சாலைகளில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு உதவி, மறுவாழ்வு அளிக்கும் ஈரோடு பேராசிரியை!
சாலையில் ஆதரவற்று தவிப்பவர்களை மீட்டு, உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்து மறுவாழ்வு கொடுக்க ஜீவிதம் ஃபவுண்டேஷன் நிறுவியுள்ளார் ஈரோடைச் சேர்ந்த பேராசிரியை மனிஷா கிருணமூர்த்தி.
மனிஷா கிருஷ்ணசாமி ஈரோடு பகுதியில் உள்ள கல்லூரியில் பேராசிரியர். இவரது அப்பா மட்டன் ஸ்டால் வைத்து தொழில் செய்கிறார். இவரது அம்மா இல்லத்தரசி.
“என் அப்பா 14 வயதில் இருந்து இறைச்சி கடையில் வேலை பார்க்கிறார். மாமிசங்களை வெட்டுவது கஷ்டமான வேலை. உடலை வருத்தி வேலை செய்வதால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது,” என்றார் மனிஷா.
அப்பாவின் கஷ்டத்தைப் பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ மனிஷாவால் மற்றவர்களின் கஷ்டத்தை எளிதாகப் புரிந்துகொள்ள முடிந்தது. மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்ய விரும்பினார்.
மனிஷாவிற்கு ராணுவத்தில் சேர விருப்பம் இருந்தது. ஆனால் சமூகக் கட்டுப்பாடுகளும் குடும்பத்தினர் கொடுத்த அழுத்தமும் அதற்குத் தடை போட்டது. மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்கிற விருப்பத்தால் நர்சிங் படிக்கத் தீர்மானித்து பி.எஸ்சி நர்சிங் படித்தார்.
சாலையோரம் வசிப்பவர்களுக்கு உதவினார்
சாலையோரங்களில் வசிப்பவர்களின் நிலையைக் கண்டு வருந்திய மனிஷா அவர்களுக்கு ஒரு வேளை உணவு கொடுக்க ஆரம்பித்தார்.
“என்னால் ஒரு வேளை உணவை மட்டுமே கொடுக்க முடிந்தது. சாலையோரம் வசிப்பவர்களை வெயில், மழை போன்றவற்றில் இருந்து பாதுகாக்க வேண்டியிருந்தது,” என்றார்.
இவர்களுக்கு பராமரிப்பு இல்லங்களோ அரசு மருத்துவமனைகளோ அடைக்கலம் கொடுப்பதில்லை. இதனால் உணவு, உடை, சுகாதார உதவி என இவர்களது அடிப்படைத் தேவைகள்கூட பூர்த்தி செய்யப்படுவதில்லை.
தனிநபராக செயல்படுவதைக் காட்டிலும் என்ஜிஓ-க்களுடன் இணைந்து செயல்படுவதால் பலருக்கும் உதவமுடியும் என்பதை மனிஷா உணர்ந்தார். பல என்ஜிஓ-க்களுடன் இணைந்துகொண்டு பல்வேறு நலப்பணிகளில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் சொந்தமாக அறக்கட்டளை தொடங்கத் தீர்மானித்தார். 2018-ம் ஆண்டு ஜீவிதம் ஃபவுண்டேஷன் (Jeevitham Foundation) என்கிற பெயரில் பதிவு செய்தார்.
சொந்த பந்தங்களால் கைவிடப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதே இந்த ஃபவுட்னேஷனின் நோக்கம். முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என பலரை இந்த ஃபவுண்டேஷன் மீட்டு மறுவாழ்வு அளிக்கிறது.
சாலையோரங்களில் இருந்து மீட்கப்படுபவர்களுடன் ஆதரவாக பேசி அவர்களது தேவைகளையும் பின்னணியையும் ஃபவுண்டேஷனைச் சேர்ந்தவர்கள் புரிந்துகொள்கிறார்கள். முதலில் இவர்களது உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்கள்.
“அவர்களது குடும்பத்தினர் குறித்த தகவல்கள் ஏதாவது கொடுத்தால் அவர்களைத் தொடர்புகொள்கிறோம். உறவினர் யாரும் இல்லாதவர்களை பராமரிப்பு இல்லத்திற்கு அனுப்பி வைக்கிறோம். வேலை செய்யும் நிலையில் இருப்பவர்கள் சொந்த காலில் நிற்க உதவும் வகையில் வேலை கிடைக்க உதவுகிறோம்,” என்று மனிஷா விவரித்தார்.
செக்யூரிட்டி, துப்புரவு பணி, கட்டுமான வேலை போன்ற வேலைகள் வாங்கிக் கொடுக்கப்பட்டு தங்குமிடமும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
ஆதரவற்றோர்களுக்கு புதுவாழ்வு
சாலையில் ஆதரவின்றி தவிப்பவர்கள் பராமரிப்பு இல்லங்களில் தங்கவைக்கப்படுவதில்லை.
“ஒருவருக்கு உதவி தேவைப்படுவது தெரிந்தால் உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு அவருக்கு உதவ என்ஓசி பெற்றுக் கொள்கிறோம். அவர்களை சுத்தப்படுத்தி ஃப்ரெஷ்ஷாக உணர வைக்கிறோம்,” என்கிறார் மனிஷா.
ஈரோடு சுற்றுவட்டாரப்பகுதிகள் மட்டுமல்லாது திருப்பூர், சேலம் போன்ற பகுதிகளில் இருந்தும் இதுவரை 260-க்கும் மேற்பட்டோர்களுக்கு இந்த ஃபவுண்டேஷன் மறுவாழ்வு அளித்துள்ளது. ஈரோடைச் சுற்றியுள்ள ஏழு இல்லங்களுடன் இணைந்து செயல்படுகிறது ஜீவிதம் ஃபவுண்டேஷன்.
உணவு, உடை, பயணச் செலவு, தூய்மைப்படுத்தும் செலவு என ஒரு நபருக்கான மாதாந்திர பராமரிப்பிற்கு சுமார் 10,000 ரூபாய் செலவிட வேண்டியிருக்கிறது.
இந்த ஃபவுண்டேஷன் சமூக வலைதளங்கள் மூலம் நன்கொடை திரட்டி செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சமீபத்தில் ‘மிலாப்’ கூட்டுநிதி பிரச்சார தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதுவரை 90,000 ரூபாய் நிதி திரட்டியுள்ளது.
கோவிட்-19 பாதிப்புகள்
மனிஷா லாக்டவுன் சமயத்தில் அரசு அனுமதியுடன் சாலையோரம் வசிப்பவர்களுக்கு முகக்கவசம், சோப்பு, ஹேண்ட்வாஷ், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொடுத்து உதவியுள்ளார்.
“நான் வண்டியை நிறுத்தியதும் பலர் என்னைச் சூழந்துகொண்டார்கள். கொரோனா வைரஸ் பரவும் சூழலில் இதுபோல் மக்கள் கூடுவது பாதுகாப்பற்றது என்பதை நான் அறிவேன். ஆனால் நாம் அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருக்கும் நிலையில் இவர்கள் மட்டும் சாலையில் கஷ்டப்படுகிறார்களே என்று வருந்தினேன்,” என்றார்.
இவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய நினைத்தார். கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் அங்கு தங்கவைக்க உதவுமாறு கமிஷனரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இவரது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. விரைவிலேயே அருகிலுள்ள பள்ளியில் சுமார் 84 பேர் தங்கவைக்கப்பட்டனர்.
அவர்களுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டு பள்ளி வளாகத்திலேயே கம்யூனிட்டி சமையலறை ஏற்பாடு செய்யப்பட்டது.
இதுதவிர அங்குள்ளவர்களுக்கு மூலிகை டீ வழங்கப்பட்டது. உடற்பயிற்சி வகுப்புகளும் பொழுதுபோக்கு அம்சங்களும்கூட ஏற்பாடு செய்யப்பட்டது.
“ஒரு பெண்ணாக இத்தகைய முயற்சிகளில் நான் ஈடுபடுவதை என் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஏற்கவில்லை. குடும்பத்தினரும் ஆதரவளிக்கவில்லை,” என்று வருத்தம் தெரிவிக்கிறார் மனிஷா.
இவரது நண்பர்கள் சிலர் பாராட்டினாலும் இவரது முயற்சிகளில் இணைந்துகொள்ள முன்வரவில்லை.
வருங்காலத் திட்டம்
மனிஷா வரும் நாட்களில் சொந்தமாக இல்லம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளார்.
இல்லத்தில் தங்க வைக்கப்படுபவர்களுக்கு இயந்திரம் வாங்கிக் கொடுத்து பாக்கு மரத்தினால் ஆன தட்டுகள், டம்ளர்கள் போன்றவற்றை தயாரிக்க உதவவும் மனிஷா திட்டமிட்டுள்ளார்.
இவற்றை அடுத்த இரண்டாண்டுகளில் செயல்படுத்த விரும்புகிறார். சொந்த செலவில் இது சாத்தியமில்லை என்பதால் நிதி திரட்டவும் திட்டமிட்டுள்ளார்.
“சாலையோரம் உள்ள ஏழை மக்களுக்கு உதவவேண்டும் என்கிற ஆர்வம் இருந்தாலும் அதற்குத் தேவையான பணம் என்னிடம் இல்லை. நான் ஊக்கத்துடன் செயல்படத் தேவையான வலிமையையும் மகிழ்ச்சியையும் தொடர்ந்து என் ஃபவுண்டேஷன் எனக்குக் கொடுக்கிறது,” என்று நம்பிக்கையுடன் குறிப்பிடுகிறார் மனிஷா.
ஆங்கில கட்டுரையாளர்: அஞ்சு அன் மேத்யூ | தமிழில்: ஸ்ரீவித்யா