வாழைத்தண்டு பயன்படுத்தி சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் தம்பதி!
இதுவரை இவர்கள் 50ஆயிரம் பேட்கள் விற்பனை செய்துள்ளனர். அதன் விலை எவ்வளவு தெரியுமா?
இந்தியாவில், குறிப்பாக கிராமப்புறங்களில் மாதவிடாய் சுகாதாரம் என்பது முக்கியப் பிரச்சனையாகவே இருந்து வருகிறது. அதேபோல் சானிட்டரி பேட்களை அப்புறப்படுத்துவது தொடர்பான சுற்றுச்சூழல் பிரச்சனைகளும் இருந்து வருகிறது.
இந்த இரண்டு சிக்கல்களுக்கும் ஒருசேர தீர்வுகாண முற்பட்டுள்ளனர் குஜராத்தைச் சேர்ந்த தம்பதியான சிராக் மற்றும் ஹேத்தல் விராணி. இவர்கள் வாழைத்தண்டைப் பயன்படுத்தி மக்கும்தன்மை கொண்ட சானிட்டரி பேட்களைத் தயாரிக்கின்றனர்.
இந்தத் தம்பதி 2017ம் ஆண்டு ஸ்பார்கிள் (Sparkle) என்கிற பிராண்டின்கீழ் சுற்றுச்சூழலுக்கு உகந்த சானிட்டரி பேட்களைத் தயாரிக்கத் தொடங்கினர். இந்த பேட்கள் மக்களை எளிதாகச் சென்றடையவேண்டும் என்பதற்காக ‘Buy One, Give One’ என்கிற முயற்சியின்கீழ் ஒவ்வொரு நாப்கின் வாங்கும்போதும் ஒரு சானிட்டரி நேப்கினை இந்த ஸ்டார்ட் அப் நன்கொடையாக வழங்குவதாக The Burnin தெரிவிக்கிறது.
இந்த பேட் ஒன்றின் அதிகபட்ச விலை 23.50 ரூபாய். ஆனால் அதிக வாடிக்கையாளர்க்ளை சென்றடையவேண்டும் என்பதற்காக 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தி ஒரு பேடை 9.99 ரூபாய் என்கிற விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை இந்தத் தம்பதி 50,000 பேட் வரை விற்பனை செய்துள்ளனர். இவை வாழைத்தண்டு கொண்டு தயாரிக்கப்படுவதால் இந்த பேட்கள் 140 நாட்களுக்குள் மக்கிவிடுகிறது. சிராக் என்டிடிவி உடனான உரையாடலில் கூறும்போது,
“நாங்கள் புதுமையான தயாரிப்பை உருவாக்க ‘மேக் இன் இந்தியா’, ‘தூய்மை இந்தியா திட்டம்’ போன்ற திட்டங்கள் உந்துதலளித்தது. 64 மில்லியன் டன் வாழைத் தண்டு வேளாண் கழிவுகளை சானிட்டரி பேட், குழந்தைகளுக்கான டயாப்பர், அலங்கார மென்பூச்சு (veneer), காகித கரன்சி நோட்டு, ஆர்கானிக் உரம் போன்றவையாக மாற்றும் திறன் கொண்டுள்ளோம்.
இந்தியாவில் ஓராண்டிற்கு சுமார் ஒரு மில்லியன் டன் சானிட்டரி நாப்கின் கழிவுகள் நிலத்தில் கொட்டப்படாமல் இந்த புதுமையான முயற்சி தடுக்கிறது. விரைவில் உலகளவில் சானிட்டரி பேட் தயாரிப்பில் பிளாஸ்டிக் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட்டு அதற்கான மாற்றாக வாழை இழைகள் பயன்படுத்தப்படும் என்று நம்புகிறோம்,” என்றார்.
இத்தகைய சானிட்டர் நாப்கின்களை இவர்கள் தயாரிக்க இவர்களது படிப்பும் பின்னணியும் உதவியது. மெக்கானிக்கல் பொறியியல் படித்த சிராக், சானிட்டரி நாப்கின் தயாரிப்பிற்கான இயந்திரத்தை உருவாக்கினார். ஹேத்தல் கணக்குப்பதிவியல் பின்னணி கொண்டிருப்பதால் குறைந்த விலையில் பேட்கள் தயாரிக்கப்படவும் சந்தைப்படுத்தப்படவும் உகந்த வகையில் விலை நிர்ணயம் செய்தார்.
இந்த ஸ்டார்ட் அப் மாதவிடாய் சுகாதாரம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த என்ஜிஓக்களுடனும் பள்ளிகளுடனும் இணைந்து செயல்படுகிறது.
கட்டுரை: THINK CHANGE INDIA