Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

25ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கப் போராடிய தம்பதியின் இன்றைய ஆண்டு வருவாய் ரூ.200 கோடி...

இன்றைய காலகட்டத்தில் சிறுவர், சிறுமியர், இளம் பருவத்தினர், நடுத்தர வயதினர், முதியோர் என அனைவருமே தங்களது வயதுக்கேற்றவாறு அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்தி தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

25ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கப் போராடிய தம்பதியின் இன்றைய ஆண்டு வருவாய் ரூ.200 கோடி...

Tuesday July 23, 2019 , 3 min Read

ஆள் பாதி, ஆடை பாதி என்பது பழமொழி. ஓர் மனிதனின் தரத்தை நிர்ணயிக்க இப்பழமொழி கூறப்பட்டது. ஆடையின் நேர்த்தி தையல்காரரின் கையில் உள்ளது. ஆனால் தன்னை நேர்த்தியாக காட்டுவது அவரவர் கையில்தானே உள்ளது. இதற்காகத்தான் ஆண், பெண் பாகுபாடின்றி அனைவரும் அழகு சாதனப் பொருட்களின் பின்னால் ஓடுகின்றனர்.


பொதுவாக அழகுச் சாதனப் பொருள்களைப் பயன்படுத்துவதில் பெண்களை மிஞ்ச முடியாது என்பது பொதுவான கருத்து. ஆனால் பெருகிவரும் நாகரீக மோகத்தில் ஆண்களும், பெண்களுக்கு இணையாக சிகை அலங்காரம், கலரிங், முகத்துக்கான கிரீம்கள் என தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் மிகவும் மெனக்கெடுகின்றனர் என்றால் அது மிகையல்ல.


முன்பெல்லாம் தலையில் எண்ணெய் வைத்து, முகத்துக்கு பவுடர் போடுவதற்குப் பெயர்தான் மேக்கப். ஆனால் இன்றோ முகத்துக்கு போட நூற்றுக்கணக்கான கிரீம்கள், ஆயில்கள், தலைக்கு வண்ணம் பூச, தலைமுடியை பராமரிக்க, முக அழகை பாதுகாக்க என அழகுச் சாதனப் பொருட்களுக்கு பஞ்சமேயில்லை.


லோரியல், ப்ரொக்டர் & கேம்பிள், யூனிலீவர், ரெவ்லான் இன்க் போன்ற பெரிய நிறுவனங்கள் அழகுச் சாதனப் பொருள்களின் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

Natures  essence

Nature's Essence உரிமையாளர்கள் ராஜ்குமார் நந்தா மற்றும் நீலம்

அதே நேரத்தில் பல சிறிய இந்திய பிராண்டுகளும் அழகுச் சாதனப் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் செழித்து வளர்ந்து வருவது கவனிக்கத்தக்கது. அழகு சாதனப் பொருள்களின் உலகளாவிய சந்தை 2023 ஆம் ஆண்டில் 805.61 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அனைத்து அழகுச் சாதனப் பொருள்களும் அனைவருக்கும் ஒத்து வராது. ஒவ்வொரு நபருக்கும் என சில தனிப்பட்ட பிராண்டுகள்தான் சரியாகவரும். தங்களுக்கு ஏற்ற இந்த அழகுச் சாதனப் பொருள்களைத் தேர்வு செய்ய நுகர்வோர்கள் மிகவும் மெனக்கெடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஒப்பனை பொருள்களுக்கான மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக இந்தியா உள்ளது. 2025ஆம் ஆண்டில் 20 பில்லியன் டாலராக அழகுச் சாதனப் பொருள்களின் சந்தை மதிப்பு உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


அழகுச் சாதனப் பொருள்கள் மற்றும் பிற தனிப்பட்ட பராமரிப்புப் பொருள்களின் வருடாந்திர சில்லறை விற்பனை ஆண்டுதோறும் 15 முதல் 20 சதவிகிதம் வரை வளர்ந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு வளர்ந்து வரும் அழகுச் சாதனப் பொருள்களின் தேவையை பூர்த்தி செய்ய, சந்தையில் ஏற்கெனவே உள்ள பெரிய நிறுவனங்களுடன் போட்டியிடும் உள்ளூர் பிராண்டுகளின் தரம் சற்றும் சோடை போவதில்லை என நிரூபித்துள்ளனர் இத்துறையில் சாதனை படைத்துள்ள ஓர் தம்பதி.


20 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்குமார் நந்தா, அவரது மனைவி நீலம் நந்தா ஆகியோர் தொடங்கிய ’Nature's Essence’ என்ற அழகுச் சாதனப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம், கடந்தாண்டு டெல்லியைத் தளமாகக் கொண்டு செயல்படும் சமாரா கேபிட்டல் நிறுவனத்தில் ரூ.200 கோடியை முதலீடு செய்து, பெரும்பான்மையான பங்குகளை வாங்கியதன் மூலம் தாங்களும் சர்வதேச நிறுவனங்களுக்கு இணையானவர்கள் என நிரூபித்துள்ளனர்.

beauty

courtesy - shutterstock

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது,

“ஒன்பது மீட்டர் இட அளவில் நாங்கள் எங்கள் தொழிலைத் தொடங்கினோம். நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு கண்காட்சிகளில் நாங்கள் எங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்தோம். தற்போது, எங்கள் நிறுவன மேலாளர்கள் பேருந்து அல்லது ரயில் பயணத்துக்கு பதிலாக விமானத்தில் பயணிக்கத் தொடங்கியபோதுதான், நாங்களும் சர்வதேச தரத்திலான நிறுவனமாக வளர்ந்துவிட்டதை உணர்ந்தோம்,” என்கிறார் நீலம். ​​

நாடு முழுவதும் பல்வேறு கண்காட்சிகள் மூலம் தொடர்ந்து விற்பனை செய்வதைத் தவிர, Nature's Essence தயாரிப்புகள் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களிலும், 40,000 பகுதி விற்பனை நிலையங்களிலும் விநியோகஸ்தர்கள் மூலம் விற்கப்படுகின்றன.


நிறுவனத்தின் அறிக்கையின்படி, ரூ.150 கோடிக்கு அழகுச் சாதனப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், இது ஆண்டுக்கு 15 சதவீதமாக வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது, Nature's Essence நிறுவனத்தின் 4 உற்பத்தி பிரிவுகளில் சுமார் 1,500 பேர் பணிபுரிகின்றனர்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இத்தொழிலைத் தொடங்கியபோது ​​ரூ. 25,000 வருவாய் கிடைக்குமா என்று ஏங்கியதுண்டு. ஆனால் இன்று நிறுவனத்தின் ஆண்டு வருவாய் ரூ.200 கோடி என பெருமையுடன் நீலம் நந்தா தெரிவிக்கிறார்.

மேலும் இவர்கள் இருவரும் அழகுச் சாதனப் பொருள்கள் வணிகத்தைத் தொடங்குவதற்கு முன் வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். வேதியியலில் எம்.எஸ்.சி., பட்டம் பெற்றிருந்த ராஜ் குமார் நந்தா, மார்க்கெட்டிங் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அப்பணியை விட்டுவிட்டு, அழகுச் சாதனப் பொருள்கள் தயாரிப்பு பணியில் இறங்கினார். அவரின் தொழில் சற்று வேகமேடுக்கவே, நீலம் நந்தாவும் தனது பணியை விட்டுவிட்டு தனது கணவருக்கு உதவியாக இத்தொழிலில் இறங்கியுள்ளார்.

neelam

Neelam Nantha

இவர்கள் இருவரின் கூட்டு முயற்சி மற்றும் கடின உழைப்பால் உருவான Nature's Essence முகத்துக்குப் பயன்படுத்தும் கிரீம்கள், ஜெல் மற்றும் லோஷன்கள் உள்ளிட்ட முகத்தைப் பராமரிக்கும் அழகுச் சாதனப் பொருள்களைத் தயாரிக்கிறது.


இவர்களின் அழகுச் சாதனப் பொருள்கள் தற்போது இலங்கை, நேபாளம், துபாய் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் எதிர்காலத் திட்டம் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆங்கில கட்டுரையாளர்கள்: தீப்தி நாயர் | தமிழில் திவ்யாதரன்