இந்தியர்கள் இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடிய விஷயங்கள் என்ன தெரியுமா?
கூகுள் தனது தேடல் சேவையில் 2019ம் ஆண்டு மக்கள் அதிகம் தேடிய விஷயங்கள் பட்டியலின் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் என்னென்ன இருக்கு தெரியுமா?
ஆர்டிகல் 370 என்றால் என்ன?, அயோத்திய வழக்கு என்ன?, இந்தியாவின் தேசிய குடிமக்கள் பதிவேடு என்ன?
இவை எல்லாம் தான் இந்த ஆண்டு இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடிய கேள்விகளில் முன்னணியில் இடம்பெற்றுள்ளன.
கூகுள் வெளியிட்டுள்ள 2019 தேடல் அறிக்கையில், இந்திய நெட்டிசன்கள், ஆர்டிகள் 370, தேர்தலுக்கு பிந்தைய கருத்தக்கணிப்பு, கருந்துளை, ’ஹவுடி மோடி’ உள்ளிட்ட தலைப்புகள் தொடர்பான தகவல்களை தேடியுள்ளனர்.
ஜம்மூ காஷ்மீர் மாநிலத்திற்கு சிறந்த அந்தஸ்து வழங்க வழி செய்த ஆர்டிகள் 370 இந்த ஆண்டு துவக்கத்தில் ரத்து செய்யப்பட்டது. காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் ஆர்டிகள் 370 –ரத்து செய்வது மற்றும் மாநிலத்தை ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய முடிவை உள்துறை அமைச்சர் அமீத் ஷா மாநிலங்களவையில் தெரிவித்தார்.
அயோத்தி வழக்கு என்ன? மற்றும் இந்தியாவின் தேசிய குடிமக்கள் பதிவேடு என்றால் என்ன? ஆகிய கேள்விகள் பத்து முன்னணி கேள்விகளில் இடம்பெற்றுள்ளன.
"கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட பதங்கள் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கபட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல் மற்றும் தேர்தல் போக்கு ஆகியவை தேடலில் முக்கிய அங்கம் வகித்தன. எப்படி வாக்களிப்பது? மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயரை சரி பார்ப்பது எப்படி? எனும் கேள்விகள், கேள்விகளில் முதல் மற்றும் மூன்றவாவது இடத்தில் உள்ளன.
கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பான தேடல் இடம்பெற்றுள்ளது. சந்திராயன் 2, ஆர்டிகல் 370, நீட் முடிவுகள் ஆகியவை தேடல் பட்டியலில் முன்னணியில் இருந்தன.
கபீர் சிங், அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம், ஜோக்கர், கேப்டன் மார்வெல் ஆகிய திரைப்படங்கள் முன்னணி தேடல் பட்டியலில் இடம்பெற்றன.
இந்திய விமானப்படை விமானி, அபிநந்தன் இந்தியர்களில் அதிகம் தேடப்பட்ட ஆளுமையாக விளங்கினார். லதா மங்கேஷ்கர், அனந்த் குமார் மற்றும் விக்கி கவுசல் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
சர்வதேச அளவில், இந்தியா- தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி தேடல் பட்டியலில் முன்னணியில் இடம்பெற்றிருந்தது. கேம் ஆப் த்ரோன்ஸ் அதிகம் தேடப்பட்ட டிவி நிகழ்சியாக இருந்தது.
செய்தி : பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்