நீதிபதி ஆகிறார் பீகார் கோர்ட் பியூனின் மகள்!
கடின உழைப்பும், லட்சியத்தை விடாமல் துரத்தும் மனப்பாங்கும் இருந்தால் வெற்றி நம் வாசல் தேடி வரும். தனது தந்தை பியூனாக பணியாற்றிய அதே நீதித்துறையில் நீதிபதியாக அமரப் போகிறார் 5 வயது குழந்தைக்கு தாயான அர்ச்சனா.
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஓர் கனவு, லட்சியம் இருக்கும். ஆனால் அதை அடைய ஒருவர் எந்தளவுக்கு ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்றுகிறார்களோ அந்தளவுக்கு வெற்றி எனும் கிரீடம் அவர்களின் சிரசை அலங்கரிக்கும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார் பீகாரைச் சேர்ந்த ஐந்து வயது குழந்தையின் தாயான அர்ச்சனா.
கடின உழைப்பும், லட்சியத்தை விடாமல் துரத்தும் மனப்பாங்கும் இருந்தால் வெற்றி நம் வாசல் தேடி வரும். எந்தவொரு சாதனைக்கும் வயது ஓர் தடையல்ல எனக் கூறும் அர்ச்சனா, பீகாரில் விரைவில் நீதிபதியாக பதவியேற்று நீதிபரிபாலனம் செய்ய இருக்கிறார்.
பீகாரின் கங்கர்பாக் பகுதியில் பிறந்தவர் அர்ச்சனா. இவரின் தந்தையான கயூரினந்தன், சரண் மாவட்டத்தில் உள்ள சோனீபூர் நீதிமன்றத்தில் பியூனாக பணிபுரிந்து வந்தார். தனது தந்தை பியூனாக பணிபுரிந்த இதே நீதித் துறையில் தான் ஓர் நீதிபதியாக பணியில் அமர வேண்டும் என சிறுவயதிலேயே அர்ச்சனா முடிவெடுத்தார்.
தனது இந்த லட்சியத்தை செயல்படுத்த கடும் போராட்டங்களைச் சந்தித்த அர்ச்சனா, தனது இரண்டாவது முயற்சியில் பீகார் நீதித்துறையில் நடைபெற்ற நீதிபதிகளுக்கான தேர்வில் தேறி, விரைவில் நீதிபதியாக பதவியேற்க உள்ளார். ஆனால் தனது வெற்றியைக் கொண்டாட தனது தந்தை தற்போது உயிருடன் இல்லை என்பதே அவரின் தற்போதைய சந்தோஷத்திலும் வருத்தமான விஷயமாகும்.
இதுகுறித்து ஐ.ஏ.என்.எஸ்ஸுக்கு அளித்த பேட்டியில் அர்ச்சனா கூறியதாவது, எ
“னது தந்தை நீதிபதியிடம் பியூனாக பணியாற்றினார். ஓர் சிறு குழந்தையாக எனக்கு இது பிடிக்கவில்லை. எனவே அந்த நீதிபதியின் இடத்தில் நான் இருக்கவேண்டும் என முடிவெடுத்தேன். ஆனால், என் தந்தையின் மரணத்துக்குப் பிறகு கல்வியைத் தொடர்வது எட்டாக்கனியாக இருந்தது. இருந்தாலும் எனது தாயார் அனைத்து சூழ்நிலைகளையும் மீறி, ஓர் கல்தூண் போல என்னைத் தாங்கி நின்றார். சில உறவினர்களும் உதவிக்கரம் நீட்டினர்,” என்கிறார்.
சாஸ்திரி நகர் அரசு உயர்நிலைப் பள்ளியின் பிளஸ் 2 முடித்த அர்ச்சனா, பாட்னா பல்கலைக்கழகத்தில் படித்து முடித்துவிட்டு, கணினி ஆசிரியராக பணியில் சேர்ந்தார். இந்நிலையில் அவருக்குத் திருமணமும் நடைபெற்றது. குழந்தையும் பிறந்தது. ஆனால் ஒரு நீதிபதி ஆக வேண்டும் என்ற அவரின் கனவு மட்டும் மனதின் ஓரத்தில் ஓளிந்து கொண்டே இருந்ததை அவர் உணர்ந்தார்.
அர்ச்சனாவின் லட்சியத்தை அறிந்த அவரது கணவர் ராஜீவ் ரஞ்சன், அவரின் கல்வியைத் தொடர ஊக்குவித்தார். மாமியாரும் அவரது பங்குக்கு ஆதரவளித்தார். இதையடுத்து அர்ச்சனா மீண்டும் தனது போராட்டத்தைத் தொடங்கினார். ஆம், இது அவரது லட்சியத்தை அடைவதற்கான போராட்டம்.
புனேக்கு வந்த அர்ச்சனா எல்.எல்.பி. பட்டத்துடன்தான் பாட்னா திரும்பினார். தொடர்ந்து, 2014ல் பூர்னியாவின் பி.எம்.டி. சட்டக் கல்லூரியில் எல்.எல்.எம். முடித்தார். இதன்பின், நீதிபதி தேர்வுகளுக்காக பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள டெல்லிக்கு வந்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது,
“திருமணமாகி ஓர் குழந்தைக்குத் தாயான பின் நான் படிப்பது என்பது மிகக் கடினமான ஓர் விஷயமாகத்தான் இருந்தது. இருந்தாலும், என் கணவரும், மாமியாரும் எனக்கு அளித்த ஊக்கமும், உற்சாகமுமே எனது வெற்றிக்கு காரணம்,” என்கிறார் அர்ச்சனா.
ஒருவர் தன் கனவை நனவாக்க விரும்பினால் அதற்காகக் கடுமையாகப் பாடுபடத் தயாராக இருந்தால், நிச்சயம் அதை அடைய முடியும் எனக்கூறும் அர்ச்சனா, தனது சிறுவயது நீதிபதி கனவு நனவாகும் இவ்வேளையில் தனக்கு உதவிய, தன்னை நம்பி ஊக்குவித்து அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறார்.