முதல் தோல்வி, இறுதி தோல்வி அல்ல...

அண்ணா பல்கலைக்கழக பி.இ தேர்வு முடிவுகள் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில யதார்த்தங்கள் மற்றும் ஆலோசனைகள்!

முதல் தோல்வி, இறுதி தோல்வி அல்ல...

Monday February 19, 2018,

2 min Read

சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் முதலாம் ஆண்டு தேர்வு முடிவுகளை வெளியிட்டது. அந்த தேர்வு முடிவுகள் மூலம் செய்த ஆய்வில் பல வேதனை தரும் தகவல்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. அந்த தகவல்களை வைத்து சமூக வலைத்தளங்களிலும், பத்திரிகைகளிலும் பல கருத்துக்கள் பதிவு செயப்பட்டது. பலரும் பலகருத்துக்கள் கூறினாலும் ஒரு சில யதார்த்தமான உண்மைகளை பலரும் பதிவிட மறுக்கின்றார்கள். அந்த யதார்த்தமான உண்மைகளின் தொகுப்பு தான் இந்த கட்டுரை.

image


மதிப்பு இழக்கவில்லை!

இது போன்ற தகவல்கள் பரவும் பொழுது, பலரும் கூறும் கருத்து பொறியியல் அதன் மதிப்பை இழந்துவிட்டது என்பது தான். இது உண்மை அல்ல. ஒரு சில தகவல்கள் அடிப்படையில் பொறியியல் அதன் மதிப்பு இழந்துவிட்டது என்று கூற முடியாது. இன்னும் பல வேலைகளுக்கு பொறியியல் படித்த மாணவர்கள் தான் தேவைப்படுகிறார்கள். அதுமட்டும் இல்லமால், ஒரு சில மாணவர்களின் மதிப்பை வைத்துக் கொண்டு ஒரு படிப்பை குறை சொல்லுவது தவறான முறையாகும். பொறியியல் என்றும் அதன் மதிப்பை இழக்காது. அதை பயிலும் மாணவர்களின் தரத்தை பொறுத்தே அதன் மதிப்பு அமையும் என்பது பலரும் மறைக்கும் உண்மை.

கவலை வேண்டாம்!

முதலாம் ஆண்டு, முதல் தேர்வின் தகவல் வைத்து நாம் எதையும் கணித்து விட முடியாது. முதலாம் ஆண்டு முதல் தேர்வு என்பது எல்லா மாணவர்களுக்கும் வித்யாசமான அனுபவம் ஆகும். நீண்ட நெடிய காலம் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு, கல்லூரியின் முதலாம் ஆண்டு தேர்வு ஒரு புதிய அனுபவமாக அமையும். 

இந்த புதிய அனுபவத்தில் சறுக்கல்கள் இருப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. முதலாம் ஆண்டு தேர்வுகளில் தோல்வியை தழுவிய பலர், பின்னர் நன்கு படித்து நல்ல வேலையில் இருப்பது உண்மை. 

எனவே முதலாம் ஆண்டு தேர்வு முடிவுகள் வைத்து நாம் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது. இந்த தேர்வு முடிவுகள் பின்னர் வரும் தேர்வுகளில் எதிரொலித்தால் மட்டுமே நாம் கவனம் செலுத்த வேண்டும். பெரும்பாலும் மாணவர்கள் முதல் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொண்டு பின்னர் வரும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பது வழக்கம். எனவே மாணவர்களின் பெற்றோர்கள் இதை பற்றி கவலைப்படாமல், தங்கள் பிள்ளைகளை ஊக்கப்படுத்துவதே நல்லது.

முதல் தோல்வி!

முதல் தேர்வு முடிவுகள் மாணவர்கள் மத்தியில் பல மாற்றங்கள் உண்டாக்கி இருக்கும். குறிப்பாக எவ்வாறு தேர்வுக்கு படிக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டு இருப்பார்கள். இல்லை என்றால், கண்டிப்பாக கற்க வேண்டும். பள்ளியில் படித்த முறை கல்லூரி வாழ்க்கைக்கு சரிப்பட்டு வராது என்பதை மாணவர்கள் உணரவேண்டும். புத்தகத்தில் இருக்கும் எல்லாவற்றையும் மனப்பாடம் செய்யும் முறையை தவிர்க்க வேண்டும். அவ்வாறு மனப்பாடம் செய்தால், முழுமையாக படிக்க முடியாது. முழுமையாக எழுதவும் முடியாது. கல்லூரி தேர்வுகளில் வெற்றி பெற ஒரே வழி, புரிந்து படிப்பது. பாடத்தின் மையக்கருத்தை புரிந்து படித்து, வினாவுக்கு ஏற்றவாறு விடை எழுதினால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும் என்பதை மாணவர்கள் உணர வேண்டும். இவ்வாறு செய்யவில்லை என்றால் வரும் தேர்வுகளிலும் தோல்விகள் தொண்டரும். அதை தவிர்க்க முடியாது.

இவை அனைத்தும் சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால்,

• பொறியியல் அதன் மதிப்பை இழக்கவில்லை.
• பெற்றோர்கள் முதல் தேர்வு முடிவுகள் பற்றி கவலைப்பட வேண்டாம்.
• மாணவர்கள் பாடங்களை புரிந்து படிக்க வேண்டும்.
• பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
• மாணவர்கள் தோல்வியில் இருந்து கற்று திருத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்தால் நாம் நல்ல பொறியாளர்களை நான்கு ஆண்டுகள் கழித்து சந்திக்க முடியும்...

ஆல் தி பெஸ்ட்!!!

கட்டுரையாளர்: பிரவீன் குமார், ஒரு மென்பொறியாளர் மற்றும் பேச்சாளர். கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் அவரது சொந்த கருத்துக்கள். யுவர்ஸ்டோரி அதற்கு பொறுப்பேற்காது.