எலிசா முதல் சாட்ஜிபிடி வரை- 9 | Cortana உருவான கதை!
சாட்பாட்களில் புதிய வகையாக உருவான ஸ்மார்ட்போன்களில் வீற்றிருக்கும் டிஜிட்டல் அல்லது மெய்நிகர் உதவியாளர் சேவைகள் பற்றி பேசும் போதெல்லாம், ஆப்பிள் சிரியை முதலில் குறிப்பிட்டு மைக்ரோசாப்டின் கார்ட்டனா, கூகுள் அசிஸ்டண்ட், அமேசான் அலெக்சா என தொகுப்பாக சொல்லும் வழக்கம் பரவலாக இருந்தாலும், Cortana-க்கும் தனி உருவாக்க கதை இருக்கிறது.
முதல் விஷயம் 'கார்ட்டனா', ’சிறி’ குரல்வழி உதவியாளர் சேவையின் போட்டியை சமாளிக்க உருவானதல்ல. Siri-யின் அறிமுகமும், ஆப்பிளின் ஐபோனில் அது ஒருங்கிணைக்கப்பட்டதும் மெயநிகர் உதவியாளர்கள் சேவையை பிரபலமாக்கியது என்றாலும், மைக்ரோசாப்ட் நிறுவனம் அதற்கு முன்பாகவே கார்ட்டனாவை உருவாக்கும் முயற்சியை துவங்கிவிட்டது.
அது மட்டும் அல்ல, Siri-க்கும், கார்ட்டனாவுக்குமான மூலம் ஒன்று தான். இது பற்றி பின்னர் பார்க்கலாம். இப்போது கார்ட்டனா பிறந்த கதைக்கு வருவோம்.
நோக்கியா காலம்
நோக்கியா என்றொரு நிறுவனம் செல்பேசி சந்தையில் கொடி கட்டிப்பறந்த காலம் நினைவிருக்கிறதா? நோக்கியா காலம் எனச் சொல்லக்கூடிய 1990-களின் பிற்பகுதியில் துவங்கி, புத்தாயிரமாண்டின் முதல் தசாப்தத்தின் முதல் பகுதி வரை சொல்லலாம்.
நோக்கியாவை இங்கே குறிப்பிடக் காரணம், அந்நிறுவனம் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து கொண்டிருந்த காலத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனமும் தன்பங்கிற்கு ஸ்மார்ட்போன்களுக்கான விண்டோஸ் இயங்குதள வரிசையை அறிமுகம் செய்தது.
ஸ்மார்ட் போன் சந்தையில், நோக்கியா, மைக்ரோசாப்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே எடுபடாமல் போயின என்றாலும், (நோக்கியாவின் செல்பேசி பிரிவை மைக்ரோசாப்ட் வாங்கி பின்னர் கைவிட்டது தனி தோல்வி கதை), நோக்கியாவின் என் வரிசை போன்கள் ஸ்மார்ட்போன்கள் வரிசையில் முன்னோடியாக அமைகின்றன.
லூமியா போன்
இந்த நிலையில், நோக்கியா லூமியா போனில் தான் கார்ட்டனா சாட்பாட் சேவை முதலில் அறிமுகமானது. உண்மையில் மைக்ரோசாப்ட் இதை ரகசியமாகவே வைத்திருந்தது. ஆனால், நிறுவன டெவலப்பர் ஒருவர் வைத்திருந்த லூமியா பழைய போன் மாதிரி எப்படியோ ஏல தளமான ’இ-பே’வில் விற்பனைக்கு வர, அதில் இருந்த அம்சங்களைக் கொண்டு, கார்ட்டனா எனும் பெயரில் புதிய உதவியாளர் சேவை அறிமுகமாகலாம் எனும் தகவல் இணைய உலகில் கசிந்து பரபரப்பாகப் பேசப்பட்டது.
2013ல் இந்தத் தகவல் கசிந்த நிலையில், அடுத்த ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது விண்டோஸ் போன் 8.1 வரிசையில் கார்ட்டனாவை உலகின் பார்வைக்குக் கொண்டு வந்தது. ஏஐ திறன் மூலம், பயனாளிகள் குரல் வழி கட்டளைகளை புரிந்து கொண்டு பதில் அளிக்கும் வகையிலும், இன்னும் பிற வழிகாட்டுதல்களை அளிக்கும் வகையிலும் கார்ட்டனா அமைந்திருந்தது.
குரல்வழி உதவியாளர் சேவை என்றால், அதற்கென ஒரு அடையாளமும் துடிப்பான குரலும் இருக்க வேண்டும் அல்லவா?
கார்ட்டனாவுக்கு ஜென் டெய்லர் என்பவர் குரல் கொடுத்திருந்தார். பெயரை பொருத்தவரை, மைரோசாப்டின் ஹாலோ வீடியோ கேம் வரிசை நாயகியான கார்ட்டனா பெயரே இந்த சாட்பாட்டிற்கு சூட்டப்பட்டது.
விண்டோஸ் போனும், மைக்ரோசாப்டுடன் கைகோர்த்த நோக்கியா போன்களும் ஸ்மார்ட்போன் சந்தையில் பெரிய அளவில் வெற்றி பெறாமல் போன நிலையில், கார்ட்டனா மைக்ரோசாப்டின் இயங்குதளம், கேமிங் சேவைகள், அலுவலக மென்பொருள் தொகுப்பு என எல்லாவற்றிலும் அவதாரம் எடுத்தது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்களிலும் அறிமுகம் ஆனது.
அடையாள சிக்கல்
சரியான அடையாளம் இல்லாத நாயகன் போல அதன் பிறகு கார்ட்டனா அவதிப்பட்டாலும், இணைய உலகில் பல்வேறு வடிவங்களில் எப்படியோ தாக்குப்பிடித்திருக்கிறது. இடையே அமேசான் அலெக்சாவுடனும் இணைந்து செயல்பட்டது. இன்னொரு பக்கத்தில், விண்டோஸ் மொபைல் இயங்குதளத்தை மைக்ரோசாப்ட் மூடியதயதோடு, விண்டோஸ் தேடல் உள்ளிட்ட பல சேவைகளில் கார்ட்டனாவை விலக்கிக் கொண்டது.
சாட்பாட்கள் போட்டியில் பலவிதங்களில் பின்னுக்கு தள்ளப்பட்டதை மீறி, கார்ட்டனாவை உருவாக்கிய குழு, மாபெரும் கனவுடனே அதற்கான முயற்சியில் ஈடுபட்டது.
கார்ட்டனாவின் கதை 2009ல் துவங்குகிறது. மைக்ரோசாப்ட் ஆய்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த லாரி ஹெக் மற்றும் ஜிக் செராபின் (Zig Serafin and Larry Heck) ஆகிய இருவரும் தான் கார்ட்டனா உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியவர்கள். அதற்கு முன்னரே மைக்ரோசாப்ட் ஆய்வு குழு, செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆய்வில் தீவிரம் காட்டியது. குறிப்பாக பேச்சு வடிவிலான உரையாடலில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு தொடர்பாக எரிக் ஹார்விட்ஸ் (Eric Horvitz) முக்கியப் பங்களிப்பை செய்திருந்தார்.
இந்த நிலையில் தான், உரையாடலை புரிந்து கொள்ளக்கூடிய உதவியாளர்கள் (CU ) சேவை திட்டத்திற்காக ஹெக் அழைக்கப்பட்டார். அப்போது அவர் மைக்ரோசாப்ட் தேடியந்திரமான பிங் பிரிவில் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். அப்போது சி.இ.ஓ-ஆக இருந்த ஸ்டீவ் பால்மர், நிறுவனத்தின் பேச்சறிதல் சார்ந்த அனைத்து ஆய்வு முயற்சிகளையும் ஒன்றிணைக்குமாறு கூறவே, இதற்கு பொறுப்பேற்றுகொண்ட ஜிக், ஹெக்கையும் குழுவில் இணைத்துக்கொண்டார்.
டிஜிட்டல் உதவியாளர்
டிஜிட்டல் உதவியாளர் சேவையை முழுவீச்சில் உருவாக்கும் இலக்குடன் இந்த குழு தனது பணியை துவக்கியது. பல்வேறு ஆய்வறிஞர்களும், முன்னணி பொறியாளர்களும் குழுவில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இதன் பயனாக உருவானது தான் 'கார்ட்டனா.'
கேள்விக்கு பதில் அளிப்பதுடன், பலவிதமான புத்திசாலி அம்சங்கள் நிறைந்ததாக கார்ட்டனா உருவாக்கப்பட்டது. பயனாளிகளுடன் தொடர்ந்து உரையாடும் போது அவர்களின் தேவை மற்றும் தன்மையை புரிந்து கொண்டு தானாகவே செயல்படும் திறனும் கார்ட்டனா பெற்றிருந்தது. உதாரணமாக பயனாளி ஒருவர், தினமும் வானிலை பற்றிய தகவல் கேட்பவராக இருந்தால், அடுத்த சில நாட்களில் அவர் கேட்காமலே வானிலை பற்றி சொல்லக்கூடியதாக கார்ட்டனா விளங்கியது.
ஆக இடைப்பட்ட காலத்தில் சிறி அறிமுகமான போது கார்ட்டனா அந்த போட்டிக்கு தயாராகவே இருந்தது. கார்ட்டனாவுக்கான கனவு ஹெக் மனதில் முன்னதாகவே துவங்கிவிட்டது என்பதும் இதற்கான காரணமாக இருக்கலாம்.
திசை மாற்றம்
மைக்ரோசாப்டில் ஆய்வாளராக இணைவதற்கு முன், ஹெக் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு ஆய்வு கழகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். இங்கிருந்த போது, கழகத்தின் பேச்சறிதல் மற்றும் குரலறிதல் தொடர்பான ஆய்வில் அவர் ஈடுபட்டிருந்தார். பின்னாளின் சிறி டிஜிட்டல் உதவியாளர் சேவைக்கு அடித்தளமாக அமைந்த கழகத்தில் கேலோ (CALO AI) திட்டத்திலும் அவர் முக்கியp பங்காற்றினார்.
குரல்வழி சேவையில் ஏஐ நுட்பத்தின் சாத்தியங்கள் பற்றி அறிந்ததாலேயே மைக்ரோசாப்ட் குழுவில் அவரால் கார்ட்டனாவை முழு முச்சுடன் வளர்த்தெடுக்க முடிந்தது.
இன்று சாட்ஜிபிடி உதவியுடன் மைக்ரோசாப்ட் தேடியந்திர பரப்பில் மீண்டும் முக்கிய சக்தியாக உருவெடுத்து கூகுளுக்கு சவால் விடுவது பற்றி பேசப்படும் நிலையில் கார்ட்டனா உருவான வரலாற்றை திரும்பிப் பார்ப்பது பொருத்தமாகவே இருக்கும். சாட்பாட்கள் பயணத்தில் சாட்ஜிபிடி பின்னர் பெரும் பாய்ச்சலாக நிகழ்ந்ததை புரிந்து கொள்ளவும் இந்த பின்னணி உதவும்.
மைக்ரோசாப்டின் கார்ட்டனா ஏஐ போட்டியில் பின் தங்கியது ஏன் என்பது மட்டும் ஆய்வுக்குறிய கேள்வி அல்ல, அதைவிட முக்கியக் கேள்வியாக மைக்ரோசாப்டின் இன்னொரு ஏ.ஐ. சாட்பாட் சேவையான ’டே’ (Tay) தொடர்பான கேள்வி அமைகிறது.
சாட்பாட்களின் வரலாறு தொடரும்.
Edited by Induja Raghunathan