‘தென்னந்தோப்பில் பால் பண்ணை’ - தினம் 650 லிட்டர் பால் உற்பத்தி செய்யும் ஹக்கீம்!
தென்னை விவசாயத்தில் தோல்வி அடைந்து, தனது மாற்றுச் சிந்தனையால் பால் பண்ணை உரிமையாளராக மறு அவதாரம் எடுத்த விவசாயி பற்றிய கதை இது.
விவசாயிகள் எப்போதுமே லாப நோக்கத்துடன் செயல்படுவது கிடையாது, ஆனால் கடன் தலைக்கு மேல் போய், மொத்த பொருளாதாரமும் சீர்குலையும் போது தான் விவசாயத்தை கைவிட்டுவிட எண்ணுகின்றனர். அதில், சிலர் மட்டுமே தங்களது மாற்றுச்சிந்தனைகளால் விவசாயத்தை லாபகரமானதாக மாற்றி, வெற்றிக்கொடி கட்டுகின்றனர்.
அப்படி தென்னை விவசாயத்தில் தோல்வி அடைந்து, தனது மாற்றுச் சிந்தனையால் பால் பண்ணை உரிமையாளராக மறு அவதாரம் எடுத்த விவசாயி பற்றிய கதை இது.
கேரள மாநிலம் பாலக்காட்டில் சித்தூர் அருகே உள்ள கம்பளிச்சுங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வி. ஹக்கீம். தென்னந்தோப்பிற்கு உரிமையாளரான இவருக்கு, பார்த்து, பார்த்து தண்ணீர் விட்டு காவல் காத்து விவசாயம் செய்தாலும், தென்னை மரத்தில் இருந்து கிடைத்த மகசூல் உர செலவுக்கு கூட கட்டுப்பாடியாகவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த ஹக்கீம், தென்னந்தோப்பில் பால் பண்ணை வைப்பது என முடிவெடுத்தார்.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஹக்கீம் இப்போது 150 க்கும் மேற்பட்ட பசுக்களைக் கொண்ட பால் பண்ணையை அமைத்துள்ளார் மற்றும் அவர் தலைவராக இருக்கும் பன்னிபெருந்தலை பால் சங்கத்திற்கு தினசரி 650 லிட்டர் பாலை விற்பனைக்காக கொடுக்கிறார். இவரது பால் பண்ணையில் 8 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
தினமும் அதிகாலை 2 மணிக்கு எல்லாம் வீட்டை விட்டு புறப்படும் ஹக்கீம், நடந்தே பால் பண்ணைக்கு வந்து சேருகிறார். அங்குள்ள தொழிலாளர்களை எழுப்பிவிட்டு, பால் கறப்பது, கொட்டகையை சுத்தப்படுத்துவது, மாட்டை குளிப்பாட்டி, தீவனம் வைப்பது என நாள்தோறும் தனது பண்ணை வேலைகளை மேற்பார்வை செய்கிறார்.
தென்னை விவசாயத்தில் இருந்து பால் வியாபாரியாக மாறிய ஹக்கீமிற்கு, பால்வள மேம்பாட்டுத் துறையால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் ‘மாவட்டத்தின் சிறந்த விவசாயி’ என்ற விருது கிடைத்துள்ளது.
கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெ.சிஞ்சுராணி விருதை வழங்கியுள்ளார். கடந்த ஆண்டு 1.36 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்துள்ளார்.
"விவசாயிகளின் ஈடுபாடுதான் முடிவுகளைக் கொண்டு வருகிறது. ஹோல்ஸ்டீன் ஃப்ரீசியன் மற்றும் ஜெர்சிஸ் போன்ற உயர் இன வகைகளைத் தவிர, சாஹிவால், வெச்சூர் மற்றும் கிர் போன்ற நாட்டுப்புற வகைகளும் எங்களிடம் உள்ளன,” என்கிறார்.
மாடுகளை தென்னந்தோப்பு போன்ற குளிர்ச்சியான இடத்தில் அடைக்க முடியும் என்பதால் அங்கு கொட்டகை அமைக்க முடிவு செய்தார்.
"எல்லா பக்கங்களிலும் தென்னை மரங்கள் உள்ளன, இது கால்நடைகள் குளிர்ச்சியாக இருக்கவும் அதிக பால் உற்பத்தி செய்யவும் உதவுகிறது. காய்ந்த தென்னை ஓலைகள் அவற்றின் மீது விழுவதால், கொட்டகையின் தாள்களை அவ்வப்போது மாற்ற வேண்டும் என்ற ஒரே பிரச்சினை மட்டுமே உள்ளது,” என்றார்.
பணிச்சுமையை குறைக்கும் விதமாக தனது பால் பண்ணையில் ஒரே நிமிடத்தில் 20 பசுக்களிடம் இருந்தும் தானாகவே பால் கறக்கும் இயந்திரத்தை நிறுவ திட்டமிட்டுள்ளார்.
தீவனம் மற்றும் இதர உள்ளீடுகளின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதால், முதலீட்டின் மீதான குறைந்தபட்ச லாபத்தை உறுதிசெய்ய, பால் பண்ணையாளர்களுக்கு லிட்டருக்கு குறைந்தபட்சம் 50 ரூபாய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசுக்கு முன்வைத்துள்ளார்.
தகவல் உதவி - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் | தமிழில் - கனிமொழி