தொடர் தோல்வி; கடனில் தத்தளிப்பு: மூலிகை, பாட்டி வைத்தியத்தால் முன்னுக்குவந்த அழகுராஜன்!
தோல்விகளின் பல படிகளை கடந்துவந்த அவர் விடாமுயற்சியுடன் போராடியதில்,15 -க்கும் மேற்பட்ட சூப் பொடிகள், மூலிகை உறிஞ்சி, மூலிகை பல்பொடி, கோதுமை காபிபவுடர், மூலிகை குளியல் பொடி என 12 இயற்கை சார்ந்த பொருள்களை தயாரித்து விற்பனை செய்து, மாதம் ரூ5 லட்சம் வருமானம் ஈட்டும் தொழிலாக மாற்றியுள்ளார்.
தொடங்கிய தொழிலில் எல்லாம் தோல்வி... நட்டத்திற்குமேல் நட்டம்... நகை, நிலத்தை விற்று கடனை அடைத்து, வாழ்வாதாரத்துக்கு வழியின்றி குடும்பம் நிற்கையில் அழகுராஜனின் வயதோ 53. ரிட்டயர்ட் வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் தருவாயில் மீண்டும் ஒரு தொழில் சாத்தியமா? என்ற அச்சம் உள்ளூற பரவிகிடந்தாலும், சந்தித்த அவமானங்களுக்காகவும், சந்திக்கவிருக்கும் நாட்களுக்காகவும் துணிந்து, இயற்கை சார்ந்த பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினார். கிட்டத்தட்ட முந்தைய தொழில்களில் நடந்த அதே நிகழ்வுகள் தொடர்ந்தன.
தோல்விகளின் பல படிகளை கடந்துவந்த அவர், விடாமுயற்சியுடன் போராடியதில், நவமூலிகை, அருகம்புல், வல்லாரை, முடக்கற்றான், தூதுவளை என 15 -க்கும் மேற்பட்ட சூப் பொடிகள், மூலிகை உறிஞ்சி, மூலிகை பல்பொடி, கோதுமை காபிபவுடர், மூலிகை குளியல் பொடி என 12 இயற்கை சார்ந்த பொருள்களை தயாரித்து விற்பனை செய்து, மாதம் ரூ.5 லட்சம் வருமானம் ஈட்டும் தொழிலாக மாற்றியுள்ளார்.
துரத்திய கடன்களும்! வெற்றிக்கான போராட்டமும்!
மதுரையை பூர்விகமாக கொண்ட அழகுராஜன், 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்த கையோடு திருப்பூரில் செட்டிலாகியுள்ளார். அறிமுகமற்ற ஊரில் பெரும் தேடலுக்குபின், பணியில் சேர்ந்துள்ளார். திருப்பூரில் பிளாஸ்டிக் நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் எக்ஸ்க்யூட்டிவாக 7 ஆண்டுகள் பணிபுரிந்தார். அதற்கு அடுத்தும் ஒரு நிறுவனம். அங்கு 6 வருட அனுபவம். கிடைத்த அனுபவங்களைக் கொண்டு எலாஸ்டிக் டிரேடிங் கம்பெனி ஒன்றைத் தொடங்கி உள்ளர். வணிகமும் லாபநோக்கில் பயணித்தது.
''முதல் பிசினஸ் நல்ல முன்னேற்றத்தை கொடுத்தது. கோடிகளில் வியாபாரம் நடந்தது. நிலம், நகைகள் வாங்கி வாழ்க்கை மாறத் துவங்கியது. அந்தசமயத்தில், திருப்பூர் சாயக்கழிவு பிரச்னையை தீர்க்க அரசு விதித்த சில கட்டுபாடுகளால் சிறுகுறு தொழில்கள் கொஞ்சம் நலிவடைந்தன. அப்படி பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். ஆனால், அதையும் சமாளித்தேன். எழுவதற்கு முன்னரே அடுத்ததொரு பேரடி விழுந்தது,” என்றார்.
என்னுடைய பெரிய வாடிக்கையாளர் ஒருவர் ரூ.25 லட்சத்துக்கு சரக்கு வாங்கிய நிலையில், அவருடைய தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் திருப்பி செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. கடனுக்கு மேல் கடன், அதற்கான வட்டியென கடன் பெருகியது. ஒரு கட்டத்தில், தொழிலை மேற்கொண்டு செய்ய முடியவில்லை.
வீடு கட்ட துவங்கியதிருந்தேன். அதையும் ஒருத்தர் ஏமாற்றிவிட்டு போயிட்டார். வாங்கி போட்டிருந்த இடங்களையெல்லாம் விற்றேன். ஓரளவுக்கு சமாளிக்க முடித்தது. அடுத்து, சின்னதாய் கும்பகோணம் டிகிரி காபி கடையை ஆரம்பிச்சேன். நல்லா தான் போச்சு. ஆனா, சீரான வியாபாரமில்லை. அதிலொரு ரூ.3.5 லட்சம் நஷ்டம்.
”தொடர்ந்து சறுக்கல்களை மட்டுமே சந்தித்து கொண்டிருந்தேன். படுத்தால் துாக்கம் வராது. கடனை பற்றிய எண்ணங்களே மனதில் ஓடும். ஈஎம்ஐ வாழ்க்கையில் மாதம் ரூ.50,000 கடன் இருந்தது, என்று துரத்திய கடன்களை பற்றியும், துவண்டுபோன நாட்களை பற்றியும்,” பகிர்ந்தார் அழகுராஜன்.
தொழில் தொடங்குவதற்கான குட்டி ஸ்டோரி!
அழகுராஜனின் நண்பர் ஒருவர் இயற்கை அங்காடி திறக்கவே, அதன் முழு பொறுப்பையும் கவனிக்கும் பணியில் சேர்ந்துள்ளார். 'மாப்பிள்ளை இவர் தான். ஆனா...' என்ற பாணியில் அந்நிறுவனத்திற்காக நம்மாழ்வாரின் வானகத்தில் இணைந்து 'இயற்கை விவசாயத்தையும்', 'அடுப்பில்லா சமையல்' பயிற்சியும் எடுத்து, சொந்த கம்பெனியாய் நினைத்து அயராது உழைத்துள்ளார்.
300 நாட்டு மாடுகளுடன், 10 ஏக்கரில் இயற்கை விவசாயம் என வளர்ந்து நின்ற அந்நிறுவனத்தின் வளர்ச்சியில் அவரது பங்களிப்பு அலாதியானது. அங்கிருந்து தான் இயற்கை சார்ந்த விஷயங்ளை தேடித்தேடி கற்றுக்கொள்ளும் எண்ணம் பிறந்துள்ளது. இயற்கையுடன் இணைந்து பயணிக்கவேண்டும் என்ற உள்ளுணர்வு ஒருபுறமிருக்க, மூலிகைப் பொருள்களை தயாரிக்கும் தொழிலை மேற்கொள்வதற்கு உந்துதலாக இருந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து பகிரத்தொடங்கினார் அவர்.
"தொடந்து வேலையாக ஓடுவதால், ஓய்வு கிடைக்கும் சமயத்தில் குடும்பத்துடன் ஊட்டிக்கு செல்வது வழக்கம். என்னோட சின்ன பையனுக்கு குளிர்னா ஒத்துக்கொள்ளாது. டிரிப் முடிந்து சளி பிடிச்சுக்கும். திருப்பூரில் எந்த டாக்டரிடம் காட்டினாலும் குணமாகாது. கோயம்புத்துாரில் வழக்கமாக அவனுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டரிடம் போய் காட்டினா தான் சரியாகும். இதுக்காக ஒவ்வொரு தடவையும் வேலையைவிட்டு விட்டு கார் பிடித்து, கோவை சென்று காட்டினோம்.
ஒரு தடவை ஊட்டிக்கு போனப்ப பயங்கரமா குளிர்காய்ச்சல் வந்து இருமல் அதிகமாகிருச்சு. நாங்க தங்கி இருந்ததோ விலங்குகள் நடமாட்டம் இருக்கிற பகுதி. ராத்திரி நேரத்தில் எங்களுக்கு என்ன பண்றதுனே தெரியல. அப்போது பக்கத்து வீட்டிலிருந்த ஒரு பாட்டி கை வைத்தியங்கள் செய்வதாகச் சொன்னார்கள். அவரிடம் மகனுக்கு சளி, காய்ச்சல் இருப்பதாக சொன்னோம். அவர் ஒரு ரசம் வைத்து கொடுத்தார். அதைக் குடிச்ச 1 மணி நேரம் துாங்கி எந்திரிச்சான் சரியாகிட்டான். அப்போ தான் அவங்கட்ட இது என்ன ரசம்னு கேட்டப்போ முடவாட்டுக் கிழங்கு என்ற ஒரு கிழங்கில் செய்தது என்றார். அது எங்களுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருந்தது. இந்த தொழில் தொடங்குவதற்கான சிறுப்பொறி இந்த சம்பவம் தான்.
ஏன்னா, இந்த சம்பவம் எனக்குள் ஒருதாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அந்த ரசத்தை சுவையாக குடிக்கும் வகையில் நவமூலிகை சூப்பாக மனைவி தனலெட்சுமி செய்தார்.
கொரேனா சமயத்தில் வீட்டிலேயே அந்த சூப்பை செய்து அரசு அலுவலகங்கள், கார்பரேட் கம்பெனிகள் என 3000 பேருக்கு இலவசமாக கொடுத்தேன். நான் விற்கனும்னு கொடுக்கல, மக்களின் நலன் கருதி தான் இலவசமாகக் கொடுத்தேன். ஆனால், அது வியாபார வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது. தொழிலையும் தொடங்கினேன்.
கொரோனாவால் துவங்கிய வாழ்வின் புதிய அத்தியாயம்!
கோடிகளில் பிசினஸ் செய்துவிட்டு, சூப் பொடி தயாரிக்க போகிறேன் என்று சொன்னதை நண்பர்களும், உறவினர்களும் ஏளனமாக பார்த்தார்கள். தொடர்ந்து செய்த பிசினசில் எல்லாமே நட்டம் என்பதால், மனைவியும் முதலில் பயந்து வேணாம்னு சொன்னாங்க. நல்ல விஷயம் செய்கிறோம் என்ற நம்பிக்கையில் துணிந்து செய்தேன்.
ஆனால், விற்பனை அத்தனை எளிதல்ல. மக்கள் எளிதில் எதையும் நம்பமாட்டார்கள் இல்லையா? சூப் பொடிக்கு மாறாக வீட்டில் சூப்பையே போட்டு சென்னையில் தெரு தெருவாக கேனை துாக்கிட்டு அலைஞ்சிருக்கேன். இயற்கை அங்காடியோ, கல்லுாரிகள் மற்றும் அலுவலகங்கள் கண்காட்சியோ ஏற்பாடு செய்திருந்தால் முதல் ஆளாய் போய் நிற்பேன்.
ஒருமுறை சென்னை தரமணியில் உள்ள 'உலக தமிழாராய்ச்சி நிறுவனம்' ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஸ்டால் போட்டேன். கையிலிருந்த மொத்த காசையும் போட்டு பொருள்களை தயாரித்து சென்றேன். மத்தியம் சாப்பாடுக்கு கூட காசில்லை. ரிட்டர்ன் ஊருக்கு வரனும்னாலும் வியாபாரம் செய்த காசில் தான் வரனும். ஆனா, வியாபாரம் சுத்தமா இல்லை.
ஒரு நாள் முழுக்க ஸ்டாலில் விற்பனையே இல்லை. என்ன செய்யுறதுனே தெரில. வெங்காய தொக்கு பாக்கெட்டை பிரித்து எல்லோருக்கும் இலவசமாகக் கொடுத்தேன். அங்கிருந்து கொஞ்சம் பிசினஸ் கிடைத்தது.
அப்போதிலிருந்து, தமிழ்நாட்டில் எந்த ஊருக்கு போனாலும் வயதான பாட்டிகளை சந்தித்து கைவைத்தியங்களை கேட்டு தெரிந்து கொள்வேன். சமீபத்தில், ஈரோடு மாவட்டத்திலுள்ள அப்துல் கலாம் அவர்களால் 'மூலிகைத்தாய்' என்று அழைக்கப்பட்ட 66 வயதான சாமியாத்தாள் என்பவரை சந்தித்து ஆலோசனைகளை கேட்டு வந்தேன்.
சித்த மருத்துவர்களையும் சந்தித்து, ஒவ்வொரு தயாரிப்பினையும் தயாரித்து வருகிறேன். ஒரு தயாரிப்பினை மார்க்கெட்டுக்கு கொண்டு வருவதற்கு முன் பெங்களூரில் உள்ள உணவுப் பரிசோதனை கூடத்திற்கு ஆய்விற்காக அனுப்பிவிடுவேன்.
அதில், பிரம்ம வேர், நாயுருவி, கிராம்பு, லவங்கப்பட்டை என 33 மூலிகைகளைக் கொண்டு மூலிகை பற்பொடி தயாரிக்கிறோம். பல் வலி, பல் சொத்தை, பல் கூச்சத்திற்கு சிறந்த நிவாரணியாக உள்ள இந்த பல் பொடியை பள்ளிகளுக்கு சென்று மாணவர்களிடம் வழங்கி 'ஒரு விரல் புரட்சி' என்ற பெயரில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
மூலிகையால் தயாரிக்கப்பட்ட மூலிகை உறிஞ்சி (இன்ஹேலர்) ஒன்றை தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறோம். இது போன்ற பொருட்களை பாரம்பரியம் முறைப்படி நம்மால் மறக்கப்பட்ட பல அரிய மூலிகைகள் சேர்த்து தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மும்பை என 5 மாநிலங்களுக்கு தொடர்ச்சியாக விற்பனை நடக்கிறது. எங்களது சூப் பவுடரை வாங்கி, பலர் ரோட்டோர சூப் கடைகளை திறந்துள்ளனர். பலரது வாழ்வதாரத்துக்கும் வழிவகை செய்ததுடன், மாதம் ரூ.5 லட்சம் வருமானம் கிடைக்கிறது. கடனையெல்லாம் அடைத்து, இரவுகளில் துாக்கம்வர துவங்கியுள்ளது, என்று கூறி நிம்மதி பெருமூச்சுவிட்டார் அழகுராஜன்.