தன் வீட்டில் சேமித்த மழைநீரால் பஞ்சத்திலும் டென்ஷன் ஃப்ரீயாக இருக்கும் சென்னைவாசி ரவிராஜா!
சென்னையே தண்ணீருக்காக அல்லாடினாலும் தனது வீட்டுற்குத் தேவையான நீரை மழைகாலத்திலேயே சேமித்து வைத்துவிட்டார் வி.கே.ரவிராஜா. அதிலும் இவர் சேமித்து வைத்திருக்கும் 1500 லிட்டர் மழைநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீரை விட தூய்மையானது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
தண்ணீர் தண்ணீர் என்று தினந்தோறும் அல்லாடிவருகின்றனர் சென்னை மக்கள். மழை பொய்த்ததால் நீர்நிலைகள் வறண்டதோடு நிலத்தடி நீர்மட்டமும் கீழே இறங்கி விட்டதால் செய்வதறியாது காலிக்குடங்களுடன் அலைந்து திரிகின்றனர் சென்னைவாசிகள்.
ஆனால் ராஜகீழ்ப்பாக்கம் பகுதியிலுள்ள வாசுகி தெருவில் வசிக்கும் வி.கே.ரவிராஜா இந்தக் கவலை ஏதும் இல்லை. 48 வயதாகும் இவர், காப்பீட்டு ஆலோசகராக பணியாற்றியுள்ளார். ரவிராஜா வீட்டில் அவர், அவருடைய மனைவி மற்றும் 2 பிள்ளைகள் என 4 பேர் வசிக்கின்றனர். கடந்த ஆண்டு மழையின் போதே இவர்கள் ஆயிரம் லிட்டர் நீரை சேமித்து வைத்துவிட்டனர்.
2009ம் ஆண்டில் 1000 சதுரஅடியில் தனதுவீட்டை கட்டி இருக்கிறார் ரவிராஜா, ஆனால் 2014-15ம் ஆண்டில் தான் முறையான மழைநீர் சேகரிப்பை வீட்டில் செயல்படுத்த முடிவு செய்திருக்கிறார். ஏதோ கடமைக்கு என்று செய்யாமல், ஒரு மழை நீர் சேகரிப்பு தொட்டியல்ல 4 மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை தனது வீட்டில் அமைத்திருக்கிறார் இவர்.
மழை நீரை சேகரிக்க பெரிய செலவு செய்து தொட்டிகளை அமைக்க வேண்டியதில்லை. என்னுடைய வீட்டில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த நீர் சேகரிப்பு தொட்டி(overhead tank) 7,500 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இதனை இரண்டாக பிரித்தேன். 4500 லிட்டர் கொள்ளளவு பகுதியை மழை நீருக்காகவும், 3000 லிட்டர் கொள்ளளவை போர்வெல் அல்லது நகராட்சி நீருக்காகவும் ஒதுக்கினேன். தொட்டிக்கு மேலே உள்ள துளை மூலம் குழாய் வழியாக நீர் சறுக்கி தொட்டிக்குள் சேகரிக்கும்படியாக தயார் செய்து அதனை மழை நீர் சேகரிப்பு தொட்டியில் பொருத்தினேன்.
”அனைவராலும் எளிதில் செய்யக்கூடிய வேலை தான் இது. குழாய் வழியாக சேகரிப்பு தொட்டியை தண்ணீர் சென்றடையும் போது சுத்தமான நீராக சேமிப்பதற்காக தூசுத் துகள்களை வடிகட்டும் விதமாக வெள்ளைத் துணியை குழாயின் அடிப்பகுதியில் கட்டி வைத்திருக்கிறேன். தூசுகளை வடிகட்டும் துணியையும் நான் அடிக்கடி மாற்றுவேன். இதனால் வண்டல் அழுக்குகள் படிவதற்கான வாய்ப்புகளே இல்லை,” என்கிறார் ரவிராஜா.
ஜுன் 2019 வரை ரவிராஜா 1,500 லிட்டர் குடிநீரை தன்னுடைய நீர் சேகரிப்புத் தொட்டியில் மழை மூலம் சேமித்து வைத்திருக்கிறார். 2019-20ல் 3000 லிட்டர் மழை நீரை சேமிக்க இவர் திட்டமிட்டிருக்கிறார். மழை நீர் சேகரிப்பு தொட்டியில் இருந்து சமையலறைக்கு பைப் வசதி செய்திருக்கிறார் ரவிராஜா, இங்கும் மழைநீர் வடிகட்டப்பட்டு சுத்தமான நீர் வரும்விதமாக குழாயில் துணி வடிகட்டியை பொருத்தி இருக்கிறார். இந்த சுத்தமான நீரை 150 நாட்கள் வரை பயன்படுத்தலாம், என்று கூறுகிறார் இவர்.
ரவிராஜாவின் குடும்பத்தினர் நாள்தோறும் 8–10 லிட்டர் வரையிலான மழை நீரை அன்றாட தேவைக்கு பயன்படுத்துகின்றனர். அண்மையில் 40 நிமிடங்கள் தொடர்ந்து பெய்த மழையின் போது 20 லிட்டர் மழை நீரை இவர்கள் சேமித்து வைத்துள்ளனர்.
சென்னையில் அடுத்து ஒரு ரவுண்டு மழை வந்தால் தன்னுடைய மழை நீர் சேகரிப்பு தொட்டி நிரம்பிவிடும் என்று சந்தோஷமாக சொல்கிறார் ரவிராஜா.
மழை நீர் தூய்மையாக இருக்குமா? 6 மாதங்கள் வரை மழை நீரை சேமித்து வைத்து பயன்படுத்த முடியுமா என்றெல்லாம் பலருக்கு சந்தேகம் எழும் அதற்கான பதில்களை ரவிராஜாவே பகிர்ந்து கொண்டார்.
“சுத்தமான மழைநீரை சேமித்துவைக்க முடியும். 1,500 லிட்டர் மழை நீரையும், 3 ஆயிரம் லிட்டர் நகராட்சி நீரையும் ஒரே டேங்கில் நான் தனித்தனியே சேமித்து வைத்துள்ளேன். சூரிய வெளிச்சம் உள்புகாதபடியும், பாசி ஏற்படாத வகையிலும் தொட்டியை நன்கு அழுத்தி மூடிஅமைத்துள்ளேன். மழை இல்லாத நாட்களில் நீர் தொட்டியை பாலிஎத்திலின் ஷீட்டுகளைக் கொண்டு மூடிவிடுவேன், இது தொட்டிக்குள் அழுக்குகள் புகாத வண்ணம் பாதுகாக்கும். மழை பெய்தால் அந்த ஷீட்டை அகற்றிவிடுவேன்,” என்கிறார் ரவிராஜா.
எங்கள் பகுதியில் நகராட்சி நீர் அல்லது போர்வெல் நீர் இரண்டுமே வெளிர் மஞ்சள் நிறத்தில் உப்பு படிந்தே இருக்கும். இவை டேங்கின் அடிப்பகுதியில் தேங்கி இருக்கும். இந்த உப்பு படிமங்கள் சில நேரங்களில் பைப்பில் அடைத்துக்கொண்டு நீர் வெளியேற்றத்திற்கு தடையாக இருக்கும். ஆனால் நான் சேகரித்து வைத்துள்ள மழைநீர் தூய்மையானது. இதன் டிடிஎஸ் அளவு 10மி.கி/லி. போர்வெல் மூலம் எடுக்கும் நீரில் 2,000 மி.கி /லி என்ற அளவில் டிடிஎஸ் இருக்கிறது. இதனை ஆர்ஓ(RO) முறையில் சுத்திகரிப்பு செய்தால் டிடிஎஸ் 100–200+ என்ற அளவில் இருக்கும்.
நீர் சேகரிப்பு தொட்டியை அடிக்கடி நாங்கள் சுத்தம் செய்வோம் அதிலும் குறிப்பாக பருவமழை காலத்தில் தினசரி கூட சுத்தம் செய்வோம், இது தான் நாங்கள் மேற்கொள்ளும் உண்மையான பராமரிப்பு பணி என்கிறார்.
நீரை சுத்திகரிப்பு செய்து பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆர்.ஓ. சுத்திகரிப்பு எந்திரத்தின் விலை, அதன் பராமரிப்பு, சுத்திகரிப்பிற்காக பயன்படுத்தும் வேதிப்பொருள், நீர் சுத்திகரிப்பின் போது வீணாக்கப்படும் நீர் என இவை அனைத்தையும் மனதில் கொண்டே ஆர்ஓ நீர் சுத்திகரிப்பை நான் விரும்பவில்லை. அதே சமயம் சுத்திகரிப்பு செய்யாத நீரை பயன்படுத்தினால் உடல்நலனில் பாதிப்பு ஏற்படுகிறது. அண்மையில் நான் மழைநீர் சேகரிப்புத் தொட்டியை ஆய்வு செய்தேன், அதில் சேமிக்கப்பட்டுள்ள மழை நீர் தெள்ளத்தெளிவாக ஜொலிக்கும் வைரத்தை போல காணப்பட்டது என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார் ரவிராஜா.
மொட்டைமாடியில் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் சேகரிப்பு தொட்டி மட்டுமின்றி நிலத்தடியிலும் 13,000 லிட்டர் மழை நீர் சேகரிப்பு தொட்டியை அமைத்துள்ளார். மாடியில் இருந்து வீணாக வெளியேறும் மழை நீர் இந்த தொட்டியில் சேகரிக்கப்பட்டு பொதுபயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படுகிறது.
சென்னை நகரின் பெரும்பாலான வீடுகள் செய்திருப்பதைப் போல மாடியில் இருந்து மழைநீர் வெளியேறுவதற்காக வைத்துள்ள குழாயை நிலத்தடி நீர்தேக்க தொட்டியோடு இணைத்துள்ளார் ரவிராஜா. இதனால் இங்கும் மழை நீர் சேகரிக்கப்படுகிறது.
மழை நீர் சேகரிப்பைத் தவிர ரவிராஜா செய்துள்ள மற்றொரு அட்டகாசமான நீர் சேகரிப்பு என்பது போர்வெல் நீர்மட்டத்தை ரீசார்ஜ் செய்வது.
“போர்வெல் பைப்பை சுற்றி 2 அடிக்கு குழி அமைத்தோம். மூடப்படாமல் இருக்கும் அந்தப் பகுதியில் இருந்த குழாயில் துளைபோடும் இயந்திரம் மூலம் சிறுசிறு துளைகளை போட்டு பைப்பை நைலான் துணியால் மூடிவிட்டோம். மழைநீர் மட்டும் இந்தத் துளைகள் வழியாக போர்வெல்லிற்கு செல்லும், அழுக்குகள் மற்றும் தூசுகள் நைலான் துணியில் வடிகட்டப்பட்டுவிடும். இந்த போர்வெல்லை அடிக்கடி திறந்து பார்க்கும் விதமாக இரும்பு மூடி கொண்டு மூடியுள்ளோம்,” என்கிறார் ரவிராஜா.
மழை நீர் சேகரிப்பிற்காக பல சூப்பர் செயல்களைச் செய்துள்ள ரவிராஜா தனது வீட்டின் காம்பவுண்டை சுற்றி விழும் ஒரு சொட்டு மழை நீர் கூடி வீணாகாமல் அவையும் சேமிக்கப்படும் விதமாக மினி ரீசார்ஜ் போர்வெல்களை அமைத்துள்ளார். ஊர்ப்புறங்களில் சொல்வார்களே உரை கிணறு அதைத் தான் இவர் தனது காம்பவுண்டில் அமைத்துள்ளார்.
6-8 அடி உயரத்தில் குழி தோண்டி அமைக்கப்பட்டுள்ள இந்த உரை கிணற்றில் வீட்டின் சுற்றுப்புறத்தில் விழும் மழைத்துளிகள் இதில் சேகரிக்கப்படும்படியாக அமைத்துள்ளதாகச் சொல்கிறார் இவர்.
வீட்டைச் சுற்றி புழக்கத்தில் இருக்கும் இடங்களை சிமெண்ட் வைத்து பூசாமல் ஹாலோ பிளாக்குகளை பதித்துள்ளார். அதையும் கூட சிமெண்ட் கொண்டு பூசவில்லை. முழுவதும் பூசிவிட்டால் பூமிக்கு எப்படி தண்ணீர் கிடைக்கும் அதனால் அதை அப்படியே விட்டுவிட்டேன். மழைநீர் சேகரிப்பு திட்டத்திற்காக நான் பெரிய அளவில் எந்த செலவும் செய்துவிடவில்லை.
கொத்தனாரை வைத்தே செய்துவிடும் வேலை தான், துளை போடுவது, பைப்களில் வெள்ளை நிற துணியை பொருத்துவது என சிறுசிறு வேலைகள் தான் என்பதால் அதிக பணம் செலவிடத் தேவையில்லை என்கிறார் ரவிராஜா.
மழை நீர் சேகரிப்பு மட்டுமல்ல இவர் இரண்டு விதமான பயோ கேஸ் உலைகளையும் அமைத்துள்ளார். சமையலறையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளில் இருந்து கேஸ் தயாரிப்பது மற்றொன்று மனிதக் கழிவுகளில் இருந்து கேஸ் தயாரிக்கும் பலூன் பயோகேஸ் உலை. இந்த 2 வகை பயோ கேஸ்கள் மூலம் வீட்டிற்கு தேவையான 2 மணி நேர எரிபொருள் கிடைக்கிறது. கேஸ் உற்பத்திக்குப் பிறகு திடக்கழிவுகள் உரமாகவும், திரவக் கழிவுகள் செடிகளுக்கு பூச்சிக்கொல்லிகளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதே போன்று ரவிராஜா தன்னுடைய வீட்டில் 2 கிலோவாட் சோலார் பவர் பேனல்களை அமைத்துள்ளார். இதன் மூலம் தினசரி 8 யூனிட் மின்சக்தி அவருடைய வீட்டிற்கு கிடைக்கிறது.
2001ம் ஆண்டு மழைநீர் சேகிரப்பு நமது மாநிலத்தில் கட்டாயமாக்கப்பட்டது. இதனால் சில ஆண்டுகள் நிலத்தடி நீர் மட்டம் குறைவதில் இருந்து தப்பிக்க முடிந்தது. ஆனால் அதனை தொடர்ந்து முறையாக கடைபிடிக்காததாலேயே தற்போது தண்ணீர் பஞ்சத்தை அனுபவிக்க நேரிட்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் தடுக்க முறையான மழைநீர் சேகரிப்பு திட்டத்தை உருவாக்கும் வகையில் ஏற்கனவே அமைக்கப்பட்ட நீர் சேகரிப்பு தொட்டிகளை மறு சீரமைப்பு செய்வதில் எந்த தவறும் இல்லை.
இயற்கை அள்ளிக்கொடுக்கும் மழை நீரை நாம் ஒரே முறை செய்யும் மெனக்கெடலால் மொட்டை மாடியில் இருக்கும் டேங்கிலும், சம்ப்பிலும் எளிதாக சேமிக்க முடியும். வீணாகும் மழை நீரை சேமித்து பயன்படுத்த கற்றுக்கொண்டால் நிலத்தடி நீரை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. நிதர்சனத்தை மக்கள் இப்போதாவது உணர்ந்து அதற்கேற்ப கட்டமைப்பு செய்வார்கள் என நம்புவதாக தெரிவிக்கிறார் ரவிராஜா.
தகவல் உதவி : தி பெட்டர் இந்தியா