தன் ட்ராக்டர் மூலம் விவசாயிகள் போராட்டத்தில் மின்சாரம் அளிக்கும் பஞ்சாப் விவசாயி!
மின்சாரம் வழங்கி அசத்தியுள்ளார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி ஒருவர்
டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கி அசத்தியுள்ளார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி ஒருவர்.
3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் நடத்தும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகளை ஒன்று திரட்டி, தங்களுக்கு ஆதரவான அறிவிப்பு வரும்வரை, இங்கிருந்து போகமாட்டோம் என்று உறுதியுடன் இருக்கின்றனர் அந்த விவசாயிகள்.
தலைநகரின் நெடுஞ்சாலைகளில் போராடும் அவர்களுக்கு மின்சாரம் கிடைப்பதென்பது சாத்தியமற்ற ஒன்று. நாங்கள் விவசாயிகள் மட்டுமல்ல. படிக்காத மின்பொறியாளர்களும் எங்களில் இருக்கின்றனர் என்பதை உறுதி செய்யும் வகையில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் மின்சாரத்தை ஏற்படுத்தி அசத்தியுள்ளார்.
சரி! போராடும் விவசாயிகளுக்கு மின்சாரம் எதற்குத் தேவை என்ற கேள்வி எழலாம். விவசாயிகள் தங்கள் உறவினர்கள், உள்ளிட்ட மற்றவர்களைத் தொடர்பு கொள்ள செல்போனை உயிர்ப்புடன் வைத்துக்கொள்வது அவசியம். அந்த வகையில் செல்போனுக்கு சார்ஜ் செய்வது, இரவு நேரங்களில் மின்விளக்குகளைப் பயன்படுத்துவதற்கு மின்சாரம் கட்டாயம்.
அந்த வகையில், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஷா சாந்தர் இதனை சாத்தியப்படுத்தியுள்ளார். அந்த விவசாயி, அவர் கொண்டுவந்த டிராக்டரில் உள்ள பேட்டரிகளின் உதவிகளைக்கொண்டு செல்போன்களை சார்ஜ் செய்தார். ஆனால் இதில் சிக்கல் ஒன்று உள்ளது. அதாவது பேட்டரிகள் தொடர்ந்து இயங்க டிராக்டர் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும். அதனால், இந்த முயற்சியை கைவிட்ட அவர், வேறொரு முறையை கையாள முடிவு செய்தார்.
நீண்ட யோசனைக்குப்பிறகு, சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் தகடுகளை ஊரிலிருந்து வரவழைத்தார். பின் அதனை பரிசோதித்து பார்க்கும்போது, அவரது முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. இதன்மூலம்,
120 சார்ஜர்களை வாங்கி வந்து, யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தும் வகையில், அதனைமாற்றி போராட்டத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு உதவியுள்ளார். இதில் செல்போன்கள் மட்டுமில்லாமல், மின்விளக்குகள், மின் அடுப்புகள், ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பலவகையான மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடியும்.
டெல்லியில் நடக்கும்போராட்டங்களில் பல டிராக்டர்கள் சோலார் டிராக்டர்களாக மாறியிருப்பதை காண முடியும்.
தகவல் உதவி - புதிய தலைமுறை | தொகுப்பு: மலையரசு