிறப்பம்சமாகும்.
இந்த தளமானது மாணவர்கள் பயிலும் பள்ளிகளின் அதே மாணவர்களுக்கு அறிமுகமான அவர்களின் சொந்தப் பள்ளி ஆசிரியர்களைப் பயன்படுத்தி, வேதந்துவின் தனிப்பயனாக்கப்பட்ட தளத்தைப் பயன்படுத்தி வகுப்புகளை வழங்கி வருகிறது. இது ஏற்கெனவே அங்குள்ள பாடத் தொகுப்பையோ அல்லது தங்களின் சொந்த தயாரிப்பையோ ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கிறது.
மாணவர்களுக்கு உதவுவதற்காக, மும்பையைச் சேர்ந்த லிடோ ‘Lido' கற்றல் App மாணவர்களுக்கான ஆன்லைன் படிப்புகளுக்கான இலவசs சோதனைக் காலத்தை ஒரு வாரம் முதல் 14 நாள்கள் வரை நீட்டித்துள்ளது.
இதுகுறித்து இதன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சாஹில் ஷெத் கூறும்போது,
“பள்ளிகளை மூடுவதற்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் நிம்மதியை குலைத்துவிட்டன. இருப்பினும், ஒரு குழந்தையின் கல்வி பாதிக்கப்பட வேண்டியதில்லை என்பதால், ஆன்லைன் பயிற்சி தளங்கள் மற்றும் ஆன்லைன் ஆசிரியர்கள் மாணவர்கள் தங்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக தங்கி கல்வி பயில உதவும் என நம்புகிறார்."
இது மாணவர்கள் திறம்பட கற்றுக்கொள்ள உதவுவது மட்டுமல்லாமல், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டுப் பள்ளியில் கல்வி பயில அழுத்தம் கொடுக்க உதவுகிறது," என்று சாஹில் கூறுகிறார்.
ஆங்கிலத்தில் அபூர்வா | தமிழில் திவ்யாதரன்