'ஊரூர் - ஆல்காட் குப்பம் கலை விழா'- முட்டுச்சந்துகளையும் எட்டும் கலைஞர்கள்!
“சென்னைக்குள்ள ஊரூர் குப்பம்-னு ஒரு ஊரு இருக்கறதே இது வரைக்கும் பலருக்கு தெரியல. இந்த கலை விழா எங்களுக்கு ஒரு அடையாளத்த குடுத்திருக்கு...”,
என்று பெருமிதத்துடன் இந்த விழாவைக் கொண்டாடுகிறார் ஊரூர் குப்பத்தின் கூட்டுறவு சங்கத்தலைவர் பாளையன். சென்னையின் பிரபல பெசன்ட் நகர் கடற்கரையின் ஒரு பகுதி தான், மீனவர்கள் வசிக்கும் ஊரூர் ஆல்காட் குப்பம்.
2014-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் 'ஊரூர்-ஆல்காட் குப்பம் கலை விழா', சபைக்குள் அடைந்து கிடக்கும் கலைகளையும், கலைஞர்களையும் அனைத்து விதமான ரசிகர்களுக்கும் அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சி. அது மட்டுமில்லாமல், சுமார் 300 வருடங்கள் பழமை வாய்ந்த ஊரூர் குப்பத்தின் மதிப்பையும், மக்களையும் உலகிற்கு அடையாளப்படுத்தும் விதத்தில் இவ்விழா வடிவமைக்கப்பட்டுள்ளது.
எல்லோரும் ரசிக்கலாம்:
ஒரு கலை உருவாகும்போது எந்தவித ஏற்றத்தாழ்வுகளுடனும் உருவாகுவதில்லை. ஆனால் அது ரசிகர்களை வந்து சேருவதற்குள் வெவ்வேறு கண்ணோட்டங்களின் காரணமாக சமூகரீதியாக பிரிவினைகளை சந்திக்கிறது. பலவிதமான கலைகளுக்கும் ஒரு சமமான மேடையை இந்த 'ஊரூர்-ஆல்காட் குப்பம் கலை விழா' ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக சங்கீதம், திரை இசை, பரதநாட்டியம், கிராமிய கலைகளான கட்டைகூத்து, பறையாட்டம், வில்லுப்பாட்டு, குழந்தைகளின் இசை என பல்வேறு விதமான கலைகளை புதுமையான ரசிகர்களுக்கு இவ்வருடம் இந்த விழா கொண்டு சேர்க்கவுள்ளது (நிகழ்ச்சி நிரல் கீழே). இவ்விழாவை நடத்தத் தேவையான நிதியை, எந்த கார்ப்பரேட் குழுமத்தின் உதவியும் இல்லாமல், முழுக்க முழுக்க தனிப்பட்ட நபர்களின் மூலமாக திரட்டப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர்களும், தன்னார்வ தொண்டர்களும் இணைந்து இவ்விழாவை குறைந்த பட்ஜெட்டில் லாபநோக்கமில்லாமல் செயல்படுத்துகின்றனர். பிப்ரவரி 13–ஆம் தேதி நடைபெற்ற இவ்விழாவின் அவுட்ரீச் நிகழ்ச்சியின்போது பாடகர் டி.எம்.கிருஷ்ணாவின் கச்சேரியின் அன்று, மேடையின் அருகே வைக்கப்பட்டிருந்த நிதி திரட்டும் உண்டியலில் மட்டுமே 42000 ரூபாய் சேர்ந்துள்ளது.
மாறும் மனநிலைகள்:
“குப்பம் என்றாலே ஆபத்தான பகுதி. சுத்தமாக இருக்காது. குற்றங்கள் நடக்கும் இடம் என்று அனைவரும் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் இங்கிருக்கும் மக்களும் எல்லோரையும் போல தொழில் செய்து, தங்கள் குடும்பங்களை பராமரித்து, ஒன்று கூடி வாழும் ஒரு சமூகம் தான் என்ற புரிதல் ஏற்பட வேண்டும். கர்நாடக சங்கீதத்தை சபாக்களுக்குள்ளேயே ரசித்த ரசிகர்கள் இன்று திறந்த வெளியில், கடலின் ஓசையுடன், குப்பத்தின் அருகே அமர்ந்து ரசிக்க விரும்பி வருகின்றனர். இதன் மூலம் சமூகங்களை இணைக்க ஒரு மேடை கிடைத்துள்ளது”
என்கிறார் இவ்விழாவின் ஒருங்கிணைப்பாளரும் சமூக ஆர்வலருமான நித்யானந்த் ஜெயராமன்.
எல்லா கலைகளும் உயர்ந்த கலை தான்:
இந்த கலை விழாவின் முக்கிய ஒருங்கிணைப்பாளரான பாடகர் டி.எம்.கிருஷ்ணா தமிழ் யுவர்ஸ்டோரியிடம் அளித்த பேட்டியில்,
“இந்த ஊரூர்-ஆல்காட் குப்பம் கலை விழா கலைகளை ஒன்று சேர்க்கவும், கலைகள் மூலமாக மக்களை ஒன்று சேர்க்கவும் வடிவமைக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட கலை மட்டுமே உயர்ந்தது என்ற எண்ணத்தை தகர்த்து, எல்லாக் கலைகளும் உயர்ந்தவையே, எல்லா உயிர்களும் உயர்ந்தவையே என்பதை இவ்விழாவின் மூலம் வலியுறுத்த விரும்புகிறோம். எல்லா கலைகளுமே நமது மனதை ஆழமாக தொடும் சக்தியை கொண்டுள்ளன. பலவிதமான ரசிகர்களை வேற்றுமை இன்றி, விதிமுறைகள் இன்றி, ஒரே கடற்கரை மணலில், கலை மயக்கத்தில் காணும்பொழுது ஒரு கலைஞனுக்கு கிடைக்கும் சந்தோஷம் அலாதி தான்” என்று பூரிக்கிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைப்பெற்று வரும் இந்த விழாவில் பங்குபெற, பல பிரபல இசைக்கலைஞர்களும் ஆர்வம் காட்டிவருவது கூடுதல் சிறப்பு.
விதிமுறைகள் இங்கு இல்லை:
“கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் சில இடங்களில், சபாக்களில் பல நிபந்தனைகள் விதிக்கப்படும். மொபைல் பயன்படுத்தக் கூடாது; சிறிய குழந்தைகளுக்கு அனுமதி இல்லை; அருகில் இருப்பவரோடு பேசக்கூடாது. எனவே, அது ஒரு குதூகலமே இல்லாத கட்டுப்பாடுடனான அனுபவமாக அமைந்து விடுகிறது. ஆனால், இந்த விழா ரசிகர்களுக்கு நிம்மதியான ஒரு சூழலை உருவாக்க முற்படுகிறது. கலைஞர்கள் பாடும்போது அருகில் குழந்தைகள் குதூகலமாக விளையாடிக் கொண்டிருப்பார்கள். பின்னணியில் கடலின் ஓசை காதுகளுக்கு இனிமையை சேர்க்கும். நீங்கள் நடந்துகொண்டேகூட இசையை ரசிக்கலாம். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் எழுந்து செல்லலாம். ரசிகருக்கான முழு சுதந்திரமும் உங்களுக்கு இங்கே உண்டு.” என்கிறார் நித்யானந்த்.
குழந்தைகள் இல்லாத விழாவா?
குழந்தைகளும் இந்த விழாவில் பங்குபெறுகிறார்கள். சென்ற வருடம் சென்னையை உலுக்கிய மழைவெள்ளத்தைப் பற்றி வில்லுப்பாட்டு பாடவிருக்கின்றனர் ஊரூர் குப்பத்தை சேர்ந்த 20 குழந்தைகள். இந்த நிகழ்ச்சிக்காக குழந்தைகளுக்கு பயிற்சியளித்து வரும் வெரோனிகா ஏஞ்சல் கூறுவதாவது,
“இந்த குழந்தைகளுக்கு பயிற்சியளிக்கும்போது அவர்கள் கற்றுக்கொள்வதை விட அவர்கள் நமக்கு கற்றுக்கொடுப்பது தான் அதிகம். அவர்கள் கேட்கும் பல கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இருக்காது. குழந்தைகளின் எண்ணங்களை விரிவுப்படுத்தும் மேடையாக இந்த விழா திகழ்கிறது” என்கிறார்.
ஊரூர் குப்பத்தின் கூட்டுறவு சங்கத்தலைவர் பாளையன் கூறுகையில்,
“எங்க குப்பத்துல சுமார் 500 - 600 குடும்பங்கள் வாழுது. எங்க குப்பத்து குழந்தைங்களுக்கும் நெறைய கனவு இருக்கு. இந்த விழா மூலமா அவங்க திறமையையும், கனவுகளையும் வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தணும்” என்கிறார்.
நிகழ்ச்சி நிரல்:
பிப்ரவரி 20 - காயத்ரி வெங்கடராகவன் பாட்டு, வீ.வீ.எஸ்.முராரி (வயலின்), பீ.சிவராமன் (மிருதங்கம்), ஹரிஹர ஷர்மா (கஞ்சிரா), இடம்: அயோத்யா மண்டபம், மேற்கு மாம்பலம், மாலை 6.30 மணிக்கு.
பிப்ரவரி 21 - பெசன்ட் நகர் கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி, காலை 6.30 மணி முதல். (எல்லோரும் பங்குபெறலாம். விவரங்கள் கீழே)
பிப்ரவரி 27 - ரகு திக்ஷித் இசை, பறையாட்டம், க்ஷீஜித் கிருஷ்ணா குழுவினரின் பரதநாட்டியம் மற்றும் குழந்தைகள் வழங்கும் வில்லுப்பாட்டு, இடம்: எல்லையம்மன் கோவில், பெசன்ட் நகர், மாலை 5.30 மணிக்கு.
பிப்ரவரி 28 - குழந்தைகளின் குழு இசை, விஜய் சிவா பாட்டு மற்றும் ஷியான் ரோல்டன் மற்றும் நண்பர்கள் வழங்கும் இசை. இடம்: எல்லையம்மன் கோவில், பெசன்ட் நகர், மாலை 5.30 மணிக்கு.
கடற்கரையை சுத்தம் செய்யும் முயற்சி:
இவ்விழாவின் ஒரு பகுதியாக, சென்னை மழை வெள்ளத்தில் மக்களுக்கு உதவிய மீனவர்களுக்கு நன்றி சொல்லும் வகையில், மீனவ சமூகம் வசிக்கும் ஊரூர் ஆல்காட் குப்பத்தை சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த முயற்சியில் பங்குபெற அனைவரும் வரவேற்கப்படுகின்றனர். பங்குபெற விரும்புவோர் காலை 6 மணிக்கு பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் உள்ள தலைப்பாக்கட்டி உணவகத்தின் முன் ஒன்றுகூட வேண்டும்.
கலை என்பது ஒரு தனிப்பட்ட சமூகம் அல்லது குறிப்பிட்ட மக்களைச் சார்ந்தது என்ற பலகால நம்பிக்கைகளை உடைத்தெறிந்து, எல்லோரையும் மகிழ்விக்க உண்டானதே உன்னத கலைகள், என்பதை இது போன்ற நிகழ்வுகள் ஊர்ஜிதப்படுத்துகிறது என்றே சொல்லவேண்டும். இந்த புதிய முயற்சிகள் தொடர நமது வாழ்த்துகள்!
மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
இது போன்ற சமூக அக்கறை முயற்சிக் கட்டுரைகள்:
ஒடிசாவில் மலையின மக்களுக்காகத் துவக்கப்பட்ட சமூக நிறுவனம்!
அவசர உதவிகளுக்கு வழிகாட்டி உயிர் காக்கும் உன்னத முயற்சி!