தேநீருக்கான சர்வதேச பிரண்டை உருவாக்க நண்பர்களுடன் தொழில் தொடங்கிய இளைஞர்!
போலீசாக கனவுகொண்டு, அதில் தோல்வியை சந்தித்த ஜோசப் ராஜேஷ், தேநீர் தொழிலில் உள்ள தொழில் வாய்ப்பு மற்றும் சந்தையை கண்டு நண்பர்களுடன் டீ கடையை தொடங்கியுள்ளார்.
தொழில்முனைவர்கள் பலர் தொழில் தொடங்கும் கனவைக்கொண்டு இன்று வெற்றியாளரான கதையை நாம் கேட்டு இருப்போம். ஆனால் ஒரு சிலர் வேறொரு முனையில் தொழில் தொடங்கி அந்த பாதையில் அமைதியாக சென்று கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்டவர் தான், கரூர்ரை சேர்ந்த ஜோசப் ராஜேஷ், காவல்துறை அதிகாரி ஆகவேண்டும் என்று தன் பயணத்தை தொடங்கி, இன்று வளர்ந்து வரும் தொழில்முனைவராய் வலம் வருகிறார்.
ஜோசப் ராஜேஷ், Black Pekoe என்னும் தேநீர் கடையின் துணை நிறுவனர். தன் தொழில் பயணத்தை தொடங்கும் முன் பல சறுக்கல்களையும் படிப்பினைகளையும் பெற்றுள்ளார் இவர்.
போலீஸ் கனவும், கற்ற படிப்பினைகளும்
ஜோசப் ராஜேஷ், தன் கல்லூரி நாட்களில் இருந்தே போலீஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு இருந்தார்.
“போலீஸ் ஆகவேண்டும் என்பதற்காக என் கல்லூரி என்சிசி குழுவில் இருந்தேன். டெல்லியில், குடியரசு தின விழாவில் என்சிசி அணிவகுப்பில் பிரதமர் முன் கலந்துகொண்டேன்,”
என தன் லட்சிய தொடக்கத்தை பகிர்ந்தார். கல்லூரி முடிந்தவுடன் காவல் துறையில் சேர அனைத்து வழிகளையும் சரிவர செய்த ஜோசபிற்கு ஏனோ நியமனம் வரவில்லை. இதற்காக பல அதிகாரிகளை சென்று பார்த்துள்ளார், ஆனால் அங்கிருந்த அரசியலால் அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை.
“இதற்கான வழக்கு இன்னும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. தகுதி இருந்தும் எனக்கு காவல்துறையில் வேலை கிடைக்கவில்லை,” என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.
அதன் பின் பெரும்பாலான இளைஞர்கள் போலவே வேறு வேலையை தேடிச்சென்றார் ஜோசப் . ஏற்கனவே காப்பீட்டு நிறுவனத்தில் இளைய மேலாளராகப் பணிப்புரிந்த இவருக்கு மீண்டும் மற்றவர் கை எதிர்ப்பார்த்து வேலை செய்ய விருப்பம் இல்லை. அப்பொழுது ஒரு முன்னணி பால் நிறுவனத்தின் விநியோகத்தை நடத்த முடிவு செய்தார். துரதிருஷ்டவசமாக அதுவும் ஒழுங்காக அமையவில்லை.
அதன் பின், பிடிக்கவில்லை என்றாலும் பெரிய வங்கியின் மேலாளராக வேலையில் அமர்ந்தார்.
“இது மிகவும் சவாலான வேலைதான், இருப்பினும் அடிமை வாழ்க்கை எனக்கு பிடிக்கவில்லை. அப்பொழுதுதான் ஆர்கானிக் பண்ணை வைக்கலாம் என்னும் யோசனை எனக்கு புலப்பட்டது,” என்கிறார்.
ஆர்கானிக் பண்ணைக்கான தேடல்; தொழில்முனைவின் துவக்கம்:
ஆர்கானிக் பண்ணை வைக்க வேண்டும் என எண்ணிய ஜோசப், பல தேடலுக்கு பின் ஆர்கானிக் தேயிலை வளர்ப்போம் என முடிவு செய்து ஊட்டிக்கு சென்றார். ஆர்கானிக் தேயிலை தோட்டம் வைக்க வேண்டும் என்று முடிவோடு சென்ற அவருக்கு தற்பொழுது இருக்கும் தேநீரில் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என்பது தெரியவந்தது.
“காபிக்கு சர்வதேச அளவில் பெரிய பிராண்ட் உள்ளது ஆனால் நாம் அன்றாட அதிகம் பருகும் தேநீருக்கு இல்லை...” என்கிறார்.
அதனால் தேநீருக்கும் சர்வதேச அளவில் பிராண்ட் இருக்க வேண்டும் என்று எண்ணி தன் தேடலை தொடர்ந்தார் இவர். ஊட்டியில் விவசாயம் செய்யும் விவசாயிகளிடம் கலந்து பேசினார்.
“விவசாயிகளிடம் என்ன பிராண்ட் டி குடிப்பீர்கள் எனக் கேட்டேன், இலையை பறித்து அப்படியே போட்டு குடிப்போம் என்றனர். அதுதான் தம்பி உண்மையான டீ என்று சொன்னார்கள். நாங்கள் குடிப்பது என்ன? என்று கேட்டதற்கு உங்க டீ டப்பாவில் அது எழுதிருக்கும், அது வெறும் டஸ்ட் என்றார்...”
இதுவே தன் தொழில் பயணத்திற்கான விதை என்கிறார் ஜோசப். பல விதமாக பாதை மாறி இறுதியாக தேநீர் தொழில் தான் என முடிவு செய்து அது குறித்து பல ஆராயச்சிகள் செய்தார். அதன் பின் தேநீருக்கு ’ஸ்டார்பக்ஸ்’ போல் ஒரு பிராண்ட் உருவாக்க வேண்டும் என்று தீர்மானித்தார்.
தொழில் கனவின் பயணம்
தொழில் தொடங்க வேண்டும் என்று முடிவு செய்த பின் தன் பள்ளி நண்பர் ரகுவை தொடர்புக்கொண்டார் ஜோசப்.
“ஆனால் அப்பொழுதுதான் என் நண்பன் வேறொரு பெருநிறுவனத்தின் பிரான்சைஸ் எடுத்து நடத்திக் கொண்டிருந்தார். என்னை அழைத்தார் ஆனால் எனக்கு பிரான்சைஸ் செய்வதில் விருப்பமில்லை.”
தொழில் தொடங்க முடியவில்லை என்றாலும் தன் சிந்தனை முழுவதும் தேநீர் கடை திறப்பதில் மட்டும் தான் இருந்தது என்கிறார். அதன் பின் சென்னையில் இன்னொரு பிரான்சைஸ் தொடங்குவதாக தன் நண்பர் ரகு மீண்டும் ஜோசபை அழைத்துள்ளார்.
“என் கனவை நிறைவேற்ற சென்னை தான் சரியான இடம் என்று என் நன்பர்களுடன் இணைந்து சென்னையில் மற்றொரு நிறுவனத்தின் பிரான்சைஸ் எடுத்து நடத்த முன் வந்தேன்.”
சென்னையில் அந்த பிரான்சைஸ் நிறுவிய பின் தன் டீ கடையின் கனவை தன் ஆறு நண்பர்களுடன் பகிர்ந்தார் ஜோசப். அவர்களும் சம்மதிக்க அதை நிறைவேற்றும் பயணத்தை துவங்கினார்.
Black Pekoe-வின் பிறப்பு
என் ஆறு நண்பர்களில் ஒருவர் ஆர்க்கிடெக்ட், ஒருவர் வடிவமைப்பாளர், மற்றவர்கள் ஐ டி, நாங்கள் ஏழு பேரும் இணைந்து பல சந்திப்புகளுக்கு பிறகு Black Pekoe-வை துவங்கினோம்.
இந்த ஏழு நண்பர்களும் இணைந்தே தேநீர் கடைக்கு தேவையான அனைத்து வேலைகளையும் செய்துக்கொண்டனர். உதாரணத்திற்கு கட்டிட வடிவமைப்பாளரான செல்வா கடை வடிவைமைப்பை பார்த்துக்கொண்டார். கிராபிக் வடிவமைப்பாளரான பரணி லோகோ டிசைனிங்கை பார்த்துக்கொண்டார். இது போல் ஒவ்வொருவரும் தங்களுக்குள் வேலையை பிரித்திக்கொண்டனர்.
“எங்கள் பிராண்டுக்கு பெயர் வைக்கவே இரு மாத காலம் ஆகிவிட்டது. பின் ரகு யோசனையின் படி pekoe (உயர் தர தேநீர்) என்று வைத்தோம். தேநீரின் நிறத்தைக் கொண்டு Black Pekoe என வைத்தோம்.”
அதன் பின் தங்கள் சேமிப்பு மற்றும் கடன் உதவி பெற்று சென்னை வேளச்சேரியில் உள்ள கிராண்ட் மாலில் ஜூன் மாதம் Black Pekoe-வின் முதல் கடையை நிறுவினார்கள்.
Black Pekoe வளர்ச்சி
“Black Pekoe-வின் முதல் நாளில் மக்கள் அளித்த கருத்து அதிகம் ஊக்குவித்தது. நாங்கள் பட்ட கஷ்டத்தின் பலன் அன்று எங்களுக்கு கிடைத்தது,” என நெகிழ்கிறார் ஜோசப்.
ஊட்டியில் இருந்தே நேரடியாக தேயிலைகளை வாங்குகின்றனர் மற்றும் தேநீர் உடன் சிற்றுண்டிகளையும் வழங்குகின்றனர். மேலும் அவர்கள் உணவில் சுவைக்காக எந்த ஒரு செயற்கைப் பொருளையும் சேர்ப்பதில்லை மற்றும் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதில்லை. ஒரு தேநீரின் விலை ரூ.20-50 வரை விற்கப்படுகிறது.
“மாலில் இவ்வளவு குறைந்த விலையில் விற்பது நாங்கள் மட்டுமே. எங்கள் தேனீரை பருகுவதற்காகவே மாலுக்கு மக்கள் வருகின்றனர்,” என பெருமிதம் கொள்கிறார்.
ஆர்டர் எடுத்த பின்னர் தேநீரை தயாரிக்கின்றனர் அதனால் மக்கள் அதை அதிகம் விரும்புவதாக கூறுகிறார். தொடங்கி சில மாதங்கள் மாட்டுமே ஆன நிலையில் மாதம் 25 ஆயிரம் ரூபாய் வரை லாபம் மட்டுமே சம்பாதிக்கிறார்கள் இந்த நண்பர்கள்.
இதை பெரிய சர்வதேச பிராண்டாக வளர்த்து ஒரு நாளில் 10 லட்சம் டீ விற்பதே இவர்களின் லட்சியமாக உள்ளது.
“என் நண்பர்கள் தான் என கனவை நினைவாக்க உறுதுணையாக இருந்தனர். எங்களை போல் உள்ளவர்களுக்கு பிரான்சைஸ் கொடுத்து 500 தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்பதே என் நீண்டகால இலக்கு,”
என முடிக்கிறார் இந்த தற்செயலாக தொழில்முனைவரான ஜோசப் ராஜேஷ்.
"