‘உதிரி பாகங்கள் தயாரிப்பில் இவங்கதான் கிங்’ - 639 கோடி வருவாய் ஈட்டும் இந்திய ப்ராண்ட்!

மறைந்த பிரமோத் குப்தா சிறியளவில் தொடங்கிய உதிரி பாகங்கள் தயாரிப்புத் தொழில் 639 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் வணிகமாக வளர்ச்சியடைந்துள்ளது.

‘உதிரி பாகங்கள் தயாரிப்பில் இவங்கதான் கிங்’ - 639 கோடி வருவாய் ஈட்டும் இந்திய ப்ராண்ட்!

Wednesday June 09, 2021,

3 min Read

பிரமோத் குப்தா அரசாங்க வேலையில் இருந்தார். அந்த வேலை அவருக்குத் திருப்திகரமாக இல்லை. அவரது ஆர்வம் மொத்தமும் தொழில்முனைவில் இருந்தது. பிரமோத் தனது வீட்டின் மொட்டை மாடியில் சிறிய வொர்க்‌ஷாப் ஒன்றை அமைத்தார். எலக்ட்ரானிக் பொருட்களை வைத்துக்கொண்டு ஆராய ஆரம்பித்தார். ரேடியோக்களைப் பழுது பார்த்தார்.


இவரது தொழில்முனைவு ஆர்வம் 600 கோடி ரூபாய் வருவாய் ஈட்டக்கூடிய ஒரு நிறுவனத்தை உருவாக்கும் என்று இவர் நினைத்துக்கூட பார்க்கவில்லை.


பிரமோதின் தொழில்முனைவு முயற்சியில் உருவானதுதான் பிஜி எலக்ட்ரோபிளாஸ்ட் லிமிடெட் (PG Electroplast Limited - PGEL). பிரமோதின் வணிக முயற்சி 1977-ம் ஆண்டு தொடங்கப்பட்டிருந்தாலும்கூட PGEL 2003-ம் ஆண்டுதான் தாய் நிறுவனமாக நிறுவப்பட்டது.

1

நம்பிக்கையுடன் தொடங்கப்பட்ட முயற்சி

பிரமோத் டிரான்சிஸ்டர் தயாரித்தார். அதுமட்டுமல்லாது டிவி பழுது பார்க்கும் வேலையிலும் ஈடுபட்டார். வணிக முயற்சிக்கு தொழில்நுட்பத் திறன் மட்டுமல்லாது வணிக ரீதியான அறிவும் முக்கியம் என்பதை உணர்ந்தார். டெல்லி பல்கலைக்கழகத்தில் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை மேலாண்மை பிரிவில் டிப்ளமோ முடித்தார்.


முழு நேரமாக தொழில்முனைவில் ஈடுபட அரசுப் பணியை விட்டு விலகினார்.

”அந்த சமயத்தில் எத்தனையோ தடங்கல்கள் இருந்தாலும் என் அப்பா தனது முடிவில் உறுதியாக இருந்தார். உதிரி பாகங்கள் வழக்கமாக ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இதற்கு அதிக நேரம் எடுக்கும். தயாரிப்புப் பணிகள் தடைபடும். எனவே உள்நாட்டிலேயே இவற்றைத் தயாரிப்பது குறித்து அப்பா ஆலோசித்தார். பிளாக் அன்ட் வொயிட் டிவிகளுக்கான டிஃப்ளெக்‌ஷன் பொருட்கள் தயாரிக்கத் தீர்மானித்துத் தொழில் தொடங்கினார்,” என்கிறார் பிரமோத்தின் மகன் விகாஸ். இவர் PGEL நிர்வாக இயக்குநராக உள்ளார்.
2

மிகப்பெரிய சவால்கள்

முதல் தலைமுறை தொழில்முனைவராக பிரமோத் பல்வேறு சவால்களை எதிர்கொண்டார். தயாரிப்புப் பணிகளுக்கு சிறப்பு இயந்திரங்கள் தேவைப்பட்டது. அதிக முதலீடு தேவைப்பட்டது.


தயாரிப்புப் பணிகளுக்குத் தேவையான இயந்திரங்களை தானே வடிவமைத்துத் தயாரிக்க பிரமோத் முடிவெடுத்தார். PG தயாரிக்கும் உதிரிபாகங்களுக்கான தேவை Salora, Beltek, Televista, Crown போன்ற நிறுவனங்களிடையே இருந்தது. டிவி தயாரிப்பிற்குத் தேவையான பாகங்களை பிரமோத்தால் தயாரிக்க முடிந்தாலும் சந்தைப்படுத்துவதில் சிரமங்களை சந்தித்தார். காரணம் இந்த நிறுவனங்கள் பிரமோத்திடம் வாங்கத் தயக்கம் காட்டின.

“பிரபல பிராண்டுகள் ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளைச் சேர்ந்த பிரபல நிறுவனங்களிடமிருந்து பொருட்களை வாங்கி வந்தன. இதனால் புதிதாக அப்பாவிடம் வாங்கத் தயக்கம் காட்டின. அப்பாவிற்கு அவரது தயாரிப்புகளின் தரத்தில் நம்பிக்கை இருந்தது. அதனால் இந்த பிராண்டுகளிடம் வாரண்டி தருவதாக உறுதியளித்தார். பொருட்களில் ஏதேனும் சேதம் இருந்தால் புதிதாக மாற்றித் தருவதாகவும் பழுது பார்த்து சரிசெய்வதாகவும் உறுதியளித்தார்,” என்று விகாஸ் நினைவுகூர்ந்தார்.

பிரபல பிராண்டுகள் ஆரம்பத்தில் தயங்கினாலும் சிறியளவில் ஆர்டர் கொடுத்து முயற்சி செய்தன. அதில் திருப்தியடைந்ததைத் தொடர்ந்து அதிகளவில் ஆர்டர்கள் கொடுத்து வாங்கத் தொடங்கியுள்ளன.

3

டிவி பிராண்டுகளுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டதை அடுத்து PG நிறுவனம் 90-களில் முழுமையான டிவி செட் தயாரிப்புப் பணிகளைத் தொடங்கியது. 1995-ம் ஆண்டு இந்நிறுவனம் நொய்டாவில் முதல் தொழிற்சாலையைத் திறந்தது. இதன் முக்கிய வாடிக்கையாளராக ஒனிடா பிராண்ட் இணைந்துகொண்டது. 1997-ம் ஆண்டு கலர் டிவி தயாரிப்புப் பணிகளும் தொடங்கப்பட்டன.

செயல்பாடுகள் மாற்றியமைக்கபட்டன

2011-ம் ஆண்டு இந்திய டிவி தயாரிப்புத் துறை மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்தது. ஃப்ளாட் டிவி அறிமுகமானது. இதன் தயாரிப்புப் பணிகள் சீனாவை மையமாகக் கொண்டிருந்தது. இதனால் இவர்களது வணிகம் 70 சதவீதம் வரை பாதிக்கப்பட்டது.

இந்தச் சூழலை உணர்ந்து தொழிலைத் தக்கவைத்துக்கொள்ள PGEL நிறுவனம் பிளாஸ்டிக் மோல்ட் செய்யப்பட்ட பாகங்களைத் தயாரிக்க ஆரம்பித்தன. பிளாஸ்டிக் பொருட்கள் பெரிதாக இருப்பதால் இறக்குமதி செய்வது கடினமாக இருந்தது. இந்தப் பகுதியில் வாய்ப்பு இருப்பதை உணர்ந்து இந்நிறுவனம் இந்த முடிவை எடுத்தது.

PGEL அதே ஆண்டு ஐபிஓ வெளியிட்டது. 2016-ம் ஆண்டு ஏர் கூலர், ஏர் கண்டிஷனர், வாஷிங் மெஷின், சானிட்டரிவேர் போன்ற தயாரிப்புகளை பி2பி வணிக மாதிரியில் வழங்கத் தொடங்கியது.

4

கிரேட்டர் நொய்டாவில் மூன்று தொழிற்சாலை, ரூர்க்கியில் ஒன்று, அஹமத்நகரில் இரண்டு என இந்நிறுவனத்திற்கு சொந்தமான ஆறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

PGEL நிறுவனம் 2020 நிதியாண்டில் 639 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

பெருந்தொற்று சூழலிலும் வளர்ச்சி

பேக்கேஜிங், ஆட்டோமோடிவ், போக்குவரத்து, ஹெல்த்கேர், எலக்ட்ரானிக்ஸ், ரியல் எஸ்டேட் என பல்வேறு துறைகளில் பிளாஸ்டிக் தேவை அதிகரித்துள்ளது. இந்தப் பிரிவுகளில் வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்பிருக்கும் நிலையில் PGEL வளர்ச்சிப்பாதையில் பயணிக்கும் என்கிற நம்பிக்கை இருப்பதாக விகாஸ் தெரிவிக்கிறார்.


கடந்த ஆண்டு ஊரடங்கு சமயத்தில் முதல் காலாண்டில் எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இரண்டாம் காலாண்டில் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களுடன் தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டது.

ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட், எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகள் மீண்டதை அடுத்து PGEL வணிகமும் சூடு பிடிக்கத் தொடங்கியது.

தற்போது இரண்டாம் அலை பரவி வரும் சூழலில் குழுவினரின் பாதுகாப்பிற்கு இந்நிறுவனம் முக்கியத்துவம் அளிக்கிறது.

”வணிக ரீதியாக ஜூன் மாதம் முதல் நிலைமை படிப்படியாக சீராகும் என எதிர்பார்க்கிறோம். தற்போதைய மந்த நிலை தற்காலிகமானது. நீண்ட கால அடிப்படையில் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று நம்புகிறோம். விரைவில் இந்தச் சூழல் மாறி தேவை அதிகரிக்கும். வணிகமும் வளர்ச்சியடையும்,” என்கிறார் விகாஸ்.

ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா