4 ஆண்டுகளில் 7 கிளைகள்: 28 வயதில் ப்ரீ ஸ்கூல் ப்ராண்டை மும்பையில் நிறுவிய சுவிதா சேகர்!

பெரும் நஷ்டத்திற்கு பிறகும் விடா முயற்சியுடன் தொடர்ந்து தொழில் முனைவராக வளர்த்துள்ள நெல்லை பெண்!

4 ஆண்டுகளில் 7 கிளைகள்: 28 வயதில் ப்ரீ ஸ்கூல் ப்ராண்டை மும்பையில் நிறுவிய சுவிதா சேகர்!

Thursday April 05, 2018,

3 min Read

இன்று பலர் சுயதொழிலை கையில் எடுத்து பலருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றனர். அதில் பலர் லாபம் ஈட்டக்கூடிய புதுமையான தொழிலை கையில் எடுக்க, சிலர் கடும் போட்டி நிலவக்கூடிய துறைகளில் நுழைந்து சவால்களுக்கு இடையில் சாதித்தும் வருகின்றனர்.

அந்த வகையில், கல்வித்துறையில் குறிப்பாக ப்ரீ ஸ்கூல்கள் பல இருப்பினும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு மத்தியில் தனக்கென ஒரு முத்திரியை பதித்து 'Williez Pre-School' என்ற பிராண்டை மும்பையில் நிறுவி அதை பல கிளைகளாக விரிவாக்கி வெற்றி அடைந்துள்ளார் 28 வயதான தமிழ் பெண் சுவிதா சேகர். 

சுவிதா சேகர்

சுவிதா சேகர்


திருநெல்வேலியைச் சேர்ந்த மும்பையில் பிறந்து வளர்ந்த சுவிதா ஒரு முதல் தலைமுறை தொழில்முனைவர். எம் காம், எம் எட் படிப்பை முடித்துவிட்டு தற்பொழுது லயோலா கல்லூரியில் பிஎச்டி படிப்பை தொடர்ந்து வருகிறார். தான் பள்ளி படிக்கும் காலத்திலேயே தன் தொழில்முனைவுப் பயணத்தை துவங்கிவிட்டார் சுவிதா.

“நான் 10ஆம் வகுப்பு முடித்தவுடனே வீட்டில் டியூஷன் எடுக்க துவங்கிவிட்டேன். அதுவே என் தொழில் முனைவின் தொடக்கம். கல்லூரியில் சேர்ந்த பின்பும் டியூஷன் எடுப்பதை தொடர்ந்து அதுவே Williez ஆரம்பிக்க ஓர் அடித்தளம்,” என ஆரம்பக் கால பயணத்தை பகிர்கிறார் சுவிதா.

தொடர்ந்து நான்கு வருடம் பள்ளி குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்துவந்த அவர் தனது கல்லூரி இறுதி ஆண்டில் 2009-ல் ப்ரீ ஸ்கூல் ஒன்றை வீட்டிலேயே துவங்கினார். ஏற்கனவே கல்வி சம்மந்தப்பட்ட துறையில் ஈடுபட்டு இருந்ததால் அதை சார்ந்த தன் தொழிலை விரிவாக்க நினைத்து தன் முதல் பள்ளியை திறந்தார். மேலும் வீட்டில் இருந்தே செய்ததால் அதற்கு எந்த வகையான முதலீடும் தேவைப் படவில்லை என தெரிவித்தார்.

“நான் என் தொடக்கக் கல்வியியை தமிழில் தான் படித்தேன் அதனால் மேல் படிப்பின்போது ஆங்கிலத்தில் படிக்க சற்று சிரமமாக இருந்தது. நன் வசித்து வந்த இடத்திலும் பலர் இதை போன்று தான் இருந்தனர். அதனால் சிறு வயதில் இருந்தே ஆங்கிலத்திற்கான விழிப்புணர்வை அளிக்க விரும்பினேன்,”

என ப்ரீ ஸ்கூல் தொடங்குவதற்கு முக்கியமாய் அமைந்த காரணத்தை விளக்குகிறார்.

ஆனால் பெரியதாய் தொழில்முனைவர் ஆக வேண்டும் என்று தனக்கு எந்த கனவும் அப்பொழுது இல்லை என தெரிவித்தார். இதைத் துவங்கி ஒரு வருடம் ஆன நிலையில் அதை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தும் நோக்கில் பிரத்தியேகமாக ஓர் மையம் அமைக்க வேண்டும் என முடிவு செய்தார். ஒரு சிறந்த இடத்தை தேர்ந்தெடுத்து லிட்டில் ஸ்டார்ஸ் என்னும் ப்ரீ ஸ்கூலை நிறுவினார் சுவிதா.

புது மையம் துவங்கினாலும் டியூஷன் எடுப்பதை நிறுத்தவில்லை சுவிதா, ஒரு நாளுக்கு 150 மாணவர்களுக்கு படிப்பு சொல்லி கொடுத்து அதில் நல்ல வருமானத்தை பெற்றார் இவர்.

“தொடக்கத்தில் 3 வருடம் நஷ்டத்தில் தான் என் பள்ளி இயங்கி வந்தது. டியூஷனில் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் 3 வருட செலவை பார்த்துக்கொண்டேன். சில சமயம் இதை மூடிவிடலாம் என நினைத்தது உண்டு...”

ஆனால் எடுத்ததை பாதியில் விடக்கூடாது என மீண்டும் புது முறையில் முயற்சிக்கலாம் என முடிவு செய்ததை பகிர்ந்தார். மூன்று வருடத்திற்கு பிறகு கற்றல் முறையை மாற்றி மொத்த மையத்தின் அமைப்பையும் மாற்றி ஒரு பிராண்டாக ப்ரீ ஸ்கூலை உருவாக்கினார். Williez என பெயர் மாற்றி புதுமையுடன் சுவிதாவின் ப்ரீ ஸ்கூல் வெளிவந்தது. அப்படி தொடங்கிய பள்ளி, தற்பொழுது 7 கிளைகளாக ’வில்லிஸ் ப்ரீ ஸ்கூல்’ என மும்பையில் வளர்த்துள்ளார்.

தான் முதல் தலைமுறை தொழில்முனைவர் என்பதால் நிதி ரீதியாகவும் எந்த வகையிலும் சுவிதாவிற்கு ஆதரவு கிடைக்கவில்லை. தன் சொந்த முயற்சியில் தனி ஆளாக இதை உருவாக்கியுள்ளார்.

Williez ல் அப்படி என்ன புதுமை?

“மும்பையில் பெரும்பாலும் ப்ரீ ஸ்கூல் என்றால் கேட்ஜெட்டுகளை பயன்படுத்தி கற்பிக்கின்றனர். ஆனால் வில்லிசில் அது போன்று இல்லாமல் செயல் முறையில் குழந்தைகளுக்கு கற்பித்தோம். வெறும் ஏ,பி,சி,டி க்கு முக்கியத்துவும் கொடுக்கும் பள்ளி அல்ல இது,” என்கிறார்.

இந்த புது முயற்சி பெற்றோர்கள் இடத்திலும் நல்ல வரவேற்பை அளித்துள்ளதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அடுத்து அடுத்து ஏழு கிளைகளை நான்கு வருடத்தில் துவங்கிவிட்டார். இன்னும் விரிவாக்கப் போவதாகவும் ஆனால் பொறுமையாக தான் அதை நடைமுறை படுத்தப்போவதாக தெரிவிக்கிறார். 

சுவிதா ஷேகர் -  சிறந்த தொழில்முனைவர் விருது

சுவிதா ஷேகர் -  சிறந்த தொழில்முனைவர் விருது


அளவை விட தரம் தான் முக்கியம் எனவும் அதில் ஒரு போதும் எந்த ஒரு குறையும் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

இந்தத் துறையில் போட்டி அதிகம் இது சரியாக வராது என பலர் விமர்சித்துள்ளனர். அதற்காகவே இதை வெற்றிப் பாதையில் கொண்டு வர வேண்டும் என முயற்சி செய்துள்ளார் இவர். மேலும் போட்டியாளர்கள் இருக்கும் இடத்தில் தான் தன் கிளைகளை திறந்துள்ளார். அப்பொழுதுதான் பெற்றோர்களுக்கு இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் தெரியும் என சிரிக்கிறார் சுவிதா.

ஒரு பெண் தொழில்முனைவராய் வளர்ந்து வரும் இவர் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பை தர வேண்டும் என உறுதியாக இருக்கிறார். வில்லிஸின் அனைத்து கிளைகளிலும் பெண் ஊழியர்களை மட்டுமே பணிக்கும் அமர்த்தியுள்ளார்.

“இதற்கு பெண்ணியம் என்று பொருள் இல்லை; திருமணம் மற்றும் குழந்தைகள் பெற்ற பிறகு பல பெண்களால் வேலைக்குச் செல்ல முடிவதில்லை. அவர்களுக்கு ஏற்றவாறு நேரத்தை ஒதுக்கி வேலை செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறேன்,” என்கிறார்.

எதுவரை என்னால் பெண்களை மட்டும் வைத்து பணியை நடத்த முடியுமோ அதுவரை செய்வேன் என்கிறார். தற்பொழுது ஒரு கிளையில் 100 குழந்தைகள் வரை இருக்கின்றனர். இரண்டு பகுதிகளாக பிரித்து மையத்தை நடத்தி வருகிறார். வாரம் ஒரு முறையாவது அனைத்து பள்ளிகளையும் பார்வையிட்டு வருகிறார் சுவிதா.

image


இந்த வெற்றியை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் நான்காம் வகுப்புவரை உள்ள CBSE பள்ளியை துவங்கியுள்ளார். வரும் கல்வி ஆண்டு முதல் இயக்கத்திற்கு வரவிறுக்கிறது இந்த பள்ளி. விரைவில் மும்பையை தாண்டி மற்ற இடங்களிலும் வில்லிஸ் ப்ரீ ஸ்கூலை நிறுவும் நோக்கில் இருக்கிறார் இவர்.

தோல்வியை கண்டு துவண்டுப்போகாமால் இளம் வயதிலேயே வைராக்கியத்துடன் செயல்பட்டு வெற்றிப்பாதையை அமைத்துக்கொண்டுள்ளார் இந்த பெண்!