நாசா வெளியிட்ட 2024 காலண்டர்; 5வது முறையாக அசத்திய பழனி மாணவிகள்!
நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள 2024 ம் ஆண்டு காலண்டரில் பழனி மாணவிகள் வரைந்த ஓவியம் இடம்பெற்றுள்ளது.
நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள 2024ம் ஆண்டு காலண்டரில் பழனி மாணவிகள் வரைந்த ஓவியம் இடம்பெற்றுள்ளது.
நாசா காலண்டர் போட்டி:
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உலக அளவிலான ஓவியப் போட்டியை நடத்தி வருகிறது. காலண்டரின் 12 பக்கங்களுக்கும் ஒவ்வொரு தலைப்புகள் கொடுக்கப்பட்டு, போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் தேர்வாகும் ஓவியங்கள் நாசா சார்பில் வெளியிடப்படும் காலண்டரில் அச்சிடப்படுகின்றன.
அதன்படி, 2024ம் ஆண்டுக்கான காலண்டர் ஓவியப்போட்டியை நாசா சில மாதங்களுக்கு முன்பு அறிவிந்திருந்தது.
இந்நிலையில், 2024ம் ஆண்டு காலண்டருக்கான போட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியில் உலகளவில் 194 நாடுகளில் இருந்து நான்கு வயது முதல் பன்னிரெண்டு வயதிற்குட்பட்ட லட்சக்கணக்கான குழந்தைகள் கலந்துகொண்டனர். 4 வயது முதல் 6 வயது, 7 வயது முதல் 10 வயது, 10 வயது முதல் 12 வயது வரை என மொத்தம் 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டுள்லன.
பழனி மாணவிகள் ஓவியம்:
திண்டுக்கல் மாவட்டம் பழனியருகே புஷ்பத்தூரில் ஸ்ரீ வித்யா மந்திர் என்ற தனியார் சிபிஎஸ்இ பள்ளி 5வது முறையாக தேர்வாகி சாதனை படைத்துள்ளது. இந்த பள்ளியில் 1ம் வகுப்பு படிக்கும் துகிலோவியா, 4வகுப்பு படிக்கும் லயாஷினி, 7ம் வகுப்பு படிக்கும் மாணவி தித்திகா ஆகியோர் வரைந்த ஓவியங்கள், 2024ம் ஆண்டின் நாசா விண்வெளி காலண்டரில் இடம்பெற்று சாதனை புரிந்துள்ளது.
இவர்கள் வரைந்த சூரிய குடும்பம், ராக்கெட் மற்றும் விண்வெளி கிராஃப்ட், விண்வெளியில் வீரர் ஆகிய தலைப்புகளில் வரையப்பட்ட ஓவியங்கள் நாசா வெளியிட்டுள்ள 2024ம் ஆண்டிற்கான காலண்டரின் அட்டைப்படத்தில் இடம் பெற தேர்வாகியுள்ளது. இதுகுறித்து பள்ளி தாளாளர் சாமிநாதன் கூறுகையில்,
“எமது பள்ளி ஆரம்பித்த காலத்தில் இருந்தே எங்கள் பள்ளி மாணவ, மாணவிகள் நாசா நடத்தி வரும் காலண்டர் போட்டியில் பங்கேற்று வருகின்றனர். கடந்த காலங்களில் பலமுறை வென்றுள்ளார்கள். இந்த முறை 4 வயது முதல் 6 வயதுக்கான பிரிவில் முதல் வகுப்பு மாணவி 3வது இடமும், 7 வயது முதல் 10 வயதுக்கான பிரிவில் 4ம் வகுப்பு மாணவி 3ம் இடமும், 10 வயது முதல் 12 வயது வரையிலான பிரிவில் 7ம் வகுப்பு மாணவி 2ம் இடமும் பிடித்துள்ளார்கள்,” என்றார்.
மேலும், இந்த ஓவியம் அச்சிடப்பட்ட காலண்டர்கள் தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வைக்கப்பட உள்ளன. உலகளவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவில் இருந்து 25 ஆயிரம் மாணவ மாணவிகள் பங்கேற்றதில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவிகளின் ஓவியம் தேர்வாகி சாதனை படைத்துள்ளனர்.
தொடர்ந்து 5வது முறையாக பழனி ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் ஓவியங்கள் நாசா விண்வெளி காலண்டரில் இடம்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஓவியம் வரைந்து சாதனை படைத்த மாணவிகளை பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.