கோவிட்-19 தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஈடுபட்டுள்ள 7 இந்திய மருந்து நிறுவனங்கள்!
உலகளவில் 14 மில்லியன் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஏழு இந்திய மருந்து நிறுவனங்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன.
உலகளவில் 14 மில்லியனர் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஏழு இந்திய மருந்து நிறுவனங்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன.
பாரத் பயோடெக், சீரம் இன்ஸ்டிட்யூட், சைடஸ் கெடிலா, பனாசியா பயோடெக், இந்தியன் இம்யூனோலாஜிக்கல்ஸ், Mynvax, Biological E ஆகிய மருந்து நிறுவனங்கள் இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் ஈடுபட்டுள்ளன.
தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு வழக்கமாக பல ஆண்டுகள் சோதனை செய்யவேண்டும். அதிகளவில் தடுப்பூசிகள் தயாரிக்கக் கூடுதல் நேரம் தேவைப்படும். ஆனால் பெருந்தொற்று காரணமாக கொரோனா வைரஸ் தடுப்பூசியை சில மாதங்களில் உருவாக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பாரத் பயோடெக் நிறுவனம் ஹைதராபாத்தில் உள்ள தொழிற்சாலையில் 'கோவாக்சின்’ என்கிற தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்திற்கான முதல் மற்றும் இரண்டாம்கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு அனுமதி பெற்றுள்ளது. கடந்த வாரம் மனிதர்கள் மீது சோதனையைத் தொடங்கியுள்ளது.
தடுப்பு மருந்துகளில் முன்னணி நிறுவனமான சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா இந்த ஆண்டு இறுதிக்குள் கோவிட்-19 தடுப்பூசி உருவாக்குவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
“தற்சமயம் AstraZeneca Oxford, தடுப்பூசியில் பணியாற்றி வருகிறோம். இந்த தடுப்பு மருந்து மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனையில் உள்ளது. அத்துடன் இந்தியாவில் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மனிதர்கள் மீது சோதனையைத் தொடங்க உள்ளோம். தற்போதைய சூழலையும் மருத்துவப் பரிசோதனைகளின் சமீபத்திய முடிவுகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்த ஆண்டு இறுதியில் AstraZeneca Oxford தடுப்பூசி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்,” என்றார் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா சிஇஓ அடார் பூனாவல்லா.
அமெரிக்காவைச் சேர்ந்த பயோடெக் நிறுவனமான Codagenix உடன் இணைந்து வீரியம் குறைந்த கிருமிகளைப் பயன்படுத்தும் தடுப்பூசி (Live attenuated vaccine) உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. தற்போது மருத்துவப் பரிசோதனைகளுக்கு முந்தைய கட்டத்தில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
“AstraZeneca Oxford, Codagenix ஆகியவற்றைத் தவிர தடுப்பூசி தயாரிப்பில் உலகளவில் செயல்படும் பல்வேறு நிறுவனங்களுடன் தயாரிப்பு பார்ட்னராக இணைந்துள்ளோம். ஆஸ்திரியாவின் Themis உள்ளிட்ட மேலும் இரண்டு நிறுவனங்களும் இதில் அடங்கும்,” என்றார் பூனாவல்லா.
AstraZeneca உடனான பார்ட்னர்ஷிப் குறித்து பூனாவல்லா கூறும்போது, “சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா AstraZeneca உடன் தடுப்பூசி தயாரிப்பிற்கான பார்ட்னர்ஷிப்பில் இணைந்துள்ளது. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கி வரும் கோவிட்-19 தடுப்பூசியை ஒரு பில்லியன் டோஸ் தயாரித்து விநியோகிப்பதற்காக இந்த இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது,” என்றார்.
இந்த தடுப்பூசிகள் இந்தியாவிற்கும் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் கொண்ட நாடுகளுக்கும் (GAVI நாடுகள்) வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். சைடஸ் கெடிலா ஏழு மாதங்களில் கோவிட்-19 தடுப்பூசியின் மருத்துவப் பரிசோதனைகளை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் கடந்த வாரம் கோவிட்-19 தடுப்பூசியை மனிதர்கள் மீது சோதனை செய்து மருத்துவப் பரிசோதனைகளைத் தொடங்கியுள்ளது.
ஆய்வு முடிவுகளின்படி தரவுகள் திருப்தியளிக்கக்கூடியதாகவும் தடுப்பூசி பரிசோதனைகள் வெற்றிகரமாகவும் இருக்கும் பட்சத்தில் சோதனைகள் முடிவடைந்து தடுப்பூசியை அறிமுகப்படுத்த ஏழு மாதங்கள் ஆகலாம் என்று சைடஸ் கெடிலா தலைவர் பங்கஜ் ஆர் படேல் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் கடந்த வாரம் கோவாக்சின் தடுப்பூசியை மனிதர்கள் மீது சோதனை செய்யத் தொடங்கியுள்ளது.
பாரத் பயோடெக்கின் SARS-CoV-2 முதல் மற்றும் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. மருத்துவப் பரிசோதனைகளுக்கு முந்தைய கட்ட ஆய்வுகளின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் உருவாக்கம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐசிஎம்ஆர்), தேசிய வைராலஜி நிறுவனம் (என்ஐவி) ஆகியவற்றுடன் இணைந்து இந்நிறுவனம் தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது.
பனாசியா பயோடெக் அமெரிக்காவைச் சேர்ந்த Refana Inc நிறுவனத்துடன் இணைந்து கோவிட்-19 தடுப்பூசியை உருவாக்க கூட்டு முயற்சியில் அயர்லாந்தில் நிறுவனத்தை அமைப்பதாக ஜூன் மாதம் தெரிவித்திருந்தது.
இந்நிறுவனம் Refana உடன் இணைந்து கோவிட்-19 தடுப்பூசிகளை 500 மில்லியன் டோஸ் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. 40 மில்லியன் டோஸ் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விநியோகிப்பதற்குத் தயார் நிலையில் இருக்கும் என்றும் பனாசியா பயோடெக் தெரிவித்திருந்தது.
தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் (NDDB) துணை நிறுவனமான இந்தியன் இம்யூனோலாஜிக்கல்ஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசியைக் கண்டுபிடிக்க ஆஸ்திரேல்யாவின் கிரிஃபித் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது.
Mynvax, Biological E போன்ற மருந்து நிறுவனங்களும் கோவிட்-19 தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
தடுப்பூசிகள் ஆண்டிஜென்களால் ஆனது. நோய்கிருமி போன்ற ஆண்டிஜென்கள் உள்ளே நுழைக்கப்படுகின்றன. நோய்கிருமி உள்ளே நுழையும்போது அதற்கு எதிராக செயல்பட்டு நோய்களில் இருந்து காக்க உதவுகிறது. இத்தகைய தடுப்பூசிகள் மற்ற மருந்துகளைக் காட்டிலும் உயர்தர பாதுகாப்பு தரநிலைகளுக்கு உட்பட்டு இருக்கவேண்டியது அவசியம். ஏனெனில் இவை மில்லியன் கணக்கான ஆரோக்கியமான நபர்களுக்கு கொடுக்கப்படுகின்றன.
தடுப்பூசி சோதனை என்பது நான்கு நிலைகள் கொண்ட செயல்முறைகளை உள்ளடக்கியது. விலங்குகள் மீது மருத்துவச் சோதனைகளுக்கு முந்தைய கட்ட பரிசோதனை; தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு திறன் உருவாவது குறித்து அதிகம் தெரிந்துகொள்ள ஒரு சிறு குழுவினர் மீது முதல் கட்ட மருத்துவ பரிசோதனை; இரண்டாம் கட்ட பரிசோதனைகள்; ஆயிரக்கணக்கான நபர்களுக்கு நடத்தப்படும் மூன்றாம் கட்ட பரிசோதனை என நான்கு நிலைகளைக் கொண்டது.
உலக சுகாதார நிறுவனம் உலகளவிலான 140 கேண்டிடேட் வேக்சின்களை கண்காணித்து வருகிறது. இதில் சுமார் 24 நிறுவனங்கள் மனிதர்கள் மீது பரிசோதனை செய்வதில் வெவ்வேறு நிலைகளில் உள்ளன.
சீன நிறுவனமான சினோவாக் பயோடெக் பிரேசிலில் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்/AstraZeneca யூகே-வில் இரண்டு மற்றும் மூன்றாம் கட்டங்கள் இணைந்த ஆய்வில் உள்ளது. சமீபத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசிலில் மூன்றாம் கட்ட பரிசோதனையைத் தொடங்கியுள்ளது.
அமெரிக்கவைச் சேர்ந்த Moderna இந்த மாதம் அதன் வேக்சின் கேண்டிடேட் மூன்றாம் கட்ட பரிசோதனைகளைத் தொடங்க உள்ளது. ஜெர்மன் நிறுவனமான BioNTech கோவிட்-19 தடுப்பூசி கண்டுபிடிக்க முன்னணி மருந்து நிறுவனமான Pfizer உடன் இணைந்து செயல்பட உள்ளது.
தகவல் உதவி: பிடிஐ