அமெரிக்க விஞ்ஞான கழக இயக்குனராக தமிழர் சேதுராமன் பஞ்சநாதன் நியமனம்!
தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட Dr.சேதுராமன் பஞ்சநாதனை அமெரிக்க அதிபர் டொனாஸ்ட் ட்ரம்ப், இப்பொறுப்புக்குத் தேர்வு செய்துள்ளார். இவரின் பின்னணி மற்றும் தகுதிகள் பற்றி உங்களுக்கு...
அமெரிக்காவின் புகழ் பெற்ற தேசிய விஞ்ஞான கழகத்தின் இயக்குனராக இந்திய அமெரிக்க விஞ்ஞானியான டாக்டர்.சேதுராமன் பஞ்சநாதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்துள்ளார். தமிழரான இவர், ஏற்கனவே ஓபாமா அதிபராக இருந்த போது, இந்த கழகத்தின் தேசிய விஞ்ஞான வாரியத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
தேசிய விஞ்ஞான கழகம் (என்.எஸ்.எப்), அறிவியல் மற்றும் பொறியியல் சார்ந்த மருத்துவம் அல்லாத துறைகளில் ஆய்வு மற்றும் கல்விப் பணிகளை மேற்கொள்ளும் அமெரிக்க அரசின் அமைப்பாகும். இதே போல மருத்துவத்திற்கு, தேசிய சுகாதார கழகம் செயல்பட்டு வருகிறது.
டாக்டர்.சேதுராமன் பஞ்சநாதன் (58) ஆறு ஆண்டுகளுக்கு இந்த பொறுப்பை வகிப்பார். இந்த கழகத்தின் இயக்குனர் பதவி என்பது அமெரிக்க செனட்டால் நியமிக்கப்படுவதாகும்.
"டாக்டர்.சேதுராமன், இந்த பதவிக்கு ஆய்வு, புதுமையாக்கம், கல்வித் துறை நிர்வாகம் உள்ளிட்டவற்றில் செழுமையான அனுபவத்தை கொண்டு வருகிறார்,” என வெள்ளை மாளிகை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் கொள்கை இயக்குனர் கெவின் ட்ரோகிமியர் கூறியுள்ளார்.
சேதுராமன் பஞ்சநாதன் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை விவேகானந்தா கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தவர், அதன் பிறகு பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் மற்றும் சென்னை ஐஐடியில் அறிவியல் பிரிவில் உயர் கல்வி பயின்றார். பின்னர் அவர் கனடாவில் உயர் கல்வி பயின்றார்.
தற்போது பஞ்சநாதன், அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் செயல் துணை தலைவர் மற்றும் முதன்மை ஆய்வு, புதுமையாக அதிகாரியாக இருக்கிறார்.
பஞ்சநாதன், 2014ல், தேசிய விஞ்ஞான வாரியத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட்டு, அதன் ஆலோசனைக் குழு தலைவராகவும் செயல்பட்டிருக்கிறார். புதுமையாக்கம் மற்றும் தொழில்முனைவுக்கான தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் அவர் பொறுப்பு வகித்திருக்கிறார்.
"டிரம்ப் அரசாங்கம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் அமெரிக்காவின் முன்னணி நிலையை உறுதி செய்வதில் கவனம் செலுத்தி வரும் நிலையில், டாக்டர்.பஞ்சநாதனின் ஈடுபாடு, படைப்பூக்கம் மற்றும் ஆழமான புரிதல் தேசிய விஞ்ஞான கழகத்தை வழி நடத்த உதவும்,” என்று கெவின் ட்ரோகிமியர் கூறியுள்ளார்.
இன்னவேட்டர்களுக்கான தேசிய அகாடமியின் வியூக செயல்பாடுகள் துணைத் தலைவராகவும் பஞ்சநாதன் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் அதிபர் டிரம்ப், தேசிய விஞ்ஞான கழகத்தின் இயக்குனராக பஞ்சநாதனை நியமித்துள்ளார்.
என்.எஸ்.எப் இயக்குனராக நியமிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய கவுரவம் என டாக்டர்.பஞ்சநாதன் தெரிவித்துள்ளார்.
செய்தி பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்