12 மாதத்தில் 3லட்சம் யூனிட்கள் விற்பனை: ஃபேஷன் ஆக்சசரீஸ் ப்ராண்டில் கோலோச்சும் ஜோடி!
டி2சி பிராண்ட் Joker & Witch இணை நிறுவனர் மாயா வர்மா தொழில் பயணம் குறித்தும் சந்தை தேவையறிந்து செயல்பட்டது குறித்தும் பகிர்ந்துகொண்டார்.
மாயா வர்மா, சதீஷ் சிங் இருவரும் பெங்களூருவில் அறிமுகமானார்கள். மாயா பைகள் மற்றும் ஆக்சசரீஸ் பிரிவில் கோலோச்சும் Hidesign, Holii போன்ற நிறுவனங்களில் பணியாற்றினார். Stylebag ஃபேஷன் மின்வணிக தளத்தில் வேலை செய்வதற்காக பெங்களூருவிற்கு மாற்றலானார். அங்குதான் இவர் தனது வாழ்க்கைத் துணை சதீஷை சந்தித்துள்ளார்.
2015-ம் ஆண்டு இருவரும் தங்களது வேலையை விட்டு விலகி Joker & Witch என்கிற ஃபேஷன் ஜுவல்லரி மற்றும் வாட்ச் பிராண்ட் தொடங்கினார்கள்.
“உலகளவில் காணப்படும் ஃபேஷன் போக்குடன் ஒப்பிடுகையில் இந்திய சந்தையில் மிகப்பெரிய இடைவெளி இருப்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். வாட்ச் மற்றும் பிரேஸ்லெட் ஸ்டாக்ஸ் அறிமுகப்படுத்திய முதல் பிராண்டாக நாங்கள் உருவானோம்,” என்கிறார் மாயா.
இவர்கள் Joker & Witch தொடங்கிய ஆறாண்டுகளுக்குப் பிறகு Teejh என்கிற மற்றொரு ஆக்சிடைஸ்டு சில்வர் ஜுவல்லரி பிராண்ட் தொடங்கினார்கள்.
“எங்கள் இருவரின் தனித்தன்மையையும் அனுபவத்தையும் ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்,” என்று தம்பதியாக வணிகத்தை நடத்தி வருவது குறித்து மாயா குறிப்பிட்டார்.
இவர்களது பிராண்ட் தயாரிப்புகள் விலை குறைந்தவை என்பது இதன் சிறப்பம்சம். இந்த பிராண்ட் வாட்ச் 500 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை கிடைக்கிறது. ஆக்சசரீஸ் வகைகள் அனைத்துமே 3,000 ரூபாய்க்குள் கிடைக்கிறது.
மாயா வர்மா தனது கணவருடன் Joker & Witch டி2சி பிராண்ட் தொடங்கியது குறித்தும் தொழில் பயணத்தில் சந்தித்த சவால்கள் குறித்தும் விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.
அவருடன் நடந்த நேர்காணலின் தொகுப்பு இதோ:
ஹெர்ஸ்டோரி: Joker & Witch தொடங்குவது முன்பு என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? உங்கள் வளர்ச்சிப் பாதை பற்றிப் பகிர்ந்துகொள்ளுங்கள்?
மாயா வர்மா: நான் புதுடெல்லி NIFT-ல் ஃபேஷன் & லைஃப்ஸ்டைல்ஸ் ஆக்சசரி டிசைன் பிரிவில் இளங்கலைப் படிப்பு முடித்தேன். இந்தியாவின் முன்னணி டிசைனர்களில் ஒருவரான ராஜேஷ் பிரதாப் சிங் அவர்களிடம் ஆக்சசரி டிசைனராக வேலையைத் தொடங்கினேன்.
பிறகு பாண்டிச்சேரியில் Hidesign & Holi நிறுவனத்தில் சேர்ந்தேன். 2013-ம் ஆண்டு ஃபேஷன் மின்வணிக ஸ்டார்ட் அப் Styletag.com நிறுவனத்தில் சேர்வதற்காக பெங்களூரு சென்றேன். அங்குதான் என் கணவர் சதீஷை சந்தித்தேன். Joker & Witch தொடங்குவது பற்றி நாங்கள் கலந்து பேசினோம்.
ஹெர்ஸ்டோரி: Joker & Witch தொடங்க எது ஊக்கமளித்தது?
மாயா வர்மா: எங்களுக்கு வாட்ச், ஜுவல்லரி ரொம்பப் பிடிக்கும். இதுபோன்ற ஃபேஷன் தயாரிப்புகள் நவீன தலைமுறையினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்திய சந்தைகளில் கிடைக்கவில்லை. இதுவே Joker & Witch தொடங்க முக்கியக் காரணம்.
அதேபோல் இந்தத் தயாரிப்புகளைப் பொருத்தவரை சர்வதேச சந்தைக்கும் இந்திய சந்தைக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி இருப்பதையும் கவனித்தோம்.
ஹெர்ஸ்டோரி: எப்படி, எப்போது Joker & Witch தொடங்கினீர்கள்?
மாயா வர்மா: 2015-ம் ஆண்டு தொடங்கினோம். நாங்கள் இருவரும் சந்தித்துக்கொண்ட பிறகு எங்களிடையே காதல் மலர்ந்தது. மறைமுகமாக எங்களிடம் இருக்கும் ஆளுமையை உணர்த்தும் வகையில் விளையாட்டாக ஜோக்கர் என்றும் விட்ச் என்றும் அழைத்துக்கொள்வோம். இதுவே பிராண்ட் பெயரானது.
பெங்களூருவில் இருக்கும் இரண்டு படுக்கையறை வசதி கொண்ட குடியிருப்பில் இருந்தே இந்த பிராண்ட் தொடங்கப்பட்டது. திருமணமான புதிதிலேயே இருவரும் எங்கள் வேலையை விட்டு விலகி சவாலான தொழில்முனைவுப் பாதையில் பயணிக்கத் தொடங்கினோம்.
முதல் தலைமுறை தொழில்முனைவோராக 2 லட்ச ரூபாய் முதலீட்டுடன் தொழில் தொடங்கினோம்.
ஹெர்ஸ்டோரி: இதுவரை Joker & Witch நிதி ஏதேனும் திரட்டியுள்ளதா? வரும் நாட்களில் நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதா?
மாயா வர்மா: Joker & Witch, Teejh என இரண்டு டி2சி பிராண்டுகளை உருவாக்கியுள்ளோம். இவை இரண்டுமே வெற்றிகரமாக செயல்பட்டு வருவதைக் கண்டு பெருமைப்படுகிறோம். இதுவரை சுயநிதியிலேயே செயல்பட்டு வருகிறோம். அடுத்தகட்ட வளர்ச்சியில் நிதி உயர்த்தும் திட்டம் உள்ளது. இது தொடர்பாக முதலீட்டாளர்களுடன் பேசி வருகிறோம். துரித வளர்ச்சிக்கும் அதிகளவில் வாடிக்கையாளர்களைச் சென்றடையவும் இது உதவும் என நம்புகிறோம்.
ஹெர்ஸ்டோரி: Joker & Witch வருவாய் பற்றிப் பகிர்ந்துகொள்ளுங்கள். அதிகபட்ச லாபம் கிடைத்தது எப்போது? அந்த நிலையை எட்ட எவ்வளவு காலம் ஆனது?
மாயா வர்மா: வணிகத்தைத் தொடங்கிய முதல் மாதத்தில் இருந்தே சிறப்பாக வருவாய் ஈட்டி வருகிறோம். தற்சமயம் எங்கள் வருவாய் குறித்த தகவலைப் பகிர்ந்துகொள்ள முடியாது. இருப்பினும் எங்கள் தொழில் வளர்ச்சியை சுட்டிக்காட்டும் வகையில் சில தகவல்களை மட்டும் பகிர்ந்துகொள்கிறோம்.
கடந்த 12 மாதங்களில் மூன்று லட்சம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மூன்று நிதியாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 200 சதவீத வளர்ச்சி இருந்துள்ளது. 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிகபட்ச லாபம் கிடைத்தது. அதாவது 2016, 2017 நிதியாண்டுகளின் கூட்டு வருவாயைக் காட்டிலும் அதிக லாபம் ஈட்டப்பட்டது.
ஹெர்ஸ்டோரி: Joker & Witch செயல்பாடுகளை ஆஃப்லைனில் கொண்டு சேர்ப்பது குறித்த உங்கள் பார்வை என்ன?
மாயா வர்மா: தற்சமயம் சொந்த வலைதளம் மூலமாகவும் மிந்த்ரா, அமேசான், நைகா, ஃப்ளிப்கார்ட் போன்ற தளங்கள் மூலமாகவும் ஆன்லைனில் மட்டுமே செயல்பட்டு வருகிறோம். வரும் மாதங்களில் சிறு கடைகள், ஸ்டோர்கள் என பல்வேறு வகைகளில் செயல்பட திட்டமிட்டுள்ளோம்.
ஹெர்ஸ்டோரி: Joker & Witch சந்தையில் இருக்கும் மற்ற முன்னணி ஜுவல்லரி மற்றும் வாட்ச் பிராண்டுகளுடன் எப்படி போட்டியிடுகிறது?
மாயா வர்மா: இந்திய ஃபேஷன் ஆக்சசரி துறையைப் பொருத்தவரை வெறும் 30 சதவீதம் மட்டுமே ஒழுங்கமைக்கப்பட்ட பிரிவு பங்களிக்கிறது. எனவே சரியான அணுகுமுறையுடன் செயல்பட்டால் லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஹெர்ஸ்டோரி: நீங்களும் உங்கள் பார்ட்னரும் எவ்வாறு பணியைப் பகிர்ந்துகொண்டு செயல்படுகிறீர்கள்?
மாயா வர்மா: எங்கள் பலமும் பலவீனமும் மாறுபடும். எனவே அதன் அடிப்படையில் வேலைகளைப் பகிர்ந்துகொள்கிறோம்.
டிசைன், புதுமையான முறையில் சந்தைப்படுத்துதல், பணியமர்த்துதல், சமூக வலைதளங்களை நிர்வகித்தல் உள்ளிட்ட பகுதிகளில் நான் கவனம் செலுத்துகிறேன்.
சதீஷ் லாப-நஷ்ட கணக்கு, நிதி, கட்டணத்துடன்கூடிய சந்தைப்படுத்தும் நடவடிக்கைகள், செயல்பாடுகள், எல்லை தாண்டிய தயாரிப்பு நடவடிக்கைகள் மற்றும் வாடிக்கையாளர் தொடர்பு போன்ற பிரிவுகளை கையாள்கிறார்.
ஹெர்ஸ்டோரி: உங்கள் தொழில்முனைவுப் பயணத்தில் நீங்கள் சந்தித்த முக்கிய சவாலாக எவற்றைக் கருதுகிறீர்கள்?
மாயா வர்மா: பணம் தாமதமாகக் கிடைப்பது, எல்லை தாண்டிய தயாரிப்பு பணிகள் தொடர்பான சவால்கள், இறக்குமதி செயல்முறைகளில் ஏற்படும் சிக்கல்கள், சரியான அக்கவுண்டிங் பார்ட்னரைக் கண்டறிவது, பிராண்ட் தொடர்ந்து லாபகரமாக செயல்படுவதை உறுதி செய்வது, நிலையான வணிக நடவடிக்கைகளை உறுதி செய்வது என பல வகையான சவால்களை சந்தித்திருக்கிறோம்.
ஹெர்ஸ்டோரி: ஸ்டார்ட் அப் சூழலில் பெண் தொழில்முனைவோர் எவ்வாறு பார்க்கப்படுகிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
மாயா வர்மா: இணை நிறுவனர்களுடனோ அல்லது இணை நிறுவனர்கள் இல்லாமலோ பல பெண் தொழில்முனைவோர்கள் ஸ்டார்ட் அப் தொடங்குகிறார்கள். இவர்கள் வாழ்க்கையில் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பது ஒரு பொருட்டே அல்ல. இவர்களுக்குள் இருக்கும் ஆர்வத்தை முறையாக செயல்படுத்தி இலக்கை எட்டுகிறார்கள்.
நிறுவனர்கள் குழுவில் பெண்கள் இடம்பெற்றிருப்பது பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் மாறுபட்ட கண்ணோட்டத்தை வழங்க உதவும். இதை பல இடங்களில் நான் கவனித்திருக்கிறேன்.
ஹெர்ஸ்டோரி: டிஜிட்டல் புரட்சி உலகளாவிய தொழில்முனைவு முயற்சிகளில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது?
மாயா வர்மா: நாம் வாழும் விதம், தொடர்புகொள்ளும் விதம் என அனைத்தையும் இணையம் மாற்றிவிட்டது. தொழில்முனைவு முயற்சிக்கு டிஜிட்டல் புரட்சி பெரியளவில் உதவியுள்ளது.
டிஜிட்டல் புரட்சியால் உலகமே சிறு சமூகங்களாக சுருங்கிவிட்டது எனலாம். இதில் தொழில்முனைவோர் எளிதாக சக தொழில்முனைவோர்களுடனும் ஆலோசகர்களுடனும் முதலீட்டாளர்களுடனும் திறன்மிக்கவர்களுடனும் இணைய முடிகிறது. வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் விரிவடையச் செய்கிறது.
ஹெர்ஸ்டோரி: உங்கள் தொழில்முனைவு முயற்சியின் முக்கிய மைல்கல்லாக எதைக் கருதுகிறீர்கள்?
மாயா வர்மா: தொழில்முனைவு என்பது வெவ்வேறு வகையான சவால்கள் நிறைந்தது. இதனிடையில் சிறு வெற்றியும்கூட மைல்கல்லாகவே கருதப்படும்.
எங்கள் வணிகம் தொடங்கப்பட்ட மூன்றாவது மாதத்தில் 5,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் எங்களுக்குக் கிடைத்தது முதல் முக்கிய மைல்கல் எனலாம். இது மிகப்பெரிய அளவில் ஊக்கமளித்தது.
பின்னர் 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் Teejh என்கிற இரண்டாவது பிராண்டை சந்தையில் அறிமுகப்படுத்தினோம். இந்த பிராண்ட் உருவாக்கத்திற்கும் சந்தை அறிமுகத்திற்கும் இடையில் இரண்டு மாதங்கள் மட்டுமே இடைவெளி இருந்தது.
சமீபத்தில் Grazia’s Most Loved Brands 2021 பட்டியலில் தேர்வாகியிருக்கிறோம். இன்றைய நவீன தலைமுறையினரின் விருப்பத் தேர்வாக இருப்பதை மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறோம்.
ஆங்கில கட்டுரையாளர்: பூர்வி குப்தா | தமிழில்: ஸ்ரீவித்யா