திறமை இருந்தால், ஒரு ரூபாய் செலவின்றி கடல்கடந்து சென்று கல்வி பயில வழிகாட்டும் இளைஞர்!
வெளிநாடுகளில் சென்று படிக்க லட்சங்களில் ஆகும் என்ற பொய் பிரசாரங்களை உடைத்து, திறமை இருந்தால், முற்றிலும் இலவசமாக வெளிநாட்டில் படித்து, பணம் சம்பாதித்து சாமானிய ஏழைக் குடும்பங்களும் வாழ்க்கையில் உயரலாம் என்று காட்டியுள்ளார் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திக் மலைராஜ்.
தினம் தினம் பள்ளிக்கல்வி மற்றும் பொதுத்தேர்வு குறித்து புதிய அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. எது எப்படியோ, 5ம் வகுப்பிலிருந்தே இலக்குடன் படித்தால் மட்டும் தான் பெரிய படிப்புகளில் சேரமுடியும் என்று பெற்றோர்களும் நம்புகின்றனர். 12ஆம் வகுப்பு தேர்ச்சிக்குப் பின் பல மாணவர்களின் ஓரே குறிக்கோள் மருத்துவம் அல்லது இன்ஜீனியரிங். இதுதான் இன்றைய மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களின் ஓரே சிந்தனை. இதை விடுத்தால் கலை, அறிவியல் படிப்புகள் என ஓர் குறுகிய வட்டத்துக்குள்தான் நம்மால் பயணிக்க முடிகிறது.
மாணவர்களின் அறிவுக்கும், சிந்தனைக்கும் உரமளிக்கக் கூடிய கல்வியை நாம் வழங்காததே நமது நாடு இன்னும் வளரும் நாடாக இருப்பதற்கான முக்கியக் காரணம் என ஆதங்கம் தெரிவிக்கிறார் EURO EDWISE நிறுவனத்தின் நிறுவனர் கார்த்திக் மலைராஜ்.
ஐரோப்பிய நாடுகளைப் போன்ற முற்றிலும் இலவச உயர் கல்வியை நமது மாணவர்களும் பெற வேண்டுமென்ற சீரிய சிந்தனையின் வெளிப்பாடே அவரின் EURO EDWISE என்ற மாணவர்களுக்கான வெளிநாட்டு உயர்கல்வி ஆலோசனை நிறுவனம்.
தான் வெளிநாட்டில் பெற்ற இலவசக் கல்வி, மொழித்திறன், ஆளுமைத் திறன், தொழில்திறன் போன்றவற்றை தனது தாய்திருநாட்டின் ஏனைய சகோதர, சகோதரிகளும் பெற்று, தங்கள் வாழ்வில் மேன்மை அடையவேண்டும் என்பதற்காகவே இந்நிறுவனத்தை நடத்தி, வெளிநாட்டில் மாணவர்கள் முற்றிலுமாக இலவசமாக கல்வி கற்க ஏற்பாடு செய்து தருகிறார் கார்த்திக்.
இதுகுறித்து அவரை நாம் தொடர்பு கொண்டபோது, அகில உலகையும் இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்கவைத்த அறிவு ஜீவி, அணுசக்தி விஞ்ஞானி முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் பிறந்த மண்ணின் மைந்தன் என தன்னை பெருமையுடன் அறிமுகப்படுத்திக் கொண்டார் கார்த்திக் மலைராஜ்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானையில் இருந்து தொண்டி செல்லும் சாலையில் உள்ள உசிலான்கோட்டைதான் என் சொந்த ஊர். தந்தை மலைராஜ், தாயார் முத்துலட்சுமி. கூட்டுறவுத் துறையில் பணிபுரிந்து வந்த தந்தை நான் 5ஆம் வகுப்பு படிக்கும்போது, திடீரென காலமானார். அதற்குப் பிறகு எனது தாயார்தான் என்னையும், எனது சகோதர, சகோதரிகளையும் கஷ்டப்பட்டு படிக்கவைத்தார்.
வயல்வெளிகளில் அவ்வப்போது அம்மாவுக்கு உதவி செய்து, தட்டுத்தடுமாறி 12ஆம் வகுப்புவரை அரசுப் பள்ளியில் முடித்தேன். அதற்குப் பிறகு கல்லூரிக்கு போக வேண்டுமானால் அருகில் உள்ள டவுனுக்குப் போக வேண்டும் என்பதால் என்னை படிக்கவேண்டாம், விவசாயம் பார் என வீட்டில் கூறினா்.
ஆனாலும் நான் விடாப்பிடியாக போராடி, ஓர் கணிப்பொறி பயிற்சி நிறுவனத்தில் பகுதி நேரமாக பணிபுரிந்து, அந்தப் பணத்தில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் மாலைநேரக் கல்லூரியில் படித்து பி.காம் பட்டம் பெற்றேன். தொடர்ந்து எம்பிஏ படிக்க பெரும்பாடுபட்டு பணம் ஈட்டி, அதனையும் வெற்றிகரமாக படித்து முடித்தேன், என்றார்.
இதையடுத்து டிவிஎஸ் குழுமத்தில் நல்ல ஊதியத்தில் வேலையும் கிடைத்தது. கேரள மாநிலத்தில் வித்தியாசமான பழக்கவழக்கங்களைக் கொண்ட பகுதியில் பணிபுரிந்து வந்தேன். தொடர்ந்து, குளோபல் லிங்க் என்ற நிறுவனத்தின் மேலாளராக மாலத்தீவில் ஓராண்டு பணிபுரிந்து வந்தேன். அப்போது திடீரென எனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டேன். இதுதான் என் வாழ்வில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது என்கிறார்.
கையில் காசு இருப்பவர்களுக்குத்தான் கல்வி எனும் சூழலில், காசில்லாமல் அறிவு ஓன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு வாழ்வில் வெற்றி பெறலாம். வாழ்க்கையில் ஜெயிக்க பணக்காரனாக இருக்கவேண்டியதில்லை. ஏழையும் தனது திறமையால் வாழ்க்கையில் ஜெயிக்கலாம். வெளிநாடுகளில் ஓர் பைசா செலவில்லாமல் கல்வி பயின்று, பொருளீட்டலாம் என்பதை கார்த்திக் அறிந்துகொள்வதற்கான தருணம் அதுதான் என்கிறார்.
இவ்வளவு படித்துவிட்டு, நீ இங்கு இருக்கவேண்டாம். ஏதாவது வெளிநாட்டுக்குப் போ என எனது தாயார் கூறினார். இதையடுத்து நான் ஐரோப்பாவுக்கு செல்ல முடிவெடுத்து, இத்தாலி சென்றேன். அங்கு சென்றபின்தான் என் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது.
அங்கு கல்வி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது என்பதை அறிந்தேன். இதையடுத்து அங்கேயே ஐரோப்பிய பொருளாதாரம் மற்றும் அரசியல் குறித்து படித்தேன். படிக்கும் காலத்திலேயே இந்தியர்களுக்கான ஓர் குழுவை ஏற்படுத்தி மாதமொரு முறை அனைவரும் சந்தித்து, அவரவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை விவாதித்து அங்குள்ள இந்திய தூதரகம் மூலம் தீர்த்துவைப்பேன். அப்போதுதான் எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பு இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என முடிவு செய்து EURO EDWISE தொடங்கினேன் என்கிறார்.
பொதுவாக ஐரோப்பாவில் கல்வி கற்க பணம் தேவையில்லை. அதிலும் வெளிநாடுகளில் இருந்து அங்கே கல்வி கற்க வருபவர்களுக்கு உணவு, தங்குமிடம் உள்பட கல்வி முற்றிலும் இலவசம். கூடுதலாக கல்வியாண்டில் கட்டாயமாக ஏதேனும் ஓர் மொழியை மாணவர் பயில வேண்டும். மேலும், அந்நாட்டு மாணவர்களுடன் ஆறுமாதம் கலாச்சார பரிமாற்றம் செய்யவேண்டும். குறிப்பாக கல்வி பயிலும் போது, ஏதேனும் ஓர் பகுதி நேர வேலை கட்டாயமாக செய்யவேண்டும். அதற்குத் தனியாக ஊதியமும் வழங்கப்படும் என்பது தனிச்சிறப்பு.
எளிமையாக சொல்லவேண்டுமென்றால் ஓர் மாணவர் இங்கிருந்து கல்வி விசாவில் இத்தாலி, நார்வே, ஸ்வீடன், ஜெர்மன் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு படிக்கச் சென்றால், அந்நாடு இம்மாணவருக்கு இந்திய மதிப்பில் ரூ.5 லட்சத்தை ஆண்டொன்றுக்கு கல்வி உதவித்தொகையாக வழங்குவதோடு, படிக்கும்போதே பகுதி நேர வேலைவாய்ப்பையும் வழங்குகிறது.
மேலும், படிப்பு முடிந்த பிறகு கல்வி விசாவை, பணிநாடுவோர் விசாவாக மாற்றி, கூடுதலாக ஓராண்டு அந்நாட்டிலேயே வேலை தேடி சம்பாதிக்கவும் உதவுகிறது. அங்கு குறைந்தபட்சமாக மாதமொன்றுக்கு இந்திய மதிப்பில் சுமார் ஓன்றேகால் லட்சம் வரை சம்பாதிக்கலாம், என்றார்.
இவ்வளவு வாய்ப்புகள் ஐரோப்பிய நாடுகளில் கொட்டிக் கிடப்பது நமது இந்திய மாணவர்களுக்குத் தெரியாது. குறிப்பாக தமிழகத்தில் இதுகுறித்த விழிப்புணர்வு கிடையாது. நமக்குத் தெரிந்தது எல்லாம் மருத்துவம், பொறியியல்தான். அதிலும் காசு இருந்தால்தான் படிக்க முடியும் என்ற நிலை.
ஓர் ஏழை மாணவன், திறமை மட்டும் இருந்தால்போதும், ஒரு ரூபாய் செலவில்லாம் அவன் கடல்கடந்து சென்று கல்வி பயிலலாம் என்பதை சாத்தியமாக்கவே நான் இந்தியா திரும்பியவுடன் EURO EDWISE என்ற எனது உயர்கல்வி ஆலோசனை நிறுவனத்தை நிறுவினேன் என்கிறார்.
மேலும், இவர்கள் வெளிநாடுகளில் கல்வி பயில வரும் மாணவர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு வகுப்புகளை நடத்துவதோடு, பொருளாதாரத்தில் பின்பதங்கிய மாணவர்களுக்கு வெளிநாடு செல்லும் போக்குவரத்துச் செலவு, உடை, உணவு போன்றவற்றுக்காக வங்கிகளில் கடனும் பெற்றுத் தருகின்றனர். இதுகுறித்து மாணவர்களிடையே பெரும் விழிப்புணர்வு ஏற்படவேண்டும் என்பதே கார்த்திக்கின் ஆதங்கமாக இருக்கிறது.
வெளிநாடுகளில் சென்று படிக்க 20 லட்சம் ஆகும், 30 லட்சம் ஆகும் என்ற பொய் பிரசாரங்களை உடைத்து, திறமை மட்டும் இருந்தால் போதும், முற்றிலும் இலவசமாகவே வெளிநாட்டில் படித்து, பணம் சம்பாதித்து சாமானிய ஏழைக் குடும்பங்களும் வாழ்க்கையில் உயரலாம் என்கிறார் கார்த்திக் மலைராஜ்.
தமிழ்நாட்டில் எங்கோ ஓர் மூலையில் பிறந்து, கஷ்டப்பட்ட குடும்பத்தில் வந்த கார்த்திக் மலைராஜ் தனக்கான வெற்றி வழியை கண்டதை போல் இன்று தன்னைப் போல் தவிக்கும் மாணவர்களுக்கு உதவிட தன் அறிவையே முதலீட்டாக்கியுள்ள அவரின் பயணம் வெற்றி அடையட்டும்.
முயற்சித்துதான் பாருங்களேன் மாணவச் செல்வங்களே, பெற்றோர்களே, EURO EDWISE கார்த்திக்கை அவரின் அலுவலகத்துக்குச் சென்றோ அல்லது 75400 22025, 75400 22026 என்ற செல்போன் எண்களிலோ தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை அறிந்துகொள்ளலாம்.