உணவகம் நடத்தி 8 மாதங்களில் 25 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டிய பெண்!
‘நான் எப்போதும் பணத் தேவைக்கு மற்றவர்களை சார்ந்திருக்கக்கூடாது என்று நினைப்பேன்’ - வீட்டுச் சுவையில் உணவகம் நடத்தும் லலிதா.
தானேவைச் சேர்ந்தவர் லலிதா பாடீல். 35 வயதான இவருக்கு தொழில்முனைவில் ஈடுபாடு அதிகம். எனவே இவர் ‘கராச்சி ஆத்வன்’ (Gharachi Aathvan) என்கிற உணவகத்தைத் தொடங்கினார். இங்கு வீட்டில் தயாரிக்கப்படுவது போன்ற உணவு வகைகள் பரிமாறப்படுகிறது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வணிகங்கள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ள நிலையில் லலிதா தனது வணிகத்தில் ஒரு சில மாற்றங்களை அறிமுகப்படுத்தி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
“கராச்சி ஆத்வன்’ என்றால் ‘வீட்டை நினைவில்கொள்ளுதல்’ என்று அர்த்தம். நாங்கள் வீட்டில் தயாரிக்கக்கூடிய பாரம்பரியமான உணவு வகைகளை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றுள்ளோம். நிறைவான உணவு வகையை குறைந்த விலையில் வழங்குகிறோம்,” என்கிறார் `கராச்சி ஆத்வன்’ உணவகத்தின் நிறுவனர் லலிதா.
சுயதொழில்
தானேவில் பிறந்து வளர்ந்த லலிதா, இயற்பியல் பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்தார். கல்லூரிப் பருவத்தில் காதல் முளைத்தது. இருபது வயதில் திருமணம் நடைபெற்றது.
“நான் எப்போதும் பணத் தேவைக்கு மற்றவர்களை சார்ந்திருக்கக்கூடாது என்று நினைப்பேன். ஆரம்பத்தில் டியூஷன் எடுத்து வருவாய் ஈட்டி வந்தேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் முழு நேர பணியில் சேர்ந்தேன். ஆனால் அந்தப் பணியை விட்டு விலகிவிட்டேன்,” என்று கூறுகிறார்.
சுயமாக தொழில் தொடங்குவது குறித்து சிந்தித்தார். எந்தத் தொழிலில் ஈடுபடலாம் என்பது குறித்து அவர் தீவிரமாக ஆராய்ந்தபோது அவரது சமையல் திறனை பலர் பாராட்டியது நினைவிற்கு வந்தது.
2016-ம் ஆண்டு தானேவில் உணவு சமைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் டிஃபன் சர்வீஸ் தொடங்கினேன். ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த வணிகத்தை நடத்தி வந்தேன்,” என்று லலிதா நினைவுகூர்ந்தார்.
இவர் தனது வணிகத்தை வீட்டில் இருந்தவாறே நிர்வகித்து வந்தார். வேலைக்குச் செல்லும் மற்ற பெண்களுக்கு சமூகத்தில் கிடைக்கும் மரியாதை தனக்குக் கிடைப்பதில்லை என்பதே இவரது ஆதங்கமாக இருந்தது.
“ஒரு பெண் வீட்டில் இருந்து பணிபுரியும்போது அவர் இல்லத்தரசியாகவே பார்க்கப்படுகிறார்,” என்கிறார் லலிதா. எனவே வீட்டிலிருந்து செயல்பட அவர் விரும்பவில்லை. அதேசமயம் முதலீடு மிகப்பெரிய தடையாக இருந்தது.
ஒருமுறை செய்தித்தாளில் ஸ்டார்ட் அப் போட்டி குறித்த செய்தி ஒன்றை படித்தார். `பிரிட்டானியா மேரி கோல்ட் மை ஸ்டார்ட் அப்’ 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தொழில்முனைவில் ஈடுபட்டு நிதிச் சுதந்திரம் பெறவேண்டும் என்கிற இந்தியப் பெண்களின் கனவை நனவாக்குவதே இதன் நோக்கம். இதில் வெற்றி பெறும் 10 வெற்றியாளர்களில் ஒவ்வொருவருக்கும் 10 லட்ச ரூபாய் முதலீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
“நான் அந்தப் போட்டியில் பங்கேற்று வெற்றிபெற விரும்பினேன்,” என்கிறார் லலிதா.
இவர் 2019-ம் ஆண்டு அந்தப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். உணவுத் துறையில் செயல்படும் தனது ஸ்டார்ட் அப்பிற்கு இந்த முதலீட்டை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்பது குறித்து அவர் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தார்.
இடம் தேர்வு செய்யப்பட்டது
லலிதா டிஃபன் சேவை வழங்கி வந்த நாட்களிலேயே முறையாக உரிமம் பெற்றிருந்தார். சொந்தமாக உணவகம் தொடங்க ஒரு இடத்தை அமைக்கவேண்டியிருந்தது. அனைத்தையும் ஒருங்கிணைக்க அவருக்கு மூன்று மாத காலம் ஆனது.
“ஆறு லட்ச ரூபாய்க்குள் அனைத்தையும் சமாளிக்க விரும்பினேன். மீதமுள்ள தொகையை ரொக்கமாக வைத்திருக்கத் திட்டமிட்டேன். இந்த யோசனை ஊரடங்கு சமயத்தில் உதவியாக இருந்தது,” என்கிறார் லலிதா.
ஆரம்பத்தில் தனது பட்ஜெட்டிற்குள் கடையைக் கண்டறிவது கடினமாக இருந்துள்ளது. படிப்பு, பணி போன்ற காரணங்களால் வீட்டிற்கு வெளியே தங்கியுள்ளவர்களுக்கு சேவையளிக்கும் விதத்தில் சரியான இடத்தில் கடையை அமைக்க திட்டமிட்டார்.
“வீட்டில் தயாரிக்கப்படும் உணவை குறைந்த விலையில் வழங்க விரும்பினேன்,” என்றார் லலிதா.
2019-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி சிறிய உணவகம் திறக்கப்பட்டது. உணவகம் திறந்த அன்று 1,200 ரூபாய் வருமானம் கிடைத்தது. அப்போதிருந்து வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோதும் வருவாய் தொடர்ந்து அதிகரித்தது.
மாத வருவாயாக 3 – 3.5 லட்ச ரூபாய் ஈட்டப்படுவதாக லலிதா தெரிவிக்கிறார். ஊரடங்கு சமயத்திலும் இந்த வருவாய் குறையவில்லை என்கிறார். கடந்த எட்டு மாதங்களில் 25 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலத்திற்கான திட்டமிடல்
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கராச்சி ஆத்வன் உணவகம் செயல்பட முடியாமல் போனது. ஆனால் லலிதா இந்த அறிவிப்பால் துவண்டு போகவில்லை. அவர் முறையாக திட்டமிட்டார்.
லலிதா மருத்துவ ஊழியர்கள், மருந்தக உரிமையாளர்கள், ஹாஸ்டல் போன்ற இடங்களில் தங்கியுள்ள ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் போன்றோருக்கு சேவையளிக்கத் தொடங்கினார். உணவகங்கள் மூடப்பட்டதால் இவர்கள் சமைக்கவோ வெளியில் சென்று சாப்பிடவோ முடியாமல் அவதிப்பட்டுள்ளனர். எனவே இவர்களுக்கு உணவு வழங்கத் தொடங்கியுள்ளார்.
“எனக்குப் பரிச்சயமான மருந்து விநியோகிப்பவர்கள் சிலருக்கு லஞ்ச் பார்சல் வழங்கத் தொடங்கினேன். இது பலருக்கும் தெரிந்து உணவு கேட்கத் தொடங்கினார்கள். தற்போது கிட்டத்தட்ட 50-100 பேருக்கு என் சமையலறையில் இருந்து உணவு வழங்கப்படுகிறது,” என்கிறார் லலிதா.
இவ்வாறு இவரது வணிக நடவடிக்கைகள் ஊரடங்கு சமயத்திலும் தடைபடாமல் நடந்து வருகிறது. இந்த சேவையின் மூலம் நாள் ஒன்றிற்கு 8,000 முதல் 15,000 வரை ஈட்டப்படுவதாக லலிதா தெரிவிக்கிறார். “சில பார்சல்களை நானும் என் கணவரும் சென்று டெலிவர் செய்வோம். சிலர் எங்கள் கிச்சனுக்கு வந்து வாங்கிச் செல்கின்றனர்,” என்றார்.
அதுமட்டுமின்றி லலிதா வாடிக்கையாளர்களுக்கு பாத்திரங்களைக் கொடுத்து உதவுகிறார்.
“இன்றைய சூழலில் அவர்களுக்கு தட்டு, ஸ்பூன் போன்றவை கிடைக்காது என்பதால் கிண்ணம், தட்டு, ஸ்பூன் போன்றவற்றை அவர்களிடம் கொடுத்துள்ளேன். ஊரடங்கு முடியும் வரை அவர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள்,” என்றார்.
ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு எட்டு பேர் இவரிடம் வேலை பார்த்து வந்துள்ளனர். தற்போது லலிதா தனியாகவே அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். லலிதாவின் கணவர் தேவைப்படும்போது உதவுகிறார். அனைத்து ஊழியர்களுக்கும் தொடர்ந்து சம்பளத்தின் ஒரு பகுதியை வழங்கி வருகிறார்.
எதிர்காலத் திட்டம்
13 வயது குழந்தைக்குத் தாயான லலிதா மும்பை மற்றும் அதன் புறநகர் பகுகளில் கூடுதல் உணவகங்கள் திறப்பதற்காக 60 லட்ச ரூபாய் நிதித்தொகையை எதிர்நோக்கியுள்ளார்.
“தொழிற்சாலைப் பகுதிகளிலும் ரயில் நிலையங்களிலும் குறைந்தபட்சமாக ஐந்து கராச்சி ஆத்வன் உணவகம் திறக்க விரும்புகிறேன். அடுத்த ஐந்தாண்டுகளில் 15 அவுட்லெட் திறப்பதை இலக்காகக் கொண்டுள்ளேன்,” என்றார்.
கராச்சி ஆத்வன் வெறும் உணவகம் அல்ல. அது லலிதாவின் கனவு. அவர் வருங்காலத்தில் தன்னை இல்லத்தரசியாக இல்லாமல் வணிகத் தலைவராக அடையாளப்படுத்திக்கொள்ளவே விரும்புகிறார்.
“பிஸ்லெரி என்றாலே மினரல் வாட்டர் என்பதுபோல் வீட்டில் சமைக்கப்பட்ட உணவு என்றாலே மக்களுக்கு என்னுடைய நினைவு வரவேண்டும் என்று விரும்புகிறேன்,” என்றார் லலிதா.
ஆங்கில கட்டுரையாளர்: ராஷி வர்ஷ்னி | தமிழில்: ஸ்ரீவித்யா