Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

சுதா ஆனந்த்: மருத்துவர் டு தொழில் முனைவர்: பெண்களுக்கு வேலை வாய்ப்பு; குடும்பத் தொழிலில் 1கோடி டர்ன்ஓவர்!

கனவுகளுக்கு படிப்போ அல்லது சூழ்நிலையோ என்றுமே தடையாக முடியாது என நிரூபித்திருக்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சுதா. மருத்துவம் படித்து முடித்து மருத்துவராக பணி புரிந்த இவர், தற்போது பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பை வழங்கும் கிருமிநாசினி ஜவுளிகளை தயாரிக்கும் சுவாஸ் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

சுதா ஆனந்த்: மருத்துவர் டு தொழில் முனைவர்: பெண்களுக்கு வேலை வாய்ப்பு; குடும்பத் தொழிலில் 1கோடி டர்ன்ஓவர்!

Wednesday March 24, 2021 , 6 min Read

குடும்பச் சூழ்நிலை காரணமாகவும், நிர்பந்தத்தினால் படித்த படிப்பு வீணாகக் கூடாது என்றும் பலர் தங்களுக்கு பிடிக்காத பணியில் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் நிச்சயம் அவர்களால் அப்பணியில் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாது. காரணம் ஈடுபாடில்லாமல் செய்யும் எந்த தொழிலிலும் வெற்றியை சாத்தியமாக்குவது கடினம். அதனால் தான் பலர் கை நிறைய சம்பளம் வாங்கும் பணியில் இருந்து துணிந்து வெளியேறி தொழில்முனைவோராக சாதித்திருக்கிறார்கள்.

 

திருப்பூரைச் சேர்ந்தவர் சுதா ஆனந்த், அவரும் அப்படிப்பட்டவர் தான். மருத்துவம் படித்தவரான சுதா, இன்று வெற்றிகரமான தொழில்முனைவோராக, பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பை வழங்கி வரும் ‘சுவாஸ்’ ஜவுளி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.


கிருமிநாசினி (Anti microbial ) படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், குளியல் மற்றும் சமையலறைத் துண்டுகள் என காலத்திற்கேற்ற, புதுமையான தயாரிப்புகளை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது சுதாவின் சுவாஸ்.

sudha

டாக்டர் சுதா ஆனந்த்

38 வயதாகும் சுதாவின் அப்பா திருப்பூரில் மிகப்பெரிய டெக்ஸ்டைல் மில் ஓனர். சுமார் 40 ஆண்டுகளாக டெக்ஸ்டைல் தொழிலில் இருந்து வரும் அவர், அடிமட்ட நிலையில் இருந்து உழைத்து இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறார். 1985ம் ஆண்டு அவர் ஆரம்பித்த பிகேஎஸ் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம்.படுக்கை விரிப்புகள், தலையணை உறை மற்றும் துண்டுகளைத் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.


சிறுவயதில் இருந்தே அப்பாவின் டெக்ஸ்டைல்ஸ் தொழிலைப் பார்த்து வளர்ந்த போதும், சுதாவுக்கு ஆரம்பத்தில் அதில் ஆர்வம் இருக்கவில்லை. இதனால் அவரது அக்கா டெக்ஸ்டைல்ஸ் பற்றிய படிப்புகளை முடித்து அப்பாவுக்கு துணையாக தங்களது நிறுவனத்திலேயே பணியாற்றத் தொடங்க, சுதா மருத்துவம் படிக்கச் சேர்ந்துள்ளார். அங்கு தான் உண்மையிலேயே தனக்கு எதில் ஆர்வம் அதிகம், எந்தத் தொழிலில் ஈடுபட்டால் தன்னால் அதில் வெற்றி பெற முடியும் என்ற தெளிவு அவருக்கு ஏற்பட்டுள்ளது.


2005ல் மருத்துவப் படிப்பை முடித்த சுதா, பிறகு சில காலங்கள் மருத்துவராக இருந்துள்ளார். அப்போதும் கூட நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதை விட மருத்துவமனை நிர்வாகம் போன்றவற்றில் தான் அவருக்கு ஆர்வம் இருந்துள்ளது. எப்படி இவ்வளவு பேர் ஒத்துழைப்போடு வேலை பார்க்கிறார்கள், பெரிய மருத்துவமனைகளில் எப்படி ஒவ்வொரு துறையும் ஒற்றுமையாக இயங்குகிறது என்பது மாதிரியான விஷயங்களைத்தான் தெரிந்து கொள்ள விரும்பியிருக்கிறார். 


ஒருவேளை பிசினஸ் பேமிலியில் இருந்து வந்ததால் தன்னால் அப்படி சிந்திக்க முடிகிறதோ என நினைத்த சுதா, இனி மருத்துவத் துறையில் தன்னால் ஈடுபாட்டுடன் செயல்பட முடியாது என தீர்க்கமாக முடிவெடுத்து, அப்பாவின் டெக்ஸ்டைல்ஸ் தொழிலிலேயே ஈடுபடத் தொடங்கினார்.

 

நான் மருத்துவம் படித்த போது எங்கள் கல்லூரியில் ஒரு செமினார் நடந்தது. அதில் மருத்துவம் படித்தவர்களுக்கு இந்தியாவில் இருக்கும் மூன்று வாய்ப்புகள் பற்றி பேசப்பட்டது. அதாவது கடைசி வரை மருத்துவராகவே இருப்பது. இரண்டாவது தங்கள் குடும்பத் தொழிலில் ஈடுபடுவது. மூன்றாவது சிவில் சர்வீஸ் எழுதுவது.

“எங்களது சீனியர்களில் இதுபோல் மருத்துவம் படித்து விட்டு மற்ற துறைகளில் சாதித்தவர்கள் பற்றி அப்போது தெரிந்து கொண்டேன். அப்போது தான் எனது அப்பாவின் டெக்ஸ்டைல்ஸ் தொழிலில் நாமும் ஈடுபடலாம் என பொறி எனக்குள் தட்டியது. நமக்கு ஆர்வம் இருக்கும் துறையில் சாதிக்க வேண்டும் என அப்போது முடிவு செய்தேன்.”

இது பற்றி என் குடும்பத்தாரோடு பேசினேன். என் அப்பா எனக்கு ஆதரவாக இருந்தார். எல்லோரும் என் முடிவை ஏற்றுக் கொண்டார்கள். உண்மையைச் சொல்வதென்றால் குடும்பத் தொழிலான டெக்ஸ்டைல்ஸ் தொழிலையே நான் மேற்கொண்டு ஈடுபட நினைக்கிறேன் என்பதில் என் அப்பாவிற்கு மிகவும் சந்தோசமே, என்கிறார்.

மருத்துவர் சுதா தொழில்முனைவராக தொடங்கிய பயணம் 

சுதாவும், அவரது அக்காவும் சேர்ந்து ‘பிகேஎஸ்’ ’BKS' ஜவுளி நிறுவனத்தைக் கவனித்துக் கொள்ளத் தொடங்கினார்கள். பிகேஎஸ்-ல் 95 சதவீதம் ஏற்றுமதிக்காகவே பொருட்களைத் தயாரிக்கின்றனர். ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.


நீண்ட காலமாக டெக்ஸ்டைல்ஸ் தொழிலில் இருப்பதால், சர்வதேச அளவில் வீட்டு உபயோகத்தில் துணியின் பயன்பாடு பற்றி சுதாவுக்கு நல்ல அனுபவம் கிடைத்தது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அதே தரத்தினாலான ஜவுளிப் பொருட்களை இந்திய சந்தையிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என ஆசைப்பட்டார் சுதா.

பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் ‘சுவாஸ்’

துணி வகைகள், தொழில்நுட்பம், மார்க்கெட்டிங் என ஜவுளி நிறுவனத்திற்குத் தேவையான படிப்புகளை அனுபவம் மூலமாகவும், முறைப்படியும் கற்றுக் கொண்டார் சுதா. ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் நினைத்தார். அவற்றின் பலனாக, 2012ம் ஆண்டு ‘சுவாஸ்’ (Swaas) என்ற பெயரில் தனி நிறுவனத்தை ஆரம்பித்தார் சுதா.

“ஒவ்வொரு உயிருள்ள ஜீவன்களுக்கும் சுவாசம் என்பது கட்டாயமான ஒன்று. அது இல்லாமல் இருக்க முடியாது. அது தூய்மையானதாக இருந்தால் ஆரோக்கியமாக வாழ முடியும். அதனால் தான் எங்களது நிறுவனத்திற்கு சுவாஸ் எனப் பெயர் வைத்துள்ளோம். நீண்ட நாட்களாகவே எனக்கு இந்திய மக்களுக்குத் தேவையான உள்நாட்டுத் தயாரிப்பு பொருட்களை உருவாக்க வேண்டும் என்ற கனவு இருந்தது,” என்கிறார்.

பெண்களின் சக்தி மீது நம்பிக்கை உண்டு.என்பதால், பெண்களைக் கொண்டே இந்த வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரிக்க வேண்டும் என விரும்பினேன். அதனால் தான் ஒன்றுமே தெரியாமல் வரும் பெண்களுக்குக்கூட சரியான பயிற்சிகளைக் கொடுத்து, அவர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்கிறோம்.


இப்போது எங்களிடம் சுமார் 800க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். அவர்களில் 500க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள், என்கிறார் சுதா.

workers
பிகேஎஸ் டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதியைப் பார்த்துக் கொள்ள, சுவாஸ் முழுக்க முழுக்க உள்நாட்டு மார்க்கெட்டிங்கில் ஈடுபட்டு வருகிறது. ஹோம் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் லைப் ஸ்டைல் எனப்படும் வீட்டு உபயோகத்திற்கு மற்றும் அலங்காரத்திற்குத் தேவையான படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், திரைச்சீலைகள், டவல்கள் மற்றும் கிச்சன் டவல்கள் போன்றவற்றை சுவாஸ் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

நல்ல முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருந்தபோது தான் கொரோனா ஊரடங்கு பிரச்சினை குறுக்கிட்டுள்ளது. எப்போதும் வீட்டிற்குள்ளேயே இருக்க நேரிட்டதால் மக்களுக்கு தங்களைச் சுற்றியுள்ள இடங்களை சுத்தமாக, சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கவனம் அதிகமானது. இதனை தங்களது வியாபாரத்திலும் ஒரு யுக்தியாகப் பயன்படுத்திக் கொண்டார் சுதா. 2020ல் தங்களது லோகோவை மாற்றி, சில புதிய தயாரிப்புகளுடன் மீண்டும் சுவாஸ் நிறுவனத்தை ரீலாஞ்ச் செய்தார்.


இம்முறை பழைய ஜவுளிப் பொருட்களில் பல புதுமைகளைப் புகுத்தினார். சர்வதேச தரத்தில் இந்திய மார்க்கெட்டிங்கிற்கு தகுந்த உள்நாட்டுப் பொருட்களைத் தயாரிக்க வேண்டும். அதேசமயம் சுற்றுச்சுழலையும், மக்களின் ஆரோக்கியத்தையும் மனதில் கொண்டு, தரமான பொருட்களை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டார்.


மக்களின் விழிப்புணர்வுக்கு ஏற்ப, படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், துண்டுகள் என தாங்கள் தயாரித்த பொருட்களை கிருமிகள் அண்டாத வண்ணம் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கினார். மக்களிடையே அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், சுவாஸின் வருமானமும் உயர்ந்தது.

“கொரோனா ஊரடங்கு சமயத்தில் சர்வதேச அளவிலும் சரி, இந்தியாவிலும் சரி எங்களது விற்பனை நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. கொரோனாவால் சுத்தம், சுகாதாரம் பற்றி மக்களிடையே நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நம்மை விட வெளிநாடுகளில் எப்போதும் முன்னோடியாக இருப்பார்கள். எனவே கிருமிநாசினி படுக்கை விரிப்புகள் மாதிரியான பொருட்களை நிறைய வாடிக்கையாளர்கள் எங்களிடம் கேட்டு வந்தனர். கொரோனா சமயத்தில் இதுதான் இந்த மாதிரியான பொருட்களை சந்தையில் அறிமுகப்படுத்த சரியான நேரம் என முடிவு செய்தேன்.

இதனால் மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளைப் போல் இல்லாமல், எங்களது தயாரிப்புகளில் சில வித்தியாசங்களைச் செய்ய நினைத்தோம். ஏற்கனவே மருத்துவத்துறையில் இருந்த அனுபவமும் எனக்கு நன்றாகவே கை கொடுத்தது.


அப்படி உருவானது தான் நுண்ணுயிர்களைக் கொல்லும் கிருமி நாசினி பெட்ஷீட் (Anti microbial bedsheets), மூங்கில் பாத்டவல்கள் (Bamboo bath towels) போன்றவை. இதே மாதிரி பல சுவாரஸ்யமான, அதே சமயம் புதுமையான பல பொருட்களை எங்களது வெப்சைட்டில் பார்க்க முடியும், என்கிறார் சுதா.

கொரோனாவால் பெரும்பாலான தொழில்கள் பெரும் சரிவைச் சந்தித்துள்ள நிலையில், கொரோனா ஊரடங்கால் தங்களது விற்பனை இருமடங்காக அதிகரித்துள்ளதாக பெருமையுடன் கூறுகிறார் சுதா. 2019ம் ஆண்டு வரை ரூ.50 லட்சமாக இருந்த டர்ன் ஓவர், 2020ல் 1 கோடியாக உயர்ந்துள்ளதாம்.

தற்போது இணையத்தில் நேரடியாக அவர்களது வெப்சைட் மூலமாகவும், அமேசான் போன்ற சில விற்பனை தளங்கள் மூலமாகவும் தங்களது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது சுவாஸ். இது தவிர, ஒரு நேரடி விற்பனைக் கடையும் நடத்தி வருகிறார்கள்.


விரைவில் அனைத்து ஊர்களிலும் இவர்களது கடைகளை ஆரம்பிப்பதற்கான வேலைகளும் நடந்து வருவதாகவும், வெளிநாடுகளுக்கும் சுவாஸ் தயாரிப்புகளைக் கொண்டு செல்லும் திட்டம் இருப்பதாகவும் சுதா கூறுகிறார்.


“பெரும்பாலும் அப்பர் மிடில்கிளாஸ் மக்கள் தான் எங்களது வாடிக்கையாளர்களாக உள்ளனர். எங்களது கிருமிநாசினி வீட்டு உபயோகத் துணிகள் நோய்த் தொற்றுகளில் இருந்து மக்களைப் பாதுகாக்கும். அடிக்கடி துவைக்க வேண்டிய தேவை இருக்காது என்பது இதன் கூடுதல் சிறப்பம்சம்.

“எங்களது தயாரிப்புகளில் பாக்டீரியாவின் பல்கிப் பெருகும் அளவும் குறைவு. வழக்கமாக பாக்டீரியா உள்ளிட்ட தொற்றுகளைத் தான் துவைப்பது மூலம் நாம் நீக்குகிறோம். ஆனால் எங்களது தயாரிப்புகளை மற்ற பொருட்களோடு ஒப்பிடுகையில் சுத்தப்படுத்தும் அளவு குறைகிறது. அடிக்கடி துவைக்க வேண்டிய தேவை இல்லாததால் நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியும்,” என்கிறார் சுதா.  

சுவாஸில் சுமார் 30க்கும் மேற்பட்ட பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்கின்றனர். ரூ.200ல் ஆரம்பித்து ரூ. 5000 வரையிலான விலை மதிப்புள்ள பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

sudha anand

இதற்கு முன்பு வெளிநாட்டு ஏற்றுமதியில் மட்டுமே அதிக கவனத்தை செலுத்தி வந்துள்ளனர். அதனால் உள்நாட்டு விற்பனை சிறிய அளவில் தான் இருந்து வந்துள்ளது. ஆனால் இப்போது சுவாஸை மேலும் விரிவு படுத்தும் வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக சுதா கூறுகிறார்.

“இன்னமும் பல மடங்கு சுவாஸை வளர்க்க வேண்டும். இந்தியர்களின் லைப் ஸ்டைலை மனதில் கொண்டு இன்னமும் பல பொருட்களை அறிமுகம் செய்ய விருப்பப்படுகிறோம். இன்னமும் அதிகமான பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். அதோடு, சுவாஸ் பிராண்டை வெளிநாடுகளுக்கும் கொண்டு செல்லும் திட்டம் இருக்கிறது.

எங்களது தயாரிப்புகள் வாடிக்கையாளர்களைத் திருப்தி படுத்துவதால், ஏற்கனவே வாங்கியவர்களே மீண்டும் எங்களது பொருட்களைத் தேடி வாங்குகின்றனர். இதனை நிச்சயம் பெருமையாக நாங்கள் கூறுவோம். ஏனென்றால் அந்தளவிற்கு தரமான பொருட்களைத்தான் நாங்கள் விற்பனை செய்து வருகிறோம். வெள்நாட்டுத் தரத்தில் இந்திய வாழ்க்கை முறைக்கு தகுந்த விலையில் பொருட்களை விற்பனை செய்வதே மக்களிடம் எங்களது பொருட்களுக்கு வரவேற்பு கிடைப்பதற்கு முக்கியக் காரணம், என்கிறார் சுதா.


இப்போதும்கூட மருத்துவத்தை முடித்து விட்டு ஏன் ஜவுளி தொழிலுக்கு வந்தீர்கள் என்ற கேள்வியை பல இடங்களில் எதிர்கொள்கிறாராம் சுதா. ஆனால்,

“இது நம் வாழ்க்கை. நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். நம் விருப்பப்படி அதனை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். செய்யும் தொழிலை விரும்பி செய்தால் மட்டுமே அதில் புதுமைகளைப் புகுத்தி வெற்றிகளை வசப்படுத்த முடியும்,” எனத் தீர்க்கமாக சுதா கூறுகிறார்.