‘கிரியா ராமகிருஷ்ணன்’ - தமிழ் பதிப்புலகின் ஸ்டீவ் ஜாப்ஸ்
தமிழ் பதிப்புலகில் தனித்தன்மை வாய்ந்த முறையில் புத்தகங்களை பதிப்பித்து முன்னோடி பதிப்பாளராக வாழ்ந்து மறைந்திருக்கிறார் கிரியா ராமகிருஷ்ணன்.
இது மின்னூல்கள்களின் காலம். எந்த புத்தகத்தையும் மின்னூல் வடிவில் கையடக்க சாதனத்தில் எளிதாக வாசித்து விட முடிகிறது. ஆனால், மின்னூலின் வசதிக்கு பழகியவர்கள் கூட, கிரியா புத்தகங்களை பார்த்தால், அச்சு வடிவ புத்தகங்களுக்கு நிகரில்லை என்ற எண்ணம் கொள்வார்கள். ஏனெனில், கிரியா புத்தகங்களின் வடிவமைப்பும், அச்சு நேர்த்தியும் அத்தனை சிறப்பானது.
கிரியா பதிப்பித்த புத்தகங்கள் அவற்றின் அழகியலுக்காக மட்டும் அறியப்படுபவை அல்ல: அந்த புத்தகங்கள் தேர்வும் தனித்தன்மை மிக்கவை. அது மட்டும் அல்ல, வெளிப்படையாகக் காணக்கூடிய அழகியலுக்கு நிகரான நுட்பங்களை புத்தகங்களின் ஒவ்வொரு பக்க உள்ளடக்கத்திலும் உணரலாம்.
கிரியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட புத்தகங்களின் தனிச்சிறப்புகளை இன்னும் அடுக்கி கொண்டே போகலாம். இவ்வளவு ஏன், இத்தனை ஆண்டுகளில் கிரியா வெளியிட்ட புத்தகங்களின் பட்டியலை பார்த்தாலே அதன் நூல்களின் தனித்தன்மைகளை உணரலாம். அது மட்டும் அல்ல, நூல்களின் எண்ணிகையும் கூட, அவை தயாராவதில் பின்பற்றப்பட்ட உழைப்பையும், ஈடுபாட்டையும் உணர்த்துகின்றன.
இந்த பெருமைகளுக்கு எல்லாம் சொந்தக்காராராக திகழ்ந்தவர் கிரியா ராமகிருஷ்ணன். பதிப்புலகின் துருவ நட்சத்திரமாக திகழ்பவர் என பாராட்டப்படுபவர்.
தமிழில் வெளியிடுவதற்கான புத்தகங்களை அவர் தேர்வு செய்த விதமும், அவற்றை பதிப்பித்த நேர்த்தியும் பதிப்புலகின் முன்னத்தி ஏர் என அவரை சொல்ல வைத்திருக்கிறது.
தமிழ் சூழலில் எத்தனையோ முன்னோடி பதிப்பங்களும், பதிப்பாளர்களும் இருக்கின்றனர். ஆனால் முதல் முறையாக ஒரு வாசகனுக்கு கிரியாவின் புத்தகங்களை அறிமுகம் ஆகும் போது ஏற்படும் அனுபவம் வியப்பான பரவசம் என்றே சொல்ல வேண்டும்.
என் கல்லூரி காலத்தில் இதை அனுபவித்திருகிறேன். சென்னை ராயப்பேட்டையில் உள்ள கிரியா புத்தக நிலையத்திற்குச் சென்று, சார்த்தரின் மீள முடியுமா, ஆல்பர் காம்யூனின் அந்நியன் போன்ற நூல்களை வாங்கிய போது, அந்த புத்தகங்கள் வழங்கிய அனுபவம் மறக்க முடியாதவை. அவை வழங்கிய வாசிப்பு அனுபவமும், திறந்துவிட்ட வாயில்களும் இன்னும் சிறப்பானவை.
அதன் பின், கிரியாவின் மொழிபெயர்ப்பு நூல்கள் தனிச்செய்தியை சொல்வதாக அமைந்திருந்ததையும் உணர முடிந்தது. குட்டி இளவரசன் போன்ற சிகரம் தொட்ட புனைவுகள் மட்டும் அல்லாது, தொலைக்காட்சி ஊடகம் தொடர்பான புத்தகமும், எப்படி தான் இப்படி தேர்வு செய்து வெளியிடுகிறாரோ என வியக்க வைப்பவை. அதைவிட முக்கியமாக நேசிக்க வைப்பவை.
பசுவையா கவிதைகள் துவங்கி, நா.முத்துசாமியின் படைப்புகள், இமையத்தின் நாவல்கள் என கிரியா பதிப்பித்த நம் மொழி படைப்பாளிகளின் நூல்களும் தனித்தன்மை வாய்ந்தவை தான்.
கிரியா ராமகிருஷ்ணனுடன் நெருக்கமான பழக்கம் எனக்கு வாய்க்கவில்லை. ஆனால், அவரைப்பற்றி பேசப்பட்ட குறிப்புகளும், எழுதப்பட்ட விஷயங்களும் பதிப்புலகில் ஒரு எடிட்டராக அவர் செயல்பட்ட தன்மையை உணர்த்துகின்றன.
தேர்வில் துவங்கி, அச்சாக்கம், வடிவமைப்பு என எல்லாவற்றிலும் நேர்த்தி தான் கிரியா புத்தகங்களின் தனித்தன்மை. இவை வெளிப்படையாக கண்ணுக்குத்தெரியும் அம்சங்கள். ஆனால், அந்த புத்தகங்களை வாசிக்கும் போது தான், அவற்றின் உருவாக்கம் பின்னே மறைந்திருக்கும் உழைப்பை உணர முடியும்.
கிரியா ராமகிருஷ்ணன் வெறும் பதிப்பாளராக மட்டும் செயல்பட்டதில்லை. படைப்பாளிகளுடன் இணைந்து பணியாற்றி அவர்கள் ஆக்கங்கள் செம்மையாக வழி செய்திருக்கிறார். ஒரு எடிட்டராக எழுத்தாளர்களுடன் அவர் இணைந்து செயல்பட்ட விதம் பற்றியும் பலர் சொல்லக்கேட்டு வியந்திருக்கிறேன்.
கிரியா பதிப்பித்த நவீன தமிழ் அகராதி பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. இதன் செயலி வடிவத்தையும் கொண்டு வந்ததை குறிப்பிட்டாக வேண்டும். அகராதி நோக்கிலும் சரி, பதிப்பு நோக்கிலும் சரி இதை சமகால சாதனை என வர்ணிக்கலாம். அண்மையில், மருத்துவமனையில் இருந்து இதன் விரிவாக்கப்பட்ட மூன்றாம் பதிப்பை அவர் வெளியிட்ட அர்ப்பணிப்பும் நெகிழ வைக்கிறது. அதே காரணத்தினால் அவரது இழப்பு இன்னும் வேதனை தருகிறது.
இணையம், தொழில்நுட்பம் சார்ந்த உலகில் இயங்கி வருபவன் என்ற முறையில், கிரியா ராமகிருஷ்ணனின் சிறப்பை உணர்த்த அவரை ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸுடன் ஒப்பிடுவதே பொருத்தமாக இருக்கும் எனத்தோன்றுகிறது.
ஆப்பிள் சாதனங்களில் பார்க்கக் கூடிய அழகியலையும், வடிவமைப்பு நேர்த்தியையும் கிரியா புத்தகங்களில் பார்க்கலாம். சாதனங்களின் அழகியலை விட, அவற்றின் பயன்பாட்டு அம்சம் மற்றும் பயனாளிகளுக்கு நட்பான தன்மையில் ஜாப்ஸ் கொண்டிருந்த தெளிவும், தொலைநோக்கும் நிகரில்லாதவை.
தமிழ் பதிப்புலகில் அத்தகைய பார்வையையும், தொலைநோக்கையும் கொண்டிருந்தார் கிரியா ராமகிருஷ்ணன். ஆனால். ஜாப்ஸ் ஒரு ராக்ஸ்டார் ஆளுமை என்றால், கிரியா ராமகிருஷ்ணன் தன்னை அதிகம் வெளிப்படுத்திக்கொள்ளாத அமைதியின் வடிவம்.
இருந்தாலும் என்ன, தொழில்நுட்ப உலகில் ஜாப்ஸ் தனிப்பாதை கண்டு தாக்கம் செலுத்துவது போலவே, தமிழ் பதிப்புலகின் தாக்கம் செலுத்திம் மாமனிதராக வாழ்ந்து மறைந்திருக்கிறார்.
கட்டுரை: சைபர்சிம்மன்