ஐ.டி வேலை டூ மாட்டுப் பண்ணை: ஆண்டுக்கு ரூ.44 கோடி வருமானம் ஈட்டும் சாஃப்ட்வேர் இன்ஜினியர்!
மற்றவர்களுக்கு முன்மாதிரியாக அமைந்த கர்நாடக இளைஞர்!
தங்களுக்குப் பிடித்த தொழிலை செய்து வெற்றிபெறலாம் என்பது சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் உதாரணமாக அமைத்துள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் கிஷோர் இந்துகாரி. கரக்பூர் ஐஐடியில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு, பி.ஹெச்.டி-ஐ அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தவர் அங்கேயே வேலை பார்த்து வந்தார்.
இவர் பணிக்குச் சேர்ந்த இடம் எங்கு தெரியுமா? உலகின் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒன்றான Intel. இங்கு கை நிறைய ஊதியத்தோடு ஆறு ஆண்டுகள் வேலை பார்த்துவந்த அவர், தொடர்ந்து வேலை செய்ய முடியாமல் இந்தியா திரும்பினார். இந்தியாவில் வந்து சொந்தத் தொழில் தொடங்குவதற்கு முயற்சி செய்துள்ளார்.
ஒருமுறை ஹைதராபாத் சென்றபோது அங்கு தரமான பால் கிடைப்பதில் டிமாண்ட் இருந்ததை அறிந்துகொண்ட கிஷோர், அதையே தனது மூலதனமாக்கிக் கொள்ள முடிவு செய்கிறார். அதன்படி, கோயம்பூத்தூரில் இருந்து 20 மாடுகளை வாங்கிய கிஷோர், பால் கரந்து வீடு, வீடுகளுக்கு சென்று விற்பனை செய்து வந்துள்ளார். அவருக்கு அவரின் குடும்பத்தினர் உதவி செய்யத் தொடங்கியுள்ளனர்.
நாட்கள் செல்ல பால் அதிகம் கிடைக்கத் தொடங்கியுள்ளது. இதனை சேமித்து வைத்து விற்பனை செய்ய பிரீசர் உள்ளிட்ட பொருட்கள் தேவைப்பட, பின்னர் தொழிலில் முதலீடு செய்திருக்கிறார்.
தனது இத்தனை வருட உழைப்பாக கையில் இருந்த ஒரு கோடி ரூபாயை முதலீடு செய்து, தொழிலை விரிவுபடுத்தத் தொடங்கியுள்ளார். இதனால், 2018ல் ஹைதராபாத்தைச் சுற்றியுள்ள 6 ஆயிரம் குடும்பங்களுக்கு நாள்தோறும் பால் விநியோகம் செய்யும் அளவுக்கு தனது பால் பண்ணை வளர்த்தெடுத்திருக்கிறார். இதற்கு தனது மகன் சித்துவின் பெயரை சூட்டி ‘சித்து பார்ம்' என மாற்றி தொழிலாளர்களை அதிகப்படுத்தினாள். தற்போது சித்து பார்மில் 120க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது பண்ணை மூலமாக 10,000 வாடிக்கையாளர்களைப் பெற்று கிஷோர் ஆண்டுக்கு 44 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறார்.
இதற்கிடையே, தனது தொழில் குறித்து பேசியுள்ள கிஷோர்,
“2012ம் ஆண்டில் ஐ.டி வேலையை உதறிவிட்டு, 20 மாடுகளுடன் பால் பண்ணை ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் தொழில் நிறைய கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது,” என்கிறார்.
”தினசரி மீதமாகும் பாலை கெடாமல் பார்த்துக்கொள்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது. பால் கெடாமல் இருக்க தொழில்நுட்ப உபகரணங்களை வாங்க வேண்டியிருந்ததால், கையில் இருந்த பணத்தில் முதலீடு செய்து அதை வாங்கினோம். பின்னர் 2018ல் ரூ.1.3 கோடி வங்கியில் கடன் பெற்று பண்ணையை விரிவு செய்தேன்," எனக் கூறுகிறார்.
தற்போது இவரின் பால் பண்ணையில் பசு மாடு, எருமை மாடு பால் தனித்தனியாக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், விரும்பும் நபர்களுக்கு ஒரு மாட்டுப் பாலை தனியாக பராமரித்து விற்கப்பட்டும் வருகிறார்கள்.
உலகின் முன்னணி கார்ப்பரேட் நிறுவனத்தில் கை நிறைய சம்பளம் வாங்கி வந்த கிஷோர் இந்துகாரி, தான் விரும்பிய தொழிலுக்காக அதனை உதறித்தள்ளிவிட்டு மாட்டு பண்ணை தொடங்கி அதில் சாதனை புரிந்துள்ளது மற்றவர்களுக்கு உத்வேகம் கொடுக்கும் செயலாக மாறியுள்ளது.
தொகுப்பு: மலையரசு