மீண்டும் Vedantu எடுத்த அதிரடி முடிவு - 385 ஊழியர்கள் பணிநீக்கம்!
எஜூடெக் எனப்படும் கல்வித் துறையில் சிறந்து விளங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனமான ’வேதாந்து’ தனது 385 ஊழியர்களை திடீரென பணியில் இருந்து நீக்கியுள்ளது.
எஜூடெக் எனப்படும் கல்வி துறையில் சிறந்து விளங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனமான 'வேதாந்து' '
' தனது 385 ஊழியர்களை திடீரென பணியில் இருந்து நீக்கியுள்ளது.கூகுள், மெட்டா, அமேசான், ட்விட்டர் போன்ற பெரு நிறுவனங்கள் தங்களது செலவினங்களை குறைப்பதற்காக பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வருகிறது. போதாக்குறைக்கு மறுபுறும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளி வீசி வந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் லேஆப் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சி கொரோனாவிற்குப் பிறகு முன்னேறி வருவதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனமான Vedantu சரிவை சமாளிக்க முடியாமல் தனது ஊழியர்களை அடுத்தடுத்து பணியை விட்டு நீக்கி வருவது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
கடந்த மே மாதம் 18ம் தேதி 485 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக ’வேதாந்து’ நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியும், இணை நிறுவனருமான வம்சி கிருஷ்ணா தனது சோசியல் மீடியா மூலமாக அறிவித்தார்.
அதற்கு முன்னதாக வேதாந்து நிறுவனம் 200 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது. கடந்த சில மாதங்களாக எவ்வித அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்த இந்நிறுவனம் தற்போது 385 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. மனித வளம், கற்பித்தல், கன்டெண்ட் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் வேதாந்து நிறுவனத்தில் தற்போது வேலை பார்த்து வரும் ஊழியர்களின் எண்ணிக்கை 3,300 ஆக குறைந்துள்ளது. மேலும், ஊழியர்களுக்கான 50 சதவீத சம்பளத்தை குறைப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
வேதாந்து நிறுவனம் சமீபத்தில் சுமார் 40 மில்லிய டாலர்கள் மதிப்பீட்டில் ஏஸ் கிரியேட்டிவ் லேர்னிங் (தீக்ஷா) நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்கியது. அதனைத் தொடர்ந்து ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
எஜுடெக் யூனிகார்ன் ஆன வேதாந்து நஷ்டங்களைக் தவிர்க்கவும், வேலைகள் மற்றும் விரிவாகத் திட்டங்களை குறைக்கவும், செலவினத்தை கட்டுப்படுத்தவும் பணி நீக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.
சமீபத்தில், இந்தியாவின் மிகவும் பிரபலமான எஜுடெக் நிறுவனமான பைஜூஸ் 2,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. இதற்கு நிறுவனத்தின் நஷ்டம் அதிகரித்து வருவது, செலவினங்களை குறைந்து மார்க்கெட்டிங் தந்திரங்களை அதிகரிக்கவும் பணி நீக்க நடவடிக்கைகளில் இறங்கியதாகக் கூறப்பட்டது. தயாரிப்பு, உள்ளடக்கம், ஊடகம் மற்றும் தொழில்நுட்பக் குழுக்கள் ஆகிய துறைகளில் பணியாற்றும் 5 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிடப்பட்டது.
கடந்த மாதம் அன்அகாடமி அதன் பணியாளர்களில் 10% அல்லது சுமார் 350 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. லிடோ லேர்னிங், உதய், சூப்பர் லேர்னிங், Crejo.Fun, Qin1 போன்ற பிற எஜுடெக் நிறுவனங்களும் பணிநீக்கத்தில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.
தமிழில் - கனிமொழி
ட்விட்டர், மெட்டா வரிசையில் கூகுள்; 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு!