‘விளையும் உணவுப் பொருட்கள் எல்லாம் விஷமாகிவிட்டன. நம் வீட்டுத் தோட்டத்தில் வளரும் இயற்கைக் காய்கறிகள்தான் நல்லது’ என்கிறார்கள். இது கிராம மக்களுக்கு ஓகே! ஆனால் கால் கிரவுண்டில் நாலு வீடு கட்டி வாழும் நகரவாசிகளுக்கு..?
இந்தக் கேள்விக்கு விடையாகத்தான் ‘சமூகத் தோட்டம்’ என்ற பெயரில் புதிய முயற்சியை சென்னையில் துவங்கியுள்ளனர் இயற்கை ஆர்வலர் மரியதாஸ் குழுவினர்.
சாலையோரங்களில் எங்காவது ஒரு சதுர அடி மண் சும்மா கிடந்தாலும் அதில் தகுந்த காய்கறிகளைப் பயிரிட்டு, அந்த ஏரியா மக்களுக்கே அர்ப்பணித்துவிடும் வித்தியாச முயற்சி இவர்களுடையது!
‘‘நாங்கள் பலரும் ‘வீட்டுக்கொரு விவசாயி’ என்ற பெயரில் முகநூலில் நண்பர்களாக ஒன்று சேர்ந்தோம். பாரம்பரிய நாட்டு விதைகளைப் பாதுகாப்பதுதான் எங்கள் முதல் சிந்தனையாக இருந்தது. நாட்டு விதைகளுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். அதிலிருந்து வளரும் செடிகளுக்கோ, மரங்களுக்கோ, எந்தப் பூச்சிக்கொல்லி மருந்தையும் தெளிக்கத் தேவை இல்லை.
முதல்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் நாட்டு விதை வங்கியைத் துவங்கினோம். விதைகள் நிறைய சேர்ந்தன. சும்மா வைத்திருந்தால் எப்படி? நட்டு விளைவித்து பயிர் செய்ய வேண்டுமே! நகர்ப்புறங்களில் பயன்படுத்தாமல் இருக்கும் வெற்றிடங்களில் நாட்டு விதைகளைக் கொண்டு தோட்டம் அமைத்தோம்.
இது ஒருவிதமான சமூகத் தோட்டம். இந்தத் தோட்டத்தில் இருக்கும் காய்கறிகளை பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் பறித்துச் செல்லலாம். ‘அன்பின் பகிர்வு’ என்ற பெயரில் இதை நாங்கள் இலவசமாகத் தருகிறோம்.
சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலி என்று பெருநகரங்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் இப்படிப்பட்ட சமூகத் தோட்டங்களை அமைத்துள்ளனர். சென்னையில் அம்பத்தூர், வளசரவாக்கம், பூந்தமல்லி, தாம்பரம், வேளச்சேரி, ஐயப்பன்தாங்கல், வேலப்பன் சாவடி என இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் இந்தத் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
‘நமக்குத் தேவையான காய்கறிகளை கடையில் வாங்கிவிடலாம் என்ற மனப்பான்மை மக்கள் மனதிலிருந்து நீங்க வேண்டும். முடிந்தவரை காய்கறிகளைத் தாங்களே பயிர் செய்யத் தூண்ட வேண்டும். அதற்காகத்தான் இந்த முயற்சி!’’
என்கிற மரியதாஸைத் தொடர்கிறார், சென்னை பகுதி சமூகத் தோட்டக் கண்காணிப்பாளர் வசந்தகுமார்.
‘‘சென்னை மாதிரியான சிட்டியில சின்ன இடம்னாலும் அதை வணிக நோக்கத்துக்குத்தான் பயன்படுத்துவாங்க. இதையெல்லாம் தாண்டி, இயற்கை ஆர்வமுள்ள இணையதள நண்பர்கள் மூலம் இந்த இடங்கள் எல்லாம் கிடைத்தன. பூந்தமல்லியில் ‘எழில்’ என்பவரின் நிலம் பெரும் உதவியாக இருந்தது. எட்டரை ஏக்கர் நிலத்தை பல மரபு தானியங்களின் விதை சேகரிப்பிற்காகப் பயன்படுத்துகிறோம். ‘ஏழு காணி நிலம்’ என்று இதற்குப் பெயர் வைத்துள்ளோம்.
கறுப்புப் பூசணின்னு நம்ம நாட்டு ரகம் ஒண்ணு இருந்தது. அவ்வளவு சுவையா இருக்கும். நம்மிடம் இருந்து போய் இப்போ மியான்மர்ல இது நிறைய விளையுது. ஆன இங்க இங்கே சுத்தமா இல்லாமப் போயிடுச்சு.
அந்தக் கறுப்புப் பூசணி விதையை அங்கேயிருந்து கொண்டு வந்து விதைத்தோம். இப்போ எல்லா சமூகத் தோட்டங்களிலும் இந்தக் கறுப்புப் பூசணி காய்க்குது’’ என்கிறார் அவர் பெருமிதமாக!
சரி, தங்கள் சிறு நிலத்தை இப்படி ஊருக்கே காய்கறி கொடுக்க ஒதுக்கியிருக்கும் பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள்?
‘‘இவங்க தோட்டம் அமைக்கறதுக்கு முன்னாடி, புதர் மண்டிய, பழைய பொருட்கள் போட்டு வைத்த இடமாத்தான் இது இருந்தது. என் பொண்ணுதான் இவங்களைக் கூட்டிட்டு வந்தாங்க. ஒரு மாசத்துல இந்த இடமே இப்ப பூத்துக் குலுங்குது. நான் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளைக் கடையில் போய் வாங்கியே பல மாதங்கள் ஆகுது.
இந்தத் தெருவுல இருக்க எல்லாருமே இங்கதான் காய்கறிகள் பறிச்சிட்டுப் போய்ச் சமைக்கிறாங்க!’’ என்கிறார் வளசரவாக்கம் சமூகத் தோட்டத்துக்கு இடம் தந்த காந்திமதி அம்மாள். அவர் சுட்டிக் காட்டிய சமூகத்தோட்டத்தில் அந்நேரம் காய்கறி பறித்துக் கொண்டிருக்கிறார் ஏரியாவாசி கல்யாணி. ‘‘இங்கே எப்பவுமே காய்கறிகள் இருந்துக்கிட்டேதான் இருக்கு. தினசரி தேவைக்கு மட்டும் நாங்க எடுத்துக்கறோம்.
உடலுக்கு இது ஆரோக்கியமும் கூட. சீக்கிரமே எங்க வீட்டுலயும் ஒரு சின்ன இடத்தை ஒதுக்கி, இந்த மாதிரி ‘சமூகத் தோட்டம்’ அமைக்கலாம்னு இருக்கேன்!’’ என்கிறார் கல்யாணி. இதற்கு நிலம்தான் தேவையா? இல்லை, மாடித் தோட்டமாக வைக்கலாமா என்ற சந்தேகம் இந்நேரம் எல்லோருக்கும் வந்திருக்கும். அதை வலிமையாக மறுக்கிறார் மரியதாஸ்.
‘‘மாடித் தோட்டம் என்ற முறையே தவறு. செடிகள் மண்ணில்தான் விளைய வேண்டும். நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள் என்று மண்ணிலும் தரையிலும் இருக்கும் பல்லுயிர்கள்தான் அவற்றைப் பூக்கவும் காய்க்கவும் வைக்கின்றன,” என்கிறார்.