விவசாயி மகள்; கொடகு துணை கலெக்டர் ஆகி கொரோனாவை கட்டுப்படுத்திய கதை!
கொடகில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அன்னீஸ் எடுத்துள்ள நடவடிக்கைகள் அம்மாநிலத்தைத் தாண்டி நாடு முழுவதும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
அன்னீஸ் கன்மணி ஜாய், கேரளாவில் மிகவும் ஏழ்மையான விவசாயிக்கு மகளாகப் பிறந்தார். வறுமையில் வாடி வளர்ந்த அவரால் பள்ளி சென்றபோது புத்தகம் வாங்கக்கூட பணமில்லாமல் தவித்தார். ஆனால் இன்றோ அவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள கொடகு மாவட்டத்தின் துணைக் கலெக்டர் ஆக பிரம்மாதமாக செயல்பட்டு, மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளார்.
கொடகில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அன்னீஸ் எடுத்துள்ள நடவடிக்கைகள் அம்மாநிலத்தைத் தாண்டி நாடு முழுவதும் அவருக்கு பாராட்டுகளைக் குவிந்து வருகிறது.
கர்நாடகாவில் மற்ற மாவட்டங்களில் கோவிட் பரவல் இருந்தபோதிலும், கொடகில் கடந்த 28 நாட்களாக ஒருவருக்குக்கூட கொரோனா பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலா மலைப்பகுதியான கொடகில், மார்ச் 19ம் தேதி முதல் கோவிட் கேஸ் உறுதி ஆனது. ஆனால் அதன் பின்னர் அங்கு தொடர்ந்து கொரோனா பரவல் பூஜ்யமாக இருந்தது. இதுவரை அங்கு 3 கொரோனா கேஸ்கள் பதிவாகி, ஒருவர் குணமடைந்து மேலும் இருவர் மட்டுமே சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதை அம்மாவட்ட துணை கலெக்டர் அன்னீஸ் உறுதி படுத்தினார்.
வறுமையை வென்று சிவில் சர்வீஸ் அதிகாரி ஆன அன்னீஸ் ஜாய் கண்மணி
தன் சிவில் சர்வீஸ் கனவை அடைய அன்னீஸ் ஜாய்க்கு வறுமை தடையாக இல்லை. நாட்டின் கடுமையான குடிமைப்பணி தேர்வினை 2012ம் ஆண்டு 65வது இடம் பெற்று தேர்வானார். அவரின் இந்த வளர்ச்சிப் பற்றி பதிவிட்ட ஃபேஸ்புக் பயனர் ஒருவர்,
“கடுமையான முயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி இருந்தால் ஒருவர் எந்த சாக்கும் சொல்லாமல் வெற்றிப் பெறுவார்கள் என்பதற்கு அன்னீஸ் ஒரு எடுத்துக்காட்டு,” என்றார்.
ஜாய் கேரளாவின் பிரவோம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர். படிக்க பணமின்றி எப்படியோ அதன் மீதான ஆர்வத்தால் மிகவும் அறிவாற்றல் கொண்ட பெண்ணாக வளர்ந்தார். பள்ளி படிப்பு முடித்தபின் டாக்டர் கனவுடன் எம்பிபிஎஸ் படிக்க முயற்சித்தார், ஆனால் அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை. அதனால் அவர் நர்சிங் பட்டப்படிப்பில் சேர்ந்தார். பின்னர் அதை முடித்துவிட்டு செவிலியர் ஆனார்.
ஆனால் நர்சாக பணிபுரிவது அவருக்கு திருப்தியை தரவில்லை. மக்களுக்கு சேவை புரியும் வேறு விதமான பணியினை நோக்கி சிந்தித்தார் அவர். அப்போது ஒருமுறை அவர் சந்தித்த இருவர் மூலம் யூபிஎஸ்சி தேர்வு பற்றி தெரிந்து கொண்டு நாட்டு மக்களுக்கு சேவை செய்ய அவ்வழியில் செல்ல தீர்மானித்தார்.
சிவில் சர்வீஸ் எழுத ஜாய் முழுமையாக தயாரானார்.
“தேர்வுக்கு தயாரானபோது, அவர் அதற்கு புத்தகங்கள் வாங்கமுடியாமல் கஷ்டப்பட்டார். இதுவே அவருக்கு சவாலாக இருந்துள்ளது. அதனால் தேர்வில் பாஸ் செய்வது கடினமான ஒன்றாக இருந்துள்ளது. இருப்பினும் தினசரி செய்தித்தாள்கள் மூலம் மட்டுமே தேர்வுக்குத் தயாராகி தேர்வை சந்தித்தார்,” என்று டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது.
அதனால் தினமும் தவறாமல் பல நாளிதழ்கள் வாங்கிப் படித்து, மும்முரமாக தேர்வுக்கு தயாரானார் ஜாய். முதன்முறை எழுதிய சிவில் சர்வீஸ் தேர்வில் 580வது ரேன்க் பெற்றார். அதனால், மீண்டும் ஒருமுறை தேர்வெழுதி, 65வது ரேன்குடன் குடிமைப்பணி தேர்வில் வெற்றிப் பெற்றார் ஜாய்.
துமகுரு என்ற இடத்தில் முதலில் பணியில் இருந்த ஜாய், கடந்த ஆண்டு கொடகின் துணை மாவட்ட ஆட்சியராக பணியமர்த்தப்பட்டார். அங்கு ஏற்கனவே வெள்ளப்பாதிப்பின் போது சிறப்பாக செயல்பட்ட ஜாய், தற்போது கோவிட் கட்டுப்பாட்டிலும் தன் திறமையை வெளிப்படுத்தி மக்களைக் காத்துள்ளார்.
தகவல் உதவி: கல்ப் நியூஸ்