ஆண்டுக்கு ரூ.8 கோடி விற்பனை, இந்திய கிரிக்கெட் அணி விரும்பிப் பயன்படுத்தும் Voganow லெதர் பிராண்ட்!
ஷிகர் தவான், அஜய் தேவ்கன் போன்ற பிரபலங்கள் பயன்படுத்தும் வோகனோவ் தோல் பொருள்கள், இந்தியாவிலேயே சர்வதேச தரத்தில் லெதர் பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் ஆகும்.
இந்தியா முழுவதும் உள்ள எந்த ஓர் ஷாப்பிங் மாலுக்குச் சென்றாலும், தோல் காலணிகள், தோல் பைகள் போன்ற சர்வதேச பிராண்டுகளின் அணிவகுப்பை காணலாம். இவை எளிதாக மக்களின் கவனத்தைக் கவர்ந்து விடுகிறது. இதற்கான மாற்றுவழி என்ன, இந்தியாவிலேயே சர்வதேச தரத்திலான தயாரிப்புகளை உற்பத்தி செய்தால் என்ன என யோசித்தார். ஜலந்தரைப் பூர்வீகமாகக் கொண்ட கொண்ட டாபி பாட்டியா.
3 தலைமுறைகளுக்கும் மேலாக தோல் பொருள்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வந்த குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதால் ஜாரா உள்ளிட்ட சர்வதேச பிராண்டுகளை கையாள்வதில் இருந்த அனுபவம் அவருக்கு கைகொடுத்தது.
இதையடுத்து டாபி, 2015ஆம் ஆண்டு 'Voganow' 'வோகனோவ்' ஃபேஷன் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனத்தை உருவாக்கினார். இந்நிறுவனத்தின் மூலம் பேர்ஸ்கின் மற்றும் புரூன் என்ற இரண்டு புதிய பிராண்டுகளை அறிமுகப்படுத்தினார். மேலும், உயர்தர தோல் ஜாக்கெட்டுகள், பைகள், காலணிகள் மற்றும் ஆபரணங்கள் உள்ளிட்டவற்றையும் குறைந்த விலையில் வழங்கினார்.
இத்தயாரிப்புகள் கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா, மற்றும் பாலிவுட் நடிகர்கள் ரன்வீர்சிங், ஆயுஷ்மான் குரானா மற்றும் அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் விரும்பி அணிந்ததால் பிரபலமடைந்தது.
இதுகுறித்து டாபி ஓர் பேட்டியில் கூறியதாவது, இன்றைய காலகட்டத்தில் இணையம் மூலம் மக்கள் பல்வேறு சர்வதேச பிராண்டுகளைப் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கிறாரகள். ஆனால், சர்வதேச பிராண்டுகளில் கூட கிடைக்காத பல ரகங்கள், டிசைன்கள் எங்களிடம் உள்ளன என்பதே எங்களின் தனிச் சிறப்பு.
தலைமுறை தலைமுறையாக செய்து வரும் வியாபாரத்தை தொடர்ந்து செய்து வருவதைவிட தரமான உணர்வுள்ள மற்றும் பிராண்டை, ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கான ஒரு இந்திய பிராண்டை உருவாக்கவே நான் பாடுபட்டேன் என்கிறார்.
டாபி, 2015ம் ஆண்டு 'வோகனோவ்' ஃபேஷன் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனத்தை உருவாக்கி, ரூ.1.3 கோடி கடன் பெற்று அதன் மூலம் பேர்ஸ்கின் மற்றும் புரூனே போன்ற பிராண்ட்களை அறிமுகப்படுத்தினார். இவை நாட்டின் சிறந்த பிராண்டுகளாக இருக்கவேண்டும் என்பதற்காக. ஆஃப்லைன் கடையைத் திறக்காமல், ஆன்லைன் முறையில் தனது வியாபாரப் பயணத்தைத் தொடங்கினார்.
தொடக்கத்தில் மின்த்ரா, ஸ்னாப்டீல் மற்றும் ஜபோங் (Myntra, Snapdeal and Jabong) ஆகியவற்றில் தனது வோகனோவ் தோல் பொருள்களை விற்பனை செய்யத் தொடங்கினார்.
மின்த்ராவில் விற்பனை செய்யப்பட்ட தோல் ஜாக்கெட்களில் பேர்ஸ்கின் முதலிடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. எங்கள் அறிமுகத்துக்குப் பிறகு, வேறு பல பிராண்டுகளும், அவர்களின் தோல் தயாரிப்புகளை தள்ளுபடியுடன் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய போட்டியிட்டனர்.
”தரமான தோல் பொருள்களை தயாரித்து சரியான விலைக்கு வழங்கிவரும் எங்களுக்கு இந்த ஆன்லைன் தள்ளுபடி வித்தை கடுமையான நெருக்கடியைக் கொடுத்தது. எனவே நான் எனது சொந்த போர்ட்டலைத் தொடங்க முடிவெடுத்தேன்,” என்கிறார் டாபி.
இதைத் தொடர்ந்து அவர், 2016ல் voganow.com என்ற தனது சொந்த போர்ட்டலை அறிமுகப்படுத்தினார். கூகுள் விளம்பரங்கள் மற்றும் சமூக ஊடக மார்க்கெட்டிங் ஆகியவற்றில் விளம்பரம் செய்தார்.
அவர் தொடக்கத்தில் சமூக ஊடக மார்க்கெட்டிங்கில் நிறைய பணம் முதலீடு செய்திருந்ததாலும், வாடிக்கையாளர்கள் வோகனோவ் தயாரிப்புகளை அதிகம் விரும்பியதாலும் வியாபாரம் வெற்றிகரமாக நடைபெற்றது.
தற்போது இவர்களின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 35,000 ஆகும். இதில், 75 சதவிகிதம் பேர் மீண்டும் மீண்டும் வாங்கும் நிரந்தர வாடிக்கையாளர்கள் என பெருமையுடன் கூறுகிறார். இதனால் இவரது நிறுவனம் தொடங்கிய 4 ஆண்டுகளிலேயே ஆண்டுக்கு ரூ.8 கோடி வருவாய் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூரில் தங்கள் மகனின் திருமணத்துக்காக ஆக்ராவைச் சேர்ந்த ஒருவர் அளித்த ஆர்டர் குறித்து நினைவு கூர்கிறார் டாபி. திருமண நிகழ்ச்சிக்கு ஆண்கள் அனைவருக்கும் பூஷியா பிங்க் நிறத்தில் காலணிகள் மொத்தமாக வேண்டும் என வாடிக்கையாளர் கேட்டார். பொதுவாக இந்த பூஷியா இளஞ்சிவப்பு நிறத்தில் பெண்களுக்கான ஆடைகள், காலணிகள் எளிதாகக் கிடைக்கும். ஆனால் ஆண்களுக்கு கிடைக்காது.
எங்கள் வாடிக்கையாளர்களில் ஒருவரிடமிருந்து எங்களைப் பற்றி அறிந்த அவர் எங்களை நம்பி, எங்களிடம் ஆர்டர் அளித்தார். இதற்காகவே நாங்கள் பிரத்யேகமாக ஆண்களுக்கான பூஷியா இளஞ்சிவப்பு காலணிகளை தயாரித்து வழங்கினோம். அதனை அவர்கள் மகிழ்வுடன் அணிந்தது எங்களுக்கு மிகுந்த மன நிறைவை அளித்தது என்கிறார். இதேபோல, வோகனோவ் நிறுவனம் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கும் பிரத்யேகமாக காலணிகளை வடிவமைத்து அளித்திருக்கிறது.
வோகனோவின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஓவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் நிரந்தர வாடிக்கையாளர்களின் பரிந்துரைகளே ஆகும் என அவர் நன்றியோடு தெரிவிக்கிறார். மேலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் ஒப்பந்தம் செய்ய சென்றது குறித்து டாபி கூறியதாவது,
கடந்த ஆண்டு சண்டிகரில் நடைபெற்ற ஓர் போட்டியில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணி தங்கியிருந்த ஹோட்டலில் சென்று அவர்களைச் சந்திக்க அனுமதி கோரினேன். அதிர்ஷ்டவசமாக எனது நிறுவன தோல் தயாரிப்புகளை இந்திய அணிக்கு காட்சிப்படுத்த அனுமதிக்கப்பட்டேன் என்று கூறும் அவர், அப்போதிருந்து யுவராஜ் சிங், எம்.எஸ். தோனி, ஷிகர் தவான் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் எங்கள் நிறுவன தோல் தயாரிப்புகளை பெரிதும் விரும்பி பயன்படுத்தத் தொடங்கினர்,” என்றார் உற்சாகமாக.
பேர்ஸ்கின் மற்றும் புரூனே தயாரிப்புகள் கிரிக்கெட் வீரர்களிடையே பெரும் முக்கியத்துவத்தைப் பெற்றன. விரைவில், புரூனே தயாரிப்புகள் இந்தியன் பிரீமியர் லீக்கிற்குள் (ஐபிஎல்) நுழைந்தன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) ஆகியவை புரூனே தோல் பைகளை அணி பொருள்கள் மற்றும் ஊழியர்களுக்காகப் பயன்படுத்தினர்.
அதிலும் குறிப்பாக தோல் பைகளின் வடிவமைப்பு மற்றும் அவற்றின் வண்ணங்களின் தேர்வு போன்றவை மட்டுமன்றி வீரர்களின் முதலெழுத்துக்களும் அதில் பொறிக்கப்பட்டிருந்தது. இது வீரர்கள் அனைவரையும் மிகவும் கவர்ந்தது. மிகுந்த பாராட்டுகளையும் பெற்றுத் தந்தது என்று டாபி கூறுகிறார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக செல்லும் இந்திய கிரிக்கெட் அணியின் பயணத்துக்கு முன்னர், பி.சி.சி.ஐ. புரூனின் மிகவும் விரும்பப்படும் பெஸ்போக் பிராண்ட், முழு கிரிக்கெட் அணிக்குமான பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்த தோல் பைகளை ஆர்டர் செய்தது. இந்த பைகள் அனைத்தும் பி.சி.சி.ஐ. சின்னத்தை தாங்கி தயாரிக்கப்பட்டிருந்தன.
தற்போதைய உலகக் கோப்பைக்காக இந்திய கிரிக்கெட் அணி மற்றும் பிசிசிஐ உறுப்பினர்களுக்காக மொத்தம் 55 கிட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தயாரிப்பும் இத்தாலிய ஷூ தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பழமையான நுட்பங்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.
வோகனோவ் பிராண்டுகள் இப்போது பிரபலமாக இருக்கலாம், ஆனால் இதனை இந்தியாவின் நிரந்தரமான பிராண்டாக மாற்றவே இப்போது உழைக்க வேண்டியுள்ளது. எனவே, இந்த ஆண்டு முதல் தங்களது ஆன்லைன் விற்பனையோடு சேர்த்து ஆப்லைன் விற்பனையை முறையையும் தொடங்கத் திட்டமிட்டுள்ளார் டாபி.
இவர்கள் மும்பை ஜலந்தர் மற்றும் டெல்லியின் டெர்மினல் 1 ஆகிய பகுதிகளில் 3 கடைகளை இந்தாண்டு இறுதிக்குள் திறக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தியாவில் 5 கடைகளை ஆரம்பித்த பின்னர் சர்வதேச சந்தையில் எங்கள் சிறகுகளை பரப்ப விரும்புகிறோம் என நம்பிக்கையுடன் கூறுகிறார் டாபி.
ஆங்கில கட்டுரையாளர்: பலக் அகர்வால் | தமிழில்: திவ்யாதரண்